மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தக்கார் அரசியல், தகவிலர் அரசியல்

மகேந்திரன் பெரியசாமி

Feb 23, 2019

siragu thakkaar arasiyal1

ஆரோக்கியமான அரசியல்பால் அக்கறையுடன், நடப்பு அரசியலைக் கவனித்து வருபவர்களையும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓட வைத்து விடுவார்கள் போலிருக்கிறது, இப்போது அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள்..

அரசியல் மாற்றத்துக்கு பற்பல தளங்கள் உண்டு. கட்சி அரசியல், இயக்க அரசியல், ஊடக அரசியல், சாதீய/மத ஒடுக்குமுறை மீறும் அரசியல், அரசு இயந்திரப் பணியாளர்கள் அரசியல், தனியார்துறை மற்றும் பொருளாதார அரசியல், சமூக மாற்ற அரசியல், பண்பாட்டு மீட்சி அரசியல், மொழிசார்ந்த அரசியல், விவசாயம் சார்ந்த ஏற்றங்கள் நோக்கிய அரசியல், பெண்கள் மீதான அடக்குமுறை மீட்சி அரசியல், கல்வி மாற்றங்களுக்கான அரசியல், சமூக வளைதளங்களில், பொதுவெளிகளில் பொதுமக்கள் கூடி விவாதிக்கும் விமர்சக அரசியல் என்று அனைத்துத் தரப்பிலும் இருக்கும் அனைவரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர்தான் இது.

இந்த ஒருங்கிணைந்த முன்னகர்வுகளால்தான் நம்மால், அரசியல் மாற்றத்தை நோக்கி மக்களுக்கான சட்டங்களை நாம் சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்றத்தின் மூலமும் நம்மால் வென்றெடுக்க முடியும்.

‘கட்சி அரசியல் வேறு’ ‘சமூக மாற்றத்துக்கான இயக்கங்கள் அமைப்புகளின் அரசியல் வேறு’ என்பதைப் புரிந்து கொண்டாலும், மக்கள் சக்திகளைத் திரட்டி மக்கள் பணியாற்ற புதிய தலைமைக்காக நமது உள்ளம் ஏங்கும் ஏக்கங்களைத் தவிர்க்க முடியவில்லை.

களப்பணியில் வீரியத்துடன் சமூக அரசியல் மாற்றங்களுக்காகத் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்த மக்கள் எழுச்சி வேள்வியை முன்னிறுத்தி உழைக்கும் இயக்க ரீதியான மக்கள் போராளிகள் இருந்தும் இந்த கட்சி அரசியல் என்னும் பெரிய சுனாமியுடன் இவர்களது தொடர்ந்த போராட்டங்களையும் வெல்ல வேண்டிய சவால்களையும் நினைத்தால் பிரமிப்பும் ஒருவித மிரட்சிதான் தோன்றுகிறது.

ஆனாலும் அடுத்த தலைமுறைமீது நம்மால் அழுத்தமாக நம்பிக்கையும் இம்மியளவும் குறையவில்லை. என்ன, அவர்களை வழி நடத்த மேலே குறிப்பிட்டவர்களும், இன்னும் பல்வேறு வழிகளில் உழைக்கும் எண்ணற்றோரும் கூடி இணைந்து கூட்டு சக்தியாக இணைந்து இன்னும் பலமாக வீரியமாகப் போராடவேண்டும்..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் (செயல்களின் விளைவுகளால்) காணப்படும் என்ற திருக்குறள் அனைவருக்குமே பொருந்தும் என்பதை மனதில் கொள்வோம்..

வினை விதைத்துத் திணை கேட்டால்?

அரசியலிலும் ஒரு ‘உள் அரசியல்’, ‘நுண் அரசியல்’ இருப்பதை ‘உண்மையான அரசியல் நோக்கர்கள்’ நன்கு அறிவர். ஒருசில கட்சிகள் தங்களை மட்டும் புனிதர்களாக காட்டிக்கொள்வது வாடிக்கை எனினும் அது வேடிக்கையே.. ஆதாயத்துக்காக அரசியலுக்குள் அரசியல் செய்பவர்களிருந்து விலகி நின்று மெய்ப்பொருள் காண்பது அறிவு.. நடு நிலையோடு அனைத்தையும் அணுகி ஆராய்ந்து அறிந்தால் நலம்..

இன்று அவர்கள்.. நாளை யார்யாரோ!

அறிந்ததை அறியாத பாமரர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இன்னும் முக்கியத் தேவையாக உணர்ந்து செயலாற்ற வேண்டும்..

“வாழும் வரை போராடு;
வழி உண்டு என்றே பாடு!”

“தோல்வி நிலை என நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்!” போன்ற போராட்ட உணர்வு கலந்த திரைப்படப் பாடல்கள் சொல்வதைப்போல்

தொடர்ந்து போராடுவோம்.. உரிமைகளை வென்றெடுப்போம்..


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தக்கார் அரசியல், தகவிலர் அரசியல்”

அதிகம் படித்தது