மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜோதி வழிபாட்டின் சிறப்பும் பெருமையும்! (பகுதி – 30)

முனைவர். ந. அரவிந்த்

Oct 30, 2021

திருவிழாக்களும், திருநாட்களும் தமிழர்களின் வாழ்வில் ஒன்றியவைகளாகும். இவைகள் கொண்டாட காரணங்கள் உள்ளன. கோயில் திருவிழா அல்லது கோயில் கொடை உறவுகளை வளர்ப்பதற்காக கொண்டாடப்படுகின்றன. வெளியூரில் வாழ்பவர்களும், உறவினர்களும் திருவிழா நாட்களில் முறையே சொந்த ஊருக்கும், உறவினர் வீட்டிற்கு விருந்தினராகவும் வருவது வழக்கம். என்னுடைய சொந்த கிராமத்தில் மூன்று கோயில் திருவிழாக்கள் பிரபலம். அவற்றில் இரு விழாக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி ஆவணி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும். காவல் தெய்வத்திற்காகக் கொண்டாடப்படும் மூன்றாவது விழா வருடம் ஒருமுறை பங்குனி மாதத்தில் வரும். எனவே, ஆறு மாதத்திற்கு ஒருமுறை கிராமத்தில் கோயில் திருவிழாக்களை கண்டு களிக்கலாம். இதனால் மக்களுக்கு சலிப்பும் வருவதில்லை. உறவுகளும் விட்டுப்போவதில்லை. இவைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னோர்களால் வகுக்கப்பட்டு தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

இது தவிர கோயில்களில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் கோயில் பராமரிப்பு செய்வதே ஆகும். கோயில் கட்டி 12 ஆண்டுகளில் பழுது ஏற்படுவது சகஜம். அப்பழுதுகளை சரி செய்வதற்காகவே 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் கொண்டாடப்படுகிறது.

திருவிழாக்கள் ஊர் மக்களாலும், திருநாட்கள் என்பது மாநிலம் அல்லது நாடு முழுவதும் பொதுவாக அனுசரிக்கப்படுகிறது. திருநாட்கள் ‘பண்டிகை நாட்கள்’ எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது. மகா சிவராத்திரி திருநாள், கார்த்திகைத் திருநாள், பொங்கல் பண்டிகை போன்றவை தமிழ்நாட்டினில் பிரபலமான திருநாட்கள். தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் பிரபலம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பண்டிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை ஒளி அல்லது வெளிச்சமாகும்.

பிரம்மாவும், விஷ்ணுவும் இறைவன் சிவனுடைய அடியையும், முடியையும் காண முடியாமல் ஏமாந்து போனார்கள். அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக நின்று விசுவரூபமெடுத்தார் ஈசுவரன். இறைவனை ஒருவனும் கண்டதில்லை. பிரம்மா மற்றும் விஷ்ணு இருவரும் இறைவனைக் காண முடியாமல் ஏமாந்தனர் மற்றும் அவர்கள் அக்கினியின் வெளிச்சத்தினை மட்டுமே கண்டனர் என்று தமிழ் புராணங்கள் கூறுகின்றன. அந்தநாள்தான் மகா சிவராத்திரி நன்னாள் என்றும் சொல்லப்படுகிறது.

கார்த்திகை திருநாள் தமிழ் மக்கள் கொண்டாடும் பழமையான பண்டிகைகளில் ஒன்று. இந்த விழா, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும், அவ்வையாரின் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், சங்க இலக்கியத்தில் ‘பெருவிழா’ என்றும் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை மக்களால் அனுசரிக்கப்படும் இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது ஒரு ‘தீபத் திருநாள்’ ஆகும். திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது வழக்கம். திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமான மலையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று மாலையில் பெரிய தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுவது வழக்கம்.

சொக்கப்பனை கொளுத்துதல் என்பது சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். மரத்தின் கிளையினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு ‘சொக்கப்பனை’ என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள். அக்கினி மயமாக எரிகின்ற சொக்கப்பனை பக்தர்களால் வணங்கப்படுகிறது. இறைவன் அக்கினியாக இருக்கிறான் என்பதை நினைவுகூற கார்த்திகை தீப திருநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

siragu sokkappanai1சொக்கப்பனை கொளுத்துதல்

வெளிச்சம் தரும் சூரியனை படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் பண்டிகை. இப்பண்டிகையானது தமிழர்களால் ‘தை’ 1 ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ‘தமிழர் திருநாள்’ எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயம் செழித்தோங்க அத்தியாவசிய தேவை சூரிய ஒளி. எனவே இறைவன் தந்த சூரியனுக்கும் முக்கியத்துவம் தந்தார்கள் தமிழர்கள். அது மட்டுமின்றி நாற்று நடுமுன் நிலத்தை உழ நாட்டு காளை மாடுகளை பயன்படுத்தியதால் அவற்றிற்கும் மரியாதை தரும் விதமாக ‘தை’ 2 ம் தேதியை ‘மாட்டுப் பொங்கல்’ என கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிக பிரபலம். தீப ஒளி என்ற வார்த்தைகள் இணைக்கப்பட்டு ‘தீபாவளி’ என்றழைக்கப்படுகிறது. இறைவன் படைத்த மக்களை நரகத்திற்கு அனுப்புவதே அசுரர்களாகிய சாத்தான்களின் ஒரே வேலை. அதனால்தான் அவர்களுக்கு ‘நரக அசுரர்கள்’ என பெயர் வந்தது. அவர்களில் ஒருவனான நரகாசுரனை இறைவன் அழித்ததின் நினைவாக வெடி வெடித்து தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீப வழிபாடு அல்லது ‘சோதி (ஜோதி) வழிபாடு’ என்றால் நம் நினைவிற்கு வருவது ‘சிவ வாக்கியார்’ மற்றும் ‘வள்ளலார்’ இருவரும்தான். சிவ வாக்கியார் உருவ வழிபாடு, தல யாத்திரை, மத வாதம், வேதம் ஓதுதல், சாதி வேறுபாடு முதலானவற்றை எதிர்த்து ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்; உள்ளமே கோயில்’ என்னும் கொள்கையை அவர் தன்னுடைய பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார். அவர் தன்னுடைய ‘சரியை விலக்கல்’ என்ற பாடலில், ‘இறைவன் நம் உடலின் உள்ளே சோதியாக கலந்து இருக்கிறான்’ என்று பாடியுள்ளார்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

இதன் விளக்கம் யாதெனில், ‘அருட்பெருஞ் சோதியான இறைவனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்; அவன் உங்கள் உடலின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. இறைவன் சோதியாக நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை அறியாமல் மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி; சிறப்பு வாய்ந்த அரிய இம்மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? இதனை அறியாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே’.
வள்ளலார் சத்திய ஞான சபையை நிறுவியவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். சைவத்தை பரப்புவதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். சிவபெருமான் மட்டுமே கடவுள் என வள்ளலார் நம்பிக்கை கொண்டிருந்தார். இறைவன் ஒளியாக இருக்கிறான் என்பதால் ‘ஜோதி வழிபாடு’ வேண்டுமானால் செய்யலாம் என்று கூறியுள்ளார். மதத்துக்கு இடமில்லை என்றும், மனித குலத்துக்குத் தான் இடம் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார். வன்முறை வேண்டாம் என்றும், ஏழை எளியவர்களின் மீது கருணை கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். வள்ளலார் ஜீவகாருண்யம் என்ற பெயரில் மாமிச உணவு உண்பதையும் கடுமையாக எதிர்த்தார்.

அவர் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தில் ‘ஜோதி வழிபாடு’ மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அந்த விளக்குக் கூட தகரத்தினால் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, அந்த வழிபாட்டு தலங்களில், நிரந்தரமான பூசாரி யாரும் இருக்கக் கூடாது என்றும், வயதில் மிக இளையவர் அல்லது முதியவர் அன்றன்று ஜோதியை ஏற்ற வேண்டும் என்றும் வள்ளலார் வகுத்திருந்தார். வழிப்பாட்டு தலங்களில் சிலை வழிபாடு மற்றும் அரசியல் நுழைந்தால் நாட்டின் இறையாண்மையும் அமைதியும் ஒழிந்து போகும் என்பது வள்ளலாரின் கருத்து.

siragu vallalaar1வள்ளலார்

கல்கி, பொன்னியின் செல்வன் புத்தகம் பாகம் 2 ல், இறைவனை மனிதர்கள் இன்றைய காலகட்டத்தில் எப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதனை தெளிவாக கூறியிருக்கிறார். அவர்,. ‘பரஞ்ஜோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்தில் இருந்து நழுவிச் செல்லவிட்டு விடுகிறார்கள்’. பிறகு, இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக்கிரகங்களிலும் லட்சதீபம் ஏற்றி அந்த பரஞ்சோதியை தேடுகிறார்கள்’ என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார்.

இறைமகன் வருகைக்கு முன்னர் எபிரேயர்கள் கோயிலிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால், அவர்கள் கோயிலினை ஒரு சமயத்தில் விக்கிரகமாய் மாற்றிவிட்டனர். இறைவனை மறந்து போனார்கள். இதனால், இறைவனே கோயிலினை இடிக்க ஒப்புக்கொடுத்தார். ஆனால், இறைமகன் வருகைக்கு பின்னர், வழிபாட்டு தலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, இறை வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதன்படி, இறைவனை முழு உள்ளத்துடனும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும். இறைவன் மனிதர்களின் கைகளால் கட்டப்பட்ட கோயிலில் வாசம் பண்ணுகிறது இல்லை என்று இறை வேதம் சொல்லுகிறது. நீங்கள் இறைவனுடைய கோயிலாக இருக்கிறீர்களென்றும், இறை ஆவி உங்களில் இருக்கிறதென்றும் அறியாதிருக்கிறீர்களா? என்றும் இறை வார்த்தை கூறுகிறது. இறைவனை வணங்க இடம் ஒரு பொருட்டில்லை. இறைமகன், இறைவனை வனாந்தரத்திற்கு மற்றும் மலைக்கு தனியாக சென்று வணங்கினார். இறைவணக்கத்திற்கு நாம் எந்த நிலையினையும் பயன்படுத்தலாம். சிலர் தலை வணங்கியும், சிலர் கைகளை உயர்த்தியும், சிலர் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தும், சிலர் முகங்குப்புற விழுந்தும் இறைவனை வணங்குகிறார்கள். இறைவனை வணங்க நிலை அல்லது இடம் பொருட்டல்ல; முழு மற்றும் சுத்த உள்ளத்துடனும், உண்மையோடும், நம்பிக்கையோடும் வணங்குவது மிகவும் அவசியம்.

இறைவன் ஒளியாக இருக்கிறான். மனிதர்கள் எவரும் சேராத ஒளியில் இருப்பவன் இறைவன். இறை ஒளி நம்முள் வந்தால் நாம் நேர்மையாக நடந்து பாவத்திற்கு எதிராக வாழலாம். முற்காலத்தில் இருளில் இருந்த மக்கள் இன்று இறைவனுக்குள் வெளிச்சமாயிருக்கின்றார்கள் என்று மனம் திரும்பி வாழும் மக்களை இறைவன் வாழ்த்துகிறான். இருள் பாவம் மற்றும் வெளிச்சம் பாவத்திற்கு எதிரானது என்பதால் இறைவன், ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்’ என்று அறிவுரை கூறுகிறார். இறைவா! ‘நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். ஒளியை உடையாக தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்’ என்று இறைவனை தாவீது மன்னன் புகழ்கிறான். இறைவன், தனக்கு தொண்டு செய்பவர்களை, ‘நான் நீதியின்படி உங்களை அழைத்து, கையைப்பிடித்து, காத்து, மக்களுக்கு ஒளியாக வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். எழும்பிப் பிரகாசி; இறைவனுடைய மகிமை உன்மேல் உதித்ததால் ஒளிவந்தது என்றும் இறைவன் கூறியுள்ளார்.

உலகத்திலே உள்ள அனைத்து மனிதர்களையும் பிரகாசமாக்கும் ஒளியே உண்மையான ஒளி. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் பொல்லாத செயல்களை செய்யும் மனிதர்கள் ஒளியைவிட இருளை விரும்புவதால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். தவறு செய்கிறவன் ஒளியைப் பகைக்கிறான், அவன் ஒளியினிடத்தில் வரமாட்டான். உண்மையின்படி செய்கிறவன் ஒளியினிடத்தில் வருகிறான் என்பது இறை வார்த்தை. இறைமகன் மக்களை நோக்கி, ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், நம்பிக்கையுடன் என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் உயிர் ஒளியை அடைந்திருப்பான்’ என்றார். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் நம்பிக்கையாக இருங்கள் என்றார். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? என்றும் இறை வார்த்தை வினவுகிறது. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை என்றும் கூறுகிறது.

இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையில் இருப்பவர்கள் மீது வெளிச்சம் உதித்தது. சாயங்காலத்தில் அழுகை தங்கும்; விடியற்காலையில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிச்சம் எனும் இறைவன் நமக்குள் வந்தால் இருள் எனும் பாவம் நம்மை விட்டு நீங்கிவிடும். இறைவன் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பின் தன் ஒளியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்பவை தாவீது மன்னன் உதிர்த்த கடைசி வார்த்தைகள். இறைவன் உலகிற்கு ஒளியாக இருக்கிறார். அதற்காக, நமக்கு ஒளிதரும் சூரியன் கடவுள் ஆகாது. படைத்தவனை வணங்க வேண்டுமே தவிர அவன் படைப்புகளை வணங்க கூடாது.

வீடுகளில் ஒளி ஏற்றுவதற்கு தமிழர்கள் அகல் விளக்கினை பயன்படுத்துகிறார்கள். அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களிமண்ணால் செய்யப்பட்டு பருத்தி திரியால் நெய் அல்லது காய்கறி எண்ணெய் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. இம்முறையானது முற்றிலும் இயற்கையானது. இது மட்டுமின்றி, ஒளி விளக்கேற்றுவதற்காக பித்தளையால் ஆன விளக்குகள் வீடு மற்றும் கோயில்களில் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

ஆனால், மேற்கத்திய நாட்டினர் ஒளி வழிபாட்டிற்காக செயற்கையான மெழுகுவர்த்தியை ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. பிறந்த நாளினை கொண்டாடுவதற்காக தமிழர்கள் இயற்கை பொருட்களான பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, நெய் போன்றவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். ஆனால், இன்று மேற்கத்திய நாட்டினர் பயன்படுத்தும் உடலுக்கு கெடுதலை உண்டுபண்ணும் மைதா, வெள்ளை சீனி, செயற்கை நிறமிகள் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை வைத்து செய்யப்படும் கேக்கினை வைத்து பிறந்த நாளினை கொண்டாடுகிறோம். இது தவறான செயலாகும். ஆங்கில மோகம் கிராமங்கள் வரை பரவியிருப்பது வேதனை தரும் விசயம்.siragu sothi1மாசற்ற சோதியை வணங்க தீயை கொளுத்தி சுற்றுப்புறத்தினை மாசுபடுத்துவதும் தவறுதான். இறைவன் ஒளியாக இருந்து உலக மக்களை காக்கிறான் என்பதை நினைவுகூற சிறு தீபம் போதும். ஒருவனாகிய இறைவன், அநேகனாக அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவங்களாக இருக்கிறான் என்பதை விளக்குவதற்காக குறிப்பிடப்படும் மேலே உள்ள படம் ஒரு தீபம் எரிவதைப்போன்றே இருப்பது அதிசயம்.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜோதி வழிபாட்டின் சிறப்பும் பெருமையும்! (பகுதி – 30)”

அதிகம் படித்தது