மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்

தேமொழி

Jun 9, 2018

siragu puranaanooru1

டாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், பேராசிரியர் திருமணம் செல்வக் கேசவராயர் முதலியாரால் பயன்படுத்தப்பட்டது. இந்த நூலைச் செல்வக் கேசவராயரின் பேரன் தி. நம்பிராசன் மறைமலையடிகள் நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நூலைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) ஒளிவருடிய படக்கோப்பு வடிவில் (scanned PDF document) இணையத்தில் வழங்கியுள்ளது:  (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/dr_gu_pope_purananuru.pdf).  இந்த புறநானூறு மூலமும் உரையும்  நூல், உ.வே.சா. அவர்களால் வே. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தின் வழியாக 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட முதற்பதிப்பு  ஆகும் (இதன் விலை  4 ரூபாய்).

இந்த நூலில் ஜி.யு. போப் குறிப்புக்கள் எழுதியுள்ள விதம்,  அவரது ஆழ்ந்து படிக்கும் முறைக்கும் தமிழார்வத்திற்கும் சான்றாக உள்ளது. நூல் முழுவதும் ஒரு பக்கம் விடாது அவரது குறிப்புக்கள் நிரம்பியுள்ளன. இது மிகைப்படுத்துதல் அல்ல, மெய்யாகவே அவர் ஒரே ஒரு பக்கத்தையும் கூட  குறிப்பின்றி விட்டுவைத்தாரில்லை!!! புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் குறிப்பெடுத்துக் கொண்ட முறை குறித்து கண்டவை இங்கே கொடுக்கப்படுகிறது:

  • ஒவ்வொரு பாடலையும் சொல் பிரித்து, ஒவ்வொரு பதத்தையும் அடிக்கோடிட்டுக் கொண்டு பொருள் புரிந்து படித்துள்ளார்.
  • பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பழைய உரையில் (உரை எழுதியவர் யார் என அறியக்கூடவில்லை – இந்த உரை முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே உ.வே.சா. விற்குக் கிட்டியுள்ளது) தொடர்ச்சியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஒவ்வொரு வரியும் எங்கெங்கு தொடங்குகிறது என்று அறிந்து கொள்ள வரியின் எண்ணை உரையின் இடையிடையே எழுதி வைத்துள்ளார்.
  • ஒவ்வொரு பாடலின் எண்ணும் ௧, ௨, ௩ என தமிழெண்ணாகக்  குறிக்கப்பட்டிருப்பதை ‘ரோமன் எண்’ (roman numerals)  வடிவில் I, II, III, VI, V  என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளார்.
  • பாடலில் அதன் வரிகள் தமிழெண்ணில்  5, 10, 15 என ஐந்தின் அடுக்காக மட்டும் எண் குறிப்பிடப்பட்டுள்ளதால், அத்தனை வரிகளுக்கும் இவர் ‘அரபி எண்’ (arabic numerals) கொண்டு 1, 2, 3, 4  என்று வரியின் எண்களைக்  குறித்துக் கொண்டுள்ளார்.
  • பாடலின்  கீழ் பாடலுக்குரிய திணை, துறை, பாடியவர், பாடப்பட்டவர் குறிப்புகளை கட்டம் கட்டி வைத்துள்ளார். பொதுவாக உ.வே.சா.  அடுத்தடுத்து வரும் பாடல்களுக்கும் ஒரே திணையும் துறையும் அமைந்திருந்தால் “திணையும் துறையும் அவை “என்று தொடர்ந்து வரும் பாடலில் குறிப்பிட்டு விடுவார். அவ்வாறே பாடலைப் பாடியவரும் பாடப்பட்டவர் செய்தியும் முதல் பாடலில் இடப்பெற்றவராக இருந்தால் அடுத்து வரும் பாடலில் “அவனை அவர் பாடியது” என்று குறிப்பிடுவார்.  இந்த அணுகு முறை நூலைத் தொடர்ச்சியாக படிப்பவருக்கு மட்டுமே உதவும். இடையில் ஒரு பாடலைப் படிப்போருக்கு இவ்வாறு “திணையும் துறையும் அவை”, “அவனை அவர் பாடியது” என்று கொடுக்கப்படும்  குறிப்பு உதவாது. முதல் பாடலுக்குரிய குறிப்பு என்னவென்று முன்பக்கங்களைப் புரட்டித் தெரிந்து கொள்ள நேரிடும். இது போன்ற நிலையை எதிர்கொண்ட போப் அவரே பாடப்பட்டவர் குறித்த அந்தக் குறிப்புகளை இப்பகுதியில் எடுத்து குறித்துக் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. அவ்வாறே, பாடலில் பாடப்பட்டவரின் குறிப்புகள் அடுத்துவரும் பக்கங்களிலோ அல்லது முற்பகுதியில் கொடுக்கப்பட்டு இருந்தாலோ,  பாடப்பட்ட மன்னனின் பெயரையும் பாடல் தொடங்கும் இடத்திலேயே  குறித்து வைத்துள்ளார்.
  • ஜி.யு. போப் நூலின் பக்க விளிம்புகளை மிகத் தாராளமாகப்  பயன்படுத்தியுள்ளார். பொதுவாகவே, மீண்டும் நூலை மீள்பார்வை செய்யும் பொழுது எழுதிவைத்த குறிப்புக்கள் உதவும். இந்த  அடிப்படையில் அவர் நூலை மீள்பார்வை செய்வதையும்,  மேற்கோள் கொடுக்கும் நோக்கில் குறிப்பெழுதி வைப்பதையும் வழமையாகக் கொண்டிருந்ததை யூகிக்க முடிகிறது. பாடலின் பக்கவாட்டில்,  நூலின் விளிம்பில் சில இடங்களில் தமிழிலும், மிகப் பல இடங்களில்  ஆங்கிலத்திலும்  தனது குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

எடுத்துக்காட்டாக; உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்  நாட்டின் வளம் குறித்து,

“பழன மஞ்ஞை யுகுத்த பீலி

கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்

கொழுமீன் விளைந்த கள்ளின்

விழுநீர் வேலி நாடுகிழ வோனே”

என்று விவரிக்கும் புறநானூற்றின் 13 ஆம் பாடலில் காணப்படும் பகுதிக்கு “சோழநாடு” என்று தமிழில்  குறிப்பு எழுதிக்கொண்டுள்ளார்.

மற்றொரு பாடலில் சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன், ‘மெல்லியவாமால் நுங்கை’ எனக் கபிலரின் கைப்பற்றி அவரது கையின் மென்மை கண்டு வியந்து  (புறம். 14) கூறியதைக் குறித்து ‘Kabilar Hands’ என்று ஆங்கிலத்தில் குறிப்பு எழுதிக் கொண்டுள்ளார்.

siragu kabilar hands1

ஜி.யு. போப்பை மிகவும் கவர்ந்த புறநானூற்றுப் புலவர்களில் ஒருவர், இருபத்துயெட்டு   புறநானூற்றுப் பாடல்களை எழுதியவரும்,  நக்கீரர், பரணர், ஒளவையார்  போன்ற புலவர்களின் காலத்தில் வாழ்ந்தவருமான புலவர்  கபிலர் என உறுதியாகச் சொல்லலாம். கபிலரின் பாடல் வரிகளின்   நயத்தைச் சுவைத்த  ஜி.யு. போப், The “Poets of the Tamil Lands, Kabilar, and his friend, Vel Pari” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை ‘தி ஏசியாட்டிக் குவாட்டர்லி ரிவியூ’ என்ற ஆய்விதழில் 1898 ஆண்டில் எழுதியுள்ளார்.

அதில் அவர் கபிலர்  குறித்து தமிழிலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சிலவற்றை, குறிப்பாக, ‘கபிலர் அகவல்’ என்ற சிற்றிலக்கியத்தின் பிற்கால இலக்கியநடை குறித்தும், கபிலர் அகவல் காட்டும் ஔவை-வள்ளுவர் தொன்மப் புனைவுக் கதைகளையும் தொட்டுச் சென்றுள்ளார். அத்துடன், ‘குறிஞ்சிப்பாட்டு’ எழுதி குறிஞ்சித்திணைப் பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர், சங்க காலப்  புறநானூற்றுப் பாடல்கள் காட்டும் கபிலரை,  வேள்பாரியின் உற்ற நண்பராக வாழ்ந்து, இறந்த வேள்பாரியின் மகளிருக்குப் பொறுப்பேற்று, பின்னர் மறைந்த நண்பன் பாரியின் நினைவில் மனமுடைந்து வடக்கிருந்து உயிர்துறந்த கபிலரின் பாடல்வரிகள் அவரை மிகவும் கவர்ந்ததை அவரது  கட்டுரையின் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’- ‘Brahman of unspotted – learning’ (புறம். 126); ‘செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ – ‘Kabilar, who in rapid verse poured forth poetry full of varied lore, correct of speech, of far extended praise’ (புறம். 53); ‘பொய்யா நாவின் கபிலன்’ – ‘Kabilar whose tongue, never uttered falsehood’ (புறம். 174) என்று கபிலரின் புகழ் பாடும் புறநானூற்றுப் பாடல் வரிகளை அவரை அறிமுகப்படுத்தும்பொழுது மேற்கோள்களாகக்  கொடுக்கிறார்.

கபிலரின் பாடல்களின் இலக்கிய நயத்தைப் பாராட்டிய ஜி.யு. போப்,  சில பாடல்களை அதற்காக மொழிபெயர்த்தும் அக்கட்டுரையில் கொடுத்துள்ளார். அவர் மொழிபெயர்த்த கபிலரின் பாடல்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மூலப்பாடல்களின் தமிழ் வரிகளும், சற்றே சுருக்கமான பொருளுரையும் ஒப்பிட்டு அறியும் நோக்கில் அத்துடன் இணைத்தே கொடுக்கப்பட்டுள்ளது.

[1]

உங்கள் கைகள் மென்மையாக இருக்கின்றனவே என்று வியந்த சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பதிலளிக்கும் பொழுது, அதை மன்னனைப் புகழ ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் நுண்மதி படைத்தவராகக் கபிலர் விளங்கியுள்ளார்.

கடுங்கண்ண கொல் களிற்றால்

காப்பு உடைய எழு முருக்கி

பொன் இயல் புனை தோட்டியால்

முன்பு துரந்து சமம் தாங்கவும்

பார் உடைத்த குண்டு அகழி     5

நீர் அழுவ நிவப்பு குறித்து

நிமிர் பரிய மா தாங்கவும்

ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை

சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும்

பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில்     10

வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை

புலவு நாற்றத்த பைம் தடி

பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை

கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது

பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும்     15

மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு

ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு

இரு நிலத்து அன்ன நோன்மை

செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே  (புறம். 14)

பொருள்:  போர் செய்யும் பொழுது, கொல்லும் தன்மையுள்ள யானைகளை அங்குசத்தால் கட்டுப்படுத்தி அடக்குகிறாய், குழிகளையும் தாவிச் செல்லுமாறு குதிரைகளைக் கடிவாளம் கொண்டு இழுத்துப் பிடித்துக் கட்டுப்படுத்துகிறாய்,  தேரில் நின்றவாறு வில்லில் நாண்பூட்டி எதிரிகள் மீது அம்புகளை விரைந்து தொடுக்கிறாய், உன்னை நாடி வருவோருக்கு அரிய  கொடைகளை  வாரி வாரி வழங்குகிறாய். மன்னவா! இதனால் அல்லவோ உன் கரங்கள் காய்த்துப் போய் கடினமாக உள்ளன. ஆனால் என் போன்று உன்னைப் போற்றிப் பாடுபவர்களோ, நீ அளிக்கும் ஊனும் கறியும், சோறும்  துவையலும் உண்பதற்கு மட்டுமே எங்கள் கரங்களைப் பயன்படுத்துகிறோம். ஆகையால், எம் போன்றோர்  கைகள் மென்மையாகத்தான் இருக்கும்,  என்று கூறி மறைமுகமாகச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனின் ஆற்றலைப் பாராட்டுகிறார் கபிலர்.

“O brave king, urging on your war elephants, you have broken down the strongholds  of your foe; with well-wrought iron goad you have driven them on to bear the brunt of  the fierce fight; you have guided your charger over the moat and fortifications of your  enemies’ citadel; riding on stately chariot, your side bearing the quiver, you have bent  your bow, and shot forth deadly arrows; and on suppliants have you with liberal hand  bestowed your gifts. Thus strong and mighty is your broad hand that reaches to your foot! We know no other toil than the eating of savoury curry and rice prepared by your beneficence amidst rich perfumes; and so, mighty one, who art like the conquering Murugan, our hands are soft.(G. U. Pope)

[2]

மற்றொரு பாடல், கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் அல்ல என்று கபிலர் கூறும் பாடல்.

siragu kabilar

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக

போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது

இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப

ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை

கடந்து அடு தானை சேரலாதனை     5

யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்

பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி

மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி

அகல் இரு விசும்பினானும்

பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே   (புறம். 8)

பொருள்:  கதிரவனே! நீ சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு இணையாக மாட்டாய். நீ பகல் பொழுது மட்டும் உனக்கு என்று வரையறுத்துக் கொண்டு ஒளி வீசுகிறாய், நிலவுக்கு அஞ்சி இரவில் பதுங்குகிறாய். தெற்குவடக்கென்று நிலையற்று அங்குமிங்கும் போகிறாய்.  ஆனால் சேரமன்னனோ பிறருக்கும் நாடு உரிமையானது என்ற சொல்லைப் பொறுக்காது அனைத்து நிலத்தையும் அடைய விரும்பிப் போரிட்டு நாட்டை  விரிவுபடுத்தி நிலையான  தனியாட்சி நடத்தி வருபவன்.  எதிர்ப்போரை  எதிர் கொள்ளும் ஆற்றல் உடையவன். செல்வத்தை வரையாது வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவன்.

“O Sun, thou canst not rival Ceralathan whom all obey, who brooks no rival, who bestows lavish gifts, who is the lord of conquering hosts; for thou must bide thy time to shine, dost turn thy back at eventide, dost change thy place from hour to hour, dost hide thyself behind the hills, dost only in the day season shine in the broad expanse of heaven.” (G. U. Pope)

 கபிலரும் வேள்பாரியும்:

கபிலர் எழுதிய மிகச் சிறந்த பாடல்கள் அவர் வேள்பாரியைக்  குறித்து எழுதிய பாடல்களே என்பது ஜி.யு. போப் கொண்டுள்ள கருத்து. குறிப்பாகப் பாரியின் பறம்புமலையின் அழகைக் கண்முன்னே ஓவியமாக விரித்துக் காட்டும் வகையில் கபிலரின் பாடல்  அமைந்துள்ளதைப்  பாராட்டுகிறார். அத்துடன், இப்பாடலில் பகைமன்னர்கள் போரிடுவதைக் கைவிட்டு,  போர்க்கருவிகளை தவிர்த்துவிட்டுப் பாடல்கள் பாடும் பாணர்களாகவும் விறலியராகவும் வந்து பாரியைப் புகழ்ந்து பாடினால்  அவனது அரசை கொடையாகப் பெறலாம் என்று கபிலர் கூறும் கருத்து ஜி.யு. போப்பைக் கவர்ந்துள்ளது என்பதை அவர் தனது கட்டுரையில் இரு இடங்களில் குறிப்பிடுவதில் இருந்து அறிய முடிகிறது. பாரியையும், பாரி மகளிரையும் அவர்களது பறம்புமலையையும் விவரிக்கும் கபிலரின் எளிமையான சிறிய பாடல்களின் அழகு, தனது மொழிபெயர்க்கும் முயற்சியில் வெளிப்படவில்லை என்றும் ஜி.யு. போப் குறிப்பிடுகிறார். வேள்பாரியின் வரம்பற்ற வள்ளல்தன்மையைக் குறிக்கும் பாடல் ஒன்றைப் புறநானூற்றில் காணலாம். இப்பாடலின் கருத்தை  ஒரு குறிப்பிடத்தக்க கருத்து என்கிறார் ஜி.யு. போப்.

[3]

புறம். 106. தெய்வமும் பாரியும்!

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்

புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா ஆங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கைவண்மையே

பொருள்:  தன்னால் இயன்றது இதுமட்டுமே என்ற கருத்தில் ஒருவர், நல்லது தீயது என்று எந்த வகையிலும் அடங்காத,  சிறிய இலைகளைக் கொண்ட எருக்கஞ் செடியின் மலராத பூக்களையும் கடவுளுக்குக் காணிக்கையாக அளிக்கும்பொழுது கடவுள் அதை ஏற்க மறுப்பதில்லை. அவ்வாறே, வேள்பாரியும் அறிவற்றவரும் அற்ப குணத்தவரும் தன்னை நாடிவந்தால் அவர்களுக்கு கொடைவழங்கி உதவத் தவறுவதில்லை.

“Our God whate’er his worshippers devout can find to bring

Accepts ; rejects not wreath of commonest flowers ; —

So Pari, though folks ignorant and mean draw near

As suppliants, bestows on all his liberal gifts.” (G. U. Pope)

[4]

புறம். 109. மூவேந்தர் முன் கபிலர்!

அளிதோ தானே பாரியது பறம்பே

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே [5]

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே

வான் கண் அற்று அவன் மலையே வானத்து

மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு [10]

மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்

புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்

யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே

சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி [15]

விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

பொருள்: 

மூவேந்தர்களே! நீங்கள் ஒருங்கிணைந்து போரிட்டாலும், உங்களது வலிமையான படைகளும், போர் முறைகளும் கொண்டு பாரியை எதிர்த்தாலும் உங்களுக்கு அவை வெற்றிதராது. உங்கள் முற்றுகை  முயற்சியால் அவன் தளரமாட்டான். பாரியின் நாடு உழவுத்தொழிலை நம்பியிராது இயற்கை தரும் கனி, காய், கிழங்கு, தேன் வகைகளைக் கொண்டே தன்னிறைவு பெறக்கூடிய வளம் நிறைந்த நாடு.  மலை முழுவதும் சுனைநீர் வளமும் உண்டு. ஆகவே, வாளால் அவனைப் போரில் வெல்ல வழியில்லை. நீங்கள் அவனைப் பாடிப் பரிசில் பெறும் பிற பாணர்களையும் விறலியரையும் போல ஆடிப்பாடி வந்தால், அவனது நாட்டைக் கொடையாகவும் அவனிடமிருந்து நீங்கள் பெறலாம் என மூவேந்தர்களிடம் கூறுகிறார் கபிலர்.

Pari’s Mountain Home. 109

“Sad indeed is Pari’s mountain home!

Though ye three Kings with sound of dreaded drum besiege,

Untill’d four kinds of produce rich it bears.

And first, the bambu with its tiny leaf yields rice-like grain;

The second is the jack-fruit’s sweet and pulpy store;

The third, the root of the rich valli’s creeping plant;

The fourth, honey dripping where squirrels leap

From tree to tree on the long line of lofty hills.

His mount soars like the sky. The brooks

That murmur on their slopes are bright as stars of heaven.

Though ye had elephants to tie to every tree,

And chariots covering every field,

By valour shall ye ne’er obtain the hill!

No sword shall gain the prize!

I know the way to win his hill from him;

Take ye the tiny lute, and sing sweet songs, —

Maidens with wealth of fragrant locks, —

Come but with dance and song, you’ll gain the country all and every hill!” (G. U. Pope)

[5]

புறம். 105. தேனாறும் கானாறும்!

சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி

தடவு வாய் கலித்த மா இதழ் குவளை

வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ

பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி

கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக [5]

மால்பு உடை நெடு வரை கோடுதோறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள் பால் பாடினை செலினே

பொருள்: 

அழகிய விறலியே, மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வேள்பாரியின் பறம்புமலையின் சுனைநீர் அருவியாக வழிந்தோடிப் பயிரிடும் நிலத்திலும் பாய்கிறது. அந்த நீரைப் போன்ற இனிமையான பண்பு நலன்களைக் கொண்ட பாரியிடம் பாடிச் சென்றால் உங்களுக்குப் பொன்னால் ஆன அணிகலன்களும் பிற செல்வங்களும் பரிசிலாகக் கிடைக்கும், அவனை நாடிச் செல்வீர் என்று விறலியை ஆற்றுப்படுத்துகிறார். கபிலர்.

Pari’s Hill. 105

“O bright-browed damsel!  thou shalt obtain ornaments of ruddy gold, if thou go to Pari to sing his praise; he is more propitious than the streams that from the peaks of the chain of hills that rise like the steps of a bamboo ladder, flow down through the channel of the broad fields that receive the mountain torrent, that never dries up, whether it rain or no;  while the cool drops fall refreshing on the young lily flowers with their expanded leaves, around which the beetles hum.” (G. U. Pope)

[6]

புறம். 236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்

சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்

மலை கெழு நாட மா வண் பாரி

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்

புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே

பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது

ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி

இனையை ஆதலின் நினக்கு மற்று யான்

மேயினேன் அன்மையானே ஆயினும்

இம்மை போல காட்டி உம்மை

இடை இல் காட்சி நின்னோடு

உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

பொருள்: 

குரங்குகள் கிழித்துண்டு முரசு போலக் காட்சியளிக்கும் பெரிய பலாப்பழத்தைக் குறவர்களும் மேலும் சில நாள் வைத்து உணவாக உண்ணும் வளம் மிக்க பறம்பு மலையை  ஆண்ட பாரியே, என்னைப் பலகாலம் ஆதரித்து நட்பு பாராட்டினாய்! ஆனாலும் நான் அந்த  நட்பிற்குத் தகுதியற்றவன் போலும்;  நீ மட்டும் இங்கே தங்கிவிடு என்று என்னைத் தவிர்த்துவிட்டு, என்னைத் தனியே விட்டுவிட்டு மறைந்துவிட்டாய்.  இந்தப்பிறவியில் நம்மை ஒன்று சேர்த்த ஊழே வரும் பிறவியிலும் நம்மை ஒன்று சேர்க்குமாக.

Kabilar’s Last Song.  236

“O Pari, rich in gifts; lord of the hills where fruits hang on the trees,

While herds of antelopes feed on them, and woodmen armed with bows join the repast!

Thou hast not faithful proved to friendship’s bond that joined us two.

It seems as though at last thou hatedst me.

Through all those years thou wert my helper true, and yet

In death thou wouldst not take me with thee; left me behind!

By this desertion seems thy friendship incomplete.

Here in this birth we meet no more, nor joy

As we were wont; but in another birth

I look that lofty fate shall join us once again,

And I shall see thee yet, nor lose the vision evermore.” (G. U. Pope)

siragu G.U.Pope1

பாடலின் கருத்தின் அடிப்படையில் இப்பாடலே கபிலர் பாடிய கடைசிப்பாடலாக ஜி.யு. போப் கருதினார் என்று புரிந்து கொள்ள இயலுகிறது. அவரது ஆய்வுக்கட்டுரையில் ‘கபிலர் அகவல்’ பாடிய கபிலர் குறித்தும், கபிலரின் குறிஞ்சிப்பாட்டு குறித்தும், கபிலரின் வாழ்க்கை வரலாறாக அவர் மீது கூறப்படும் தொன்மப்புனைவுகள் குறித்து மட்டுமின்றி, அவற்றைக் குறித்து தமது கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். ஔவையும் கபிலரும் உடன்பிறப்புகள் என்ற புனைவை அவர் ஏற்கவில்லை என்றாலும் அவர்கள் இருவரின் பண்பு நலன்களில் இருந்த ஒற்றுமையைக்  காண்கிறார் ஜி.யு. போப்.

கபிலர் குறித்த தனது ஆய்வுக்கட்டுரையில் ஜி.யு. போப் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ள மேற்காணும் பாடல்கள் தவிர்த்து; மேலும் இரண்டு புறநானூற்றுப் பாடல்களும்,  அவர் ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூலின் பக்கங்களின் இடையிடையே  அந்தப் பாடல்கள் வரும் இடங்களில் இணைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.

இப் புறநானூற்றுப் பாடல்கள் கபிலர் தவிர்த்த புலவர்களால் எழுதப்பட்டவை. அவை முறையே, “உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்” (புறம். 134 – அறவிலை வணிகன் ஆய் அலன்!) மற்றும்,  “கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்” (புறம். 167 -  நீயும் ஒன்று இனியை, அவரும் ஒன்று இனியர்!) ஆகியோர் எழுதிய பாடல்களுமாகும். அவையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

[7]

134. இம்மையும் மறுமையும்!

இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அற விலை வணிகன் ஆஅய் அல்லன்

பிறரும் சான்றோர் சென்ற நெறி என

ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே

பொருள்: 

ஆய் அண்டிரனின் வள்ளல்தன்மை வணிக நோக்கற்றது, இப்பிறவியில் கொடுக்கும் கொடை தனது மறுமைக்கான பலனளிக்கும்  என்ற நோக்கோடு அவன் வழங்குவதில்லை. சான்றோர் காட்டிய நன்னெறி ஈகை என்பதாலேயே அவன் வாரி வழங்குகிறான் என்று ஆய் அண்டிரனைப் பாராட்டுகிறார் புலவர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

Pure Virtue. 134

“What’s done in this world shall in other worlds

Avail, — men say who virtue make a thing of merchandise; —

Ay’s generous soul follows the course marked out

By all ancient great and good.” (G. U. Pope)

மொழிபெயர்ப்பு பாடலுக்குக் கீழே  எழுதியுள்ள குறிப்பில், இப்பாடலின் கருத்தைக் குறளிலும்  நாலடியாரிலும் காணலாம் என்றும் ஜி.யு. போப் ஒப்பு நோக்கிக் குறிப்பெழுதியுள்ளார்.

 [8]

167. ஒவ்வொருவரும் இனியர்!

நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்

படை விலக்கி எதிர் நிற்றலின்

வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே

அவரே நின் காணின் புறங்கொடுத்தலின்

ஊறு அறியா மெய் யாக்கையொடு

கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே

அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்

ஒவ்வா யா உள மற்றே வெல் போர்

கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி

நின்னை வியக்கும் இ உலகம் அஃது

என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

பொருள்:

போரில் பகைவரை எதிர்த்து நின்று பகை முடித்ததால் உன் உடல்  வீரத்தழும்புகளுடன் காணப்பெறுகின்றன, ஏனாதியே! உனது அந்த வீரச்செயல் புகழப்படுவது காதுக்கு இனிமை தருகிறது. ஆனால், நீ கண்ணுக்கு இனியவனவாக இல்லை. உன்னை எதிர்த்து நிற்க முடியாமல்  புறமுதுகிட்டு ஓடிய உனது பகைவருக்கோ விழுப்புண்கள் ஏதுமின்றி அவர்கள் உடல் கண்ணுக்கு இனியவையாக உள்ளது. ஆயினும் அவர்கள் செயல் காதுக்கு இனிமையாகப் புகழப்படுவதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இனிமையானவர்தாம் என்பதை அறிவாயாக.  ஆனால், பலரும் உன்னைப் புகழ்வதன் காரணம் என்னவோ, சொல்வாயா தலைவா! என ஏனாதியை இகழ்வதுபோல் புகழ்ந்து பாடுகிறார் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

Pleasant to ear and eye. 167

“When war arose thou did overcome in fight

Thy trembling foes, and drive them far,

So hath it come to pass thy form is seamed

With many a wound of sword and spear!

Thus to the ear thy name sounds pleasantly,

Albeit thy form nor feit to see.  — Thy foe

When he saw thee straight turns his back, and ‘scaped

Unscathed by dart or blade! So he to sight

Is passing fair, to ear harh scanty praise; —

Well! Thou hast one, and he has one to boast.

Thus it is that the world would judge you both!

Each man has here his compensating gain.

But say, how is it in the real world to come?”  (G. U. Pope)

புறநானூறு காட்டும் பண்டைத்தமிழர் வாழ்வியலும் வரலாறும் ஜி.யு. போப் அவர்களைக் கவர்ந்ததை அவர் எழுதிய கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக மன்னர்களின் வாகைத் திறனும், ஈகைச் செயல்களும் மட்டுமின்றி, அவர்கள் புலவர்களிடம் பாராட்டிய நட்பும் அவரைக் கவர்ந்திருந்ததை அவர் மொழிபெயர்த்த பாடல்களின் வழி அறியமுடிகிறது.

 _____________________________________

 சான்றாதாரங்கள்:

[1] டாக்டர் ஜி.யு. போப் ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல்.

http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/dr_gu_pope_purananuru.pdf

[2] The Poets of the Tamil Lands, Kabilar, and his friend, Vel Pari;  By the Rev G. U. Pope. MA, DD. Balliol College, Oxford University;  The Asiatic Quarterly Review, Oriental Institute., 1898, Page: 126.

https://books.google.com/books?id=BBUoAAAAYAAJ&pg=PA126&hl=de&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false

[3] புறநானூறு  – ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய  விளக்கவுரையுடன், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.

http://www.tamilvu.org/library//l1281/html/l1281int.htm

[4] பாடல் பதம் பிரிப்பு உதவி, முனைவர். ப.பாண்டியராஜா.

http://sangacholai.in/8.8.html

______________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்”

அதிகம் படித்தது