மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 44

கி.ஆறுமுகம்

Jan 17, 2015

subash1இரங்கூன் நகரில் போசு இருந்த இடத்திற்கு நான்கு கார்களும், 12 லாரிகளும் வந்தது. இவர்கள் புறப்படும் போது போசு எஸ்.ஏ.ஐயர் அவர்களைப் பார்த்து நீங்களும் என்னுடன் வரவேண்டும் என்றார். அனைவரும் இரவில் புறப்பட்டதும் ஒரு மணிநேரத்திற்குப் பின் எதிரி விமானம் தலைக்கு மேல் வருவது தெரிந்ததும் அனைவரும் வாகனங்களை விட்டு கீழ் இறங்கி மறைவான பகுதிக்குச் சென்றார்கள். இதுபோன்று இரவு முழுவதும் சில மணி நேரத்திற்கு ஒரு முறை செயல்பட வேண்டியிருந்தது. காலையில் இவர்கள் அனைவரும் வாவ் என்ற கிராமத்தின் அருகில் சென்றனர். பின் விடிந்துவிட்டது. பகல் பயணம் போர் நடைபெறும் பொழுது செல்வது ஆபத்தானது, எனவே பகல் பொழுதை இங்கு கழித்துவிட்டு மீண்டும் இரவு பயணத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து ஓய்வு எடுத்தனர் இந்திய தேசிய இராணுவ வீரர்களும் ஜான்சி ராணி பிரிவினர்களும்.

இரவில் மீண்டும் பயணம் தொடங்கியது இது போன்ற ஆபத்தான பயணத்தை எந்த நாட்டு இராணுவ வீரர்களும் இதுவரை செய்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு நொடியையும் நமது வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. எதிரி விமானங்கள் இவர்களின் மீது எந்த நேரத்திலும் குண்டு மழை பொழிய நேரிடும் என்று எண்ணத்துடன் சென்றனர். இந்தப் பயணம் முழுவதும் இந்த வீரர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத வீரசாகசப் பயணமாக அமைந்தது என்று பின்னாளில் பல வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். இவர்கள் செல்லும் வழியில் ஜப்பானின் இராணுவ வீரர்களும் சென்றதால் இவர்களின் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்ல வேண்டியிருந்தது. செல்லும் பொழுது மழை தொடங்கியதால் ஒரு சிற்றாற்றில் நீர் வரத்து அதிகமாகி போசின் கார் நீரில் பாதி மூழ்கியது, உடனே போசு வெளியில் வந்து தனக்கு பின்னால் வந்த வாகனங்களை நிறுத்தி மாற்று வழியில் வரச் செய்தார்.

subash2நமது வீரர்கள் அனைவரும் போசின் காரை வெளியில் எடுத்து மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் வாவ் ஆற்றை நோக்கி சென்றனர். அங்கு சென்றதும் மிகப் பெரிய நீண்ட வாகன வரிசை இருந்தது. இதில் நமது வீரர்களின் வாகனம் கடைசியாக இருந்தது. ஆற்றினைக் கடந்து செல்ல சிறு மரப்பாலம் ஒன்று இருந்தது. அதில் ஒரே சமயத்தில் சில கார்களும், ஒன்றிரண்டு லாரிகளும் செல்ல முடியும். அனைத்து வாகனங்களும் அக்கரை அடைவதற்கு இரண்டு மூன்று நாட்களாவது ஆகும், அதுவரை இங்கு இருப்பது என்பது முடியாது என்று நினைத்து போசு நமது வீரர்கள் சிலரை ஆற்றில் இறக்கி ஆழம் எவ்வளவு உள்ளது, நீரின் இழுவிசை சக்தி எப்படி உள்ளது என்று கண்டறியும் படி சொன்னார். உடனே நமது வீரர்கள் ஆற்றில் இறங்கி நீர் கழுத்தின் அளவில் உள்ளது நீரின் இழுவிசை சக்தியும் குறைவாக உள்ளது என்றதும், சில வீரர்களுடன் முதலில் ஜான்சிராணி பிரிவினரின் பெண்களை பாதுகாப்பாக ஆற்றின் அக்கரைக்குச் செல்லும் படி கூறினார் போசு. இவர்களைத் தொடர்ந்து நமது வீரர்கள் சிலர் சென்றதும் பொழுது விடிந்து விட்டது. உடனே அருகில் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று நீங்கள் இருங்கள், நாங்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்து விடுவோம், நீங்கள் செல்லுங்கள் என்றார் போசு.

ஆற்றின் அக்கரை சென்றவர்கள் அருகில் இருந்த ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். இங்கு ஜப்பானிய வீரர்கள் அவர்களது வாகனங்களை தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தனர். இவர்கள் விட்டுச் செல்லும் வாகனங்கள் எதிரியிடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எரித்தனர். இந்தக் கடும் தீ புகையிலிருந்து, போசு மற்றும் வீரர்கள், முன்பாக சென்ற நமது வீரர்கள் தங்கிய இடத்தினை அடைந்ததும் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.

subash4அப்போது போசு சற்று படுத்து உறங்கும் பொழுது எதிரி விமானம் இவர்கள் இருந்த இடத்தின் மேலே இருந்து துப்பாக்கியினால் சுட்டனர். அனைவரும் அருகில் இருந்த தோப்பில் பதுங்கி இருந்தனர். போசை எழுப்பும் பொழுது அவர் எழுந்திருக்கவில்லை அங்கேயே படுத்திருந்தார். அவர் அருகில் எதிரிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சென்றனர். பதுங்கியவர்கள் அனைவரும் போசை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். எதிரி விமானம் சென்றதும் போசு உயிருடன் இருக்கிறாரா என அனைவரும் அருகில் வந்து பார்த்தனர். போசுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதும், முன்பு ஒரு முறை எதிரி விமானம் இதுபோன்று துப்பாக்கியினால் சுடும் பொழுது அனைவரும் ஓடி பதுங்கும் பொழுது, போசு நடந்து சென்றார். அப்போது எஸ்.ஏ.ஐயர் பார்த்ததும் போசு அவரிடம் என்னை கொல்லக்கூடிய தோட்டாக்களை பிரிட்டன் இன்னும் உருவாக்கவில்லை என்றார். போசு கூறியது இந்த நிகழ்ச்சியினால் மீண்டும் எஸ்.ஏ.ஐயர் நினைவில் வந்து சென்றது. இவரும் நேதாஜியை கொல்லக்கூடிய தோட்டாக்களை பிரிட்டன் தயாரிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டார்.

ஓய்வுக்குப் பின் அனைவரும் நடைப்பயணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் பயன்படுத்திய வாகனங்களை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு வந்திருந்தார்கள். தொடர்ந்து பல மைல் தூரம் நடைபயணத்திற்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் முன் நடந்தே சென்றவர் போசு. செல்லும் வழியில் மிக அருகில் வெடிகுண்டுகள் மற்றும் எதிரியின் நடமாட்டம் இருப்பது போல் தென்பட்டதும் போசு நமது வீரர்களிடம் சென்று பார்த்துவிட்டு வரும்படி சொன்னார். நமது வீரர்கள் சென்று பார்த்து வந்து ஜப்பான் இராணுவ வீரர்கள் செல்லும் வழியில் இருந்த ஆயுத கிடங்குகள் மற்றும் ஆயுதங்களை எதிரியிடம் சிக்காமல் இருக்க அழித்துவிட்டு செல்லுகின்றனர் என்றார்கள். பல மைல் தூரம் இரவு தூங்காமல் சென்று ஓர் இடத்தில் ஓய்வு எடுக்கும் பொழுது எதிரிகள் இவர்களை சூழ்ந்து துப்பாக்கியினால் சுடத்தொடங்கினார்கள். நமது வீரர்கள் எதிர்த்து தாக்கியதில் எதிரிகள் பின்வாங்கி சென்று விட்டனர்.

subash6இந்த பயணத்தின் போது ஜான்சிராணி பிரிவினரை பாதுகாப்புடன் பாங்காக் நகரில் சென்று சேர்ப்பதில் போசு மிகக் கவனத்துடன் செயல்பட்டார். இந்த பயணத்தின் போது ஒரு இடத்தில் அனைவரும் அமர்ந்து ஓய்வு எடுக்கும் பொழுது அனைவரின் கால்களும் வலிமை இழந்து இனி ஒரு அடிகூட மேலே எடுத்து வைத்து நடக்க முடியாது என்று நினைத்திருந்தனர். அப்போது போசு தனது கால் பூட்ஸைக் கழற்றினார். அப்போதுதான் போசின் காலில் இருந்த வெடித்த புண்கள் தெரிந்தது. மீண்டும் நடக்கலாம் என்று நினைத்து பயணத்தைத் தொடங்கும் பொழுது ஜப்பான் இராணுவத்திடம் இருந்து இரண்டு லாரிகள் வந்தது. அதில் அனைவரும் செல்ல முடியாது, இருந்தாலும் யாரால் நடக்க முடியாத நிலையில் இருந்தார்களோ அவர்களை வாகனத்தில் செல்லும் படி போசு ஆணையிட்டார். அனைவரும் போசை வாகனத்தில் செல்லும்படி கூறியும் அவர் மறுத்து விட்டார். அனைவருக்கும் வாகன வசதி கிடைக்கும் வரை நான் நடந்தே வருவேன் என்று தெரிவித்து அவர்களை அனுப்பிய பிறகு மற்றவர்களை அழைத்துக் கொண்டு போசு அனைவருக்கும் முன்பாக நடந்தே சென்றார். வரலாற்றில் இது போன்று ஒரு தலைவர் தொண்டர்களுக்கு முன் நான் செல்லுவேன் என்று செய்து காட்டியது கிடையாது. நேதாஜிதான், உண்மையான தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு இருந்தவர்.

போசு வாகனத்தில் ஏறிச் சென்றிருந்தால், அவருக்குப் பின் வரும் வீரர்களுக்கு ஜப்பான் இராணுவம் வாகனங்களை அனுப்பி இருக்குமா? ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே போசு ஜப்பான் அரசுடன் இணைந்து செயல்படும் போது இடையில் சிலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு இடையூறாக இருந்தனர். இதனை போசு நன்கு உணர்ந்தவர், எனவேதான் தன்னலம் கருதாமல் தன்னை நம்பியவர்களின் உயிரையும் தம் உயிர் கொடுத்தேனும் காக்க நாட்டுக்காக தன் உயிரைத் துறக்கத் தயாராக இருந்த தலைவர் போசு. வீரர்கள் சிலரை வாகனங்களில் அனுப்பிவிட்டு நடந்து வந்த போசு அவருடன் வந்த வீரர்கள் பிலின் ஆற்றங்கரையை அடைந்தனர். இந்த ஆற்றைக் கடப்பதும் கடினமாக இருந்தது. படகில் ஏறுவதற்கு ஆற்றில் குதித்து படகில் ஏறும் நிலை. ஆட்கள் அதிகம் படகு குறைவு சிரமப்பட்டு ஆற்றைக் கடந்த வீரர்கள் நடந்து சென்றனர். ஜப்பான் வீரர்கள் போசு முன்பு ஒரு ஆற்றங்கரையில் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்த இடத்தில் இருந்து அவருடைய காரை மட்டும் கொண்டுவந்து இருந்தனர். ஆனால் போசு அதில் செல்லவில்லை. கார் முன் நடந்தே சென்றார். இவர் வாகனங்களில் அனுப்பிய வீரர்கள் மார்பன் கிராமத்தை சேர்ந்தனர்.

பயணத்தைத் தொடர்ந்த போசு மற்றும் மற்ற வீரர்கள் நடந்தே வருவது என்றால் இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கவலைப்படும் நேரத்தில் சில லாரிகள் கண்களில் தென்பட்டது. அதன் ஓட்டுனர்கள் நாங்கள் போசு மற்றும் வீரர்களை அழைத்து வருவதற்கு வந்திருக்கிறோம் என்றனர். அவர்கள் அனைவரும் கவலையிலிருந்து மீண்டனர். மார்பன் கிராமத்தின் அருகில் மோல்மெய்ன் நகருக்கு அருகில் இரயில் நிலையம் இருந்தது. இங்கிருந்து தாய்லாந்து தலைநகரான பாங்காக்கிற்கு சென்றுவிடலாம் என்று அவனைரும் சென்றனர். இரயில் பெட்டிகள் முழுவதும் ஆட்கள். போசு மற்றும் நமது வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பின் போசு ஜப்பான் இராணுவ அதிகாரிகளிடம் பேசி நமது வீரர்கள் செல்ல ஏற்பாடு செய்தார். போசு தாய்லாந்து சென்றதும் அங்கு அவர் நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அனைவரையும் புணரமைத்து மீண்டும் போருக்குத் தயாரான நிலையில் இருக்க ஏற்பாடு செய்தார். பின்னர் நிதி நிலைமையை சரிசெய்ய பல முயற்சிகளை எடுத்துக் கொண்டார். தாய்லாந்து அரசிடம் கடன் கேட்டார். தற்காலிக இந்திய அரசின் நிதிநிலைமையை சரி செய்யவேண்டும். அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பிரிட்டிசு இராணுவம், ஒரு அடி இடத்தைக் கூட மலேசியாவில் பிடிக்கக் கூடாது என்று அங்கிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு ஆணையிட்டார். தாய்லாந்தில் இருந்த வீரர்களும் செல்ல தயார் நிலையில் இருக்க ஆணையிட்டிருந்தார் போசு.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 44”

அதிகம் படித்தது