மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தடுமாறும் கல்வியும் தடம் மாறும் அரசும்

ஷைன்சன்

Dec 13, 2014

vilayaadaadhe paappaa9நாம் ஆங்கிலேயர் காலத்துக் கல்வி முறையைத் தான் பின்பற்றி வருகிறோம். விடுதலை அடைந்த பின்னரும் இந்திய சூழலுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றவோ, காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கவோ நாம் முயலவில்லை. சில மேலோட்டமான மாற்றங்களோடு நாம் நிறுத்திக் கொண்டோம். அதன் விளைவுகளே இன்று கல்விமுறையின் சிதைவுகளாக நம்முன் வெளிப்படுகிறது.

சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய அரசின் பள்ளிக் கல்வி கழகங்களான கேந்திரிய வித்தியாலயங்களில் ஜெர்மன் கற்றுக் கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் மும்மொழிக் கொள்கைக்கு விரோதமானது என்று கூறி அதற்குப் பதிலாக சமற்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. மும்மொழித் திட்டம் அரசியலமைப்பின் அங்கமல்ல. உண்மையைச் சொல்லப் போனால் இவ்வறிவிப்பு மும்மொழித்திட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கிறது.

மும்மொழித்திட்டத்தின் நோக்கம் இது தான்: ஒவ்வொரு மாணவரும் தம் இந்தி, ஆங்கிலம், மற்றொரு இந்திய மொழியினைக் கற்க வேண்டும். வட இந்திய மாணவர்கள் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழியொன்றைக் கற்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையிலான கலாச்சார இடைவெளியைக் குறைப்பதற்கே இந்த ஏற்பாடு.

ஆனால் வட இந்திய மாணவர்கள் எளிமை கருதி தங்கள் தாய்மொழியையும், பிற வட இந்திய மொழிகளையும் கற்பதற்குத் தலைப்பட்டனர். தென்னிந்தியாவில் தமிழ்நாடு இருமொழிக் கொள்கை கொண்டிருந்தது. பிற மாநில மாணவர்கள் இந்தி கற்றனர்.

ஐரோப்பாவின் மொழிகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்த மொழிகள் இலத்தீனும் கிரேக்கமும் ஆகும். ஆனால் செவ்வியல் மொழிகளான அம்மொழிகளைப் பயில வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. அம்மொழிகள் அழிந்து போகின்றனவே என அரசியல் கட்சிகள் ஒப்பாரி வைப்பதுமில்லை. இவ்வளவுக்கும் அம்மொழிகள் நிலவில் இருந்த காலத்தில் வெகுசன தொடர்பு மொழிகளாக இருந்தவை.

ஆனால் ஒரு போதும் வெகுசன தொடர்பு மொழியாக இருந்திராத சமற்கிருதத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

mozhi4தாய்மொழிக்கல்வி கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. வேறு மாநிலங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இது தான் நிலை. பிறமொழிகளைக் கற்பதற்கு, அம்மொழிகளின் நுட்பங்களை அறிவதற்குத் தாய்மொழியை விட சிறந்த வழி இல்லை. ஆனால் இன்று வேற்றுமொழியான ஆங்கிலத்தைத் தாய்மொழியின் இடத்துக்குக் கொண்டுவர பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெருமுயற்சி எடுக்கின்றனர். இது செயற்கையானது; மாணவனின் கற்றல் திறனைப் பாதிப்பது.

தொழில்நுட்பக் கல்வியின் நிலை இன்னும் மோசம். இந்தியாவில் இரண்டு வகையான தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் உள்ளன – தரமானவை, தரமற்றவை. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை அளிக்கின்றன. ஆனால் இப்போது காளான்கள் போல் முளைத்து வரும் பல தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளோ, போதுமான அளவு ஆசிரியர்களோ இல்லை. இருக்கும் ஆசிரியர்களும் அக்கல்லூரியிலேயே படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாகப் பணிபுரிவதால் ஒருவகைத் தீய சுழற்சி (vicious cycle) ஏற்படுகிறது. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களும் இல்லை. இதனால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறைவு.

கலை, அறிவியல் கல்வியின்பால் ஆர்வமும், அதற்குப் பொருந்தும் திறமைகளும் கொண்ட பெரும்பாலான மாணவர்கள் சமூக வற்புறுத்தலாலும், வேலையைப் பற்றிய பயத்தாலும் தொழில்நுட்ப, மருத்துவக் கல்வியினைத் தேர்ந்தெடுக்கின்றனர். பொருந்தாக் கல்வி கற்று, மனதுக்குப் பொருந்தா பணி செய்து வாழ்நாளை வீணடிக்கின்றனர்.

இத்தனை பிரச்சினைகள் கல்விமுறையில் இருக்கும்போது இதையெல்லாம் கண்டு கொள்ளாத இந்த குறைநோக்கு அரசு சமற்கிருதமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் எதனை நிரூபிக்க விரும்புகிறது?.


ஷைன்சன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தடுமாறும் கல்வியும் தடம் மாறும் அரசும்”

அதிகம் படித்தது