மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 38

கி.ஆறுமுகம்

Dec 6, 2014

போசு இந்திய தேசிய இராணுவத்திற்கு நிதி திரட்டும் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “நாங்கள் இராணுவத்திற்கு நிதி கேட்கும் போது சில வாணிப நண்பர்கள் தங்களின் வாணிப லாபத்தில் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் பணம் தரலாம் என்று சிந்திக்கின்றனர். ஆனால் நமது இராணுவ வீரர்கள் நமது உயிரையே கொடுக்கத் தயாராக உள்ளனர். இந்த வீரர்கள் சதவீத கணக்கு பார்க்கவில்லை நமது சுதந்திரத்திற்கு” என்று உணர்ச்சிப் பெருக பேசினார். அந்தக் கூட்டத்தில் ஒருவர் தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அனைத்தையும் இந்திய தேசிய இராணுவத்திற்கென்று எழுதிக் கொடுத்தார். அவர் ஓர் இஸ்லாமிய வணிகர் அன்பர் ஹபீப்.

subaash3இரண்டாம் உலகப் போரின் போது மலேயாவிலிருந்து தாய்லாந்து வழியாக பர்மாவுக்கு இரயில் பாதை அமைக்குமாறு ஜப்பான் மன்னர் ஆணை பிறப்பித்தார். அதன்படி தாய்லாந்தின் தென்பகுதி BANPONG நகரிலிருந்து பர்மாவின் THANBYZAYAT நகர் வரையிலான 415 கி.மீ தூரம் கொண்ட நீண்ட இரயில் பாதைப் பணி தொடங்கப்பட்டது. இந்த இரயில் பாதை இருண்ட காடுகள், குன்றுகள், காட்டாறுகள், மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்ல வேண்டிய பயங்கரமான வழியாக இருந்தது. இரயில் பாதை போடும் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்ததினால் மலேயா, சிங்கப்பூரில் போரில் பாதிக்கப்பட்டு ஜப்பானிய இராணுவம் கைப்பற்றிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் சுமார் 1 லட்சம் பேரை இரயில் பாதை போடும் பணிக்கு பயன்படுத்த ஜப்பான் திட்டமிட்டு அதை செயல்படுத்தியது. காடுகளில் பாம்புக்கடி, கொசுக்கடி, வனவிலங்குகளுக்குப் பலி, வயிற்றுப்போக்கு இவைகளால் மக்கள் தினம் 50 பேருக்கு மேல் இறந்தனர். அவர்களின் உடல்களை இரயில் பாதை ஓரமாகவே புதைத்துக் கொண்டு வேலைகள் தொடர்ந்து நடைபெற்றது. 1942ல் தொடங்கிய இந்த SIAM DEATE RAILWAY PROJECT இரயில் பாதைப் பணி 1943ல் 413 கி.மீ தூரத்தை நெருங்கி ஒரு ஆண்டிற்குள் இறுதிக் கட்டத்தை எட்டியது. அறிவியல் சார்ந்த கருவிகள் ஏதுமின்றி மண்வெட்டி, கடப்பாரை, சுத்தியல் இவைகளைக் கொண்டு ஓர் இமாலயச் சாதனை படைத்ததைப் பார்த்து உலகமே வியந்து போனது. தமிழர்களின் உழைப்பைக் கண்டு இந்த பணியில் அவர்கள் படும் துயரம் கேட்டதும் போசு, ஜப்பானிய அரசியலில் தொடர்பு கொண்டு தமிழர்களைக் காப்பாற்றினார். ஆனால் 1 லட்சம் பேரில் 60000 பேர் இறந்தனர். 40000 பேர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். இதில் இறந்தவர்களை நினைவுறுத்தும் விதத்தில் அந்த இரயில்வேக்கு DEATH RAILWAY என்று பெயரிடப்பட்டது. இந்த இரயில் பாதையை பற்றிய திரைப்படம் “ A Bridge on the river kwai” ‘குவாய் நிதி பாலம்’ என்ற பெயரில் வெளிவந்து உலகப் புகழ்பெற்றதோடு பல ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.

subaash2இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே நம் தமிழர்களில் பல லட்சம் பேர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் தோட்டப்பணி மற்றும் வாணிப தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். போசின் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு சிலர் மட்டும் தான் வட இந்தியர்கள் சில பதவிகளில் இருந்தனர். தமிழர்களும் சில இராணுவப் பதவியில் இருந்தனர். ஆனால் இராணுவ வீரர் பிரிவில் இருந்தவர்கள் பெரும் பகுதியினர் நம் தமிழர், தமிழர்கள். தமிழர்களின் பெருமையும் வீரமுமே இந்திய தேசிய இராணுவம்.

கல் தோன்றி மண்தோன்றா

காலத்தே வாளோடு முன் தோன்றிய

மூத்த குடி

-இறையினார் அகப்பொருள்

இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று நெஞ்சம் நெகிழ்ந்து சொன்னவர் நேதாஜியின் படைத்தளபதி தில்லன். போசு சுதந்திர இந்திய அரசை அமைக்க விரும்பினார். இதற்குக் காரணம் நாம் விடுதலைக்காக பிரிட்டிசாரை எதிர்த்து போரிடுகிறோம். நம் வீரர்களை பிரிட்டிசு இராணுவம் கைது செய்து அவர்களை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி விசாரணையின்றி தூக்கில் போடுவார்கள். எனவே மக்களால் உருவான ஒரு இந்திய அரசாங்கத்தின் இராணுவ வீரர்களை, இந்தியாவின் விடுதலைக்கு போரிட்டவர்களை குற்றம் செய்ததாகச் சொல்லி தண்டிக்க முடியாது மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களையும் இந்திய இராணுவ வீரர்களையும் ஜப்பான் அதிகாரிகள் தங்கள் ஆதரவில் வாழும் மக்கள் என்று எண்ண இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் சுதந்திர இந்திய அரசை அமைத்தார். அதனை அறிவிக்கும் விதமாக மிகப்பெரிய ஒரு கூட்டத்தில் போசு சுதந்திர இந்திய அரசை அமைத்தார். அப்போது போசு, பிரதமர் போர் மற்றும் அயல்நாட்டு விவகாரத்துறைகளின் அமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொண்டு, பின் தனது அரசின் ஒவ்வொரு அமைச்சருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆசாத் ஹிந்த் சுதந்திர இந்திய அரசாங்கத்தில் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள்:

சுபாசு சந்திர போசு – பிரதமர் (போர் மற்றும் அயல்நாட்டு விவகாரம்)

எஸ்.ஏ.ஐயர் – விளம்பரம் பிரச்சாரம்

லெஃப்டினைட் கர்னல் ஏ.சி. சாட்டர்ஜி (நிதி பிரிவு)

லெஃப்டினைட் கர்னல் அஜிஸ் அஹமது

லெஃப்டினைட் கர்னல் என்.எஸ். பசத்

கேப்டன் திருமதி.லட்சுமி – பெண்கள் ஸ்தாபனம்

லெஃப்டினைட் கர்னல் ஜே.கே. பான்ஸ்லே

லெஃப்டினைட் கர்னல் குல்சாரா சிங்

லெஃப்டினைட் கர்னல் எம்.எஸ். கியானி

லெஃப்டினைட் கர்னல் ஏ.டி. லோகநாதன்

லெஃப்டினைட் கர்னல் ஹேசான் காதிர்

லெஃப்டினைட் கர்னல் ஷாநவாஷ் (ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதிநிதிகள்)

ஏ.எம்.சர்ஹே, காரியதரிசி (மந்திரி பதவி)

ராஷ்பிஹாரி போசு (தலைமை ஆலோசகர்)

கரீம் கனி

தேவநாத் தாஸ்

பி.எம்.கான்

ஏ.எல்லப்பா

ஜே.திவி

சர்தார் இஷார்சிங் (ஆலோசகர்கள்)

ஓ.என்.சர்க்கார் (சட்ட ஆலோசகர்)

சியோனான்.

subaash1இந்த சுதந்திர இந்திய அரசில் போசின் நம்பிக்கைக்குரியவர்களாக பல தமிழர்கள் விளங்கினார்கள். லோகநாதன், எஸ்.ஏ.ஐயர், திவி, திருமதி சிதம்பரம், போசின் படையில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றிய மலேயா கணபதி, ராகவன், ஸ்ரீ ஜானகித் தேவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த ஸ்ரீ ஜானகித் தேவர் கோலாலம்பூரில் போசின் சொற்பொழிவைக் கேட்ட உடனே அங்கேயே தனது நகைகளையெல்லாம் கழற்றி போராட்ட நிதிக்குக் கொடுத்த பெண். இவர் ஜான்சிராணிப் படையில் கேப்டன் லட்சுமி தளபதியாக இருந்த போது துணைத் தளபதியாக இருந்தார். இவர் ஜான்சிராணிப் பிரிவில் சேரும் போது இவரின் வயது 17. லட்சுமி போசின் சுதந்திர இந்திய அரசில் அமைச்சராகப் பதவி ஏற்றதும் ஜான்சிராணி படைப்பிரிவின் தளபதியாக ஜானகித் தேவர் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியா விடுதலைக்குப் பின் போசைப் பற்றியும் இந்திய தேசிய இராணுவத்தைப் பற்றியும் குறிப்பிடும் பொழுது கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தில் நாம் விடுதலை பெற்றதாக சிலர் கதைகள் விடுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் ரத்த வெள்ளத்தில்தான் நாம் விடுதலை பெற்றோம்.

subashu1மங்கள் தேஷ்பாண்டே, உத்தம்சிங், குதிராம் போசு, வாஞ்சிநாதன், பகத்சிங், சந்திரசேகர ஆசாத், அந்தமானில் வாடிய போராளிகள், ராமுத்தேவர், ஞானாராம், கத்தார் போராளிகள், இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்து பம்பாயில் நடைபெற்ற கடற்படை புரட்சி மற்றும் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் சிந்திய இரத்தம்தான் இந்திய விடுதலைக்கு உரமாக அமைந்தது. போர் முனையில் மட்டும் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். ரங்கூனிலிருந்து இந்திய தேசிய இராணுவம் பின்வாங்க நேரிட்ட போது போசு (நேதாஜி) ஜான்சி ராணிப் படையினருடனும், தன் அமைச்சர்களுடனும், படைத்தலைவர்களுடனும் பாங்காங்கிற்கு நடந்தே வந்தார். 23 நாட்கள் 300 மைல் தூரத்தைக் கடந்து வந்தனர். அவர்களுடன் மூன்று கார்களும் சில லாரிகளும் கூட வந்தன. ஆயினும் நேதாஜி 23 நாட்களும் படையினருடன் நடந்துதான் வந்தார். கார்களில் உடல் நலமில்லாதவர்களையும், லாரிகளில் அத்தியாவசிய ராணுவ சாதனங்களையும், முதலுதவிக்குரிய மருத்துவப் பொருட்களையும் ஏற்றி வரச்செய்தார். இரவு நேரங்களில் தான் நடந்தனர். அடர்ந்த காடுகள், சதுப்புநிலங்கள், காட்டு மிருகங்கள் எதைப் பற்றியும் அவர்கள் கவலை கொள்ளவில்லை. அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன, சில லாரிகள் தகர்த்தெறியப்பட்டன. நடந்து வந்தவர்களில் பலர் இறந்து விழுந்தனர். அவர்களை அடக்கம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை, அப்படி அப்படியே உடல்களை காட்டாற்று வெள்ளத்தில் தான் போட முடிந்தது. மழைக்காலம் என்பதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அவைகளை ஜான்சிராணிகள் உட்பட எல்லோரும் நீந்தித்தான் கடந்தனர். பயம் என்பது என்னவென்றே தெரியாதவர்களல்லவா நேதாஜியின் இராணுவ வீரர்கள். அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோர் 23 நாட்கள் நடந்தே வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு உணவு லாரிகளில் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் ஒரு சில நாட்களுக்கே வந்துள்ளது. இருப்பினும் எல்லோருக்கும் ஒரு வேளை உணவிற்கு நேதாஜி ஏற்பாடு செய்துள்ளார். நேதாஜி அநேக நாட்களில் ஒரு பன்னுடன் ஒரு நாள் உணவை முடித்திருக்கிறார். இதே போன்று மற்றொரு இந்திய தேசிய இராணுவ வீரர் ஆர்.சக்திமோகன் கூறுகையில்: “அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுகளில் சில காட்டு விலங்குகள் இறந்தன. அவைகளை உண்ண வேண்டிய நிலை வீரர்களுக்கு ஏற்பட்டது. ஒரு முறை நேதாஜியே ஒரு கோவேறு கழுதையின் மாமிசத்தை அறுத்தெடுத்து தீயில் வாட்டி முதலில் அவர் ஒரு துண்டை சுவைத்து விட்டு நன்றாக இருக்கிறது சாப்பிடுங்கள். இதையெல்லாம் பார்க்கக்கூடாது. நம் நாட்டிற்காக நாம் வாழ வேண்டும் எனக் கூறி வீரர்களுக்கெல்லாம் கொடுத்தார்”. நடைப் பயணத்தினால் நேதாஜியின் மேனி இரத்தத்தில் குளிப்பாட்டியது போல் இருந்தது. அவரது கால்களில் ஏற்பட்டிருந்த புண்களைக் கண்டு கேப்டன் ஜானகித் தேவர் கண்ணீர் சிந்தினார். இந்த ஜானகித் தேவர் 1980-1986ம் ஆண்டு வரை மலேசியாவில் நாடாளமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த முதல் இந்திய பெண் உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

subaash19-1சுதந்திர இந்திய அரசுப் பிரகடனத்தை நேதாஜி எவ்வாறு தயாரித்தார் என்பதை அதன் விளம்பர இலாகா அமைச்சராக பொறுப்பேற்றிருந்த எஸ்.ஏ.ஐயர் கூறியிருப்பது: “1943 அக்டோபர் 21ஆம் தேதி இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முதல் நாள் இரவு நடுநிசி வரை பிரகடனம் தயாராகவில்லை. நள்ளிரவுக்கு மேல் தம் அறையில் அமர்ந்த நேதாஜி தம் முன்னால் சில காகிதங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு ஒரு பென்சிலை எடுத்துக் கிடுகிடுவென்று எழுதத் தொடங்கினார். சரளமான ஆங்கில மொழியில் அந்தப் பிரகடனத்தை எழுதினார். நேதாஜி ஒரு சிறு தவறோ அடித்தல் திருத்தலோ இல்லாமல் ஒரு விநாடி நேர யோசனையோ, தயக்கமோ இல்லாமல் மிக வேகமாக எழுதிக் கொண்டே இருந்தார். மறுநாள் அதிகாலை ஆறு மணிக்குத்தான் அந்தப் பிரகடனத்தை எழுதி முடித்தார். எழுதி முடித்தப் பின்னர் அதில் கால் புள்ளி, அரைப்புள்ளியைக் கூட மாற்றாமல் திரும்பப் படித்தும் பார்க்காமல் அப்படியே என்னிடம் கொடுத்து தட்டச்சு செய்யச் சொன்னார். அவ்வளவு முக்கியமான ஓர் அரசாங்கத்தின் வரலாற்றில் இடம் பெறப்போகும் பிரகடனத்தை முன்பின் யோசிக்காமல் ஒரு வரியைக்கூட மாற்றாமல் ஒரு தவறுமின்றி ஒரே மூச்சில் எழுதி முடித்த நேதாஜியின் மேதாவிலாசத்தைக் கண்டு நான் வியப்பில் ஆழந்தேன். போசின் இந்தத் தற்காலிக சுதந்திர இந்திய அரசை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தன. அவற்றுள் மூன்று மிகப் பெரிய நாடுகள் ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா என்று பல நாடுகளும் போசை இந்தியத் தலைவராகவே ஏற்றுக் கொண்டு கவுரவித்தன.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 38”

அதிகம் படித்தது