மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 39

கி.ஆறுமுகம்

Dec 13, 2014

subash3போசு தனது தற்காலிக சுதந்திர இந்திய அரசை நிறுவி, அதனை அறிவித்தவுடன் தனது இந்திய தேசிய இராணுவம் பிரிட்டன் மீதும், அதன் நட்பு நாடான அமெரிக்கா மீதும் போர் பிரகடனம் செய்கிறது என்று வெளியிட்டார். இந்தப் போர் பிரகடனம் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளியிடப்பட்டது. ஏனெனில் அங்கிருந்தவர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழர்கள். போசின் நண்பர் ஒருவர், நம் விடுதலைக்கு பிரிட்டனுடன் மட்டும் போர் செய்தால் போதாது, அமெரிக்கா மீதும் போர் பிரகடனம் செய்யவெண்டும் என்றார். அதற்கு போசு இதே அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து, பின் விடுதலை அடைந்து, பின் அதனுடன் இணைந்து விடுதலைக்காக போரிடும் ஒரு நாட்டை எதிர்த்து போர் செய்ய துணையாக இருக்கும் இந்த அமெரிக்கா மீதும் நாம் போர் செய்ய வேண்டும் மற்றும் விடுதலைக்காகப் போராடும் ஒரு தேசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உலகில் எந்த ஒரு நாட்டின் படைக்கும் உரிமை கிடையாது என்றார் போசு.

subash2போர் பிரகடனம் செய்த பின், இந்திய தேசிய இராணுவத்தை யார் தலைமை தாங்கி போரில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தை ஜப்பான் அரசு உருவாக்கியது. சுதந்திர இந்திய அரசின் பிரதமராக இருந்த போசு ஓர் இந்தியர்தான், இவர்தான் இந்திய தேசிய இராணுவத்தினை தலைமை தாங்க முடியும். இந்திய தேசிய இராணுவம் சென்ற பின் தான் ஜப்பான் இராணுவம் அவர்களைப் பின் தொடர்ந்து வரவேண்டும். இந்திய விடுதலைக்கு இந்தியர்கள் தான் தலைமையும் போரும் செய்ய வேண்டும் என்று மிகக் கண்டிப்புடன் தெரிவித்தார். இதற்காக மூன்றுமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் போசு மிக உறுதியாக இருந்தார். போசு பிடிவாதம் காட்டினால் அவருக்கு உதவி செய்வதைப் பற்றி ஜப்பானிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று மிரட்டல்கள் விடப்பட்டன. ஆனால் போசு இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பணியவில்லை. ஜப்பான் உதவி செய்வதை நிறுத்தினால் கூட தன்னுடைய போராட்டம் தொடரும் என்று நெஞ்சை நிமிர்த்தி அவர் கூறினார். ஜப்பான் வெளிநாட்டு அமைச்சர் சிகேபிட்சுவுக்கு போசு எழுதிய கடிதத்தில், “ஜப்பான் அரசுக்கும் சுதந்திர இந்திய அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சனைகளைப் பற்றி இரண்டு அரசுகளும் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஹிக்கரிகிக்கின் அமைப்பின் மூலம் இப்பேச்சு தேவையில்லை இதைச் செய்ய ஜப்பானிய அரசு மறுக்குமானால் ஜப்பானிய கூட்டுறவில் இருந்து சுதந்திர இந்தியா முழுமையாக விலகிக் கொள்ளும். ஒரு தற்கொலைப் படைக்குத் தலைமை வகித்து நானே போர் முனைக்குச் செல்வேன்” என்று எழுதினார். போசின் இந்த எச்சரிக்கைக்கு உடனடியாக பலன் கிடைத்தது. டோக்கியோ வந்து ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி போசு அழைக்கப்பட்டார். போசு ஜப்பான் உதவியுடன் செயல்பட்டாலும் தன் தன்மானத்தையும், தன் இந்திய மக்களின் தன்மானத்தையும் ஜப்பானிடம் ஒரு போதும் விட்டு கொடுக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஜப்பானின் உதவியுடன் பல அரசுகள் தென்கிழக்கு ஆசியாவில் இருந்தது, ஆனால் போசின் சுதந்திர இந்திய அரசு ஒரு தனி சுதந்திர அரசாகவே செயல்பட்டது. போசு, இத்தாலி தலைவர் முசோலினி, ஜெர்மன் தலைவர் ஹிட்லர், ஜப்பான் பிரதமர் டோஜோ அவர்களுக்கு இணையாக மதிக்கப்பட்டார். அவர்களுடன் சமமாக அமர்ந்து ஒரு சுதந்திர அரசின் பிரதமர் என்னும் நிலையிலேயே செயல்பட்டார்.

subaash31943ம் ஆண்டு நவம்பர் 5, 6 தேதிகளில் டோக்கியோவில் மாபெரும் கிழக்காசிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஒரு நாயகராக போசு விளங்கினார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடிவுக்கான பட்டயமாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் வர்ணித்தார். போசு பேசி முடிந்த பிறகு ஜப்பான் பிரதமர் டோஜோ எழுந்து பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு போசு அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார் எனக் குறிப்பிட்டார். உடனடியாக போசு எழுந்து சுதந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை ஜப்பானிய பிரதமரோ அல்லது வேறு யாருமோ கூறிவிடமுடியாது. இந்திய மக்களால் தான் அது முடிவு செய்யப்பட வேண்டும். இந்திய மக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் காந்தி, மௌலானா ஆஸாத், நேரு, படேல் ஆகியோரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். எதிர்காலத்திலும் அதுபோலவே தங்கள் தலைவரை ஏற்றுக்கொள்வார்கள் என்றார். இந்த மாநாடு முடிந்ததும், ஜப்பான் அரசு பிடித்திருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுதந்திர இந்திய அரசுக்கு வழங்கியது. இது முதல் வெற்றி சுதந்திர இந்திய அரசுக்கு. போசு மிகவும் மகிழ்ச்சியுடன் தனது தேசிய கொடியை ஏற்றினார். இந்தியாவுக்கு மிக அருகில் வந்து விட்டோம், முதல் சுதந்திர மண்ணில் நமது தேசியக் கொடியை ஏற்றிய மகிழ்ச்சியில் போசு மிகவும் உற்சாகமுடன் இருந்தார். தனது அரசின் அலுவலகங்களை சிங்கப்பூரில் இருந்து இந்த தீவுகளுக்கு மாற்றினார் இதற்கு பெயர் மாற்றம் செய்தார். அந்தமான் தீவுக்குத் தியாகிகளின் தீவு என்றும் நிக்கோபாருக்கு சுயராஜ்யத் தீவு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று போசு பிரகடனம் செய்தார். அந்தமானிலுள்ள சிறையில்தான் ஆயுள் தண்டனை, நாடு கடத்தல் தண்டனை பெற்ற அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு வந்தனர், அதனால்தான் அதற்குத் தியாகிகள் தீவு எனப் பெயரிட்டார் போசு. இந்தப் பிரகடனத்தை ஜப்பான் அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இந்தத் தீவுகளில் இருந்த இந்தியர்கள் போசை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அங்கிருந்த பல தமிழர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். இந்தத் தீவுகளுக்கு கமிஷனராக மேஜர் ஜெனரல் ஏ.டி. லோகநாதன் என்ற தமிழரை நியமித்தார் போசு. இந்தத் தீவில் சிறையில் இருந்தவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். போசு, 1943ம் ஆண்டு இறுதிக்குள் நாங்கள் சுதந்திர இந்திய மண்ணில் வந்துவிடுவோம் என்று முன்பே கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் போசு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1943ம் ஆண்டு முடிவதற்குள் அந்தமான நிக்கோபார் தீவில் தனது சுதந்திர இந்திய அரசை அமைத்து அங்கிருந்த பிரிட்டிசு கவர்னர் மாளிகையில் பிரிட்டிசாரின் கொடியை இறக்கி சுதந்திர இந்திய அரசின் மூவர்ணக் கொடியை ஏற்றி அவர் கூறியதை மெய்ப்பித்துக் காட்டினார் போசு. இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவையான நிதியை பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள், சிறு பணக்காரர்கள், பின் பணம் இல்லாதவர்கள் தங்கள் உயிர் என்று தியாகம் செய்தனர். பெரும் பணக்காரர்கள் சிறு தொகையை நிதியாகக் கொடுத்தனர், இதைக் கண்டு போசு சற்று வருத்தம் அடைந்தார்.

மலேயா நாட்டில் வாழ்ந்து வந்த இந்திய செல்வந்தர்களான நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் மாநாடு ஒன்றை சிங்கப்பூரில் ஜாலான் பஜார் ஸ்டேடியத்தில் நடத்தினார்கள். அதில் மிகவும் சற்றுக் கண்டிப்பான உரையை பேசினார் போசு. தென்கிழக்காசிய நாடுகளில் போசு ஆற்றிய நூற்றுக் கணக்கான உரைகளிலேயே சற்றுக் கண்டிப்பான உரை இதுதான். இந்த கூட்டத்தின் பலன் உடனே போசுக்கு கிடைத்தது. அதே இடத்தில் மேடையில் 70 லட்சம் மலேயா டாலர்கள் வசூலாயிற்று. அடுத்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 30 லட்சம் டாலர்கள் வசூலாயின. எவ்வளவு பலம் பொருந்திய அரசாலும் பலாத்காரமில்லாமல் இவ்வளவு பெருந்தொகையை வசூலிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஈடு இணையில்லாத தலைவர் போசு தன் காந்த சக்தியால்தான் இவ்வளவு பெரும் வெற்றியைப் பெற முடிந்தது.

subashu2சுதந்திர இந்திய அரசும் ஜப்பானிய அரசும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கிணங்க தூதுவர் பறிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. இந்திய சுதந்திர அரசுக்கு ஜப்பானிய தூதுவரான டெருலோ ஹட்சியா என்பவர் நியமிக்கப்பட்டார். தங்கள் தயவில் இருக்கும் ஒரு அரசின் அதிபர்தானே என்கிற அலட்சியத்துடன் ஜப்பானிய தூதுவர் போசை சந்தித்து தனது பதவியை ஏற்க வந்தார். ஒரு நாட்டின் தூதுவர் பதவி ஏற்க வரும்போது அதற்கான அத்தாட்சிப் பத்திரங்களைக் கொண்டு வருவது வழக்கமாகும் ஆனால் இவரோ வெறும் கையை வீசிக்கொண்டு வந்தார் அதனால் அவரை போசு சந்திக்க மறுத்துவிட்டார். இதைக் கண்ட ஜப்பானிய தூதுவர் அதிர்ச்சி அடைந்தார். பிறகு டோக்கியோவில் இருந்து அத்தாட்சிப் பத்திரங்களைக் கொண்டுவந்து காட்டிய பிறகே அவரை சந்திக்க போசு சம்மதித்தார். ஹிட்சியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஜப்பானிய அதிகாரிகள் மட்டுமே இவ்வாறு நடந்து படிப்பினையும் பெற்றனர். ஆனால் மிகப் பெரிய ஜப்பானிய அதிகாரிகளும் படைவீரர்களும் போசு மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருந்தனர். அவர்கள் போசை நேரில் கண்டாலோ அல்லது அவரது படத்தைப் பார்க்க நேர்ந்தாலோ தலைவணங்கி மரியாதை செலுத்தினர். தங்களின் சக்கரவர்த்திக்கு எப்படி மரியாதை செலுத்தினார்களோ அதைப் போன்ற மரியாதையை போசுவுக்கும் செலுத்தினார்கள். சுதந்திர இந்திய அரசுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகள் கிடைத்ததும் இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவினரை பர்மாவுக்கு மாற்றினார் போசு. போசும் இந்திய தேசிய இராணுவமும் பர்மாவுக்கு வந்ததும் பர்மிய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவுக்கான விடுதலை போர் தம் மண்ணில் இருந்து தொடங்கப்பட உள்ளதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தனர். போசு முன்பே இந்தத் திட்டத்தினைத் தீட்டியிருந்தார். தமது இந்திய தேசிய இராணுவம் பர்மாவில் வந்ததும் பின் இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையில் உள்ள அடர்ந்த காடுகளைக் கடந்து இந்தியா செல்ல திட்டம் தீட்டியிருந்தார். அதனை செயல்படுத்தத் தொடங்கினார் போசு. பர்மாவில் கூடியிருந்த இந்திய தேசிய இராணுவத்தினரைப் பார்த்து உற்சாகமான உரை நிகழ்த்தி, பின் டெல்லிச் சலே (டெல்லியை நோக்கி செல்) என்று தனது இராணுவத்திற்குக் கூறினார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 39”

அதிகம் படித்தது