மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஞானக் கூத்தனின் அறைகூவல்

இல. பிரகாசம்

Nov 24, 2018

iragu gnanakooththan1

1930களில் தொடங்கிய புதுக்கவிதையின் தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைத் தொடர்ந்து 1950களில் இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் அளித்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு மணிக்கொடி முன்வந்து ஏற்றுக் கொண்டிருந்தது.

மணிக்கொடி இதழுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தீபம், சங்கு, எழுத்து, கசடதபற, ழ போன்ற இதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தோன்றி புதுக்கவிதையை சீரிய நோக்கோடு வளர்த்தெடுக்கத் தவறவில்லை. எனினும் 1960களில் அவ்வப்போது தேக்கம் அடைவது போன்று தென்பட்டு மீண்டும் அந்நிலை ஏற்படாதவாறு அப்போதைய எழுத்து இதழ் தீவிரமான புதுக்கவிதை எது என்பதில் விவாதம் செய்து அதன் விளைவாக ஏற்பட்ட கருத்துரைகள், அது தொடர்பான விமர்சனங்கள் புதிய வளம் சேர்க்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்தன. அதன் விளைவாய் சில சீர்கேடுகள் புதுக்கவிதையில் ஓரளவு தவிர்க்கப்பட்டது. தடுக்கப்பட்டது என்று கூறலாம்.

இதில் சி.மணியின் காலகட்டத்திற்குப் பிந்தைய காலம் மிக கவனமாய் கவனிக்கப்படுவதாக அமைகிறது. சி.மணிக்குப் பிந்தைய போக்கு மற்ற கவிஞர்களிடமிருந்து மாற்றம் பெற்று இளைஞர்களிடையே புதிய சலசலப்பையும், சிலரிடம் கண்டனங்களையும் பெற்றது. அதன் காரணமாக அது வீழ்ச்சியை நோக்கி செல்கிறதோ என்று கூட சிலரால் பகிரங்கமாகவே பேசப்பட்டது. இத்தகைய கூற்றுமொழி பழமை வாதிகளுக்கு ஒரு வசதியாக தோன்றியது. இவைகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றே சவால்களையும் விட்டனர். அதற்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கவிதைகள் நல்ல அமைப்போடு அவர்களின் சவால்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தன.

1970-களில் ஏற்பட்ட தேக்கம் மெல்ல மெல்ல குறைகள் களையப்பட்டும் புதுக்கவிதை என்பதன் தெளிவை கல்லூரி மாணவர்களிடையே உரையாடல் போக்கையும் கொண்டு சென்றது. அதன் விளைவாக புதுக்கவிதை தனக்கென தவிர்க்க முடியாத ஆட்சி செலுத்த தொடங்கியது. ஏறக்குறைய இதே காலகட்டத்திற்கு முந்தை களத்தையும், பின் 70-களின் சூழ்நிலைகளையும் அறிந்து கவிதைகளை மிக தைரியமாய் புதுக்கவிதையின் இலக்கணமாக கருதப்படும் யாப்பில்லா நிலைக்கும், மரபு நிலைக்கும் ஒட்டிய கவிதையை பலர் புறக்கணித்தனர், சிலர் ஏற்றுக் கொண்டனர். அவர்களில் கல்வியாளர்கள் விமர்சகர்ளிடையேயும் புதிய பேசுபொருளாய் அமைந்திருந்தது. அத்தகைய கவிதை கேலியும், கிண்டலும, எள்ளலும் நகைச்சுவைப் பாங்குடன் ஞானக் கூத்தனால் செய்யப்பட்டிருந்தது.

ஞானக் கூத்தனின் இம்முயற்சி எல்லோருடைய தரப்பிலும் வாசிக்கப்பட்டு ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை ஏற்பட்டது. அதற்கு கேலியும், கிண்டல் தொனியும், அமைப்பில் இருந்த சரக்கும் காரணம் என்று கூறலாம்.

நவீனத்துவக் கவிதை:

‘நவீனத்துவக் கவிதை என்ற பதம் எப்போதும் நுகர்வோர்களின் கவனத்தை திருப்புவதற்கு” என்று இலக்கியம் சார்ந்த பொருளாதாரம் அறிந்தவர்கள் எளிமையாகச் சொல்வர். கவிதையிலும் ஏறக்குறைய அத்தகைய ஒரு போக்கு எப்போதுமே உண்டு.

‘நவீனம்’ என்ற பதம் எப்படியோ எல்லா நாட்டைப் போல நம்முடைய இந்திய இலக்கியத்திலும் நாட்டில் படித்த இளைஞர்களிடையே புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தும் ‘வஸ்து’ என்று, அவற்றை மோகிப்பவர்களாகவே அன்றிலிருந்து இன்றுவரை உள்ளனர். இது ஒருவகையில் சாதகம் என்ற அளவை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுவது சரியாகப்படும். அதன் பாதகம் தனியொரு அத்தியாயமாகப் பேச வேண்டிய ஒன்று.

நவீனத்துவக் கவிதை என்பதைப் பற்றி ஞானக் கூத்தன் தெளிவாகவே உணர்ந்து கொண்டிருந்திருக்கிறார். தன்னுடைய கவிதைகளில் ஆரம்பம் முதல் இறுதி நாள்கள் வரையிலும் அதனை பின்பற்றியே வந்துள்ளது. நவீனத்துவம் பற்றி ஞானக் கூத்தன் இப்படிக் கூறுகிறார், ‘நவீன கவிதையின் முதன்மையான இலட்சணம் அது பாட்டுக்குப் பொறுப்பற்றதாக இருக்க வேண்டும். மற்ற கலைகளின் உதவியில்லாமல் வெறும் சொற்களைக் கொண்டே அது பிரசன்னமாக வேண்டும் என்பது”. இக்கோட்பாட்டைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறியிருப்பினும் சற்று தெளிவான மனோ நிலைக்கு கருத்தைத் தெளிவுபடுத்துதல் என்ற அளவில் அவருடைய கருத்து பரவலான கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். எனினும் அவருடைய கவிதைகளில் சிலவற்றில் சந்தம் இருக்கவே செய்கிறது. ஆனால், அது முற்றிலும் மரபைச் சார்ந்த சந்த நடையில் அமைக்கப் பெறவில்லை. எளிய வாழ்வு முறையில் இருந்து மெலிதாகவும், சில இடங்களில் பாமரன் பாடுவதற்கு ஏற்றது போலவும் அமைந்திருக்கிறது. எந்த வகையிலும் கவிதையானது மேற்கொண்ட கொள்கையிலிருந்து விலகாது ஞானக் கூத்தனின் கவிதைகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

புதுக்கவிதையின் பாடுபொருள் வரையறுக்கப்பட்ட ஒன்று அல்ல. அது புதுக்கவிதைக்கும், கவிஞர்களுக்கும் பரந்த தலத்தை ஏற்படுத்தித் தந்திருப்பதை ஞானக் கூத்தன் பொருந்த அளவில் செய்திருக்கிறார்.

இக்காலக் கவிஞரான சுகுமாரன் வெளியிடும் கருத்து நோக்கத்தக்கது. ‘ஞானக் கூத்தன் கவிதைகள் வெளிவந்த காலத்தில் சந்தத்தில் சொல்லப்பட்டவை எப்படி நவீனக் கவிதையாகும் என்ற சந்தேகமும், விமர்சனமும் எழுந்தது. இந்த நவீனத்துவ ஒவ்வாமையும் கூட இருக்கலாம்” என்று கூறுகிறார். இதில் அவர் வெளியிடும் கருத்து புதுக்கவிதையில் சந்தத்திற்கு இடம் இருக்கலாம் என்று தெரிவித்து விட்டார். அது அக்காலகட்டத்தில் அவருக்கு ஏற்படுத்திய சர்ச்சை விமர்சனங்கள் என்னவாக இருக்கும் என்று கவலை கொள்கிறார். சர்ச்சைகள் கண்டனங்கள் இருந்திருக்கக் கூடும்.

ஞானக் கூத்தனின் கவிதைகள் மரபின் தொடர்ச்சி நிலையை கொண்டிருப்பதைக் காணமுடியும். மரபான யாப்பு கவிதைக்கு மாச்சீர், விளச்சீர், காய்சீர், கனிச்சீர் என்ற அலகுகளைக் கொண்டு கட்டுத்திட்டங்களுடன் செயல்படுவன. ஆனால், ஞானக் கூத்தனுக்கு மரபான யாப்பு பழகிய ஒன்று. எனினும், அதனை புதுக்கவிதையில் வலிந்து நுழைத்து, செய்து பார்க்க வேண்டும் என்று செய்யவில்லை. அது கவிதையின் போக்கில் அமைந்துவிட வேண்டும் என்று எண்ணியதாகவே தான் அவைககள் அமைந்திருக்கின்றன. ஞானக் கூத்தனின் கவிதையில் இவை ஏற்பட காரணம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். பழைய சங்க காலத்தியவை பற்றிய செய்திகள்.

தேவாரம், ஆழ்வார் பாசுரங்கள், கம்பராமாயணம் உட்பட சங்க இலக்கியப் பரீட்சயமும் அவருக்கு அத்தகை பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அவரே கூறுகிறார்.

மரபின் சிதைக்கப்பட்ட நிலையில் புதிய கருத்துக்களை கவிதையில் பொதிந்து முயற்ச்சித்ததன் விளைவாக அவருடைய கவிதைகளில் மேற்குறிப்பிட்ட கேலியும், கிண்டலும், எள்ளலும் வலுவாகக் கூடி தனி மதிப்பு பெற்று விளங்குகிறது. இதனை தன்னுடைய அரசியல் சார்ந்த கவிதைகள் முதற்கொண்டு மொழி, பண்பாடு, சமுதாயம், வெகுஜனம் வரை அவரால் செய்ய முடிந்திருக்கிறது.

ஞானக் கூத்தனின் அறைகூவல்:

புதுக்கவிதையில் அரசியல் பேசலாமா? என்று தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மிகப் பகிரங்கமான ஒரு அறைகூலாய் அமைந்திருந்தது ஒரு கவிதை. அதன் வரிகள்

‘சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடா புட்டிகள் உடைக்கலாம் வாடா”
(அன்று வேறு கிழமை தொகுப்பு)

சமூகத்தின் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உச்சகட்ட சோதனைகளுக்குப் பிறகு தெருவில் இறங்கி தனியாகவோ கூட்டத்துடனோ வெளிப்படுத்த ‘பந்த்’ யை கடைபிடிப்பதில் ஏற்படும் வன்முறைகளை அதன் உரக்கத்தன மொழியோடு வெளிப்படுத்துகிறார்.
‘இரட்டை நிஜங்கள்” காட்டும் மக்களிடையே இருக்கின்ற குருட்டுத்தனத்தை வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்.

‘குலத்துக்குத் தெய்வம் வேறாய்க்
கொள்கிற தமிழர் தங்கள்
வழிகாட்டித் தலைவரென்று
பற்பல பேரைச் சொன்னார்

என்றாலும் மனசுக்குள்ளே
இன்னொருவர் இருப்பாரென்று
ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும்
தலைவர்கள் யார்யாரென்று

இருந்தவர் இரண்டு பேர்கள்
அவர்களின் அடையாளங்கள்

நடப்பவர் பார்க்க மாட்டார்
பார்ப்பவர் நடக்க மாட்டார்.”

அக்காலத்தில் அரசியல் கட்சி நடத்துபவர்களிடம் காணப்பட்ட மனோ நிலையையும், அதன் அபிமானர்களையும் ஒரு வித எள்ளல் தன்மையோடு சித்தரிப்பதை மீண்டும் படிக்கிற போது உணரலாம். மற்றொரு கவிதையாக தேரோட்டம் கவிதை முக்கியமான ஒன்று. நாடோடி வழக்காறு முறையை பின்பற்றி அமைக்கப்பட்டது.

அது காட்டும் சமூகத்தில் நிகழ்ந்த வழக்கத்தை சாட்சியாய் நின்று காட்டிக் கொண்டிருக்கிறது.

காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
——–
‘ஆரோ வடம்புடிச்சி

அய்யன் தேரு நின்னுடுச்சி” போன்ற வரிகள் அதன் பின் வரும் வரிகளும் சொற்களிலேயே சாட்சியாய் நிற்பதும் தெரிகிறது.

இதே போல் மற்றொரு கவிதையான ‘கீழ்வெண்மணி”யும் பண்ணையார் நிலவுடமைக்கு எதிராக நடந்த போராட்டங்களையும், அதன் விளைவாய் நிகழந்த கொடூரத்தையம் மீண்டும் நினைவூட்டியபடியே இருக்கிறது.

‘இரவிலே பொசுக்கப்பட்ட

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க” போன்ற வரிகள் அம்மகளின் மத்தியில் காலகாலமாய் இருந்துவரும் ரணத்தை உரத்தும், வலியோடும் கூறி அறற்றுகிறதை நாம் எதிரொலியாய் கேட்கமுடிகிறது.

எள்ளல், நகைச்சுவை:

ஞானக் கூத்தனின் தனித்தன்மையை அறிவதற்கு அவருடைய கவிதைகளில் வெளிப்படும் குபீரெனவும், மௌனமாயும் சிரிக்கத் தூண்டும் கவிதைகள் தான். அவை ரசிப்புத் தன்மை என்று அனுகுவது சரியாய் படுவதில்லை. பலர் இப்படித் தவறாய் புரிந்து கொள்கின்றனர். இருப்பினும் உடனடியாக அவருக்கு அதன் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு விலகி மீண்டும் படிக்கத் தூண்டி அதன் அம்சத்iதை உணரச் செய்கிறது என்பதும் உண்மையே. அவருடைய ‘சைக்கிள் கமலம்” கவிதையில் இதனைப் பார்க்க முடியும்.

‘அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
—–
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்” என்று தொடங்கி அச்சிறுமி தான் கற்றுக் கொள்ளுகிற சாக்கில் அவளும் அந்த சைக்கிளும் குறியீடாகி கவிதையின் மையத்தில் ஒட்டிக்கொள்கிறது. பிறகு வருகிற எல்லா வரிகளிலும் அவளும் அவளுடைய சைக்கிளும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

‘கடுகுக்காக ஒருதரம்
மிளகுக்காக மறுதரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒருதரம் காற்றாய் பறப்பாள்
—-
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
—-
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றபடிக்குத் தெருவிள் விட்டாள்”
படித்தபொழுதே குபீரெனச் சிரிப்பை வரவழைக்கிற உத்தி அவருக்கு மட்டுமே தனித்தன்மையானது.

மற்றொரு கவிதையான ‘தோழர் மோசகீரனார்”-ல் எள்ளல் தன்மையை வெளிப்படுத்தும் காலம் அதன் பின்னனி ஆகியவை சங்ககால வரலாறாக இருப்பதை, இன்றைய அரசு ஊழியர்களை ஒப்பிட்டு கிண்டல் யாவருக்கும் வரலாற்று நிகழ்வையும் இன்றைய அரசாங்கத்துச் சூழ்நிலையையும் எண்ணிச் சிரிப்பர்.

‘அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான்”

மற்றொரு தமிழ் இலக்கியத்தில்; சொல்லப்படும் திருநாவுக்கரசர் காலத்தில் நிகழ்ந்த பரியை நரியாக்கிய கதையை தன்னுடைய கவிதையில் எள்ளி நகையாடுகிறார்.

அன்று வேறு கிழமை:

ஞானக் கூத்தனின் கவிதைகளில் அதிமானவர்களால் குறிப்பிடப்படும் கவிதை இது. இதன் அமைப்பு முழுக்க எள்ளல், நகைப்பு ஆகிய பண்புகளையே கொண்டு கவிதை நடக்கிறது. அதில் நடக்கின்ற நிகழும் காட்சியின் கரு அவலச்சுவையானது. அதன் கவிதை நடக்கும் தொனி நகைச்சுவையை முழுதாய் ஏற்றுக் கொண்டு நடக்கிறது.

‘நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று” என்று ஆரம்பித்து நடக்கத் தொடங்குகிறது.

நிழலுக்குகாகப் பாடையின் கீழ் பதுங்கிப் போகும் நாய் வெறும் சாதாரனமானது அல்ல. ஒரு இனத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்கிற நிகழ்வை காட்டுவதாக அமைகிறது. கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி காலால் உதை;தான். பின் மேற்கு, தெற்கு, வடக்குப் பிணந்தூக்கிகளும் அதனை காலால் எட்டி உதைக்கின்றனர். பின்னும் அது நிழலுக்காக அந்தப் பாடையின் நிழலைத் தான் நாடுகிறது.

இதில் காட்டப்படும் சமூக அவலம் எளிதில் யாருக்கும் பிடிபடுவதில்லை. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் யாரால் வஞ்சிக்கப்படுகிறார்களோ மீண்டும் பொருளாதாரத்திற்காக அவர்களையும், அவர்கள் சார்ந்த பிற சமூகத்தையும் அண்டி ஒட்டி வாழ வேண்டியுள்ளதாக எடுத்துக் காட்டுகிறது.

அன்று வேறு கிழமையின் பாதிப்பில் பிற்காலத்துக் கவிஞர்களான கலாப்ரியா, கல்யான்ஜி, உட்பட பலரும் பின்பற்றத் தொடங்கினர்.

ஞானக் கூத்தனின் பிற்காலத்திய கவிதைகள்:

‘யாரோ ஒருத்தர் தலையிலே” என்ற கவிதையும் ஞானக் கூத்தனின் மேலான முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வித்தியாசமான முயற்சி

‘நாங்கள் நாலுபேர் எலிகளைத் தின்றோம்
ஒரு காலத்தில்
நாங்களே எலிகளாய்ப் போகலாமென்று
எலிகளாய்ப் போனபின் நெல்களைத்; தின்றோம்
ஒரு காலத்தில்
நாங்களே நெல்களாய் போகலாமென்று.

நெல்களாய் நாங்களே ஆனதன் பின்பு
நாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம்
ஒரு காலத்தில்
நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று”
(மீண்டும் அவர்கள் தொகுதி)
தமிழில் சித்தர்களின் போக்கைத் தாக்கத்தை வெளிப்படுத்தம் முயற்சியில், இது ஒரு வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
‘மழை நின்றது. மழை நீர்
சொட்டிக் கொண்டிருந்தது
கயிற்றின் வழியே இறங்கி
துளித் துளியாக
யாரோ கணக்கெடுப்பது போல
ஒன்றன் பின் ஒன்றாக”
(மீண்டும் அவர்கள் தொகுதி)
‘எத்தனைக் கைகள்
கடவுளுக்கு இருந்தாலும்
அவற்றில் இரண்டு
மனிதா
உன்னுடையவைதாம்”
(இம்பர் உலகம் தொகுதி)
ஆகியவை பிற்காலத்தில் ஞானக் கூத்தனால் செய்யப்பட்ட கவிதைகளில் குறிப்பித்தக்கன.

ஞானக் கூத்தனும் தமிழும்:

தான் எழுதவந்த காலந்தொட்டு தமிழ்மொழி மீதான பற்றை அவ்வப் போது வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.
அதற்கு சாட்சியாய்,
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்”
(அன்று வேறு கிழமை தொகுதி)
‘எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில்; ஒன்று”
(மீண்டும அவர்கள் தொகுதி)

இவையிரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டிருப்பினும் தமிழ் மீது பற்று கொண்டிருப்பது கூடு. பிறர் இதை கவனத்தில் கொள்ள மறந்துவிடக் கூடும். எம்மொழியிலும் தாய்மொழி உயர்வு என்பதற்கு பிறமொழியை ஏசுவது தேவையற்றது என்பதை நோக்காக கொண்டும் வாழ்ந்தும் வந்திருக்கின்றார் என்பது பிற நாட்டில் கவிதை பற்றிய சொற்பொழிவுகளில் கூறியது நினைவு கூரத்தக்கனவாகும்.

தமிழ் நாட்டு பழமொழியாக சுட்டப்படுவது தங்கள் தங்களுக்கு அம்மா கூறி பொய்யைத் தான்.
இவரும் அதனை மறக்காது பழமொழிவாயிலாக தனது பற்றையும் வெளிக் காட்டுகிறார்.

‘தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?.”
(அன்று வேறு கிழமை தொகுதி)

கவிதை பற்றி ஞா.கூ:

பொதுவாய் கவிதையை அவர் தன்னுடைய 15-வது வயதிலே எழுத ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கவிதைகள் எழுதப் போகிறோம் என்பது மனதுக்குத் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் என்ன எழுதப் போகிறோம் என்பது தெரிவது கிடையாது. சில சமயம் தெளிவாகாத ஆனால் எழுதினால் தெளிவாகப் போகிற ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப் போகிறோம் என்பது தெரிகிறது.” என்று தன்னுடைய இளமைக்கால கவிதை எழுதும் அனுகு முறையை இவ்வாறு விவரிக்கிறார்.
எழுத்து அதாவது கவிதையின் தொடக்க வரி புலப்பட்டதும் வரலாறு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று ஞானக்

கூத்தனின் மொழி பல பண்புகளில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் அவர்கள் தொகுதிக்கு முன்னுரையாக எழுதிய வரிகள், கவிதையை அனுகிய முறை சொல்லாக்கம் பயிற்சி ஆகியவற்றைக் காணமுடிகிறது.

தமிழின் புதுக்கவிதையில் முக்கிய பங்காற்றி வல்லிக்கண்ணன் ஞா.கூ கவிதையைக் குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தைகள் இவைதாம் ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்ற பரவலான குறை கூறலுக்கு ஞானக் கூத்தனின் ‘எட்டுக் கவிதைகளும்’ இதர படைப்புகளும் தம் பங்கைச் செலுத்தியுள்ளன.

ஞானக் கூத்தன் ஏற்படுத்திக் கொண்ட மரபிலிருந்து சிதைந்த மரபிற்கும் பின், அதை விலகிய போக்கும் அதில் கையாண்ட நடையும் கேலியும், கிண்டலும், எள்ளலும், பார்வையும், சித்தரிப்பும் ஞானக் கூத்தன் பிற்காலக் கவிஞர்க்கு அளித்த கொடையே. எப்பொழுதாவது அன்று வேறு கிழமையின் நாய் எங்காவது நம்முடைய கண்ணுக்கும் என்றாவதோ அல்லது கண்ட காட்சியின் வடிவத் தொனி புரியாமலோ இருந்திருந்தால் இப்பொழுதும் அந்தப் பாடையின் கீழ் பதுங்கிப் போகும் நாய் தெரியக் கூடும்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஞானக் கூத்தனின் அறைகூவல்”

அதிகம் படித்தது