மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஞானம் பெற்றேன் குருவே…!(சிறுகதை)

மா.பிரபாகரன்

May 13, 2017

Siragu guru

நீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன் வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக அவன் குருவின் முன்னால் வந்து நின்றான். “குருவே! நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்?” – என்று கேட்டான். அதற்கு குரு “தூரதேசப் பயணம் சென்றுவா!” – என்று பதில் அளித்தார். அவர் எப்போதும் அப்படித்தான். பூடகமாகவே பேசுவார். அவர் கூறும் வார்த்தைகளின் பொருளை உடனடியாக விளங்கிக் கொள்ளமுடியாது. காலத்தின் போக்கில் தான் புரிந்து கொள்ளமுடியும். அப்போது அவ்வார்த்தைகள் பாற்கடலைக் கடைந்து தேவர்கள் பெற்றுண்ட அமிர்தம் போன்று உவப்பான பலன் தரும். சீடன் குருவை வணங்கிவிட்டு புறப்பட்டான்.
குருவின் கட்டளைப்படி நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். எத்தகைய பயணத்தை மேற்கொள்வது? சீடனுக்கு உடனடியாக இந்த அகன்ற தேசத்தின் ஊடாக வடகோடியில் ஆரம்பித்து தென்முனை வரை பாய்ந்தோடிவரும் வற்றாத அந்த புண்ணிய நதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஆற்றங்கரைகள் தானே நாகரீகங்கள் தோன்றிய இடம்? ஆற்றங்கரைகள் தானே மண்ணைப் பண்படுத்தி முதன் முதலாக உழவிற்கும் வித்திட்ட இடம்? அப்படிப்பட்ட நதியின் கரையை  ஒட்டியே தனது பயணத்தை அமைத்துக் கொள்வது என தீர்மானித்தான் அந்தச்சீடன்.

வடமுனையில் ஆரம்பித்துத் தென்கோடிவரை பயணம் மேற்கொண்டான். தென்கோடியில் அந்தப் புண்ணிய நதிகடலோடு கலக்கும் சங்கமத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தான். கரையில் அமர்ந்தபடி ஆர்ப்பரிக்கும் கடல்அலைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மேற்கொண்டது ஆறுமாதகால நீண்ட கடினமான பயணம். இப்பயணத்தில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவை எவை என்பது குறித்து சிந்தித்தான். அத்துடன் தன் குருவின் வார்த்தைகளுக்கு தன்னால் இதில் பொருள் ஏதும் விளங்கிக் கொள்ள முடிகிறதா என்பது குறித்தும் ஆராய்ந்தான். ஒன்றும் புலப்படவில்லை. சட்டென்று அவன் மனத்தில் ஒரு கவலை வந்து ஒட்டிக்கொண்டது. நான் கற்ற கல்வி போதாதோ? இன்னும் கற்க வேண்டியது உள்ளதோ? எனக்கு ஞானம் இல்லையோ? ஏன் என்னால் குருவின் வார்த்தைகளுக்குப் பொருள் விளங்கிக் கொள்ளமுடியவில்லை? குருவிடமே சென்று அவரின் வார்த்தைகளுக்கான பொருளைக் கேட்டால் என்ன? அப்படிக் கேட்டால் அவர் அதற்கும் பூடகமானபதில் ஒன்றைத் தருவாரே? அதற்கான பதிலை நான் எங்கே சென்று தேடுவேன்? இப்படி நிறையக் கேள்விகள் அவன் மண்டையைக் குடைய அவன் மனம் குமைந்து நின்றான். இயற்கை எழில் கொஞ்சும் அந்தப் பிரதேசத்தின் வனப்பையும் மீறி ஒருகழிவிரக்கம் அவனைவந்து தொற்றிக்கொண்டது.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அச்சீடன் அந்தக் கடற்கரை மணலில் சற்றுதூரம் நடந்தான். அப்படி நடந்தவனின் கண்ணில் சிற்றூர் ஒன்று தென்பட்டது. அதில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம். அதில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தார்கள். திண்ணைப் பள்ளியைக் கண்டதும் சீடனுக்கு தனது குருகுல வாசம் நினைவிற்கு வந்தது. அதன் ஆசிரியர் மாணவர்களிடம் “நதி மூலமும் கல்வியும் ஒன்றுதான்! நதிகள் உற்பத்தியாகும் இடத்தில் நீர் கடல்போல் பொங்குகிறது! நாம்கற்கும் கல்வியும் அகமனத்தைப் பொங்கி செழுமையுறச்செய்கிறது! கல்வியால் அகமனம் உள் ஒளிபெறுகிறது! சரி… ஆற்றின் குணம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?”– எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆசிரியரின் அந்தக் கேள்வி சற்று எட்டத்தில் நின்றிருந்த சீடனின் மனத்தில் ஒரு பொறியை உண்டு செய்தது. அந்த ஆசிரியரின் கேள்வியும் தனது குருவின் வார்த்தைகளும் ஒரேபொருளைத் தொக்கி நிற்பதாக உணர்ந்தான் சீடன். அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை. நகர்ந்து விட்டான். நின்றிருந்தால் அந்த ஆசிரியரே தனது கேள்விக்குப்பதில் சொல்லியிருக்கக்கூடும். சீடன் அதை விரும்பவில்லை. அது விஷயதானம் என்றாகிவிடும். மேலும் அவன் இப்போது சீடன் மட்டுமல்ல. ஒரு குருவின் மனநிலையில் நின்று காரணகாரியங்களை அலசி ஆராயும் இடத்திலிருப்பவன். ஒரு விஷயத்தில் தெளிவுபெற சமயங்களில் புறத்தூண்டல் அவசியமாகிறது. அதுபோன்ற தொருதூண்டல் அந்தத் திண்ணைப்பள்ளி ஆசிரியரிடம் இருந்து தனக்குக் கிடைத்ததாக உணர்ந்தான்.

ஆற்றின் குணம் என்னவாக இருக்கும்? சீடன் சிந்தித்தான். அந்தக் கேள்விக்கான பதில் அவன் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற ஆரம்பித்தது. ஆறுமலையில் உற்பத்தி ஆகிறது. அதில் மலைகளின் அரியவகை மூலிகைகளின் சத்து கலந்திருக்கிறது. அந்த நீர் நோய்தீர்க்கும் மருத்துவகுணம் கொண்ட நீராக அனைவருக்கும் பயன்படுகிறது. ஆறுமலைகளின் பாறைகளை உடைத்து ஏராளமான வண்டல் மண்ணைக் கொண்டுவருகிறது.

அது சமவெளிப்பிரதேசத்தைச் செழுமைப்படுத்துகிறது. குடிநீராக உழவுத்தொழிலுக்கு என்று அனைத்து வகைகளிலும் பயன்படுகிறது. ஆறுகடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அதன் தூயநீர் பிரத்யேகக் குணங்களுடன் விளங்குகிறது. கடலில் கலந்த பின்னால் அது அனைத்துக் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பிறப்பிடமாகத் திகழ்கிறது. இவ்வாறு மலையில் உற்பத்தியாகும் ஆறு ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவியாக, சமவெளியில் அமைதியாக ஓடும் நதியாக. முகத்துவாரத்தில் நன்னீர் ஏரியாக, கடலில் உப்புநீராகத் தான் இருக்குமிடம் மற்றும் சூழலைப்பொறுத்துத் தன்முகத்தை மட்டும் மாற்றிக்கொள்கிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் அது பிறருக்குப் பயன்படும் விதத்திலேயே தன்போக்கை அமைத்துக் கொள்கிறது. இதுவே ஆற்றின் குணம்.

சீடன் மேலும் சிந்தித்தான். தனது இந்த நெடிய பயணத்தில் அவன் ஏராளமான மனிதர்களைச் சந்தித்தான். முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என்று தான் சந்தித்த அனைவருக்கும் அவன் தன்னால் இயன்ற சிறுசிறு உதவிகள் செய்தான். அதே போன்று அவர்கள் செய்த உதவியையும் ஏற்றுக்கொண்டான். இந்தப் பயணத்தை ஆரம்பித்தபோது அவனிடம் ஒருஅணா காசு கிடையாது. இருந்தாலும் இந்தப்பயணம் அவன் சந்தித்த மனிதர்களால்தான் சாத்தியாமாயிற்று. ஒருவேளை இவன் அவர்களுக்கு உதவிகள் செய்யாமல் போயிருந்தால் அல்லது அவர்கள் செய்த உதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்தப்பயணம் நிறைவேறாமல் இடையறுந்து போயிருக்கும். ஏன்? இவன் அன்ன ஆகாரமின்றி உயிர்நீத்திருக்கவும் கூடும். மனிதவாழ்க்கையே மற்றவர்களுக்குப் பயன்படும் விதத்தில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் சீடன். பிறருக்குப் பயன்படுவது ஆற்றின் குணம். நான் வெளியேசென்று பிறருக்குப் பயன்படும் விதத்தில் என்வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என குரு விரும்பியிருக்கிறார். அதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே என்னை தூரதேசப்பயணம் ஒன்றை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார் என்பதைச் சீடன் புரிந்து கொண்டான். “ஞானம் பெற்றேன் குருவே!”– என்று அவன் உரக்கக் கத்தினான். “ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படும் விதத்தில் நான் என்வாழ்வை அமைத்துக் கொள்வேன்!”– என்றபடி தனது குருகுலம் இருக்கும் திசைநோக்கி மண்டியிட்டு அமர்ந்து மணலை முத்தமிட்டான்.
முற்றும்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஞானம் பெற்றேன் குருவே…!(சிறுகதை)”

அதிகம் படித்தது