மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’

தேமொழி

Feb 5, 2022

paththuppaattu-aaraaychi_FrontImage_297

பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’. தமிழ், வரலாறு, தொல்லியல், இலக்கியம், சைவம் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு நூல்களை எழுதிய பல்துறை தமிழறிஞராகவும் விளங்கினார் பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார். இவர் 1947 முதல் ஓர் ஆறு ஆண்டுகள் சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராகவும், 1953 முதல் தொடர்ந்து ஓர் ஆறு ஆண்டுகள் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், 1959 முதல் தனது மரணம் வரை தொடர்ந்து ஓர் எட்டு ஆண்டுகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இவரது ஆய்வு நூல்கள் ஆய்வுலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன. ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’, ‘ஆராய்ச்சிக் கலைஞர்’, ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார்.

வித்துவான், பி.ஓ.எல், எம்.ஓ.எல்., முனைவர் பட்டங்கள் என்று தொடர்ந்து தனது கல்வியையும் வளர்த்துக் கொண்டே உயர்நிலைப் பள்ளி முதல், உயர்கல்வி பல்கலைக் கழகம் பேராசிரியர் என நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் டாக்டர் மா.இராசமாணிக்கனார். 1930ஆம் ஆண்டு முதற்கொண்டு பள்ளி ஆசிரியப் பணியில் இருந்தபொழுதே அவர் நூல்கள் எழுதத் துவங்கினார். ஹர்சவர்தனன், முசோலினி, ஆப்ரஹாம் லிங்கன், முடியுடை மூவேந்தர்கள், பொற்கால வாசகம் போன்ற நூல்களைப் பள்ளி மாணவர்களுக்காக எழுதினார் பின்னர் பல இலக்கிய, வரலாற்று, சைவ ஆய்வு நூல்களையும் எழுதினார் மா. இராசமாணிக்கனார். அவரது அருமை மகனார் முனைவர். மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு குறித்துத் தாம் எழுதிய “வரலாற்றின் வரலாறு” என்ற நூலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய நூல்களின் முழுமையான பட்டியலையும் நூல்கள் பதிப்பிக்கப்பெற்ற காலநிரல்படி தொகுத்து பின்னிணைப்பாக கொடுத்துள்ளார்.

‘தமிழக அரசின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்’ என்ற திட்டத்தில், 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கி அவை பரவலாக தமிழார்வலர்களைச் சென்றடைய ஏற்பாடு செய்தது பாராட்டிற்குரியது. இவர் தனது இறுதிக் காலம் வரை பல நூல்களை எழுதிய வண்ணமே இருந்துள்ளார். இவற்றில் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ (A critical study in Pathupattu) என்ற நூல் இவர் மறைவிற்குப் பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் அச்சேற்றப்பட்டது.

மா. இராசமாணிக்கனார் அவர்கள் தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆகியவற்றில் பெற்றிருந்த பெரும்புலமையைக் கண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் அவரை பத்துப்பாட்டு குறித்த ஆய்வு நூலொன்று எழுதும்படி 1959 இல் பணித்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அதற்கு ஒப்புக் கொண்ட மா. இராசமாணிக்கனார் 35 தலைப்புகளில், 70க்கும் மேற்கொண்ட நூல்களின் உதவியுடன் ஆய்வு செய்து, கள ஆய்வு, கல்வெட்டு ஆய்வுகளும் மேற்கொண்டு, நான்கு ஆண்டுகள் ஆழ்ந்த ஆய்வின் விளைவாக பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

சங்கத் தொகை நூல்களுள்திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் எனப்படும்.

முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய

கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

என்று பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவையென ஒரு பழைய வெண்பா கூறுகிறது.

ஆற்றுப்படை இலக்கியங்களையும், சங்ககால மக்களின் வாழ்வியலை, மன்னர்களின் அரசாட்சியை, இயற்கையை, கலைகளை என்று பற்பல குறிப்புகளை உள்ளடக்கியது பத்துப்பாட்டு நூல்கள். பத்துப்பாட்டு என்னும் பெயர் இடைக்கால வழக்காகும். அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும் இந்தப் பத்துப் பாட்டுகளும் 3552 அடிகளைக் கொண்டவை.

மா.இராசமாணிக்கனார் 1964 இல் நூலை பல்கலையிடம் ஒப்படைத்தும், 6 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப் பெறாமல் இருந்தது.  இதற்கிடையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் 1967ஆம் ஆண்டு மே திங்கள் 26ஆம் நாள் மாரடைப்பினால் மறைந்தார். பிறகு பல்கலையின் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற நெ. து. சுந்தர வடிவேலு அவர்களின் கவனத்திற்குப் பிறகே இந்த நூல் 1970 இல் அச்சேறியது. நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் மு. வரதராசனார்.

அடுத்து வரும் குறிப்பு ஒன்றும் இணையத்தில் கிடைக்கப் பெறுகிறது.ஆனால் இச்செய்திக்கான சான்று (இக்கட்டுரை எழுதும் நேரம் வரை) கிட்டவில்லை. பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படியை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து அதை நூலாக வெளியிட வேண்டிக் கொண்டிருந்தார் மா.இராசமாணிக்கனார். ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு அவரது ஆய்வு நூல் வெளியீட்டில் பல்கலைக் கழகத்தினர் அக்கறை காட்டவில்லை. பின்னர் புதிதாகத் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தற்செயலாக பூட்டிக்கிடந்த அறையொன்றின் மூலையில் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த பத்துப் பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படிகளைக் கண்டெடுத்து, பல்கலைக்கழக வெளியீடாக 1970ஆம் ஆண்டு அச்சேற்றினார் என்று குறிப்பிடப்படுகிறது. கையெழுத்துப்படி கவனிப்பாரற்று ஏதோ ஒரு அறையின் மூலையில் கிடைத்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

மேலும், ‘‘இவர் (இராசமாணிக்கனார்) எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியை வெளியிட வேண்டி, தான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்ததற்குப் பதில் அவரே வெளியிட்டு இருந்தால், பணமாவது கிடைத்து இருக்கும். சென்னைப் பல்கலைக் கழகம் பத்துப்பாட்டு நூலை, யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்துவிட்டது வேதனை’’ என்றும் நெ.து.சுந்தரவடிவேலு வருத்தத்துடனும் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நெ.து.சுந்தரவடிவேலு நூலில் இவ்வாறு தனது அணிந்துரையில் குறிப்பிடவில்லை கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆனால், நெ.து.சுந்தரவடிவேலு முயற்சி எடுக்கவில்லை என்றால் டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஆய்வு நூலை தமிழுலகம் கண்டிருந்திருக்காது என்பது உண்மை. தான் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் நூலை அச்சேற்றியதாகக் குறிப்பிடுகிறார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள (9.7.1970) நெ.து.சுந்தரவடிவேலு. அத்துடன், ‘‘உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுநிலைமையே உயிர். இவ்வுண்மைக்கு உரைகல்லாயும் இந்நூல் விளங்குகிறது’’ என்று நூலையும் நூலாசிரியரையும் பாராட்டுவதுடன், தமிழ்ப் பேரறிஞர் ஒருவரின் நூலுக்கு அணிந்துரை எழுதக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்வதாகவும் எழுதியுள்ளார்.

“பத்துப்பாட்டு ஆராய்ச்சி”

ஆசிரியர்: இராசமாணிக்கனார், மா.

சென்னைப் பல்கலைக்கழகம் , 1970

தமிழிணையம் – மின்னூலகம் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி :

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh2#book1/

[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh2#book1/29]


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’”

அதிகம் படித்தது