மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செவ்வியல் இலக்கியங்களில் எதிர்காலவியல்

முனைவர் கரு. முருகன்

Sep 22, 2018

Siragu tamil4

உலகை எதிர்காலவியல் எனும் சொல்லுக்குள் அடக்கியவை தமிழ்மொழியாகும். தமிழ்மொழியின் உச்சமாகக் கருதப்படுகிற செவ்வியல் இலக்கியங்கள் இப்பொருண்மையை உணர்த்திநிற்கிறது. கணினிவழி கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளெல்லாம் தன் கணிப்பில் கண்டுபிடித்தவர்கள் தொன்மைத்தமிழர்கள் ஆவார்கள். கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையமொழி என தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தும் அளவிற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்சான்றுகளுள் ஆலைகள், வீட்டுக்கழிவுகள் எல்லாம் கடத்தி வெளியேற்றிய பாங்கு தமிழர்களுடைய எதிர்காலச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றன. இவற்றோடு படைக்கப்பட்ட படைப்புக்கள் எல்லாம் இதை உள்வாங்கி சரியாகவே செய்திருக்கிறது.

தொல்காப்பியம்

siragu-tamil4

தமிழில் தோன்றிய தொன்மையான இலக்கணநூல் எத்தனை இருந்தாலும் சான்றாகக் கிடைக்கப் பெற்றவை தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தில் மொழியின் இலக்கணத்தை மட்டும் கூறாமல் எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படைச் சிந்தனையினையும் படைத்திருக்கிறார். பூகோளத்தில் உள்ள உயிர்களின் நிலை, மானுடத்தத்துவம் ஆகியவற்றினையும் கூறியுள்ளார். இதனை,

பன்னீருயிரும் தந்நிலைதிரியா
மிடற்றுப்பிறந்தவளியின்இசைக்கும் (தொல். எழு. 84)

எனத் தொல்காப்பியர் கூறிய வரிகள் கி.மு.க்கு முற்பட்டவையாகும். இதில் மிடற்றில் பிறந்தவளி என்ற தொடரின் வழியாக பன்னிரு உயிர்களின் பிறப்பிடத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் கி.பி.19ஆம் நூற்றாண்டில்தான் மொழியியல் அறிஞர்கள் எழுத்துக்களின் பிறப்பிடத்தை ஆய்வின்வழியாக அறிவித்தனர். இவ்வறிஞர்கள் ஆய்வின் வழியாக வெளிப்படுத்தும் முன்பே எழுத்துக்களின் பிறப்பிடத்தை மொழியியல் இலக்கணமாகவும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
தொல்காப்பிய அறிவியல் பாகுபாடு அறிவியலில் உயிர்களை வகைப்படுத்தும் முறையினை அரிஸ்டாடில் (கி.மு.384-322) தொடங்கிவைத்தார். இவரது வகைப்பாட்டினை மேலும் மேம்படுத்தியவர் கார்ல் லின்னேயஸ்(1707-1778). அறிவியலில் “தொகுதி, வகுப்பு, வரிசை, இனம், சிறப்பினம்” என்ற வகைப்பாட்டினை வைத்து உயிர்களை பிரித்துள்ளனர். தொகுதி என்பது ஒரு பெரிய தொகுப்பாகும் அதாவது இதனை பொதுப்பெயர் என்று கூறலாம். இத்தொகுப்பில் உள்ளதனைப் பகுத்து ஆராய்ந்து என்ன வகுப்பு, வரிசை, இனமென்று உயிர்களை உள்ளார்ந்து ஆய்ந்து கூறுவதே பாகுபாடு ஆகும். எ.கா. பூச்சிகள் 29 வகை இருக்கின்றன அவற்றை வரிசை (Classification), பண்பு, உதாரணம், ஏடீரோ இறக்கைகளில்லை புத்தகப்பூச்சி தொல்காப்பிய மரபியல் நூற்பா உயிர்களின் அறிவினைக் கொண்டு பிரிக்கும் பாகுபாடு என்பது இன்றைய அறிவியல் வளர்ச்சியின் அடிப்படை விதையாகும். ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உயிர்களின் பகுப்பை தொல்காப்பியர்,

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மன்னே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல்.மரபு.27)

“தொடு உணர்வு, நா, மூக்கு, கண், செவி, மனம்” என்ற உறுப்பினைக் கொண்டு, அறிவின் அடிப்படையில் உயிர்களைப் பிரித்துள்ளார். அறிவியலில் கூறப்பட்டது போலவே தொகுதி, இனம்., என்று பிரிக்காமல் ஓர் அறிவு, ஈர் அறிவு., எனப் பகுத்துள்ளார் இரண்டும் ஒன்றின் கீழ் அமையும். மேலே கூறியது மேலை நாட்டவரின் உயிரியல் ஆராய்ச்சிக்கு முன்னரே இந்த உலக மனித இனத்திற்கு அறிமுகப்படுத்தியது தமிழனின் எதிர்கால அறிவியல் பண்பேயாகும்.

ஓரறிவு – புல், மரம்.(தொல்.மரபு.28)தொடு உணர்ச்சி.
ஈரறிவு – நந்தும் முரளும்.(தொல்.மரபு.29) மெய், வாயினைஉடையது.
மூவறிவு – சிதலும் எறும்பும்.(தொல்.மரபு.30)தொடு உணர்வு, நா, மூக்குகொண்டது.
நாலறிவுயிர் – வண்டும் தும்பியும்.(தொல்.மரபு.31)‘தொடு உணர்வு, நா, மூக்கு, கண் முதலான உறுப்புக்கள் உள்ளன.
ஐந்தறிவுயிர் – மாவும் மாக்களும். (தொல்.மரபு.32) விலங்கு, பறவைகளை ஐந்தறிவு கொண்டதாக இருக்கிறது.
ஆறறிவுயிர் – மக்கள்.(தொல்.மரபு.33).

தமிழ் மொழியின் முதல் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியர் உடலின் அமைப்பினை வைத்து உயிர்களைப் பகுத்திருக்கிறார். ஒவ்வொரு உயிர்களையும் ஆராய்ந்து அதனை வகைப்படுத்தி உள்ளார்.

ஆழிப்பேரலை

siragu-tamil5

இயற்கையோடு வாழ்ந்த தமிழன் இயற்கையின் உட்கூறுகளை அறிந்திருந்தான். இயற்கையின் விளை பொருட்களை அறிந்ததோடு மட்டுமல்லாமல் கண்ணுக்குப் புலப்படா இடத்தில் நடக்கும் மாற்றங்களை பதிவு செய்திருக்கின்றனர். தற்காலத்தில் சுனாமி என்கிற ஆழிப்பேரலை உலக கடற்கரையோர எல்லைகளை மாற்றி அமைக்கிறது. ஆனால் அதற்கான காரணம் கடலுக்கு அடியிலே ஏற்படுகிற நில அதிர்வு அலைகள். இதனால் எல்லையும் சுனாமியின் பிறப்பிடத்தையும்.

நிலம்புடை பெயரினும், நீர்த்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் எல்லை தோன்றினும் (குறு. 373)

என்ற குறுந்தொகைப் பாடல் ஊரில் எழுந்த அலரால் தலைவி வருத்தம் அடைய அவள் வருத்தத்தைப் போக்க ‘இவ்வுலகில் நிலம் பெயர்ந்தாலும் நீரும் தீயும் தன் இயல்பில் இருந்து மாறினாலும் எல்லையே இல்லாத பெருங்கடலுக்கு எல்லை தோன்றினாலும் பிறரது பழிச்சொல்லால் தலைவன் மீது நீ கொண்ட காதல் என்றும் மாறாது என்ற கூற்றின் வழியாக சுனாமிக்கான விளக்கம் உலகிற்கு தந்த மொழி நம் தமிழ். இக்கூற்றினை தமிழகத்து தினசரி நாளிதழான தி இந்து என்னும் பதிப்பில் 08. 03. 2015 வெளியானதில் ‘நம் நாட்டிற்கு மிக அருகில் உள்ள மாலத்தீவு எனும் நாடு 2040ல் முழுவது கடலில் மூழ்கி விடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்’ என குறுந்தொகைப் பாடலில் உறுதிப்படுத்தி இருக்கிறது.

திணைப்பகுப்பில் மருத்துவம்

போருக்குச் செல்லும் வீரன் தான் சூடிக்கொள்ளும் பூக்கள் எல்லாம் போருக்கான ஆயத்தப் படிநிலை என்பது மட்டும் பொருளல்ல. இதில் போருக்குச் செல்லும் போது ஏற்படுகின்ற காயம் மற்றும் உடல் நலக் குறைபாடு இவற்றைத் தீர்க்கும் அரும்மருந்தாக பயன்பட்டது. இதற்காகவே இப்பூ சூடப்பட்டது. அன்பின் ஐந்திணை கைக்கிளை, பெருந்திணை இவற்றிற்கான புறனாக வரையறை செய்யப்பட்ட பூக்கள் எல்லாம் அந்த ஒழுக்கம் சார்ந்த நிலைகளில் ஏற்படும் உடல் நலக் குறைபாட்டைத் தீர்க்கும் அரும்மருந்தாக சங்கப் புலவர்கள் அறிவியல் சார்ந்த இலக்கியத்தை எதிர்காலத் தலை முறைக்குக் கூறினர்.

சூடிக்கொள்ளும் பூக்களும் தன்மைகளும்

siragu-tamil6

1. வெட்சி – குறிஞ்சி (அகத்திணை – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்) ;
ஆ நிரைகவர்தல்(புறத்திணை)
மருத்துவகுணங்கள்– உடல்சூடு, தாகம், மூட்டுவலி.
2. வஞ்சி – முல்லை (அகத்திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்);
மருத்துவகுணங்கள்–வஞ்சியில் கொடியும் உண்டு மரமும் உண்டு
3. தும்பை –மருதம் (அகத்திணை – ஊடலும் ஊடல்நிமித்தமும்)
மருத்துவ குணங்கள்–குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக, மயக்கம்
தெளிவிக்க உதவும்.
4. வாகை – நெய்தல் (அகத்திணை–இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)
மருத்துவகுணங்கள்–வீக்கம், கொப்புளம் உடைந்து வடிதலுக்கு மருந்தாகப்
பயன்படுகிறது. உடல் சூட்டினைத் தணிக்கக்கூடியது.
5. காஞ்சி–பாலை (அகத்திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்)
மருத்துவ குணங்கள்- திடீர் தாக்குதலாகத்தடதடவென அரிப்பு வந்ததனைநீக்க,

ரத்தத்தில் உள்ள எதிர்ப்புசக்தி அணுக்கள் அதிகரிக்க உதவும் வாகை. தும்பை ஆகிய பூக்களைப் போர்க்களத்திற்குச் சூடிச்சென்றுள்ளுனர். இப்பூக்கள் அவசரகாலத்தில் அவர்களது சிகிச்சைக்கு உதவுவதாக இருந்துள்ளது. சங்ககால மனிதன் தாங்கள் தினமும் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் மருத்துவம் மற்றும் பிற பயன்கள் இருப்பதனை அறிந்து அதனைப் பயன்படுத்தியுள்ளான். தற்காலத்தில் நாட்டுமருத்துவம் என்ற வடிவத்தில் தொடர்கின்றது. பூக்கள் மருத்துவத்தில் இருந்தாலும் பிறயாவும் வேறு ஏதேனும் ஒன்றின் மூலம் இன்றும் இருந்து வருகின்றது.

சூரியக்குடும்பம்

சூரியகுடும்பத்தின் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து வந்தவர்கள்தான் மக்கள். என்பதனை சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.

“சென்றகாலமும்வரூஉம்அமயமும்
இன்றுஇவண்தோன்றியஒழுக்கமொடுநன்குஉணர்ந்து
வானமும்நிலனும்தாம்முழுதுணரும்” (மதுரை. 477-479)

என்னும் பாடல் சூரியனிடம் இருந்து வந்தவர்கள் என்பதனைக் காட்டுகின்றது. சூரியகுடும்பத்திற்குப் போய்வரத் தெரிந்தவர்கள் இருந்ததாகவும் இப்பாடல் குறிப்பிடுகிறது. தற்காலத்தில் பிறகோல்களுக்குச் சென்றுஆராய்ச்சி நடத்தி வருவது போன்று, சங்ககாலத்திலும் வேறுகோல்களுக்குச் சென்றுவரும் திறம்படைத்திருந்தனர் என்பதனை இப்பாடல்வழி அறியமுடிகிறது. வானவூர்தி போன்று வானத்தில் சென்று வந்ததாகவும் புறநானூற்றில் (புறம். 27) குறிப்பு உள்ளது.

புறநானூற்றில் உலகஆக்கம்

உலக உருண்டையின் உருவாக்கத்தினை இன்றைய அறிவியல் ஆய்வினைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வித அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலில் கூறியதோடு மட்டுமல்லாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புறநானூறூம் எதிர்காலவியலுக்கு உறுதிப்படுத்தியதை,

“மண்திணிந்த நிலனும்
நிலம்ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணியநீரும், என்றாங்கு
ஐம்பெரும்பூதத்து இயற்கைபோலப்” (புறம். 02)

இவ்வுலகமானது பஞ்சபூதம் எனக் கூறப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஆனது. என்பதை மட்டும் கூறாமல் இவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது, ஒன்றில் இருந்து ஒன்று பிறக்கிறது என்ற உலகமானுடவியல் தத்துவத்தை அறிவியலோடு அறவியலையும் புலப்படுத்துகிறது.

தமிழ்மொழியினுடைய எதிர்காலவியல் என்பது தனிமனிதச் சிந்தனை மட்டுமல்லாமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற பொதுஉடமைச் சித்தாந்தத்தை உள்ளடக்கி எதிர்காலவியலைச் சிந்திக்கவைக்கிறது. செவ்வியலாகக் கருதப்படும் 41 நூல்களின் 26,350 அடிகளும் மனிதனின் எதிர்காலச் சிந்தனைக்கு விதையாகவே வித்திடுகிறது.


முனைவர் கரு. முருகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செவ்வியல் இலக்கியங்களில் எதிர்காலவியல்”

அதிகம் படித்தது