மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தகவல் தொழில் நுட்ப(IT) வேலை போனால் கவலை வேண்டாம்

சௌமியன் தர்மலிங்கம்

Feb 28, 2015

velai ponaal1தகவல் தொழில் நுட்பத் துறையில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் குறைந்த ஊதியத்தில் இளம் பணியாளர்களை சேர்த்து வருவது பெரிய சர்ச்சையாக சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே இந்தியாவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாளர்களை வாடகைக்கு விட்டு பணம் ஈட்டும் தொழிலையே செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் அத்தகைய வேலைகளுக்கு அதிக செலவாகும் என்பதால் அவை இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன. இவ்வகை வேலைகள் எதுவும் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் ஊதியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. தனித்திறமையை வளர்ப்பதாகவோ நமது சமுதாயத்தை மேம்படுத்துவதாகவோ இல்லாத இவ்வேலைகள் ஒருவரின் மதிப்பைக் கூட்டுவதில்லை. உதாரணமாக தங்க நகைகள் செய்யும் ஆசாரி ஒருவர் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றிருந்தால் அவரது மதிப்பு அதிகமாக இருக்கும். அவருக்கு வேலைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். இதுவே இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்து பத்தாண்டு அனுபவம் ஈட்டிய ஒருவருக்கு மதிப்பு குறைவாக இருக்கும். அவரது வேலையை அவரை விட குறைந்த வயதுடைய ஒருவர் சிறப்பாக செய்திடுவார். நிறுவனமும் அந்த இளைஞரை குறைந்த ஊதியத்திற்கு பணியில் அமர்த்தி விட்டு மூத்த பணியாளரை வெளியேற்றும். அமெரிக்கா போன்ற நாடுகளில் மதிப்பற்ற இத்தகைய வேலைகளை இந்தியாவிற்கு தள்ளிவிட்டு அதற்கு ஒவ்வாத மிக அதிகமான ஊதியத்தைத் தந்து மொத்த பொருளாதாரத்தையும் சமநிலை பிறழச்செய்தது தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தந்த ஒரு விளைவு ஆகும்..

இவ்வாறு பணியிலிருந்து வெளியேற்றப்படும் மூத்த பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுடனும் வருத்தத்துடனும் காணப்படுகின்றனர். தமது எதிர்காலமே சூனியமாகிவிட்டதாக எண்ணி வருந்துகின்றனர். ஏனென்றால் பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இவர்களை அதிக சம்பளம் என்ற காரணத்தைக் கூறி வேலையில் எடுப்பதில்லை. இந்த சூழ்நிலையில் கைநிறைய கடன்களை வைத்திருக்கும் இவர்கள் வேதனையின் உச்சத்திற்கு செல்வது இயல்பு. ஆகவே தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வேலையிழப்பை எண்ணி கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஏராளமான வாய்ப்புகள் அத்தகைய பணியாளர்களுக்குக் காத்திருக்கின்றன.

Man contemplating after a days workபொதுவாகவே பத்தாண்டுவரை அனுபவம் பெற்ற பணியாளர்கள் நல்ல தனிநபர் ஆளுமைகளைப் பெற்றிருப்பார்கள். வெளிநாடுகளில் வேலை செய்திருப்பார்கள். ஆங்கிலத்தில் புலமையும் இந்தி போன்ற மொழிகளில் பரிச்சயமும் அவர்களுக்கு இருக்கும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களுடன் பணியாற்றியதால் காலம் தவறாமை, குறித்த நேரத்தில் வேலைகளை முடித்தல், இன்முகத்துடன் உரையாடுதல், குழுவாக செயல்படுதல்(Team Playing), ஆய்வு மனப்பான்மையுடன் யோசித்தல்(Analytical Skills), திட்டமிட்டு செயல்படுதல்(Planning and Execution) போன்ற இயல்புகள் கைவரப்பெற்றிருப்பார்கள்.

இவையன்றி பணியாளர்களை நிர்வகித்தல்(Human Resource Management), வளங்களை நிர்வகித்தல்(Resource Management), வணிக நிர்வாகம்(Business Management), வணிகமுறை நிர்வாகம்(Business Process Management), ஆவணப்படுத்துதல்(Documentation), முறைகளை செயல்படுத்துதல்(Process Management), பல்வேறு வேலைக் குழுக்களுடன் பணியாற்றுதல், ஒருங்கிணைத்தல்(Co-ordination), கடும் அழுத்தத்தில் பணியாற்றுதல்(Working under pressure) போன்ற திறமைகளை வளர்த்துக்கொண்டிருப்பார்கள். மேலும் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்பட்டிருப்பார்கள், பயிற்சிகளை பிறருக்குக் கொடுத்திருப்பார்கள். இளைய பணியாளர்களுக்கு வழிகாட்டி(Mentoring) வளர்த்துவிட்டிருப்பார்கள்.

இத்தகைய சிறப்பான இயல்புகளையும் திறமைகளையும் பெற்றிருந்தும் கூட தன்னம்பிக்கை சிறிதும் இன்றி வேலை போய் விட்டதே என்று வெதும்புவது முட்டாள்தனமாகும். மேலே கண்ட திறன்களைக் கொண்ட நபர்கள் பல்வேறு துறைகளில் தேவைப்படுகிறார்கள். சரியாக நோக்கினால் ஏராளமான வாய்ப்புகளை இவர்களால் கண்டறிய இயலும். ஓரிரு புதிய திறன்களை பயில்வது மூலமும் ஏற்கனவே அறிந்த சிலவற்றை மேம்படுத்திக்கொள்வதன் மூலமும்(Skill Building and Improvement) மீண்டும் பணியில் அமர்ந்து சிறப்பாக வேலை செய்து ஊதியம் பெறுவது மட்டுமன்றி பொருளாதாரத்தையே இவர்களால் உயர்த்த முடியும்.

இவ்வாறு வெளியேற்றப்படும் பணியாளர்களின் கல்விப் பின்புலத்தைப் பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பொறியியல் படித்திருப்பார்கள். அவர்கள் வேலைக்குச் சென்ற துவக்கத்தில் நல்ல தொழில் நுட்ப அறிவுடன் பணிசெய்திருப்பார்கள். இதன் காரணமாகவே பெரு நிறுவனங்கள் அவர்களை தேர்வு செய்திருக்கும். சில காலம் தொழில்நுட்ப வேலை செய்த பிறகு நிறுவனங்கள் அவர்களை மேலாண்மையில் ஈடுபடுத்தி அவர்களின் தொழில்நுட்ப அறிவை மழுங்கடித்து விடுவார்கள். நாள் முழுவதும் பணியாளர் மற்றும் திட்ட மேலாண்மை(Project and Management) பணிகளில் அமிழ்ந்து விடுவார்கள். இப்படிப்பட்ட கலந்து கட்டிய அனுபவம் கொண்ட அவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டால் தெளிவின்றி குழப்பமாக காணப்படுவது இயற்கையாகும். ஆனால் வேலை இழந்ததற்காக சிறிதும் அச்சமோ கவலையோ கொள்ளவேண்டியதில்லை. அவர்களே சிந்தித்து தமது அனுபவங்களை சீர் தூக்கிப் பார்த்து, தமது திறமைகளை சுயமதிப்பீடு செய்து எந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருக்கிறோம் என்று திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வலுவான தொழில்நுட்ப அறிவு(Technical Skills) கொண்டிருந்து அதில் ஆர்வமும் இருந்தால் மீண்டும் அதனை புதுப்பித்துக் கொள்ளலாம். அத்தகைய திறமைக்கான வேலைகள் சந்தையில் காத்திருக்கின்றன. மேலாண்மை(Managerial Skills) மட்டுமே தமது திறமையாக உணர்ந்தவர்களும் ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். ஆக இத்தகைய பணியிழந்த ஊழியர்கள் செய்யக்கூடிய அல்லது மேற்கொள்ளக்கூடிய வேலைகளை சிறு பட்டியலாகப் பார்ப்போம்.

  1. நிறுவனங்களுக்கான பயிற்சி(Corporate Training)

தொழில்நுட்ப ரீதியாக நல்ல ஆர்வமும் திறமையும் இருந்தால் அத்தகைய நிபுணர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் இத்தகைய நிறுவனப் பயிற்சிகளுக்கு நல்ல தேவை உள்ளது. தங்களது சுய விபரத்தை சிறு ஆவணமாக உருவாக்கி வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவு செய்து வைத்தால் அழைப்புகள் அவர்களைத் தேடிவரும். நல்ல திறன்களுக்கு தினசரி பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பயிற்சிக்கான ஊதியமாக வழங்கப்படுகிறது. அத்தகைய பயிற்சிகளை தருவதன்றி அவற்றுக்கான ஆவணங்கள், சோதனைகள், விளக்கங்கள் போன்றவற்றை உருவாக்கி வைத்துக் கொள்வதும், அவற்றைக்கொண்டு தெளிவான சிறந்த பயிற்சியை அளிப்பதும் நல்ல வருவாய் தரக்கூடியதாகும்.

  1. ஆலோசனை(Consulting)

வணிகம் குறித்த அறிவும், தொழில்நுட்ப பரிச்சயமும் கொண்ட ஊழியர்கள் ஆலோசகர்களாக நிறுவனங்களுக்கு பணி செய்யலாம். செய்யும் பணிக்கு ஏற்ப ஊதியங்கள் கிடைக்கும். இத்தகைய ஆலோசகர்களுக்கும் சந்தையில் நல்ல மதிப்பும் தேவையும் உள்ளது. நகரங்களில் நடைபெறும் தொழில் நுட்பக்கூட்டங்களுக்குச் சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டால் வாய்ப்புகள் தேடி வரும். தமது துறையில் நிபுணத்துவமும், நல்ல திறன்களும் பெற்றிருந்தால் ஆலோசனைப் பணியை எளிதாக மேற்கொள்ளலாம்.

  1. உற்பத்தித் துறை(Manufacturing Sector)

உற்பத்தித் துறை என்பது எந்த ஒரு நாட்டுக்கும் பொருளாதார அச்சாணியாக விளங்குவதாகும். அந்தத் துறையில் இயந்திர அறிவியல் படித்தவர்கள் மட்டுமே பெருமளவில் பணிசெய்து வருகின்றனர். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த பலருக்கும் உற்பத்தித் துறையிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வணிகம், மனித வளம், வணிக முறை மேலாண்மை (Business Process Management), திட்ட மேலாண்மை (Project Management) போன்ற பணிகள் உற்பத்தித் துறைக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றியவர்களுக்கு இந்தத் திறன்கள் எளிதில் கைவரப்பெற்றிருக்கும். தொடர்புத் திறன்களும்(Communication Skills) நன்றாக அமைந்திருக்கும். இத்தகைய நபர்களை உற்பத்தித் துறை உள்வாங்கிக் கொண்டால் மாறுபட்ட சிந்தனையும்(Out of Box thinking), உற்பத்தியைப் பெருக்கும் திறனும்(Productivity) நிறவனத்தில் வளரும். எனவே இத்தகைய ஊழியர்கள் உற்பத்தித் துறைக்கு விண்ணப்பித்து தங்களது திறன்களை தெளிவாக எடுத்துரைத்தால் அங்கேயும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

  1. தொழில் துவங்குவதல்(Entrepreneurship)

10-லிருந்து 15-ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஊழியர்கள் சுயமாக தொழில் துவங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் தற்போது சிறுநிறுவனங்கள்(Startups) ஏராளமாக துவங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு முதலீடுகளும், கடன்களும்(Funding) வழங்க பல்வேறு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்(Sales and Marketing) திறனும் பல்வேறு துறையினருடன் நல்ல பழக்க வழக்கமும்(Networking) கொண்ட திறமையாளர்கள் துணிவுடன் சுயதொழில் துவங்கலாம். அவர்களுக்கான ஆலோசனைகளும் மதிப்பீடுகளும் தாராளமாகக் கிடைக்கும். தாமும் பொருள் ஈட்டி மேலும் பலருக்கும் வேலை வாய்ப்பைத் தரக்கூடிய சொந்தத் தொழிலை மேற்கண்ட ஊழியர்கள் செய்வது நன்மை பயக்கும்.

  1. விவசாயம்(Farming and Agriculture)

என்னதான் படித்திருந்தாலும் எந்த உயரத்தில் பணியில் இருந்தாலும் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஒரு விவசாயி உறங்கிக் கொண்டிருக்கிறான். மூட்டை மூட்டையாக தானியங்களையும் விளைபொருட்களையும் காணும் பொழுது பேருவகைகொள்ளாத தமிழர்கள் யாருமே இல்லை. விதையை விதைத்து, விளைந்த பிறகு அறுவடை செய்யும் கொண்டாட்டத்தை உணர விரும்பும் மக்கள் சிறிதும் தயக்கமின்றி விவசாயத்தை மேற்கொள்ளலாம். நவீன வேளாண்மை(Modern Farming), உயிரி வேளாண்மை(Organic Farming), மாற்று வேளாண்மை(Alternate Farming) என்று பல வேளாண் முறைகள் மேற்கொள்ளப்படுவதற்காக காத்திருக்கின்றன. எனவே வேலை இழக்கும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் விவசாயத்தில் இறங்கி மக்களின் பசிப்பிணியைப் போக்கினால் தாமும் உணவருந்தி மேலும் பலருக்கும் உணவிட்டு மகிழலாம். ஆனால் அதற்கு முன்பாக நன்றாக ஆய்வு செய்துதாம் செய்யப்போகும் விவசாயத்தை முடிவு செய்ய வேண்டும்.

எந்த ஒரு கடுமையான சூழலுக்கும் ஏற்றபடி தம்மை தகவமைத்து, சமாளித்து அவற்றிலிருந்து மீண்டு வெளிவருவது மனித இயல்பாகும். அதற்கொப்ப வேலையிழப்பு என்ற பிரச்சினையை ஆக்கப்பூர்வமாக அணுகி தீர்வுகளைத் தேடி சிக்கலை எதிர்கொள்வதே சரியானதாகும். வேண்டாம் என்று விரட்டுகிற நிறுவனத்தை எதிர்த்து போராடுவதும், வழக்கு தொடுப்பதும் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணி செய்ய முயற்சி செய்வதும் நீண்ட கால தீர்வாக அமையாது. தன்னம்பிக்கையுடன் இப்பிரச்சினையை அணுகி தமக்கு ஏற்ற பணியை கண்டறிந்து ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வை சிறப்புடன் நடத்துவதே அறிவுடைமை ஆகும்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தகவல் தொழில் நுட்ப(IT) வேலை போனால் கவலை வேண்டாம்”

அதிகம் படித்தது