மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்– பகுதி – 53

கி.ஆறுமுகம்

Mar 21, 2015

bose15தேவர் திருமகன் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் விசாரணைக் குழுவினால் விடை தெரிவிக்க முடியாமல் மௌனம் சாதித்தனர். தேவர் இறுதியாக கேட்டது இந்திய அரசு பகிரங்கமாக பிரிட்டன் வெளியிட்ட போர் குற்றவாளிகள் அறிக்கையில் போசின் பெயர் இல்லை என்று தெரிவிக்க இந்திய அரசுக்கு, நேரு அரசுக்கு துணிவு இருக்கிறதா என்று சிங்கம் போல் வினவினார். விசாரணை குழுக்கள் இது அரசாங்கம் சார்ந்த விவகாரங்கள். இதனை உடனே நாங்கள் எப்படி தெரிவிக்க முடியும். இந்த கேள்விகளை நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து பின்னர் உங்களுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம் என்றனர். அதுவரை நீங்கள் மிகப் பொறுமையுடன் இருங்கள், நாங்கள் விசாரணைக்குழு. நீங்கள் எங்களை விசாரணை செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர். தேவர் திருமகன் நான் நேதாஜியின் இயக்கத்தை சேர்ந்தவன். நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரிவிப்பது உங்கள் கடமை. நீங்கள் உண்மையை வெளிப்படையாக தெரிவித்தால்தான் நானும் உங்களுடன் ஒத்துழைப்பேன் என்று தெரிவித்தார். பின்னர் பத்திரிக்கை நிரூபர்களை சந்தித்தார். பிறகு மீண்டும் விசாரணைக் குழு கூடியது. தேவர் திருமகன் அவர்கள் குழு முன் அழைக்கப்பட்டார். தேவர் வந்ததும் நேரு அரசு கூறியது என்ன என்று கேட்டார். குழுவினர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான கோப்புகள் எதுவும் இல்லை. எங்களால் அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெறவும் முடியவில்லை என்றனர். உடனே தேவர் திருமகன் அவர்கள் நான் உங்கள் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைத்து செல்ல முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். போசின் அமைச்சரவை கூட்டத்தில் ரஷ்யாவுடன் நட்புகொள்ள வேண்டும். அதன் பயன் என்ன என்பதையும் ஜப்பான் அரசுக்கு தெரிவித்திருந்தார்.

ஜப்பான் அரசும் போசின் கருத்தினை அங்கீகாரம் வழங்கும் விதத்தில் செயல்பட்டது. ஜப்பான் அரசுக்கும் ரஷ்யாவுக்கும் நட்பு ஏற்படுத்தவும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார் செய்யவும்தான் ரஷ்யா செல்ல வேண்டும் என்பது போசின் திட்டம். ஜப்பானின் ஹிக்கரிகிக்கனின் தலைவரான லெப். ஜெனரல் பீல்ட் மார்ஷல் தெராச்சி மற்றும் கர்னல் தாடா ஆகிய இருவருக்கும் நன்கு போசின் திட்டம் தெரியும். இவர்கள்தான் போசின் ஆலோசனைபடி ஜப்பான் அரசின் உதவியுடன் போசை ரசிய எல்லைப் பகுதிக்கு அனுப்பிய பிறகு அவர் விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்க வேண்டும். இந்திய தேசிய இராணுவத்தில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த கோவிந்த காரடே என்பவர் கூறுகையில் 1945-ல் நடுவில் போசு எவரும் அறியாமல் இரகசியமாக ரஷ்யா சென்று ஆறு வாரங்கள் அங்கு தங்கியிருந்தார். ரஷ்யாவின் தலைவரான ஸ்டாலின் தமது நாட்டிற்கு வருமாறு நேதாஜியை அழைத்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு நெருங்கிய உறவு ஏற்படுத்துவதற்கு நல்லெண்ணத் தூதுவராக போசை பயன்படுத்த ஜப்பான் முயன்றது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

ரஷ்யாவின் ஹார்பின் என்ற இடத்தில் உள்ள ரஷ்ய தளபதிகளையும் ஒப்படைக்கிறோம் என்று ஜப்பான் அரசு போசிடம் தெரிவித்திருந்தது. சுகுஷிட்டேஜி என்ற ஜப்பானிய செய்தியாளர் எழுதிய நேதாஜியின் மாமறைவு என்ற நூலில் போஸ் ரஷ்யாவில்தான் இருக்க வேண்டும் என்று தனது கருத்தினை பதித்துள்ளார். ஏ லீப் இன்தி டாக்டு என்ற நூலுக்கு ரஷ்ய அரசு தடைவிதித்துள்ளது. ரஷ்ய அரசு எதற்காக இந்நூலுக்கு தடை விதிக்க வேண்டும். போசின் கருத்துகளையும் அவர் சிந்தனைகளையும் தேச பக்தியையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர் ஏற்படுத்திய தற்காலிக சுதந்திர அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் ஜெர்மனியில் இருந்த போது ஹிட்லரின் இன வெறிக் கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை. அவரின் சிந்தனைகள் அனைத்தும் இந்திய சுதந்திரத்தை சார்ந்த ஒன்றாக மட்டும் தான் இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிட்டிருந்தவைகள் அன்றும் சரி பிற்காலத்திலும் சரி ஒரு போதும் இந்தியாவை பாதிக்காத விதத்தில் மட்டும்இந்திய சுதந்திரத்திற்கு உதவ மட்டும்தான் ஜெர்மனிக்கு ஒத்துழைப்பு நல்குமே தவிர ஜெர்மனியின் கொள்கைகளிலும் அதன் நடவடிக்கைகளிலும் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

ஜெர்மனியின் அரசியலில் இந்திய தலையீடு எதுவும் இல்லை என்று மிகத் தெளிவான ஒரு ஒப்பபந்தத்தினை செய்துள்ளார் போஸ். இது போன்று ஜப்பான் அரசு இரண்டாம் உலகப்போரில் தற்காலிக சுதந்திர இந்திய அரசு செய்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய சுதந்திரத்தினை நோக்கி அமைந்ததே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் செயல்படுத்திய தேசபக்தர் போசு. உலகப் போர் தொடங்கியதும் அதனை சுதந்திர போராட்டத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தினை ஒரு தீர்க்கதரிசியாக பார்த்தவர் போசு. இந்திய தேசிய இராணுவம் இயற்கையின் பிடியில் சிக்கி போரில் பின்வாங்கியதும் இது மிகப் பெரிய ஒரு அத்தியாயமாகத் தொடங்கிவிட்டது. மிக விரைவில் இந்தியா சுதந்திரம் அடைந்தே தீரும் என்று ழுழங்கியவர் போசு, அவர் குறித்ததை விடவும் பிரிட்டன் தெரிவித்த காலத்தை விடவும் விரைவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. போர் முடிந்ததும் பிரிட்டன் வெற்றி பெற்றதும் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு காரணம் இந்தியாவை காப்பாற்றுவதற்கு தேவையான இராணுவ வீரர்கள் பிரிட்டனிடம் இல்லை. போர் நடைபெறும் போது பிரிட்டனில் இருந்து ஜெர்மனியினுடன் போரிட்டதில் பலர் உயிர் இழந்தனர். மேலும் இந்தியா போன்ற பெரிய நாட்டினை கட்டுப்படுத்த தேவையான இராணுவ வீரர்களை பிரிட்டனால் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு அனுப்ப முடியவில்லை இந்தியாவில் பிரிட்டன் இராணுவத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் புரட்சியில் ஈடுபட்டனர்.

மேலும் பிரிட்டனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. போசு உலக நாடுகளை ஒன்றுபடுத்தி ஒரு மிகப்பெரிய இராணுவத்தை உருவாக்கி பிரிட்டனை தாக்கப் போகிறார் என்ற செய்தி பிரிட்டனை ஆட்டம் காண வைத்தது. அவர்களுக்கு போசைப் பற்றி நன்கு தெரியும் நாம் இந்தியாவை காப்பாற்றுவதற்கு இங்கிருந்து இராணுவத்தை அனுப்பினால் நாம் பிரிட்டனை இழக்க நேரிடும். இது உலக நாடுகள் மத்தியில் பிரிட்டனுக்கு மிக பெரிய தலைக்குனிவை ஏற்படுத்திவிடும். மேலும் உலகப்போரில் பிரிட்டன் பங்கேற்கும் சமயத்தில் நாங்கள் மற்ற நாட்டின் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காகவே இந்த போரில் செயல்படுகிறோம் எவரையும் அடிமைப்படுத்தும் எண்ணம் கிடையாது. உலக நாடுகளிடம் நாட்டின் இறையாண்மையை நிலைபெறச் செய்வதும் ஒரு நடுநிலையான நாடு பிரிட்டன் என்று தனது அறிக்கையைவிட்டது. இந்த அறிக்கை பிரிட்டன் போரில் வென்றதும் மிகப்பெரிய நெருக்கடியை உலக நாடுகளிடம் இருந்து வரும் என்று உணர்ந்தது. நாம் இன்னும் இந்தியாவை அடிமைப்படுத்தினால் அது நமது அறிக்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்தது மட்டுமல்லாமல், போரில் நிகழ்ந்த செயல்களை மறைப்பதற்கும் பிரிட்டனில் அப்போது ஆட்சியைப் பிடித்த தொழிலாளர் கட்சி மக்களிடம் நற்பெயர் எடுக்கவும் இந்தியாவிற்கு சுதந்திரத்தினை அறிவித்தது. போரில் வெற்றி பெற்று இந்தியாவைவிட்டு வெளியேற்றியதற்கு போசுதான் காரணம். அவரது கனவு நனவானது. பிரிட்டனின் பிரதமராக இருந்த அட்லி பிற்காலத்தில் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார் மேற்குவங்க கவர்னர் அப்போது அவரிடம் இரண்டாம் உலகப்போரில் வெற்றியடைந்த பிரிட்டன் அரசு ஏன் இந்தியாவை விட்டு வெளியேறியது? என்று கேட்டார். அதற்கு அட்லி சுபாசு சந்திரபோசு இதற்குக் காரணம் என்று பதில் அளித்தார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்– பகுதி – 53”

அதிகம் படித்தது