மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 50

கி.ஆறுமுகம்

Feb 28, 2015

bose4ஹபிபுர் ரஹமான் கூறிய அனைத்தையும் கேட்ட ஐயர் மனதுக்குள் இருந்த சிறு துளி நம்பிக்கையும் தரைமட்டமானது. இது உண்மை நமது நேதாஜி இனி வரமாட்டார் என்று தீர்மானித்து மௌனமாகக் கண்ணீருடன் நாற்காலியில் சாய்ந்தார். டோக்கியோ பத்திரிகை நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டார், அவரது சாம்பல் இங்கு உள்ளது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும், இன்னும் இரண்டு நாட்களுக்கு ஈமச்சடங்குகள் நடக்கும் என்றும் தெரிவித்தது. செய்தி பார்த்ததும் இந்திய வாழ் மக்கள் அனைவரும் நேதாஜியின் உடலைக் காட்டுங்கள் என்றனர். அதற்கு ஜப்பான் அரசு உடலைப்பெற வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே அவரது சாம்பலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்து விட்டு, அவர் இறந்த உடனே அவருக்கு ஈமச்சடங்குகள் முடிவடைந்து விட்டது, எனவே இங்கு வைக்கப்படும் சாம்பலுக்கு மரியாதை மட்டும் மக்கள் செலுத்தலாம் என்று அறிவித்தது. இது முன்னுக்குப்பின் முரண்பாடான தகவல், எனவே நேதாஜி இறந்த செய்தியை நாங்கள் எவரும் நம்ப மாட்டோம் என்று மக்கள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்ட இந்திய தேசிய இராணுவ வீரர்களின் மீது கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு டெல்லியில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவர்களை தண்டிப்பதற்கு பல பொய் குற்றங்களை இவர்கள் மீது திணித்திருந்தது பிரிட்டிசு அரசு. இவர்களுக்கு ஆதரவாகப் போராடிய இந்திய வழக்கறிஞர் பல கேள்விகளை நீதிபதியின் முன் வைத்தார். இந்திய வழக்கறிஞர், “இவர்கள் ஒரு நாட்டின் இராணுவ வீரர்கள், இவர்கள் நாட்டின் அரசு சொல்லும் உத்தரவை ஏற்று போர் செய்தவர்கள். இவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது எனில் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச சட்டதிட்டங்களின் மூலம் தான் விசாரணை நடத்த வேண்டும். இவர்களது அரசை பல நாடுகள் அங்கீகரித்துள்ளது, எனவே தற்காலிக சுதந்திர அரசு என்பது ஒரு முழு தனி சுதந்திரமான நாடு, இதன் போர் பிரகடனத்தை பல நாடுகள் அங்கீகரித்துள்ளது. இவர்கள் வெளிப்படையாகப் போர் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்கள் இவர்கள், கலகக்காரர்கள் இல்லை” என்று மிகவும் திறமையாக வாதாடினார்.

bose8இந்த வழக்கின் மூலம் மக்கள் பிரிட்டிசு அரசின் மீது மிகப் பெரிய அதிருப்தியில் இருந்தனர். போசு இறந்த செய்தியையும் நம்பவில்லை. போசின் இராணுவ புரட்சி இந்தியாவில் எதனை ஏற்படுத்தும் என்று அவர் சிந்தித்து செயல்பட்டாரோ அது மிகவும் தெளிவாக இருந்தது, ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. போசின் இறப்பு செய்தியை பல தலைவர்கள் நம்பவில்லை. பிற்காலத்தில் ஜப்பான் அரசு போசு சென்ற விமானத்தை இயக்கிய விமானிகள் அலோயாகியும், நோனாகாகியும் முழுமையான தகுதி பெற்ற விமான ஓட்டிகள் அல்ல, அப்போது போர் சூழல் எனவே எதிரி நாட்டு விமானங்கள் எந்த நேரத்திலும் எங்கள் விமானங்களை வானில் சுட்டு வீழ்த்தலாம் அதனால் நாங்கள் முன் அனுமதி பெறாமல் வானில் விமானத்தை இயக்க முடியாது. எனவே அப்போது இருந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு இவர்களை நாங்கள் தேர்வு செய்தோம் என்று அறிவித்திருக்கிறது. போசின் இறப்பு குறித்து பல தலைவர்களும் நம்பாமல் இருந்தனர். இந்தியாவும் போசும் இணை பிரியாதவர்கள், போசு எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றது ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகை.

போசு விமான விபத்தில் இறந்திருக்க மாட்டார் இதனை நான் நம்பவில்லை என்று அன்றைய அரசியல் தலைவரில் குறிப்பிடத் தக்கவரான கூடியவர் ஆர். ரூய்க்கர் லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறினார். போசின் சகோதரரின் மகன் அரவிந்த் போசு இவர் நேதாஜி உயிருடன் இருக்கிறார் அவர் இருக்கும் இடத்தினை தற்பொழுது கூறமுடியாது என்றார். போசின் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் போசு உயிருடன் இருக்கிறார் என்ற நம்பகமான தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது என்று கூறினார். நேதாஜி இறந்த செய்தியை நம்ப முடியாததற்குப் பல தகவல்கள் மற்றும் பல விடை தெரியாத கேள்விகளும் தான் காரணம்.

bose91945 ஆகஸ்ட் 17ல் சைகோனிலிருந்து போசு புறப்பட்டுச் சென்ற விமானம் 18ம் தேதி பிற்பகலில் தைக்கோகு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியது அன்று இரவு அவர் இராணுவ மருத்துவமனையில் இறந்து விட்டார் எனில் அப்பொழுது சைகோனில் இருந்த நேதாஜியின் மிக நெருக்கமானவர்களான எஸ்.ஏ.ஐயர், குல்ஸாரா சிங், தேப்நாத் தாஸ், அபித்ஹஸன் ஆகியோருக்கு ஏன் தெரிவிக்கவில்லை. இவர்களை ஏன் உடனே தைக்கோ நகருக்கு அழைக்கவில்லை?, இவர்களை அழைத்து நேதாஜியின் உடலை ஒப்படைத்திருக்கலாம். இதனை ஏன் ஜப்பானியர்கள் செய்யவில்லை?, இவர்களிடம் ஒப்படைத்து சிங்கப்பூருக்கோ அல்லது டோக்கியோவுக்கோ செல்ல ஏன் ஜப்பான் ஏற்பாடு செய்யவில்லை?, இவர்களை அழைத்து இவர்கள் விருப்பப்படி ஈமச்சடங்குகளை ஏன் செய்யவில்லை?. இவர்கள் முன் ஜப்பான் அரசு நேதாஜியின் ஈமச்சடங்குகளை செய்திருந்தால் நேதாஜியின் மரணம் குறித்து ஏதும் சந்தேகங்கள் இல்லாமல் இருந்திருக்கும். இதுதானே ஜப்பான் அரசு செய்திருக்க வேண்டும். பின் ஏன் ஆகஸ்ட் 18ல் நடந்த விமான விபத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐயரிடம் ஒரு வரி தகவல் போல் தெரிவித்துவிட்டு, பின்னர் மேலும் இரண்டு நாட்கள் சென்ற பிறகு ஜப்பான் அரசு அதிகாரபூர்வமாக ‘நிப்போன் டைம்ஸ்’ என்ற பத்திரிகையில் இறந்துவிட்டார் என்ற செய்தியை வெளியிட்டது. இந்த அதிகாரபூர்வமான தகவல் வெளியிட ஜப்பான் எடுத்துக்கொண்டது 4 நாட்கள் இந்த ஆகஸ்ட் 18- 1945ல் இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதி வரை இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை என்று பிற்காலத்தில் தைவான் அரசு வெளியிட்டுள்ளது.

போசுடன் விமானத்தில் சென்று விபத்தில் உயிர் பிழைத்தவர்களைப் பற்றிய தகவல் எதனையும் ஜப்பான் அரசு அறிவிக்கவில்லை. அவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கவும் இல்லை, அவர்கள் நிலை என்ன என்பதை ஜப்பான் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. போசின் அஸ்தி என்று கூறப்படும் அந்த சாம்பலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. போசு இறந்த உடன் அவர் உடலை ஜப்பான் அரசு புகைப்படம் எடுக்கவில்லை. ஈமச்சடங்குகள் நடத்திய போதும் எந்தொரு புகைப்படமும் மற்றும் பதிவுகளையும் ஜப்பான் அரசு செய்யவில்லை.

எஸ்.ஏ.ஐயரும், கர்னல் ஹபிபுர் ரஹமானும் இந்தியாவுக்கு வந்தனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுதான் இவர்கள் இந்திய தேசிய இராணுவ வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து இந்திய அரசு கேட்டுக் கொண்டதினால் தான் இவர்கள் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வந்ததும் டெல்லியில் இருந்த கைதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாமில்தான் ஜெனரல் நவாஸ்கான், மேஜர் அபித் ஹஸன், ஜெனரல் தில்லான் முதலியவர்களும் இருந்தனர்.

bose10இவர்களில் மேஜர் அபித் ஹஸன், நேதாஜி விமான விபத்தில் இறந்த செய்தியை முற்றிலும் நம்ப மறுத்து விட்டார். இவர் நேதாஜியின் நம்பிக்கைக்கு உரிய நபர், இவர் ஜெர்மனியிலிருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலின் பயணத்தின் போது போசுடன் பயணித்தவர் மற்றும் போசுக்கு மிகவும் அந்தரங்கமான உளவு வேலைகளில் ஈடுபட்டவர். இவர் போசு நிச்சயமாக ரசியாவில் கைதியாக அல்லது சுதந்திர மனிதராகவே இருக்க வேண்டும் என்று உறுதிபட தெரிவித்தார். ஹபிபுர் ரஹமானை கலோனல் ஷெகாலின் பார்த்த பிறகு இவர் கூறியதாவது “நான் ஹபிபுர் அவர்களைப் பார்த்ததில் அந்த விமான விபத்தில் போசு இறந்திருப்பார் என நான் நம்பவில்லை. ஏனெனில் நான் ஹபிபுர் அவர்களைப் பார்க்கும் பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்த தீக்காயங்கள் சிறியதாகவே இருக்கின்றது. மேலும் அவர் அணிந்திருந்த ஆடை, அன்று விபத்து நடந்த பொழுது அணிந்திருந்த ஆடை. எனவே அந்த ஆடை தீயில் எரிந்த அறிகுறிகள் மிகச் சிறியதாகவே தெரிகிறது. போசு முதலில் தீயில் இருந்து வெளிவந்த பிறகு இவர் வெளியே வந்தார் எனில் இவருக்கும் அல்லவா மிகவும் அதிகமான தீ காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இவர் மட்டும் எப்படி சிறிய காயங்களுடன் தப்பினார்” என தெரிவித்தார்.

பிறகு நேதாஜி விபத்தில் இறந்திருந்தால் அவருடன் இருக்கும் அவரது உடமைகள் எங்கே, அவர் எப்போதும் தன்னுடனே வைத்திருந்த அவரது மூக்குக் கண்ணாடி மற்றும் வெள்ளியினால் ஆன அவரது புகைபிடி டப்பா எங்கே போயிற்று என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். இந்தப் பொருட்கள் நேதாஜியின் உடன் எப்பொழுதும் இருக்கக்கூடியவை அவர் வெளியில் வந்ததும் அவரது உடையை கழற்றி எறிந்தேன் என்று ஹபிபுர் சொல்லும் பொழுது இந்தப் பொருள்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பொருட்கள் இல்லை எனவே போசு உயிருடன் சென்றிருந்தால் மட்டும் இவையும் அவருடன் சென்றிருக்கலாம். இவர் மற்றவர்களை நம்ப செய்வதற்காக தமது கை கடிகாரத்தினை மட்டும் விட்டு சென்று இருக்கிறார் என்று பலர் பல விதமாக தமது கருத்தினை போசின் இறப்பை நம்பாமல் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

-       தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 50”

அதிகம் படித்தது