மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் உழவு

முனைவர் கு.சந்திரன்

Aug 31, 2019

siragu ulavu2
ஆடை இல்லாமல் மனிதன் வாழ்ந்தது முதல், அறிவியல் கல்வி செழித்தோங்கும் இந்த விஞ்ஞானக் காலம் வரை மனிதன் உணவைத்தேடி அலைந்த வண்ணமேயிருக்கிறான். செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிற மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன எந்திரங்களால் மண்ணிலே விதைக்காமல் உணவைச் சுயமாகத் தரமுடியாது.

கடவுளை வேண்டுகிற அடியார்கள்கூட உணவுக்காகப் பிரார்த்திக்கின்றனர். திருமங்கை ஆழ்வார்,
“கூறைசோறு இவைதந்து எனக்கு அருளி
அடியேனைப் பேணி ஆண்டுகொள் எந்தாய்”

உணவும் இருப்பிடம் தந்து என்னை ஆட்கொள் என்று வேண்டுகிறார்.

சங்க இலக்கியத்தில் பசித்த வறியோருக்கு உணவு அளித்த மனிதனை ‘பசிப்பிணி மருத்துவன்’ எனப் புகழ்ந்துள்ளனர். இதன் மூலம் பசிபோக்குபவன் ஒரு மருத்துவன் என்பதை இந்த உலகத்துக்கே தந்தவர்கள் சங்கத்தமிழர், உணவின் முக்கியம் அறிந்துதான் திருவள்ளுவர் “உழவு” என்ற தலைப்பில் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழுந்தும் உழவே தலை’. (1031)

பலதொழில்களைச் செய்து சுழன்றாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னாலேயே இந்த உலகம் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பமடைந்தாலும் உழவே தலையானது என்று சொல்கிறார்.

ஒரு மருத்துவரால் ஒரு விஞ்ஞானியால் ஓர் அரசியல் தலைவனால் ஒரு பொறியாளரால் இன்னும் பல விற்பன்னர்களால் செய்ய முடியாததை ஒரு விவசாயி உழவுத் தொழிலில் செய்கிறான். அதன்மூலமே மனிதர்களுக்கு உணவு கிடைக்கிறது. அந்த உணவுதான் மனிதனுக்கு உயிரேயாகும். உயிரைத்தாங்கும் சக்தியாகும். எனவே தான் பழந்தமிழர் ‘உண்டி கொடுத்தோர்’ (உண்டி – உணவு) உயிர்கொடுத்தோர் என்றனர். உழவு மனிதனுக்கு உணவு கொடுக்கிற தொழில். அது நலிந்தால் மனித இனமே நலியும். எனவே அதன் உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் சங்கத்தமிழர்கள்.

பழந்தமிழர் வரலாற்றைப் பார்கிறபோது தமிழர், தமிழ் மன்னர்கள் உழவுத் தொழிலைப் போற்றி வந்திருக்கிறார்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவனின் குறளை ஏற்றிருக்கிறார்கள். சங்கப்புலவர்கள் “உழவுத்தொழிலுக்கு வரிபோடக்கூடாது” என்று மன்னனை வேண்டியிருக்கிறார்கள்.

siragu ulavu4

உழவுத்தொழிலின் மூலமாக நெல்லைப் பெற்றனர் தமிழர்கள். பிறகு நெல்லை அரிசியாக்கினார்கள். நெல் முளைக்கும் பருவம். அரிசி முடியும் பருவம். எனவேதான் பழந்தமிழர் திருமணத்தின்போது வாழ்த்தும் நோக்கில் மணமக்கள் வாழ்வில் பதினாறு செல்வமும் முளைக்கட்டும் என்பதன் அடையாளமாக நெல்லைத் தூவினார்கள். (இன்று அரிசியை மஞ்சள் பூசித் தூவுகிறார்கள். ஒரு காலத்தில் விதைநெல் தட்டுப்பாடு வந்ததால் இந்த வழக்கம் வந்ததாக ஒரு குறிப்பு உண்டு) நெல்லில் இவ்வாறு பண்பாடு கண்டவர்கள் பழந்தமிழர்கள். இன்றைக்கும் குறிப்பிட்ட சில தமிழர்களிடையே திருமணத்தின்போது நெல் அளந்து போடுகிற வழக்கம் உண்டு.

தமிழனின் நெல் நாகரீகம் உலகில் முதன்மையானது. நெல்லும் அரிசியும் தமிழரின் மங்கல அமங்கல சம்பவங்களில் தொடர்பு கொண்டது. திருமணத்தின்போது நெல்லால் வாழ்த்திய தமிழர்கள் இறப்பின்போது எல்லாம் முடிந்துவிட்டது என்பதாக இனி முளைக்காத அரிசியால் இறந்தவருக்கு வாய்க்கரிசி இட்டனர். இவற்றைக் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையை (விதையால்) நெல்லால் தொடங்கி (முடிந்துபோன) அரிசியால் முடித்து வைப்பதாக அர்த்தம் வருகிறது. எனவே தமிழர் பண்பாடு நெல்லோடு தொடங்கியதாக சொல்ல முடிகிறது.

நெல்லின் பண்பாட்டைத் தொடங்கிய தமிழர் நெல்லை அரிசியாக்கி அரிசியை சோறாக்கி உணவாக்கி மகிழ்ந்தனர். இன்றைக்கும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிற உணவே அரிசிச் சோறாகும். அது வறியவர் பசியைப் போக்கும் மருந்தும் ஆகும். பசி முதல் மனிதனுக்கு முதலில் வந்த ஒன்று. மனித வரலாற்றோடு பசி முக்கிய தொடர்புடையது. அரசுகள் மக்கள் பசியைப் போக்க ஆவன செய்தாலும் ஆங்காங்கே வள்ளல்கள் காலத்துக்கு காலம் அன்னம் இட்டு வந்திருக்கின்றனர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் தொடங்கிய அன்னதானம் இன்றும் வடலூரில் நடக்கிறது.

சங்க காலத்தில் அறச்சோறு எனத் தொடங்கிய பணி இன்றும் தமிழ் மண்ணில் அன்னதானமாய் நடந்து வருகிறது. தமிழகமெங்கும் அன்னதான சத்திரங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. இதுபோன்ற உணவு சத்திரங்கள் மேலைநாடுகளில் இல்லை. ஆனால் உணவு தேடும் வறியவர்கள் அங்கே இருக்கிறார்கள். அமெரிக்காவில் பகல் உணவு கிடைக்காத மக்கள் தொகை ஒரு நூறு ஆயிரத்தைத் தொட்டுவிட்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. அறிவியல் வளர்ந்தாலும் பொருள் குவிப்பு ஒரு பக்கமாய்ப் போக பட்டினி, பசி என்பன சில மக்களை சமூகத்தில் தாக்கவே செய்கின்றன. உலகெங்கும் பட்டினியால் தவிப்போர் உண்டு. எனவேதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மேலைநாடுகளில் செஞ்சிலுவைச் சங்கம், வின்சன்டி போல் மற்றும் தேவாலய அமைப்புகள் என்பன ஒரு நேர உணவு அல்லது உணவுப்பொருள் வழங்குகிற “தர்மத்தை” வருமானம் குறைந்தோருக்கு, வேலை இல்லாதோருக்கு வழங்குகின்றன. கிறிஸ்துமஸ் காலத்தில் ஏழைகளுக்காக உலகெங்கும் நிதி திரட்டப்படுகின்றன.

எவ்வளவுதான் வறுமை இருந்தாலும் தமிழர்கள் விருந்தோம்பல் பண்பைக் கைவிடமாட்டார்கள். தொல்காப்பியர் காலத்திலேயே விருந்தோம்பல் இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் தமிழரின் உழவுத்தொழில். அத்தொழில் எப்போதும் வறுமையைக் கொடுக்காது. எனவே விவசாயிகளை மன்னருக்கு இணையாகப் போற்றினார்கள் அந்தக் கால மக்கள்.

விஞ்ஞான எந்திர மயக்கத்தில் இருக்கிற நாடுகளில்கூட விவசாயிகள் போற்றப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பெரிய வெள்ளிக்கிழமையோடு ஒட்டிய காலப்பகுதியில் விவசாயிகளைப் போற்ற ஈஸ்டர் நடத்துகிறார்கள். அந்தக் கண்காட்சியில் விவசாயத்தோடு தொடர்புடைய மாடு, ஆடு, கோழி, வான்கோழி எனபனவற்றை காட்சிக்கு வைப்பார்கள்.

உலகில் வாழ்கிற மனிதனுக்கு விவசாயம் முக்கியமானது. ஒரு மனிதன் வானொலிப்பெட்டி, தொலைக்காட்சி இல்லாமல் வாழ முடியும். ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. ஆகவே சங்க காலத்திலேயே உணவு உற்பத்திக்கு வழிமுறைகளைக் கண்டார்கள் தமிழர்கள். நாடோடி வாழ்க்கையில் இருந்து மீண்டும் ஒரு பரிணாம வளர்ச்சியில் இதனைச் செய்திருக்க முடியும். ஆனால் நாடோடி வாழ்க்கையில் இருந்து மீளாதவர்களும் உலகில் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆஸ்திரேலிய ஆதிவாசிகள். ஒரு பெரிய நாட்டுக்கே சொந்தக்காரர்கள். அவர்களின் வரலாறு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும். ஆனால் அவர்கள் உழவுத்தொழிலோ, விவசாயத்தொழிலோ அறிந்திருக்கவே இல்லை. வரலாற்றுத் தகவல்படி வெள்ளையர்கள் கால் வைத்த 1788-ம் ஆண்டுவரை எந்த நவீன வாழ்க்கையையும் அவர்கள் அறியவே இல்லை. ஆனால் நாடோடி வாழ்க்கையில் இருந்து மீண்ட சங்கத்தமிழர் உழவுத்தொழிலில் மாடுகட்டி ‘போர்” அடிக்க முடியாமல் யானை கட்டி ‘போர்’ அடித்திருக்கிறார்கள்.

இயற்கை வேளாண்மை

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவையாவது உணவைப் பற்றிச் சிந்திப்பான் மனிதன். உணவு இல்லையேல் உயிர் இல்லை. உடலும் இல்லை. உண்டியாகும் உணவை உழவுத்தொழில் மூலம்தான் கொடுக்க முடியும். விஞ்;ஞானம் விண்வெளியை கையகப்படுத்தி விட்டபோதும் மனிதன் உண்பதற்கான உணவை மண்ணில் நட்டு வளர்த்துத்தான் பெறமுடியும். மனிதரின் உணவை அடிப்படை (விதை, வேர்) இன்றி எந்திரங்களால் உற்பத்தி செய்ய முடியாது.

விவசாயி சேற்றில் கை வைக்காவிட்டால் மற்றவன் சோற்றில் கைவைக்க முடியாது. ஆயிரம் தொழில்கள் இருந்தாலும் உழுதுண்டு வாழும் வேளாண்மையே முன்னிலையானது, இதனைத்தான் திருக்குறளில்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுது உண்டு பின்செல்பவர்” (1033)

உழவுத்தொழிலைப் பொறுத்தவரை உழுதல், உரமிடுதல் களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், பயிர்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் மிக மிக இன்றியமையாதவை. இதனை,

“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு”. (1038)
அதே உழவு அதிகாரத்தில்
“தொடிப்புழுதி கஃசா உணக்கின்பிடித்து எருவும்
வேண்டாது சாலப்படும்”. (1037)

ஒரு பழும்புழுதி கால்பலம் வண்ணம் உழவன் நிலத்தைக் காய விடுவானானால் கைப்பிடி அளவு எருவும் இட வேண்டாம். நிலம் செழித்து வளரும் என்று உழவுத் தொழிலுக்கு ஆலோசனை கூறுகிறார்.

siragu ulavu1

உழவுத்தொழிலுக்குச் சூரியஒளி, மழை, நிலம் ஆகிய மூன்றும் முக்கியமானவயாகும். இம்மூன்றும் இல்லாமல் மண்சார்ந்த தொழில் நடக்காது. ஆகவே இம்மூன்றையும் சங்ககால கவிஞர்கள் போற்றுகின்றனர், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மங்கல வாழ்த்தில் திங்களைப்போற்றுதும் என்ற பாடலில் ஒளியைத் தருகின்ற சூரியனைப் போற்றி ஞாயிறு போற்றுதும் என்றும், மழையைப்போற்றி மாமழைப்போற்றுதும் என்றும், நிலத்தைப் போற்றும் வகையில் பூம்புகார்ப் போற்றுதும் எனப் போற்றிப் பாடியுள்ளார், விவசாயத்திற்கு நிலமும் சூரிய ஒளியும் மழையும் வேண்டுமென்பது அறிவியலாகும்.

சங்கப்புலவர்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் சார்ந்த அறிவியல் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கம்பர் இராமாயணத்தில் கழிவுப் பொருட்களைப் பயனுள்ள வகையில் வேளாண்மைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது அறிவியலாகும்.
“முட்டில் அட்டில் முழுங்குற வாக்கிய
நெட்டுலைக் கழநீர் நெடுநீத் தம்தான்
பட்டமென் கமுகோங்கு படப்பைபோய்
நட்டசெந்நெல்லின் நாறு வளர்க்குமே”
(பாடல் -57)
கழுநீர் வீட்டுக்கழிவுப்பொருள் அண்மையில் உள்ள வயல்நாற்றை வளர்க்கிறது என்று கம்பர் சொல்லும் செய்தி உழவுக்கு வந்தனை செய்வதாகும்.

பழந்தமிழர் வரலாற்றைச் சங்க இலக்கியங்கள் வழிப் பார்க்கிறபோது தமிழர் இயற்கையோடு ஒத்த அறிவோடு சுற்றுப்புற அறிதலோடு நிலத்தை உழுது நட்டுயிருக்கின்றனர். மண்ணுக்கு மாசுவராமல் விவசாயத்தை மேம்படுத்தியிருக்கின்றன. ஆனால், இன்று நவீன விஞ்ஞானச் சிந்தனையில் எந்திரங்கள் துணையோடு செயற்கை உரம் தூவிச் செல்கின்ற விவசாயத்தில் மண்ணும் வலுவிழந்த விதையும் தேய்ந்து விவசாயிகளின் வித்தையும் மாய்த்து தவிக்கிற காட்சியைப் பார்க்கிறோம். இம் மண்ணுக்கு ஒவ்வாத செயற்கை முறையிலான (ரசாயன உரத்தினால்) விவசாயத்தில் மண்ணின் இயற்கையும் மனிதனின் இயல்பும் மாறி க்கிடக்கிறது.

ஒன்றுக்கொன்று நேர் எதிரிகளாக வாழ்ந்தாலும் விவசாயிக்கு உதவுகிற பாம்பு, தவளை, வெட்டுக்கிளி, மண்புழுக்கள், சிட்டுக்குருவிகள் யாவும் நேற்றுவரை விவசாய பூமியில் தஞ்சமாய்க் கிடந்தன. ஆனால், தூவப்பட்ட செயற்கை உர நஞ்சால் அவையெல்லாம் அழிந்து குறைந்துவிட்டன.

மாடு இல்லாத எந்திரத்தைப் பயன்படுத்துகிற விவசாயத்திற்கும் இயற்கை விவசாயத்திற்கும் வேறுபாடு இருக்கின்றது.

மாடு

1. இதற்கு வைக்கோல் உணவு. இது விவசாயத்தில் கிடைக்கும்.
2. இதன் கழிவு சாணம் உரமாகிறது. எரிவாயு ஆகிறது.
3. மாட்டு மூத்திரம் பூச்சிக்கொல்லி மருந்தாகிறது.
4. மாட்டின் பால் மனிதனுக்குப் பயன்படுகிறது.
5. சுற்றுச்சூழல் கெடாது.
6. இயற்கையாகவே உற்பத்தி செய்ய முடியும்.

உழவு எந்திரம்

1. இது இயங்க எண்ணெய் ஊற்ற வேண்டும்.
2. பராமரிக்கச் செலவு செய்ய வேண்டும்.
3. இதன் கழிவு மண்ணுக்கு ஆகாது.
4. இதன் புகை சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும்.
5. இதன் பாகங்கள் பழுதடைந்தால் விவசாயப் பூமியில் புதைக்க முடியாது.

பூமி திருத்தி உண், விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமோ? ஆடிப்பட்டம் தேடி விதை, ஆடி விதைத் தேடிப்போடு, அதிர அறுத்தால் உதிர விளையும், நெல்லுக்குப் பாய்க்கிற நீர் புல்லுக்குப்பாயும் கோரைக குடியைக் கெடுக்கும், குப்பையின்றி. அருங்காய் பிஞ்சிலே தெரியும்.

உழவுத் தொழிலின் கூறுகள்

1. உழுதல்
2. சமன்செய்தல்
3. எருவிடுதல்
4. நீர்பாசனம்
5. விதைத்தல்
6. நடுதல்
7. களையெடுத்தல்
8. பயிர்ப்பாதுகாப்பு
9. அறுவடை
10. தூய்மைசெய்தல்

1. உழுல்
“செங்சால்உழவர்”
(பெரும்பாணாற்றுப்படை, 196)
“…..உறுபெயல்தண்துளிக்கு ஏற்ற பல உழுசெஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து”
(அகநானுறு, 26:2326)

2. சமன் செய்தல்
“…. செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்”
(பெரும்பாணாற்றுப்படை, 210,211)

3. விதைத்தல்
“….உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுலிப்”
(குறுந்தொகை, 155)

4. நடுதல்
நீர் உறுசெறுவின் நாறு முடிஅழுத்த
நடுநரொடு சேறி ஆயின்
(நற்றிணை, 60:78)

5. நீர்ப்பாய்ச்சுதல்
“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி.”
ஓளவையார்.

6. எருவிடுதல்
‘ஏரினும் நன்றால் எருவிடுதல்’
திருவள்ளுவர்.

7. களையெடுத்தல்
“களைகால் கழீஇய பெரும்புன வருகின்”
(அகநானூறு, 194)

8. பயிர்பாதுகாத்தல்
“காவல் கண்ணினம் தினையே” (அகநானூறு, 92)
“சிறுதினைப் படுகிளி கடீஇயா”. (அகநானூறு, 32)

9. அறுவடை
பைதுஅடி விளைந்த பெருஞ் செந்நெல்லின்
தாம்புடைத் திரள்தாள் துடித்த வினைஞர்
(பெரும்பாணாற்றுப்படை, 230,231)

“நீர்சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடுதலை மாற்று.”
(அகநானூறு, 366)

10. தூய்மை செய்தல்
தூற்றும்பொழுது எழும்பிய தூது துரும்புகள்
இருண்ட மேகம் போலத் தோன்றியது விரைந்து வீசும் காற்றில் உழவர்கள் நெல்லைத்தூற்றுவார்கள்”
“பொங்கழி முகந்த தா இல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப”
(அகநானூறு, 34:37)
திரிகடுகம் மற்றும் பழமொழி, நாலடியாரில் வேளாண்மை:
“மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்”
(நாலடியார் பா: 356)

குறவன் தான் வாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான், உழவனோ தனக்குப் பயன்தந்த விளைநிலத்தை நினைத்து உள்ளம் உவப்பான்.
“உழவின் கண் காமுற்று வாழ்தல்” (திரிகடுகம், பா: 42)
உழவர்கள் பயிர்த்தொழிலில் விருப்பம் செலுத்தி வாழவேண்டும்.
“புல்ஈரப் யாழ்தின் உழவே போல் மீதூடிச்
செல்லாவாம் நல் கூர்ந்தார் சொல்”
(நாலடியார் 65)

பயிரை நல்ல நிலத்தில் உழுது பயிரிடவேண்டும். குறைந்த ஈரத்தில் உழுது பயிரிட்டால் கற்றறிந்தவர்களாயினும் அவர்கள் வறுமை நிலையில் இருப்பார்களாயின் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் சமுதாயத்தில் சிறப்புப் பெறுவதில்லை. உழும் எருது இல்லாத உழவர்க்கும் பதம் கழியும் ஈரம் பெரும் துன்பம் அளிப்பதாகும்.
“எருதிறுழவர்க்குப் போகீரம் இன்னா”
(இன்னா நாற்பது, பா.4)
கலித்தொகையில் உழவு
“புள்இமிழ் அகல்வயல் ஒலி செந்நெல்கிடைப்பூத்த
முள் அரைத்தாமரை முழுமுதல் சாய்த்து”.

மருதநிலம் நீர் வளம் செழித்து இடுத்தது உழவர்கள் செந்நெல் விதைத்தார்கள், நெற்கதிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. பறவைகள் வயலுக்கருகில் பல்வேறு ஒலிகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. தாமரை மலர்கள் மலர்ந்து காணப்படுகிறது. நீர்;வளம் மிகுந்து உழவுத்தொழில் சிறந்து இருந்ததை கலித்தொகை எடுத்துரைக்கிறது.

உழவர் சமூதாயத்தை இன்றைய உழைக்கும் சமுதாயமாகக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் கடமையை உணர்ந்து உழைக்க வேண்டும். பொறுப்பு உணர்ந்து உழைப்போரைக் காக்க வேண்டும். இது உழவர் சமுதாயத்திற்கு மட்டுமின்றி உலக சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும்.

துணைநின்ற நூல் : வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்
ஆசிரியர் : மாத்தளை சோமு.


முனைவர் கு.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் உழவு”

அதிகம் படித்தது