மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 47

கி.ஆறுமுகம்

Feb 7, 2015

bose1போசின் நண்பர்கள் போசை பார்த்து நாங்கள் எப்படி உங்களை தனியாக அனுப்ப முடியும், எங்களில் யாராவது ஒருவர் உங்களுடன் வர இடம் அளிக்கும்படி ஜப்பானியர்களிடம் கேளுங்கள் ஐயா என்றனர். நான் ஜப்பானியரை வற்புறுத்தினேன், ஆனால் இடம் இல்லை என்கிறார்கள். வாதத்திற்கு நேரம் இல்லை, நான் போகலாமா அல்லது இல்லையா என்று தெரிவியுங்கள் என்றார். அவர் எங்கு போகிறார், அந்த விமானம் எங்கு செல்கிறது என்று போசு தனது நண்பர்களிடம் கூறவில்லை, இவர்களும் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்குத் தெரியும் என்று போசுக்குத் தெரியும். நண்பர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் ஒருவருக்காவது விமானத்தில் இடம் தரவேண்டும் என்று வேண்ட, ஜப்பானியர்ளை அழைத்துத் தனி அறைக்குள் போசும், ஹபிபுர் ரஹ்மானும் சென்று சில நிமிடங்களில் வெளிவந்து, ஜப்பானியர்கள் என்னுடன் ஒருவரை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர், நானும் ஹபிபுர் ரஹமானும் புறப்படுகிறோம் என்று போசு தனது நண்பர்களிடம் கூறினார். அவரது நண்பர்கள் நீங்கள் சென்றதும் உடனே எங்களையும் அங்கு அழைத்துச் செல்ல ஜப்பானியர்கள் ஏற்பாடுகளை செய்வதற்கு அனைத்தையும் நீங்கள் செய்து விடுங்கள் ஐயா என்றனர். இவர்களுக்கு நன்றாகத் தெரியும் அந்த விமானம் மஞ்சூரியாவுக்குத்தான் போக இருந்தது என்று. போசு நாம் அனைவரும் விமான நிலையம் செல்லுவோம், மேலும் யாருக்காவது இடம் கிடைத்தால் செல்லலாம் என்றார். அனைவரும் விமான நிலையம் நோக்கி புறப்பட்டனர்.

விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த ஜப்பான் அதிகாரிகளுக்கு கை குளுக்கிவிட்டு, போசு விமானத்தில் ஏறுவதற்குச் செல்லும் முன் தனது நண்பர்களிடம் வந்து பிரியா விடை பெற்றுக் கொண்டு தனக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் நின்று அவர்களுக்கு ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறிவிட்டு விமானத்தின் சிறிய படிக்கட்டில் ஏறி உள்ளே சென்றார். எஸ்.ஏ.ஐயர், அபித் ஹஸன், குல்ஸாரா சிங், பிரீதம் சிங், தேப்நாத் தாஸ் போன்றோர் கண்களில் கண்ணீரோடு போசை பிரிவதற்காக நின்று கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போசை அனுப்புவதற்கு துன்பப்பட்டாலும், போசு பிரிட்டிசு அரசிடம் போர் குற்றவாளியாக பிடிபடக்கூடாது என்ற மனநிலையில் ஒற்றுமையாக இருந்தனர்.

ஜப்பானியரின் இந்த விமானம் போர் குண்டு வீச்சு விமானம், 97-2 என்ற மாதிரியைச் சேர்ந்த இந்த விமானம் சேலி என்று பெயர் கொண்டிருந்தது. 7400 கிலோ எடையுள்ள இந்த விமானத்தில் மொத்தம் 11 நபர்களுடன் 1 டன் எடையுள்ள குண்டுகளையும் ஏற்றிச் செல்லக்கூடிய விமானமாகும். போசின் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் 13 வது நபராக ஹபிபுர் ரஹமானையும் ஜப்பானியர்கள் ஏற்றிக் கொண்டனர். மேலும் கூடுதலாக முக்கியமான ஆவணங்களைக் கொண்ட சுமார் 10 பெட்டிகளையும் ஏற்றிக் கொண்டனர். விமானிகள், இந்த விமானத்தில் 11 பேர் மட்டுமே செல்ல முடியும், போசு நீங்களே ஒரு உபரிப் பயணி 12-வது நபர், அவருக்கு மேல் இன்னொரு பயணி ஹபிபுர் ரஹமான் மற்றும் ஏகப்பட்ட லக்கேஜ்களையும் ஏற்றுவது அதிகப்படியான சுமையாகிவிடும் எனவே போசின் ஆவணங்கள் அடங்கிய 10 பெட்டிகளை இறக்கிவிடும்படி கூறினர். அதனால் 10ல் 7பெட்டி இறக்கப்பட்டு வழி அனுப்புவதற்கு வந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானம் சைகோனிலிருந்து மஞ்சூரியாவின் தலைநகரான சிங்சிங் என்ற சாங்சுன் நகருக்கு டெய்ரன் என்ற நகரின் வழியாகச் செல்வதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்டது.

bose8விமானம் புறப்பட்டு விமான நிலையத்தில் இருந்து மேலே சென்று தமது கண்களில் இருந்து மறையும் வரை போசின் நண்பர்கள் அங்கேயே கண்ணீருடன் நின்று கொண்டிருந்தனர். விமானம் சைகோனுக்கும் ஹனோய்க்கும் நடுவில் உள்ள டூரானே என்ற ஜப்பானியரின் படைமுகாமில் இறங்கியது. அதிகமான எடையுடன் தொடர்ந்து இரவிலும் பயணம் செய்வது ஆபத்தானது எனவே இந்த இரவு பொழுதை இங்கேயே தங்கி விட்டு காலையில் மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இரவு ஓய்வின் போது போசுடன் வந்த ஜப்பான் அதிகாரிகள் போசுடன் பேசும் பொழுது அவரது வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டனர். இவரது தேசப்பற்றைக் கண்டு வியந்தனா. இவரின் நட்பு கிடைத்ததை எண்ணி பெருமைப்பட்டனர். போசின் பேச்சாற்றலைக் கண்டு வியந்தனர். பின்னர் விமானிகள் விமானத்தில் இருந்த போர் ஆயுதங்களை கீழே இறக்கியதால் விமானத்தின் எடை சிறிது குறைந்தது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு விமானம் டூரானே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பொழுது அதில் போசுடன் ஆறு பேர் மட்டும் ஏறிக் கொண்டனர்.

விமானம் புறப்பட்டது, மதியம் தைக்கோகுவின் சுங்ஷான் விமான நிலையத்தை அடைந்தது. அங்கு விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. போசு அங்கு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். விமானம் மீண்டும் வானத்தில் பறப்பதற்குத் தகுதியாக உள்ளதா என்ற சோதனைகள் செய்யப்பட்டது. அவர்கள் மஞ்சூரியா நகரை அடைய மேலும் 1000 நாட்டிகல் விமானப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. விமான சோதனையில் ஒரு பகுதியில் சிறு இயந்திர குறைபாடு கண்டுபிடிக்கப்பட்து அதனை சரிசெய்ய சில மணிநேரம் எடுக்க வேண்டியிருந்தது. போசு தனது அறையில் இருந்தார். போசு தைக்கோகு வந்திருக்கிறார், அவரைப் பார்ப்பதற்கு அங்கிருந்த எந்த ஜப்பானிய இராணுவ அரசு அதிகாரிகளும் விமான நிலையத்திற்கு வரவில்லை. இதற்கு ஜப்பானியர்கள் பிற்காலத்தில் கூறியது “ஜப்பான் போரில் சரணடைந்தது என்று தெரிவித்த செய்தியை அங்கிருந்த இராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் ஏதோ தவறு உள்ளது என்று நினைத்து அங்கிருந்த இராணுவ அதிகாரிகளை விட்டு காவலில் வைத்து சிறைப்படுத்திவிட்டனர். எனவே ஜப்பானியரின் ஆணையுடன் வேறு அதிகாரிகள் அங்கு சென்று நிலைமையை எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. எனவேதான் அன்றைய சூழ்நிலையில் தைக்கோவில் போசை ஜப்பானியர்கள் எவரும் சந்திக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

விமானம் புறப்படுவதற்குத் தயார் என்று தெரிவித்ததும் போசும் மற்றவர்களும் விமானத்தில் ஏறி புறப்பட்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திற்குள் அந்த விமானத்தின் போர்ட் புரோபெலர் என்ற ஒரு பகுதி பழுதடைந்து விமானம் தீப்பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் பற்றியெரிந்தவாறே விமானம் தரையில் விழுந்து மோதியது. விமானத்தில் இருந்த போசும் அவரது நண்பர் ஹபிபுர் ரஹமானும் தீக்குள் இருந்து அரும்பாடுபட்டு வெளியே வந்தனர். ஹபிபுர் ரஹமான் சிறு தீக்காயங்களுடன் இருந்தார். போசு தனது உடையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது. ஹபிபுர் ரஹமான் உடனே போசிடம் சென்று அவர் மேல் இருந்து தீயை அணைக்கப் போராடினார். இந்த விமானத்தில் பயணம் செய்த 13 நபரில் 8 பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மீதி ஐந்து பேர் இறந்து விட்டனர். விபத்து நடந்த இடத்திலேயே விமானிகள் இருவர் ஒரு ஜப்பான் அதிகாரி பின்னர் மருத்துவ மனையில் போசும் மற்றொரு ஜப்பான் அதிகாரியும் இறந்துவிட்டனர் என்று ஜப்பான் அரசால் அறிவிக்கப்பட்டது. தீக்காயத்துடன் போசு அருகில் இருந்த இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போசு தனது உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவர் போல் காணப்பட்டார் என்று பின்னாளில் உடன் இருந்த ஹபிபுர் ரஹமான் குறிப்பிட்டுள்ளார்.

மருத்தவமனைக்குச் செல்லும் போது,

போசு: ஹபிபுர் ரஹமான் உங்களுக்கு அதிகம் காயம் ஏற்படவில்லை என்று நான் நம்புகிறேன்.

ஹபிபுர் ரஹமான்: ஆமாம் ஐயா நான் சிறு காயங்களுடன் தப்பிவிட்டேன்.

போசு: ஹபிபுர் என் இறுதிகாலம் நெருங்கிவிட்டதாக நான் உணர்கிறேன் நான் இந்த விபத்தில் இருந்து மீண்டுவருவேன் என்று தெரியவில்லை. என் நாட்டு மக்களுக்கு ஒன்றை தெரிவியுங்கள் நான் என் இறுதி மூச்சு உள்ளவரை நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினேன். நம் நாட்டை இனிமேல் யாராலும் அடிமைப்படுத்த முடியாது. நாம் மிக விரைவில் சுதந்திரம் அடைந்து விடுவோம், மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம், நம்மை எந்த சக்தியாலும் இனி அடிமைப்படுத்த முடியாது. இந்தியா மிக விரைவில் விடுதலை அடையும்.

bose2மருத்துவமனைக்குச் சென்ற போசுக்கு மிகத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவர்கள் அளித்த மருந்தின் மூலம் போசு சற்று தெளிவு பெற்றார். ஹபிபுர் ரஹமான் போசின் அருகிலேயே இருந்தார். பின்னர் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்து கண்விழித்ததும் மிகவும் அமைதியாகப் பேசினார், அவரால் பேச முடியவில்லை, இருந்தாலும் முயன்று தனது நண்பர் பீல்டுமார்ஷல் கவுண்ட் டெராச்சிக்கு ஒரு செய்தியை சொன்னார். பின்னர் மீண்டும் “ஹபிபுர் நான் விரைவில் இறந்துவிடுவேன் என்று உணர்கிறேன், என் தேச மக்களுக்கு சொல்லுங்கள் நான் என் இறுதி மூச்சு உள்ளவரை இந்திய விடுதலைக்கு பாடுபட்டேன். இந்தியா விரைவில் விடுதலை அடையும் இந்தியா வாழ்க” என்று கூறினார். பின்னர் மார்பியா என்னும் மயக்க மருந்தை தரும்படி மருத்துவரிடம் சொன்னார். மருந்து போட்டதும் வலி தெரியாமல் சிறிது நேரம் உறங்கினார். பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணிக்கு இடையில் உடல் ஜன்னி கண்டது போல நடுக்கம் கண்டது. பின் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இரவு 8.30 மணிக்கு போசு இறந்து விட்டதாக மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளில் குறிக்கப்பட்டது என்று ஹபிபுர் ரஹமான் குறிப்பிட்டிருக்கிறார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 47”

அதிகம் படித்தது