மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 46

கி.ஆறுமுகம்

Jan 31, 2015

subash3போசு போர்க் குற்றவாளியாக இராணுவ வீரர்களுடன் சரணடையக் கூடாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. போசு பிரிட்டிசாரிடம் பிடிபடவில்லை எனில் அவர் எங்கு செல்லலாம்?, எப்படி செல்லுவது?, அதற்கு எப்படி ஏற்பாடுகளை செய்வது? என்று ஆலோசிக்கப்பட்டது. பின்னர் போசு சோவியத் யூனியன் செல்வதுதான் சிறந்தது மற்றும் அவருடன் யார் செல்லுவது? என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது போசு ஒவ்வொரு அமைச்சருக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தினை வகுத்துக் கொடுத்தார்.

இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது போரில் ஜப்பான் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைந்த செய்தி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜப்பானின் இந்த அறிவிப்பு போசுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.ஐயர் போசிடம், ஜப்பான் சரணடைந்த பிறகு நீங்கள் சோவியத் பகுதிக்கு மஞ்சூரியா வழியாக ஜப்பான் வழங்கும் விமானத்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. போரில் சரணடைந்த நாட்டின் விமானத்தில் முன் அனுமதி இல்லாமல் வானத்தில் பறந்தால் எதிரிநாட்டு விமானம் எந்த நேரத்திலும் சுட்டு வீழ்த்திவிடும் அல்லது அந்த விமானம் தரை இறக்கப்படும். அவ்வாறு தரை இறக்கப்பட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்றார். அதுவும் முன்பின் தெரியாத மஞ்சூரியாவுக்கோ அல்லது மாஸ்கோவுக்கோ நீங்கள் செல்லும் போது ஏற்படும் ஆபத்துக்கள், சென்ற பின் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் உள்ளது. இவ்வளவு ஆபத்துக்களை நீங்கள் எதிர் நோக்க வேண்டுமா? என்றார். அதற்கு போசு, நான் எப்போதும் ஆபத்துக்களை எதிர் நோக்கிதான் இருக்கிறேன், அறிமுகமில்லாத பகுதியில் நிகழ்த்தும் சாகசம்தான் தான். நான் சென்ற பின்னர் சிங்கப்பூரில் உள்ள கலோனல் பிரீதம், பாங்காக்கில் உள்ள மேஜர் அபித்ஹஸின், தேப்நாத் தாஸ், மேஜர் சுவாமி ஆகியோரையும் தம்மோடு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

subaash1கூட்டம் முடிந்ததும் 1945 ஆகஸ்டு 16ல் போசு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும், இந்திய தேசிய இராணுவத்திற்குக் கொடுத்த ஆதரவு மற்றும் கொடுத்த நிதியின் மூலம் நமது வீரர்கள் செயல்படுத்திய வீரசாகசங்கள் அனைத்தும் நமது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு அத்தியாயமாக முடிவடைந்தது. இதனை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மக்கள் நீங்கள் அனைவரும் தியாகமும் தேச பக்தியும் மிக்க முன்னுதாரணமான மக்களாகப் பிரகாசிக்கிறீர்கள். என்னுடைய வேண்டுகோளை ஏற்று நீங்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் மிக உற்சாகத்துடன் நீங்கள் செயல்பட்டதை நான் என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் தான் இந்தியத் தாயின் உண்மையான மக்கள், நீங்கள் செய்த தியாகங்களும் அடைந்த துயரங்களும் எல்லையற்றவை. இவற்றிற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்பதற்கு நான் வருந்துகிறேன். உங்கள் தியாகம் ஒருபோதும் வீணாகாது. இது உலகில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்ச்சி பெறுவதற்கும் மறுமலர்ச்சி பெறுவதற்கும் வழிவகுக்கும். உங்கள் சாதனைகள் பெருமையோடு பேசப்படும், இவை என்றைக்கும் மறக்கமுடியாதவை. நான் ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறுகிறேன். நமது இந்த தற்காலிக பின்னடைவைக் கண்டு மனம் தளராமல் இருங்கள், உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணம் கூட நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைப்படுத்த உலகில் எந்த ஒரு சக்தியாலும் இயலாது, இந்தியா விடுதலைப் பெற்றே தீரும், அந்த நாள் அதிக தொலைவில் இல்லை ஜெய்ஹிந்த்” என்றார்.

இந்த அறிவிப்பிற்கு முன்னர் 1945- மே 20ம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார் போசு. அதில், பர்மாவில் அமெரிக்க பிரிட்டன் இராணுவத்தின் மூலம் கைது செய்யப்பட்ட இந்திய தேசிய இராணுவ வீரர்களை ஒரு நாட்டின் இராணுவக் கைதிகள் என்று பார்க்காமல் அவர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் மிருகத்தனமாக சித்திரவதை செய்து பிரிட்டிசு அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் எனக்கு செய்தி கிடைத்திருந்தது. நாம் பதிலடி கொடுக்க முடியாது என்று பிரிட்டன் நினைத்திருக்கலாம், நாம் பதிலடி கொடுக்கும் முன் நான் ஒன்றைக் கூறுகிறேன், நமது நாட்டுத் தலைவர்கள், மக்களிடம் இந்த கொடுங்கோலர்களின் செயல்களைத் தெரியப்படுத்துங்கள். இந்திய விடுதலைக்காகப் போராடிய இந்திய தேசிய இராணுவ வீரர்களை இப்படிக் கொடுமை செய்கிறார்கள் என்று மக்களிடம் கூறுங்கள், மக்கள் அனைவரும் பிரிட்டிசாருக்கு எதிராக போராட வேண்டும், நமது வீரர்களைப் பாதுகாப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அறிவித்தார்.

subash3இந்த செய்தி பிரிட்டிசு அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடிக்கக் காரணமாக இருந்தது. கிழக்கு ஆசிய மக்களுக்கு அறிக்கை விட்டுவிட்டு தனது சகாக்களுடனும் இராணுவ அதிகாரிகளுடனும் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார் போசு. மேஜர் ஜெனரல் கியானியும், மேஜர் ஜெனரல் அழகப்பனும் வழியனுப்பி வைப்பதற்காக வந்திருந்தனர். காலையில் விமானம் புறப்பட்டது. போஸ்டன் ஹபிபுர் ரஹமான், கலோனல் பிரீதம் சிங், எஸ்.ஏ.ஐயர் உடன் சென்றர். விமானம் பாங்காக் நகரை அடைந்தது. பாங்காக் நகருக்கு போசு வந்திருக்கும் செய்தி மக்களிடம் சென்றதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. அனைவரும் போசின் அடுத்தத் திட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு மிக ஆர்வமாக இருந்தனர். அனைவரையும் பார்த்துப் பேசி அனுப்பியப் பிறகு, இந்திய தேசிய இராணுவ வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு செல்லும் போது அதிகாலை 5 மணி. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் புறப்படுவதற்குத் தயாராக வேண்டியிருந்தது. போசு உடன் எஸ்.ஏ.ஐயர், ஹபிபுர் ரஹமான், பிரீதம் சிங், அபித் ஹஸின், தேப்நாத் தாஸ் ஆகியோர் ஆளுக்கு ஒரு சிறு பெட்டியோடு தயாராக இருந்தனர். அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பாங்காக் விமான நிலையத்திலிருந்து காலையில் விமானம் புறப்பட்டது. இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமானம் சைகோனுக்கு வந்து தரை இறங்கியது.

போசு அங்கிருந்த ஜப்பான் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். ஜெனரல் இஸோடா, ஹச்சியா மற்றும் சில அதிகாரிகள் உடனே தலாத் தீவுக்குச் சென்று பீல்டு மார்ஷல் டெராச்சியைச் சந்தித்த போசு தன் எதிர்காலத் திட்டத்தினைத் தெரிவித்தார். மஞ்சூரியாவுக்குச் செல்ல ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்ய அனுமதி பெற்றுவரவேண்டும் என்று முடிவு செய்து இவர்கள் உடனே புறப்பட்டார்கள். தலாத் தீவை நோக்கி அங்கு சென்று டெராச்சியைப் பார்த்து போசு சோவியத் யூனியன் பகுதிக்குச் செல்ல விரும்புகிறார், சோவியத் யூனியன் சென்று அங்கிருந்து கொண்டு சோவியத் யூனியன் இராணுவத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடப் போகிறாராம். சோவியத் யூனியன் அவரது திட்டத்தினை ஏற்காமல் தன்னை இராணுவ சிறையில் அடைத்தாலும் அல்லது மரணதண்டனை கொடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தனர். ஜப்பான் அரசு தான் ஐரோப்பாவில் இருந்து வந்த போது தமக்கு பூரண ஒத்துழைப்பை அளித்தது போல் இப்பொழுதும் உதவ வேண்டும் என்று போசு கேட்டுக் கொண்டார் என்று ஜெனரல் இஸோடா டெராச்சியிடம் கூறினார். டெராச்சி உடனே டோக்கியோவுக்கு போசின் திட்டத்தினைத் தெரிவித்தார். டோக்கியோ அதிகாரிகள் போசு பல உதவிகளை நம்மிடம் பெற்றுவிட்டு இப்பொழுது உடனே சோவியத் யூனியன் செல்கிறாரே என்றனர். டெராச்சி போசு சுதந்திரமாக செயல்படக்கூடிய மனிதர், அவரை நீங்கள் என்ன ஜப்பான் குடிமகன் என்று நினைத்துவிட்டீர்களா? என்று மிகக் கோபமாக எடுத்துரைத்தார். அப்போது ஜப்பான் இராணுவத்தில் உயர்ந்த பதவியிலும் மற்றும் ஜப்பான் அரசியலிலும் சிறந்த இடத்தினையும் கொண்டிருந்த டெராச்சியின் பதிலுக்கு மறுப்பேதும் ஜப்பான் அரசால் தெரிவிக்க முடியாமல் போசின் திட்டப்படி டெராச்சி உதவலாம் என்று தெரிவித்தது.

subashu2டெராச்சியின் மூலம் டோக்கியாவின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட இஸோடாவும், ஹச்சியாவும் அன்று மாலையில் சைகோனுக்கு திரும்பினர். சைகோனில் நாராயண்தாஸ் என்பவரின் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போசை ஜப்பானின் தொடர்பு அதிகாரி கியானே என்பவர் வந்து சந்திக்க விரும்பினார். விவரம் என்ன என்று எஸ்.ஏ.ஐயர் கேட்டதும், எஸ்.ஏ ஐயர் போசை சந்தித்து ஐயா விமான நிலையத்தில் விமானம் புறப்படத் தயாராக உள்ளதாம் அதில் ஒரே ஒரு சீட் காலியாக உள்ளதாம், நீங்கள் வருவீர்கள் என்றால் உங்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளதாம் என்றார். போசு அந்த விமானம் எங்கு செல்லுகிறது என்றார், அதற்கு கியானே தெரியாது என்றார். அதற்கு நேரம் இல்லை உடனே புறப்பட வேண்டும் என்றார் கியானே. போசு இது போன்று விவரம் இல்லாமல் என்னால் உடனடியாக புறப்பட முடியாது நீங்கள் சென்று விவரம் அறிந்தவர்களை அனுப்பிவையுங்கள் என்றார். கியானே சென்றதும் வேகமாக ஒரு கார் மீண்டும் வந்தது. அதில் ஜெனரல் இஸோடா, ஹச்சியா மற்றும் டெராச்சியின் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் வந்தனர். இவர்கள் போசுடன் ஒரு தனி அறையில் பேசினார்கள். ஹபிபுர் ரஹமான் மட்டும் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளிவந்த போசு, ஹபிபுர் ரஹமான், அபித் ஹஸன், எஸ்.ஏ.ஐயர், தேப்நாத் தாஸ், குல்ஸாராசிங், பிரீதம் சிங் ஆகியோருடன் அவசரமாக கலந்தாலோசித்தார். இன்னும் அரைமணி நேரத்தில் ஒரு விமானம் புறப்படத் தயாராக உள்ளதாம். அதில் ஒருவர் மட்டும் செல்ல முடியும் என்கிறார்கள். நான் மேலும் ஒருவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறேன். ஆனால் அது சாத்தியம் இல்லை என்கிறார்கள், நான் தனியாக செல்லட்டுமா என்ன? உங்கள் கருத்துகளை உடனே தெரிவியுங்கள், கலந்தாலோசிக்க நேரம் இல்லை என்றார். இதனைக் கேட்ட அவரது நண்பர்கள் திகைத்து நின்றனர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் போசை மட்டும் தனியாக அனுப்புவதா என்று.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 46”

அதிகம் படித்தது