மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டச்சுப்பார்ட்டி(சிறுகதை)

வெங்கடேஷ்.மு

Oct 17, 2015

dutch party3பார்ட்டியில் நிறைய வகைகள் உண்டு … நமக்குத் தெரிந்தது எல்லாம் பிறந்தநாள் பார்ட்டி, கல்யாண பார்ட்டி, பேர்வெல் பார்ட்டி, இதுபோக அப்போஅப்போ காதுகுத்து, சடங்கு, என்று சில பல பார்ட்டிகள். அதுஎன்ன இந்த டச்சுப்பார்ட்டி???? டச்சுக்காரர்கள் கொடுத்தால் அது டச்சுப்பார்ட்டியோ?????? இப்படித்தான் நானும் விழித்தேன் சில வருடங்களுக்கு முன்பு… பெல்ஜியம் சென்று அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு….
முதன் முதலாக பெல்ஜியம் சென்றபோதுதான் அந்தத் துயரச்சம்பவம் நடந்தது…. ஆம் டச்சுப்பார்ட்டி என்றால் என்ன என்பதை நான் அறிந்து கொண்ட சம்பவம்.
ஒருநாள் அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தேன். உடன்பணிபுரியும் இந்திய நண்பர் ஒருவர் ” இன்று மாலை நாம் பார்ட்டிக்குப் போகலாம்” என்றார். இதைக் கேட்டவுடன் நான் மகிழச்சியின் உச்சத்திற்கே சென்றேன். (ஓசி சோறு மன்னிக்கவும், ஓசி பிரட் கிடைக்கும் என்பதால் தான்). அதேசமயம் அவர் போகும்போது “this is a dutch party man” என்றும் சொல்லி விட்டுப் போனார். உண்மையில் அந்த வார்த்தையை அப்போதுதான் நான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். “டச்சுப்பார்ட்டியா” அப்படி என்றால் என்ன என்று கூட யோசிக்க நேரம் இல்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் பார்ட்டி என்றால் ஓசியில் நன்றாக சாப்பிடலாம் என்பது மட்டும்தான்.

மாலைநேரம் வந்தது. அனைவரும் ஒரு நல்ல உணவு விடுதிக்குச் சென்றோம். செல்லும்போது என்னுடன் பணிபுரியும் டச்சுக்காரர், “உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்டார்”.  அதற்கு நான் “எதுவானாலும் நல்ல காரசாரமாக இருந்தால் சரிதான்” என்றேன். அதற்கு அவர்  “அப்படியானால் நாம் மெக்சிகன் உணவுவிடுதிக்குப் போகலாம் என்றார்”. நானோ மெக்சிகன் உணவுவிடுதி என்றால் விலை அதிகமாக இருக்குமே… சரி பார்ட்டிதானே, பின் எதற்கு நாம் கவலைப்பட வேண்டும், எதுவாக இருந்தால் நமக்கென்ன என்று இருந்தேன்.

உணவுவிடுதியின் உள்ளே சென்றோம். எங்களுக்கெனத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சென்று அனைவரும் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் தமக்கு என்னவேண்டும் என்பதை ஆர்டர் செய்து கொண்டிருந்தனர். நானும் என் பங்குக்கு அங்கிருந்த உணவு பட்டியலட்டயைப் பார்த்து நல்ல காரசாரமாக இருக்கும் உணவு எது என்று பார்த்தேன். நம்ம ஊரில் உள்ளது போல் அங்கு என்ன பிரியாணி, பெப்பர்சிக்கன், மட்டன் கொத்துக்கறி என்றா இருக்கப்போகிறது???? ஏதோ பெயர்தெரியாத உணவு ஒன்றை ஆர்டர் செய்தேன். உடனே அதற்கு அவர் “with ham or steak” என்று டச்சுமொழியில் கேட்டார். ஒன்றுமே புரியாத நான் என் அருகில் உள்ள டச்சுக்காரரைப் பார்த்தேன். அதற்கு அவர், அவன் கூறியதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். “Do you want Ham or Steak” என்று. அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவரிடம் Ham, Steak என்றால் என்னவென்று கேட்டேன்.

அவர் Ham என்றால் பன்றிக்கறி என்றும், Steak என்றால் மாட்டு இறைச்சி என்றும் சொன்னார். இதைக்கேட்ட எனக்கோ வயிற்றினுள் இருக்கும் என்குடல் வாய்வரை வந்து சென்றது. அய்யோ சாமி! எனக்கு வெறும் காய்கறிகள் மட்டும் உள்ள ஏதாவது உணவு இருந்தால் கொண்டுவரச் சொல்லுங்கள் போதும் என்றேன். என்னுடன் இருப்பவர் நான் சொன்னதை, அவனிடம் டச்சு மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னதும், அவன் என்னை ஒரு விநோதமாகப் பார்த்துச் சென்றான், என்னமோ நான் இல்லாத ஒன்றைக் கேட்டது போல். அவன் பார்வைக்கான அர்த்தம் சிறிது நேரம் கழித்துத் தான் தெரியவந்தது. ஆம் அங்கு யாரும் அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவது இல்லை. மூன்று வேளையும் எதாவது இறைச்சி இருக்கவேண்டும் அவர்களுடைய சாப்பாட்டில்.

சாப்பாடும் வந்தது… என் தட்டில் ஏதோ இலை தலைகளைப் பிய்த்து போட்டுக்கொண்டு வந்தான். அதைப் பார்த்த எனக்கு கண்ணீரே வந்தது… சற்று யோசித்துப் பார்த்தேன். இந்தியாவில் வீட்டில் அம்மாவைத்த சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு இல்லை என்றாலும், காரம் இல்லை என்றாலும், என்னவெல்லாம் குறை சொல்வோமென்று…. அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன… சரி வேறு என்ன செய்வது…. வயிறு வேறு கூவிக்கொண்டே இருக்கிறது. சரி ஆடு மாடு மேய்வது போல் மேயலாம் என்று முடிவு செய்து, எப்படியோ ஒருவழியாக மேய்ந்து முடித்தேன்.

இடையிடையே அவர்கள் சாப்பாடு எப்படி இருக்கிறதென்று வேறு கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் ஒரே பதில் “சூப்பர்” என்று சொல்லிவிடுவேன். அந்த சூப்பர்-க்கு என்ன அர்த்தம் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
எனக்கு வைத்திருந்த இலைதலைகளை விக்கி விக்கி சாப்பிட முடியாது என்பதால், இடையிடையே சில “கோகோ கோலா” வாங்கிக் குடித்தேன். என்னுடன் பணிபுரியும் இந்தியர் வேறு வெகுதூரம் தள்ளி அமர்த்திருந்தார். “டச்சுப்பார்ட்டி” என்றால் என்னவென்று அவரிடம் கேட்கலாமென்றிருந்தேன். எனக்கு வைத்திருந்த உணவைப் பார்த்தவுடன் மயக்கம் வந்ததே தவிர, கேட்கவேண்டும் என்பது மறந்தே போய்விட்டது.

இரவு சரியாக 11 மணி அனைவரும் சாப்பிட்டு முடிப்பதற்கு. எனக்கோ சாப்பிட்ட திருப்தியே இல்லை. எப்படா வீட்டிற்குப் போவோம் என்று இருந்தது. ஒருவழியாக உணவுவிடுதியை விட்டுக் கிளம்பினோம். சரியாக 11.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் முதல்வேலையாக மதியம் வைத்திருந்த சாதமும் கொஞ்சம் தயிரும் இருந்தது. அதைப் போட்டு சாப்பிட்டபின்தான் சாப்பிட்ட திருப்தியே வந்தது.
மறுநாள் காலை வழக்கம் போல் 9 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு அலுவலகம் வந்தடைந்தேன். நான் எவ்வளவுதான் விரைவில் வந்தாலும் எனக்குமுன் அனைத்து வெள்ளைக்காரர்களும் வந்து விடுகிறார்கள். வெள்ளைக்காரர்கள் எப்போதுமே  சீக்கிரம் வந்துவிட்டு சீக்கிரம் கிளம்பும் பழக்கம் உடையவர்கள். நான் அதற்குத் தலைகீழ். அதிகாலை வரும் தூக்கத்தின் சுகத்தை அவர்கள் அறிந்திராதவர்கள் போலும்.

இடத்தில் அமர்ந்தவுடன் வழக்கம்போல் அனைத்து மின்னஞ்சல்களையும் (mail) ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். படித்துக்கொண்டு வரும்போது இடையே ஒரு மின்னஞ்சலைப் பார்த்தவுடன் என் இதயம் ஒருநொடி நின்றே போய்விட்டது.(வடிவேல் பாஷையில் சொல்வதென்றால் “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்”).

என்னவென்று முழுவதுமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதில் முந்தைய இரவு உணவுவிடுதியில் யார்யார் எவ்வளவுக்கு சாப்பிட்டார்கள் என்ற பில் இருந்தது. மேலும் அந்தப் பணத்தை அன்றே ஒரு வங்கிக்கனக்கின் எண்ணைக் கொடுத்து அதில் போடச்சொல்லி இருந்தார்கள். மாதக்கடைசி, கையில் பணம்வேறு இல்லை. இல்லை என்று சொன்னால் அசிங்கமாகப் போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். இது என்னடா கொடுமை, பார்ட்டி என்றுதானே சொன்னார்கள் இப்போது பணம்கேட்கிறார்களே என்று எண்ணிக்கொண்டு செய்வதறியாது என்னுடன் பணிபுரியும் இந்தியரைப் பார்க்கச் சென்றேன்.

அவர் அருகில் சென்றதும் என்னைப் பார்த்த அவர், ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். ”ஏன் எதற்கு என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்” என்றேன்?
அதற்கு அவரோ, “உள்ளவற்றிலேயே நீ சாப்பிட்டதுதான் அதிகம்” என்று சொல்லி மறுபடியும் சிரித்தார். வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற நான், “பார்ட்டி என்று தானே சொல்லி என்னை அழைத்தீர்கள், இப்போ வந்து பணம்கேட்டல் நான் எங்கே போவது??? அதுவும் மாதக்கடைசி” என்றேன். அவரோ என்னிடம் “அதான் டச்சுப்பார்ட்டி என்று முன்பே சொன்னேனே” என்றார்.

பாவி மனுஷன் “டச்சுப்பார்ட்டி” என்றுதான் சொன்னாரே தவிர, அப்படியென்றால் சாப்பிட்டதற்குப் பணத்தை நாமே கொடுக்கவேண்டும் என்பதை முன்பே சொல்லவில்லையே. சொல்லியிருந்தால், பார்ட்டிக்குச் செல்வதை தவிர்க்க முடியாவிட்டாலும், குறைத்தாவது சாப்பிடிருக்கலாம்.


வெங்கடேஷ்.மு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டச்சுப்பார்ட்டி(சிறுகதை)”

அதிகம் படித்தது