மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புதக் காட்சி அமைப்புகள் கொண்ட ஆவணப்படம்… …

ராஜா

Nov 5, 2016

siragu-tanjavur

அரைமணியில் பிரமாண்டத்தை காட்டிய ஆவணப்படம்… சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புத காட்சி அமைப்புகள்…

இளைஞர்களே இனி வரும் கால இந்தியாவின் அஸ்திவாரங்கள் என்பது வெறும் வார்த்தை அல்ல… நம் கலாச்சாரத்தின் மதிப்பையும், பண்பாட்டையும் இனி ஏட்டில் மட்டுமல்ல… திரையிலும் கொண்டு வந்து விடுகிறது சினிமாத்துறை என்பது வரம்தான்…

அதை சரியான திசையில் கொண்டு சென்றால் இந்தியாவின் புகழ் கொடி முக்கியமாக தமிழ்நாட்டின் புகழ் என்றும் பாடப்படும் என்பதற்கு ஒரு ஆவணப்படம் சாட்சியாக இருக்கிறது. இதன் பின்னணியில் உழைத்தவர்கள் ஒரு இளைஞர் பட்டாளம். உழைப்பு மிக பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அழகு கொஞ்சும் தஞ்சைத்தரணியில் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கல்லில் கலை வண்ணம் கண்ட அற்புதமான இடம். தலையாட்டும் பொம்மைகளும், விண்ணுயர்ந்து நிற்கும் பெரிய கோயில் மட்டுமின்றி ஏராளமான காணக் கிடைக்காத பொக்கிசங்கள் நிறைந்த மண்.

வெளிநாட்டினர் விரும்பி வந்து பார்க்கும் இடங்கள் இங்கு ஏராளம்… தாராளம். ஆனால் சரியான வழிக்காட்டுதல் இருக்கிறதா. வெளிநாட்டினரின் விருப்பம், ஆவல் என்ன தெரியுங்களா? தஞ்சை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதல் தேவை என்பதுதான்.

இன்னொரு முக்கிய விசயம் தஞ்சையைச் சேர்ந்தவர்களுக்கே பல இடங்கள் தெரியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. விடுமுறை தினம் ஒன்றில் அரண்மனைக்குச் சென்ற நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தஞ்சை அரண்மனையில் காண கிடைக்காத வரலாற்று சின்னங்கள் குவிந்துள்ளன என்று தெரியும்.

இங்கு அரசு சார்பில் ஒரு அருமையான குளிர்சாதன வசதி கொண்ட ஒரு திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குறும்படம் திரையிடப்படுகிறது. அரை மணிக்கு ஒரு முறை இந்தக் குறும்படத்தை திரையிடுகின்றனர். இதற்கான கட்டணமும் அதிகம் இல்லை. குறைந்த கட்டணத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம். பள்ளி மாணவர்களுக்கு இந்தப் படம் காண்பிக்கப்படுகிறது.

ஆனால் கண்டிப்பாக ஒரு விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்த படத்தை புகைப்படமோ… வீடியோவாகவோ எடுக்கக் கூடாது என்பதுதான். அப்படி என்னங்க அந்த குறும்படத்தில் என்று கேட்கிறீர்களா. இதை குறும்படம் என்று வர்ணிப்பது தவறு. சரியாக சொல்வது என்றால் தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களை விளக்கும் ஆவணப்படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆவணப்படம் என்றவுடன் எழுந்து ஓடி விடாதீர்கள். அருமையான வசனங்களுடன் தெள்ளத் தெளிவான காட்சி அமைப்புகளுடன் சுற்றுலாத்தலங்களை வர்ணித்து எழும் அந்த வசனங்களும், வெளிநாட்டினர் தெரிந்து கொள்ள ஆங்கிலத்தில் துணை வாசகங்களுடன் காட்டப்படும் அந்தப் படம் உட்கார்ந்த நிமிடத்தில் இருந்து முடியும் நிமிடம் வரை நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

தெளிவான வானத்தில் இருந்து எடுத்தது போன்ற காட்சிகளுடன் பெரிய கோயிலின் அமைப்பு காட்டப்படுவதைக் காண இரு கண்கள் போதவில்லை. அப்படியே ஒவ்வொரு சுற்றுலாத்தலமாகக் காட்டப்படுவதும்…

பின்னணியில் எழும் வர்ணனையும் மனதை கொள்ளை அடித்தன. அதிலும் நீண்டு, வளைந்து வரும் ஆறு கல்லணையாக அமைவதை காட்டும் காட்சிகள் இயக்குனர் ஷங்கர் படத்தின் பிரமாண்ட காட்சி போல் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி சுற்றுலாத் தலங்களை விளக்கும் இந்தப் படம் மிக முக்கியமானதாகும்.

மிக முக்கியமாக மேலிருந்து காட்டப்படும் பெரிய கோயில் காட்சிகள் மனக்கண்ணில் இருந்து இன்னும் அகல மறுக்கிறது. துல்லியமான இயக்குதலில் பெரிய கோயிலில் உள்ள சிற்பங்களைக் காணும் போது ஆ.. என்ன அருமையான காட்சி. இதுவரை நாம் பார்க்கவில்லையே என்று சொல்லத் தோன்றுகிறது. கழுகு கண் பார்வை என்பது போல் உச்சி கோபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்லின் பிரமாண்டம் நம்மை அசர அடிக்கிறது. வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இவ்வளவு அருமையாக இதை தொகுத்து வடிவமைத்து இயக்கியவர் யார் என்ற விசாரணையில் இறங்கினால்… ஒரு இளைஞர் படையே இதன் பின்னணியில் வெகுவாக உழைத்துள்ளது தெரியவந்தது. என்ன ஒரு அருமையான உழைப்பு.

director-nandhakumar

இந்தப் படத்தை இயக்கியவர் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்த இளைஞர் ர.நந்தகுமார். தந்தை பெயர் சி.ரவிச்சந்திரன். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போன்று இருந்த நந்தகுமாரை சந்தித்தோம். அவர் இயக்கிய சுற்றுலாதல ஆவணப்படம் பற்றி பேசினோம்.

அப்போது கண்கள் மிளிர அவர் ஆனந்தமாகக் கூற ஆரம்பித்தார். இதிலிருந்தே தெரிந்தது அவர் அந்த ஆவணப்படத்தை எந்தளவிற்கு ரசித்து எடுத்துள்ளார் என்று.

இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் இவர். இதற்கு முன்பு வாழ்க்கை, ஜகத்தினை அழித்திடுவோம், அன்பிற்கும் உண்டோ என்ற குறும்படங்களை இயக்கி உள்ளார். சினிமாத்துறையில் இணை இயக்குனராக பணிபுரிகிறார்.

விரைவில் திரைப்படம் இயக்க கதை, திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக உள்ளார். இந்த சுற்றுலாத்தலங்களை விளக்கும் படத்தை இவர் இயக்க… ஒலி, ஒளி அமைப்பு, திருத்துதல் போன்ற பணிகளில் இவருக்கு பக்க பலமாக இருந்தவர்களும் இளைஞர்கள்தானாம். பல மாதங்கள் ஆய்வு செய்து, பல கட்ட அனுமதி பெற்று இந்த அரைமணிநேரம் ஓடும் படத்தை எடுத்துள்ளனர்.

அதிலும் மிக பிரமாண்டத்தைக் காண்பித்து இதை ஆவணப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு எடுத்து காட்டி அசத்தி உள்ளனர் என்பதுதான் மிக பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்தப் படத்திற்கு வி.எஸ்.மிதுன்ராம் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது தந்தை பெயர் விஜயகுமார். Visual Communication படிப்பு முடித்த இவரும் சென்னையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிகிறார்.

இந்தப் படத்தில் சுற்றுலாத்தலங்களின் பெருமைகளை விளக்கும் வசனப்பகுதியை வடிவமைத்தவர் ஷ.சபரிவாசன். இவர் தந்தையின் பெயர் ஷண்முகம். இவரும் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் பயின்றவர்.

படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஷைஜித் குமரன், கேரளாவில் உள்ள வயநாட்டை சேர்ந்தவர். இப்படி இளம் பட்டாளங்கள் பட்டையைக் கிளப்பிய இந்த சுற்றுலாத்தலங்களை விளக்கும் படம் அற்புதமாக வர அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் தஞ்சையில் இயங்கி வரும் தாமரை சர்வதேச பள்ளி நிர்வாகிகள் டி.வெங்கடேசன் மற்றும் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர்.

அரசிற்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்காக இந்தக் குழு வெகுவாக உழைத்துள்ளது என்றே கூற வேண்டும். இந்தப் படத்தை எடுத்த நந்தகுமாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து விட்டு அவரிடம் பேசினோம்… அப்போது அவர் கலைத்துறையில் எந்தளவிற்கு ஆர்வமாக உள்ளார் என்பதை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்தின. சாதிக்கத் துடிக்கும் அந்த இளைஞர் இந்தப் படத்தை எடுக்க மிகுந்த சிரமங்களை அனுபவித்துள்ளார்.

ஆனால் அந்த சிரமங்கள் தற்போது மகிழ்ச்சியாக மாறி உள்ளது. இந்த ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு பல வெளிநாட்டினர் குறிப்பெடுத்து கொண்டு தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அந்தளவிற்கு தெளிவான ஒரு பாதையை போட்டு கொடுத்துள்ளார். கேட்ட உதவிகளையும், வாகன வசதி, அனுமதி போன்றவற்றை பெற்று தந்த தாமரை சர்வதேசபள்ளி நிர்வாகியும் தனது மாமாவுமான வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நந்தகுமார். இன்னும் இருக்கிறது. தஞ்சையில் உள்ள பல்வேறு அற்புதங்களையும் விளக்க வேண்டும் என்பது எனது ஆசை. மற்ற ஆவணப்படங்கள் போல் வரக்கூடாது என்பதற்காக மிகுந்த உழைப்பை கொடுத்தோம். எனக்கு பக்கபலமாக எனது குழுவினர் இருந்தனர். ஒவ்வொரு இடத்தையும் அற்புதமாகக் காட்ட வேண்டும். சிறப்பான படக்காட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பலமாக உழைத்தோம். அந்த உழைப்பு இன்று திரையில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த உத்வேகத்துடன் எனது திரைப்படம் எடுக்கும் கனவினை நினைவாக்க உழைத்து வருகிறேன் என்று தெரிவித்தார். அவருக்கும், அவரது குழுவினருக்கும் “சிறகு” சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். உண்மையாக உழைக்கும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அமைந்தால் சிகரம் தொடுவதற்குக் கூட அவர்களுக்கு சிரமம் தெரியாது என்பதை இந்த சுற்றுலாத் தலங்களை விளக்கும் படத்தை எடுத்த நந்தகுமார் சொல்லாமல் சொல்லியுள்ளார்.


ராஜா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுற்றுலாத்தலங்களை விளக்கும் அற்புதக் காட்சி அமைப்புகள் கொண்ட ஆவணப்படம்… …”

அதிகம் படித்தது