மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 51

கி.ஆறுமுகம்

Mar 7, 2015

subaash newபோசின் மரணம் குறித்து பல மர்மங்கள் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஹாங்காங்கிலிருந்து வெளியான செய்தி, “போசு பயணம் செய்த விமானம் வெடிக்கவில்லை, அதே விமானம் மறுநாள் ஹாங்காங் வந்து இறங்கியது. எனவே போசு இறக்கவில்லை, அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டது.

இதற்கிடையில் போசின் நெருங்கிய நண்பரும் தென்னாட்டு போசு என்று மக்கள் இடையே புகழ் பெற்றிருந்த முத்துராமலிங்க தேவர் அவர்களின் போசு மரணம் குறித்த கருத்தை நாம் கவனிக்க வேண்டும். போசு சென்னை வந்திருந்தபோது அவருடன் நண்பராகப் பழகி தேவரை கல்கத்தாவிற்கு அழைத்து சென்று, தனது அன்னையிடம் இவன் உனது இளைய மகன் என்று அறிமுகம் செய்து அவரது குடும்பத்தில் ஒருவராக சுமார் ஆறு மாத காலம் தங்க வைத்திருந்தார். தேவர் திருமகன் போசுக்கு பல சமயத்தில் முன்மாதிரியாக இருந்திருக்கிறார். இவரைக் கண்டு போசு பல நேரத்தில் அதிசயத்ததுண்டு.

bosu4அப்படிப்பட்ட ஒரு சிறு சம்பவம், ஒரு முறை தேவர் திருமகன் அவர்களும், போசும் இரயில் பயணம் செய்த போது போசு மேல் படுக்கையில் தலையணை வைத்து போர்வை மூடி உறங்கினார். இரவில் திடீரென்று கண்விழித்து கீழே பார்க்கும் போது தேவர் திருமகன் அவர்கள் கீழ் படுக்கையில் எந்தவித விரிப்பும் இல்லாமல், தலைக்கு தலையணையும் இல்லாமல் தனது கையை தலைக்கு வைத்து மிகவும் சாதாரணமான நிலையில் இவர் உறங்கியதைக் கண்டு போசு தனது மனதில், நாம் தான் நாட்டுக்காக அனைத்தும் துறந்து போராடுகிறோம் என்று இதுவரை நினைத்தது மிகப் பெரிய தவறாகப் போனது. நமக்கு தலைக்கும் உடலுக்கும் மேல் போர்த்திக் கொள்ள போர்வையும் தேவைப்படுகிறது, இன்னும் நாம் சில வசதிகளை அனுபவத்திக் கொண்டுதான் போராடுகிறோம், ஆனால் இவனோ முற்றும் துறந்தவனாக இருக்கிறானே என்று தேவர் திருமகனைக் கண்டு போசு வியந்தது உண்டு. போசுக்கும் தேவர் அய்யாவுக்கும் உள்ள தொடர்பு அவர்களது செயல்களிலும் வேறுபடுவதில்லை. போசு சிறுவயதில் இருந்து விவேகானந்தரின் சிந்தனைப் புத்தகங்கள், பகவத்கீதை போன்ற ஆன்மீக நூல்களை மிக விரும்பி படித்தவர்.

போசு சிங்கப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது மழை பொழியத் தொடங்கியது. மக்கள் கூட்டம் மழையைக் கண்டு கலைந்து செல்லவில்லை. போசின் உரை முடிந்த பிறகே கூட்டம் கலைந்து சென்றது. இது போன்றே தேவர் அவர்களும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் விவேகானந்தர் மற்றும் பகவத்கீதை போன்ற புத்தகங்களை சிறுவயதிலேயே படித்து முடித்தவர். மிகச் சிறந்த பேச்சாளர். இவர் ஒரு முறை தேனி அருகில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது மழை பொழிந்துள்ளது. மக்கள் மழையைக் கண்டு கலைந்து செல்லவில்லை. அப்படியே அவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தேவர் உரை முடிந்ததும் கலைந்து சென்றனர். இது போன்று தமது பேச்சாற்றலின் மூலம் மக்கள் கூட்டத்தினை இவர் கட்டிப்போட்டதினால் தான் வெள்ளையன் எந்த விடுதலைப் போராட்ட வீரருக்கும் போடாத ஒரு சட்டத்தினை தேவர் அவர்களுக்கு மட்டும் போட்டான். தேவர் அய்யா பேசக் கூடாது என்பதற்காக வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டார்கள்.

bosu3போசு, இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும் தனது தற்காலிக சுதந்திர இந்திய அரசை அறிவித்து அன்றே தனது இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிசு மீது போர் தொடுக்கும் என்று அறிவித்த உடனே இங்கு தமிழ்நாட்டில் தேவர் திருமகன் அவர்கள் பிரிட்டிசு அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். போசு உருவாக்கிய 5 பேர் கொண்ட போர் குழுவில் தேவர் திருமகனும் ஒருவர். தேவர் திருமகன் வாழ்ந்த நாட்கள் 20075 இதில் 4000 நாட்களை அதாவது 11 அண்டுகள் இந்திய விடுதலைக்காக தனது வாழ்நாளில் சிறைவாசம் கண்டுள்ளார். இவருக்கு போசு இறந்த செய்தி கிடைக்கும் பொழுது சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்து ஹபிபுர் ரஹமானை சந்தித்து விட்டு, பின்னர் போசு இறந்த செய்தி சிறையில் நான் இருக்கும் பொழுது கிடைத்தது, உடனே என் மனம் மிகவும் கவலைக்குள்ளானது. பிறகு வெளியே வந்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டு இப்போது ஹபிபுர் ரஹமானை சந்தித்தேன். எனக்கு மிகவும் தெளிவாகப் புரிகிறது. இவர் முன்பே கூறிய அதே கதையையே கூறுகிறார், போசு விமான விபத்தில் இறக்கவில்லை என்றார். பின்னர் போசின் சகோதரர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு நான் சீனா சென்று போசை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன் என்று அழுத்தமாக தனது கருத்தைப் பதிவு செய்தார். இவரிடம் பலர் பல கேள்விகள் கேட்டனர். அதற்கு நமது தலைவர் உயிரோடு பத்திரமாக இருப்பது இந்திய அரசுக்குத் தெரியும், அவர் இருக்கும் இடத்தினை நான் சொல்ல முடியாது நான் அவரை நேரில் பார்த்தேன். நான் அவருடன் 9 மாத காலம் தங்கியிருந்தேன். நான் அங்கு சென்று வந்ததிற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்றார் தேவர் திருமகன்.

இரண்டாம் உலகப்போரில் போசு போர் அறிவித்தவுடன் கைது செய்யப்பட்டு போரில் ஜப்பான் சரணடைந்த 1945 செப்டம்பர் 4ம் நாள் மறுதினம் விடுதலை செய்யப்பட்டார். நேரு போசின் மரணத்தை 1945 அக்டோபர் மாதம் 31ம் தேதி தாம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். இதனைத் தான் ஹபிபுர் ரஹ்மானை சந்தித்த பின்னர் எடுத்த முடிவு என்று நேரு தெரிவித்தார். காந்தியும் போசு உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவே இந்த செய்தியை பற்றி நான் சிலரிடம் நேரில் கலந்துரையாடிய பின்னர் போசு உயிருடன் இருப்பதற்கு உண்டான வாய்ப்புகள் இல்லை என மிக வருத்தத்துடன் நான் ஒப்புக்கொள்ளுகிறேன் என்றார். நேருவின் கருத்தை பார்த்ததும் அதே மாதத்தில் கூடிய மாநிலங்களவைக் கூட்டத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலிடம் பல கேள்விகள் போசின் மரணம் குறித்து கேட்கப்பட்டது. நேரு தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்தா? அல்லது இந்தியாவின் சார்பாக அவர் கூறுகிறாரா? என்று கேட்டதிற்கு பட்டேல் இது தொடர்பான எந்த தகவலையும் உறுதிபடத் தெரிவிக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. போசு இறந்ததிற்காக உறுதியான தகவல் எதுவும் இந்திய அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை அதனால் அவர் உயிருடன் இருப்பதற்கான உறுதியான சான்றுகளும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய தேசிய இராணுவ வீரர்களின் மீது டெல்லியில் வழக்குகள் நடந்து வந்தது. இந்த வழக்கில் இவர்களுக்கு தண்டனை வழங்கினால் அது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் வழங்கப்பட்ட தண்டனையாக அமையும், இது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் மிகப்பெரிய போராட்டத்தினை உருவாக்கும் என்று நேரு அறிவித்தார். பிரிட்டனும் தனது சூழ்ச்சியால் இந்த வழக்குகளின் மூலம் மக்களின் மனதிலும் பல சூழ்ச்சிகளை செய்வதற்கு திட்டம் தீட்டியது. அது முஸ்லீம் வீரர்கள், இந்து வீரர்கள் மற்ற மதத்தினர் என்று பிரித்து மக்களிடத்திலும் மதத்தின் மூலம் பிரிவினை செய்ய சதி செய்து மக்களிடத்தில் பிரிட்டிசு அரசு இவர்களிடம் சரியான நீதி விசாரணை மட்டும் நடத்தப்படும் இவர்களுக்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்காடலாம் என்று தெரிவித்தது.

bosu19-2இந்தியாவில் மக்கள் எவரும் போசின் மரணத்தை ஏற்றுக்கொள்ளாத போது ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக போசின் மரணத்தை அறிவித்து, அவரது சாம்பலை வைத்து சடங்குகளை நடத்தியது. இது இந்திய மக்களிடத்தில் பெரிதும் குழப்பத்தினையும் அதிருப்தியையும் உண்டாக்கியது. மேலும் தேவர் திருமகன் போசு உயிருடன் இருக்கிறார் என்று அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்தார். போசு உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களையும் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரவும் என்னால் முடியும் நேருவின் அரசாங்கம் போசை ஒரு போர் குற்றவாளியாக பிரிட்டன் அரசு அறிவித்திருக்கிறது என்பதையும் போசை பிடித்து தருகிறோம் என்று நேருவும் காந்தியும் பிரிட்டனிடம் ஒப்புக் கொண்டதையும் போசை குற்றவாளியாக ஒப்படைக்க மாட்டோம் என்ற உறுதியை மக்களிடம் நேருவின் அரசு வழங்க முடியுமா! என்று கூறினார். தேவரின் அறிக்கைகள் அனைத்தும் நேருவை கலக்கம் அடைய செய்தது போசின் இந்திய சுதந்திரத்திற்கு அவர் எத்தகைய கனவு கண்டாரோ அது மிகவும் தெளிவாக ஒரு தீர்க்கதரிசனம் போன்ற முடிவு எடுத்து செயல்பட்ட தலைவர் போசு. தனது இராணுவம் போரில் வெற்றி பெற்றாலும் அது இந்திய சுதந்திரத்திற்கு வழிசெய்யும். தோற்றாலும் இந்தியாவில் உள்ள மக்களிடம் சுதந்திர போராட்டம் காட்டுத்தீயைப் போல் பரவும். இதற்கு நமது இராணுவம் பயன்படும் என்று சிந்தித்திருந்தார்.

இந்திய தேசிய இராணுவ வீரர்கள் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இந்தியா திரும்பியதும் போரில் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள், மற்றும் நமது நாட்டின் எல்லையைக் கைப்பற்றி அங்கு நமது தேசியக் கொடியைப் பறக்க விட்டது. மேலும் அவரின் படம் போட்டு அச்சடித்திருந்த இந்திய அரசுக்கு சொந்தமான பணம் என்று அனைத்தையும் இந்திய மக்கள் அறிந்தனர். போசின் செல்வாக்கு மக்களிடம் பன்மடங்கு உயர்ந்தது. இந்தியாவில் இருந்த பிரிட்டன் இராணுவத்தில் பணிபுரிந்த இந்தியர்கள் அனைவரும் புரட்சியில் ஈடுபட்டனர். இந்த தேசிய இராணுவ வீரர்களின் சாதனைகளினால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் இருந்த ராயல் இந்தியன் விமானப்படையும், ராயல் இந்தியன் கடற்படையும் 1946ல் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தொடங்கியது. இது பிரிட்டன் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. போசு போர் அறிக்கை செய்ததும் இந்தியா விடுதலை அடையும் நாள் தொலைவில் இல்லை என்று கூறியிருந்தார். அது அவர் கூறியதை விட மிக விரைவில் நடைபெற்றது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 51”

அதிகம் படித்தது