மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு

எஸ்.உஷா

Jun 2, 2018

siragu nakkeerar1

நக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர் இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் திருமுருகாற்றுப்படை, கைலை பாதி காளாத்தி பாதி காளத்தி அந்தாதி, இறையனார் அகப்பொருள் உரை, திருவீங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக்கலிவெண்பா, திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் போன்றவற்றை இயற்றியவர். மேலும் இவர் பாடியனவாக நற்றிணையில் ஏழு பாடல்களும், குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும், அகநானூற்றில் பதினேழு பாடல்களும், திருவள்ளுவமாலையில் ஒன்றும் அமைந்துள்ளன. இவரைப் பற்றி சேய்த்தொண்டர் புராணத்தில் ஒரு புராணம் பாடப்பெற்றுள்ளது. இப்புராணம் இவரின் வரலாற்றையும் இவரின் படைப்புகளையும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளது. அப்புராணம் தரும் செய்திகளை ஆய்வு நோக்கில் தருவதாக இக்கட்டுரை அமைகிறது.

சேய்த்தொண்டார் புராணம் என்பது முருகத் தொண்டர்களின் வரலாறுகளைத் தொகுத்துப் பாடும் புராணம் ஆகும். முருகவேள் பன்னிரு திருமுறை என்ற தொகுப்பினடிப்படையில் பன்னிரண்டாவது திருமுறையாக இது அமைகிறது, இதனை இயற்றியவர் தேனூர் வரகவி சொக்கலிங்கனார் ஆவார். இப்புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களின் வரலாறும், பன்னிரு தொகை அடியார்களின் வரலாறும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளன. இது நிலம் என்ற சொல்லில் ஆரம்பித்து நிலம் என்ற சொல்லில் முடிக்கப்பெற்றுள்ளது. இதனுள் நக்கீரர் வரலாறு ஆறாவது புராணமாகக் காட்டப்பெற்றுள்ளது.

நக்கீரரின் பெற்றோர்

நக்கீரர் மதுரைக் கணக்காணர் மகனார் என்ற அடைச்சொல்லோடு குறிக்கப்பெறுகிறார். எனவே இவரின் தந்தையார் கணக்காயராக மதுரையில் பணியாற்றியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. இதனை,

                “அன்னவர் பெயர்கணக் காயராம்அவர்

                சொன்ன நூற் றுறையெலாம் தோய்ந்து ணர்ந்துநல்

                இன்னிசைப் புலமையுறு றவர்மேற் றேனையோர்

                தன்னிகர் இலாரனும் தகைமை சான்றவர்|| (17)

என்று சேய்த்தொண்டர் புராணம் குறிக்கிறது. இவர்களுக்கு உலகம் உய்ய ஒரு குழந்தை பிறக்கிறது. உலகம் உய்ய எனத் திருமுருகாற்றுப்படை தொடங்குவதன் வழியாக நக்கீரரின் பிறப்பினை உலகம் உய்யப் பிறந்த குழந்தை என்று இப்புராணம் குறிக்கிறது

பிள்ளைத்தமிழாய் வளர்ந்த வளர்ச்சி

நக்கீரக் குழந்தை வளர்ந்த வளர்ச்சியை சேய்த்தொண்டர் புராணம் இயற்றிய சொக்கலிங்கனார் பிள்ளைத் தமிழாகப் பாடியுள்ளார். பிள்ளைத் தமிழின் பருவ வரிசையின்படி ஒவ்வொரு பால் எழுதி இக்குழந்தையைப் பிள்ளைத்தமிழால் வளர்க்கிறார்.

செங்கரங்களை முன்வைத்து அந்தக் குழந்தை செங்கீரை ஆடியது. அவ்வாறு ஆடும்போது ஆறெழுத்து, ஐந்தெழுத்து மந்திரங்களை உச்சரித்தது. தாமரை போன்ற முகம் மலர்ந்தது. இவ்வாறு செங்கீரை ஆடலைக் குறிக்கிறார் சொக்கலிங்கனார்.

புலவர் திலகமாகிய நக்கீரக் குழந்தை பூக்களால் செய்யப்பெற்ற தொட்டிலில் அமர்ந்து, கால்கள் மண்டியிட்டு, பூப்போன்ற கரங்களால் சப்பாணி கொட்டி அருளினார்.

அழகான மார்பமைந்த பெண்கள் கொண்டாட அக்குழந்தை முத்தமிட்டு மகிழ்ந்தது.

தமிழ் ஓங்க வந்தக் குழந்தைக்கு நிலாவைக் காட்டி அதனை இவருடன் ஆட வருக என்று பெண்கள் அழைத்தனர்.

இக்குழந்தை மூடற்கும் அறிவு பெறும் நிலையில் பறை கொட்டியது.

சதங்கை அணிந்த கால்களால் நடந்துச் சிறுமியர் கட்டிய சிற்றில்களை அழித்தது.

மதுரை செய் தவத்தால் அக்குழந்தை மதுரை நகர் வீதிகளில் சிறுதேர் ஓட்டியது.

இவ்வாறு இக்குழந்தை பிறைச் சந்திரன் முழுமை பெறுவதைப்போல முழுமையாய் வளர்ந்து நின்றது. இதனைப் பிள்ளைத் தமிழ் வரிசையில் பாடியுள்ளார் இப்புராண ஆசிரியர்.

இப்பிள்ளை மேலும் வளர்ந்து, தன் பதினாறு வயதில் பல்வகைக் கவிகள் புனைவது, தமிழ் ஆய்வது போன்ற சிறப்புகளைப் பெற்றது. இதனை

                                பெற்றோ ரிடத்தும் பிறரிடத்தும் பேசுதமிழ்

                                கற்றோரிடத்தும் கலையெல்லாம் கற்றுணர்ந்து

                                மற்றோரிடத்தடைந்து வாதாடத் தக்க நலம்

                                உற்றோத நீர் ஞாலத்துயர் கலைஞர் ஆயினார் (36)

என்ற பாடல் உணர்த்துகிறது.

தமிழ்ச்சங்கப் புலவர்

நக்கீரர் வாழும் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி ஆவான். இவர் தன் நாட்டை நன்கு ஆளும் வல்லமை மிக்கவர். தமிழ்க்கவிதைகளைப் புலவர்கள் வழி செவிகுளிரக் கேட்பவர். கந்தவேள் அடியார்க்கு வேண்டுவன செய்யும் பண்பாளர். இவன் தலையாலங்கானத்துப் போரில் பகைவரை வென்றவன். இவர்,தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர ஆவன செய்தார். இச்சங்கத்தின் தலைமைப் புலவராக புலவர் திலகமான நக்கீரரை இவர் தமிழவையின் தலைமைப் புலவராக்கினார். பல விருதுகள், பல வரிசைகள் தந்து பாண்டியர் இப்பதவியை நக்கீரருக்கு அளித்தார்.

தமிழறி பெருமாள் வெற்றி:

தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இவர் அமர்ந்த நாள் முதல் தமிழுக்கு இழுக்கு நேரும் போதெல்லாம் அதனைத் தடுத்துத் தமிழை இவர் தலைநிமிர வைத்தார். இந்நேரத்தில் விறகு வெட்டும் தொழில் செய்யும் ஒருவர் மதுரைத் தமிழ்ச்சங்கம் நாடி வந்தார். அவர் சோழ நாட்டைச் சார்ந்தவர். கையில் கோடாரி வைத்திருந்தார். அவர் “என்னை ஆள்பவர் யாருமில்லையா”என்று கூவியபடி தமிழ்ச்சங்கம் வந்தார்.

அவரை ஆற்றுப்படுத்தி நக்கீரர் நடந்து என்ன என்று கேட்டார். அதற்கு வந்தவர் “தமிழறி பெருமாள்”என்ற பெண்மணி தமிழை இகழ்கிறாள். அதுமட்டும் இல்லாமல் தமிழன்றி வேறு மொழி அறியாத என்னைப் பார்த்து “உன்னை எல்லாம் மணக்க ஒரு பெண் தேவையா?”என்றும் கேட்கிறாள் என்று முறையிட்டார்.

இதனைக்கேட்ட நக்கீரர் முருகனருள் கொண்டுத் தேர் ஏறினார். மதுரை கடந்தார். உறையூரை அடைந்தார். விறகு வெட்டும் தொழிலில் வல்லவனான அவன் காட்டிய தமிழறிபெருமாள் இல்லத்திற்குச் சென்றார். அங்கு தமிழறிபெருமாள் என்ற பெண்ணுடன் வாதம் புரிந்தார். வெற்றி பெற்றார். பின்பு அவளை விறகு வெட்டும் தொழில் செய்யும் தலைவனுக்கு மணம் முடித்துவைக்கிறார்.

சோழ மண்டல சதகத்தில் நக்கீரரை வென்றவள் தமிழறிபெருமாள் என்ற பெண் என்று குறிக்கப்பெறுகிறது. சோழ மண்டல சதகம் சோழச் சார்புடையது என்பதால் இவ்வாறு புனையப்பெற்றிருக்கலாம்.

ஈங்கோய் மலைப் பயணம்

உறையூருக்கு வந்த நக்கீரர் அப்படியே திருஈங்கோய் மலைக்குச் செல்கிறார். அம்மலையில் அருகே ஓடும் காவிரியில் இவர் மூழ்கி அதன்பின் அம்மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்கிறார். கோயிலில் ஈங்கோய் மலை எழுபது என்ற நூலைப் பாடித் தொழுகிறார். இதன் பின்பு அவர் மதுரை மாநகருக்குத் திரும்புகிறார்.

திருவள்ளுவர் நூலுக்கு மதிப்பு

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றித் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டுவந்தார். அவரின் குறளுக்கு ஒரு பாடல் செய்கிறார் நக்கீரர்.

                  தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்

       ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு

       ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்

       வாழிஉலகு என்ஆற்றும் மற்று

என்பது அப்பாடலாகும். இதனைத் தம் நூலில் சொக்கலிங்கனார் குறிக்கிறார். “மற்று என்றோர் சொல்லாரஞ் சூட்டித் தொழுதேத்தினார் எந்தை அம்மா” (260) என்ற நிலையில் திருவள்ளுவமாலைப் பாடல் குறிப்பிடப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருவள்ளுவமாலை பாடித் திருக்குறளுக்கு மதிப்பு நல்கியவர் நக்கீரர் என்பது தெரியவருகிறது.

கொங்குதேர் வாழ்க்கை பாடலும் பரிசும்

தருமி என்ற புலவன் “கொங்குதேர் வாழ்க்கை”என்ற தொடக்கமுடைய ஒரு பாடலை எழுதிக் கொண்டு சங்க மண்டபத்திற்கு வந்தார். வந்தவர் தன் பாடலுக்குப் பொற்கிழி தாருங்கள் என்றார். இப்பாடலை ஆராய்ந்த சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதுபேர், இதனில் பொருள் குற்றம் உள்ளது என்றனர். இதன் காரணமாக வருத்தமுற்ற தருமி மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலில் கிடந்தார். இவரின் வருத்தநிலை கண்டு, சிவபெருமான் வலவராய்த் தோன்றிச் சங்கத்திற்கு எழுந்தருளினார்.

வந்தவர் கோபம் தீராமல் யார் எம் பாடலில் குறைகண்டது என்று வினவினார். நாய்போன்ற யானே பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்றேன் என்றார் நக்கீரர். பெண்கள் தலைமுடிக்கு இயற்கையில் மணம் உள்ளதாக இப்பாடல் குறிப்பது தவறு என்று உரைத்தார் நக்கீரர். இதனைக் கேட்ட வலவர் வானவப் பெண்களின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார். அதற்கும் இயற்கையில் மணம் வராது என்றார் நக்கீரர். மேலும் உலகாளும் நாயகியாம் உமையவள் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார். நக்கீரர் இல்லை என்றார். இதன் காரணமாக வலவர் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர்.

நெற்றிக்கண்ணின் சூடு தாங்காமல் அவர் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தவர் வலவராக வந்த இறைவனைத் துதித்தார். கோபப்பிரசாதம் என்ற நூலைப்பாடினார். இது கேட்டுக் கோபம் தணிந்தார் சிவபெருமாள். மேலும் அவர் “முன்பு ஒருமுறை இறைவியைப் பழித்தமையால் நான் இந்த விளையாட்டினை நிகழ்த்தினேன். இனி முருகனைத் துதித்து நல்அருள் பெறுவாய்”என்றார்

முருகனடியாராகிப் பல பாடல்களைப் பாடுதல்

இறைவனின் இச்சொல் கேட்டது முதல் முருகனின் அடியவராகி அப்பெருமான் மீது பல அலங்கல்களை நக்கீரர் பாடத் தொடங்கினார். திருவலஞ்சுழியில் மும்மணிக்கோவையைப் பாடினார். திருவேரகம், நடுநாடு, காஞ்சிபுரம் திருத்தணிகை, வடவேங்கடம், கங்கை, காசி, கேதாரம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள குமரக்கடவுளைக் கண்டு வணங்கினார். கயிலைக்குச் செல்லவேண்டும் என்பது அவரின் விருப்பம்.

அதற்காக ஒரு பொய்கைக் கரையில் நக்கீரர் முருகனை எண்ணியபடி அமர்ந்திருந்தார். அப்போது அப்பொய்கையின் கரையில் இருந்த மரமொன்றில் இருந்து ஒரு பழுத்த இலை அப்பொய்கையில் விழுந்தது. விழுந்த இலையின் பாதிப்பகுதி நீரிலும், பாதிப்பகுதி நிலத்திலும் இருந்தது. இந்நிலையில் நீரில் விழுந்த இலையின் பகுதி மீனாக மாறியது. நிலத்தில் விழுந்த் இலையின் பகுதி பறவையாகிச் சிறகடித்தது. பறவை ஒருபுறம் பறக்க முற்பட, மறுபுறம் மீன் அதனைத் தண்ணீருக்குள் இழுக்க என்ற நிலையில் போராட்டம் துவங்கியது. இதனை நக்கீரர் கண்டார். அவரின் முருகனை அடையவேண்டும் என்ற எண்ணம் சிதறியது. இதன் காரணமாக ஒரு பூதம் அவரைப் பிடித்தது. பிடித்துச் சிறையில் அடைத்தது. குளித்துவிட்டு வந்த பிறகு இவரை உண்ணலாம் என்று கருதி அப்பூதம் இவரைச் சிறைப்படுத்தியது.

அச்சிறையில் தொள்ளாயிரத்துத் தொன்னூற்றொன்பது தமிழ்ப்புலவர்கள் சிறை வைக்கப்பெற்றிருந்தனர். நக்கீரர் சேர ஆயிரம் ஆனது அவ்வெண்ணிக்கை. ஓராயிரம் வந்தபின் உண்ணலாம் என்பது பூதத்தின் திட்டம். நக்கீரர் இணைந்ததால் ஓராயிரம் என்ற எண்ணிக்கையும் வந்துவிட்டது. இதன் காரணமாக சிறைபட்டவர்கள் வருந்தினர். பூதத்தின் வயிற்றுக்கு உணவாகாமல் தப்பிப்பது எவ்வாறு என்று அவர்கள் எண்ணினர். அந்நேரத்தில் திருமுருகாற்றப்படை என்ற பாடலைப் பாடினார் நக்கீரர். இப்பாடலால் திருமுருகன் எழுந்து வந்தார். தன் கதை ஆயுத்தினால் அப்பூதத்தினைக் கொன்றார் முருகப்பெருமான். அப்பெருமாளைத் தன் சொற்களால் போற்றியதாகச் சேய்த்தொண்டர் புராணம் பின்வரும் பாடலை அமைக்கிறது.

                “ஐய சரணம் சரணம் அமல சரணம் சரணம்

                                அறுமுக விநோத சரணம்,

பையரவணிந்த சிவ சங்கரன் இடங்குலவு

                பரைமகிழும் இளைஞ சரணம்

மையனைய சூழலிகுற வள்ளிகுஞ் சரிதழுவி

                மகிழுமணவாள சரணம்

வெய்யப10தத்ன இருந்த எளியோங்கள் எமை

                விடுவித்த விமல சரணம்

என்ற பாடல் நக்கீரர் முருகனைப் போற்றிய நிலையைக் காட்டுகிறது. நல்லார் ஒருவர் உளரேல் பல்லோருக்கும் மழை பெய்து பயன் தருவதைப் போல, நக்கீரரால் மற்ற புலவர்களின் உயிர்களும் காப்பற்றப்பெற்றது.

இதன் பிறகு காளத்தி என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள பொன்முகரி ஆற்றில் நக்கீரர் நீராடினார். நீராடி அவர் கங்கையின் மேற்கில் உள்ள மலையான கைலாய மலையில் எழுந்தார். அவரின் கைலாய எண்ணம் இதன்வழி நிறைவேறியது.

இதன் தொடர்வாக கயிலை பாதி காளாத்தி பாதி, அந்தாதி, காரெட்டு, கண்ணப்பர் தம்மறம், எழுக் கூற்றிருக்கை, தேவநற்பாணி போன்ற நூல்களை அவர் படைத்தளித்தார்.

நக்கீரர் சோதியில் கலத்தல்

இவ்வாறு இறைத்தொண்டு, தமிழ்த்தொண்டாற்றிய நக்கீரர் தன் வாழ்நாளின் நிறைவில் சோதியுள் கலந்தார்.

இவ்வாறு நக்கீரர் வரலாறு சேய்தொண்டர் புராணத்தில் வரையப்பெற்றுள்ளது.


எஸ்.உஷா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு”

அதிகம் படித்தது