மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனிமனித உளவியல்

முனைவர் க.முருகேசன்

Sep 8, 2018

Siragu sanga ilakkiya thirumanam3
இலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில் வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் நிறைவு பெறாது. அப்பொருளுடன் அறமும் இணைந்த பின்பே நிறைவுபெற்று நிலைநிற்பதென அறிவுறுத்துவன. சான்றோர்கள் கூறிய அறநெறி வாழ்வை மேற்கொள்ளத் தலைவன் தலைவியை விடுத்து வினைவயிற் போன்ற பிரிவு நிகழ்த்தினும் தலைவிக்கு ஆதார ஊற்றாகவும், வாழ்வின் பிடிப்பாகவும், பல்லோர் அவளைப் போற்றும் தன்மையுடையவளாகவும் விளங்கச் செய்பவன் தலைவனே ஆவான். சங்கப் பாடல்களில் தலைவன் கூற்றுக்களை விட, தலைவி உள்ளிட்ட பெண்களின் கூற்றுக்களே மிகுதியாக இருப்பினும் அவர்களை இயங்கச் செய்யும் இயங்கு சக்தியாக இருப்பவன் தலைவனே. இதனால்தான் அப்பெண் மாந்தர்களின் கூற்றுக்கள் அனைத்தும் தலைவனை மையமிட்டதாகவே அமைந்திருக்கின்றன. எனவே, சங்க மாந்தர்களை நகர்த்திச்செல்லும் மையப்புள்ளியாகத் தலைவன் திகழ்கின்றான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களவு, கற்பு வாழ்க்கையில் தலைவியை விடுத்துத் தலைவன் பிரிந்துறையும் போது பிறமாந்தர்களின் கூற்றுக்களில் அவன் அன்பின்மையைப் பற்றியும், குணநலன்களைக் குறித்தும் இடம்பெற்றிருப்பதை உணரமுடியும். அப்படிப்பட்ட ஆளுமைத் தன்மை உடைய தலைவன் புணர்ந்து பிரிந்த காலத்திலும், கற்புக்காலத்தில் பிரிந்த போதிலும், மீண்டு வந்து தலைவியோடு இணைந்த காலத்திலும் தலைவனுக்கு ஏற்பட்ட உள்ள மாறுதல்களை உளவியல் கூறுகள் வழி இக்கட்டுரை ஆராய்கின்றது.

தலைவனின் பண்பு நலன்கள்

தலைவனின் பண்பு நலனைக் கூறும்போது தொல்காப்பியர், “பெருமையும் வலிமையும் ஆடவர் இயல்பு” என்பர். இது உலகம் முழுவதும் பொருந்தும் என்பதை, “பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல்., களவு., நூ.1044) என்ற நூற்பாவில் கூறிச் செல்கின்றார். தலைவன் பிறரால் போற்றப்பட வேண்டுமெனில் பொருளை ஈட்டும் இயல்புடையவனாக இருக்க வேண்டும். அவ்வாறு பொருளீட்டப் பிரியும்போது தலைவி கலங்குவாளாயின் அவள் மனம் சமாதானம் அடையும் வரை காத்திருந்து பின்னர் தன் பயணத்தை மேற்கொள்ளும் வலியுடையவன் என்பதை,

“செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்” (தொல்., கற்பு., நூ. 1131)
எனக் குறித்துள்ளார் தொல்காப்பியர்.

உறவினரின் துன்பத்தைப் போக்கவும், சுற்றத்தாரெல்லாம் கூடியிருந்து உண்ணவும், அயலார் எல்லாம் அன்புடன் இருக்கவும் ஆகிய நோக்கங்களுடன் பொருள் தேடச்சென்றதை,

“கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்;
கேள்அல் கேளிர் கெழீஇயனர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன,
பெறல்அரும் நன்கலம் எய்தி, நாடும்
செல் அரு¨ செய்வினை முற்றினம்” (அகம்., பா.93:5-7)

என்னும் பாடல் வரிகள் மெய்ப்பிக்கின்றன. இப்பாடலின் மூலம் தலைவன் பிறர் துன்பத்தைப் போக்கும் பண்புடையவனாக இருந்தான் என்பது வெள்ளிடைமலை. அதோடு, “நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும் ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல” (அகம்., பா.279 :1-3) என்னும் மனவோட்டத்தால் தன்னைச் சார்ந்தோரின் துன்பத்தைப் போக்க தலைவனுள் ஏற்பட்ட விருப்பமாகிய கனல் இரவு பகலாகக் கனன்று கனன்று முயற்சி என்ற தண்ணீரால் அந்நெருப்பை அனைத்துப் பொருள்ஈட்டும் பண்பைக் கொண்டவனாக விளங்குகின்றான்.

அகப்பாடல்களில் தலைவன்

“தலைவியை நினையாது போரில் ஈடுபட்ட தலைவனின் மன உணர்வுகள் புறத்திலும், காதலுக்குச் சிறப்பிடம் தந்து காதலியை நினைத்துருகும் தலைவனின் மன உணர்வுகள் அகத்திலும் இடம் பெறுகின்றன” என்பார் ஆ.இராமகிரு˜ணன். (அகத்திணை மாந்தர் ஓர் ஆய்வு, ப.182). “வினைமேற் செல்ல எண்ணிய நிலையிலிருந்து வினை நிறைவு அடையும் வரை ஆற்றாமையே தலைவனிடம் பொதுப் பண்பாக அமைந்திருத்தல் தெளிவுறும். எல்லாத் தனிமொழிப் பாடல்களிலும் இப்பண்பு உணர்ச்சியொழுக உருப்பெறுதல் உணரத்தகும்” என்பார் மு.இராசமாணிக்கம் (உள்ளத்தின் விந்தைகள். ப.32). எனவே, வினையை விரும்பினும் அதனினும் தலைவியை விரும்பும் பண்புடையவன் தலைவன்.

தலைவி மீது தலைவனுக்குள்ள ஆறாக் காதல், தலைவி இல்லாது வாழ இயலாத தலைவனின் மனநிலை, இல்வாழ்வின் செம்மைக்கு இயற்ற வேண்டிய கடமை என்னும் தலைவனின் உளவியலை அறிதற்குத் தலைவன் கூற்றுப் பாடல்களே சான்றுகளாக அமைகின்றன. அகப்பாடல்களில் காதல் உணர்வும், வினை உணர்வும் கொண்டு அவ்விரு உணர்வைத் தவிர்க்க முடியாதவனாகி தன்னுள்ளம் பெறும் உளமாற்றத்தைச் சங்கப்பாடல்களில் வடித்துச் சிறப்பிடம் பெறுகிறான் தலைவன்.

தலைவன் கூற்று நிகழும் இடங்கள்

தலைவன் தன் நெஞ்சோடு கிளத்தும் தனிமொழிப் பாடல்களே சங்கப் பாடல்களில் மிகுதியாக உள்ளன. காரணம் என்னவெனில் தலைவிக்குத் தோழி தக்க துணையாக அமைந்தது போலத் தலைவனுக்குப் பாங்கன் உள்ளங்கலந்த உறவுடையவனாக அமையாமையே காரணமாகும். எனவே தலைவன் கூற்றுக்கள் அவன்தன் நெஞ்சிடமே மிகுதியும் நிகழ்கின்றன.

உள்ளமுறிவு – விளக்கம்

“ஓர் அழுத்தமான தேவையும் அதனை எய்தி நிறைவுற இயலாத உணர்வும் உடனியையும் போது நேரும் அனுபவமே உள்ள முறிவு” என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் வரையறுக்கின்றது. வளமான வாழ்வு வாழப்பொருள் தேவை. ஆனால் பொருள் ஈட்டப்புக நினைப்பின்தலைவியைப் பிரிய வேண்டும். இவ்விரண்டையும் வேண்டி நிற்கும் தலைவன், ஆறலைக்கள்வர்கள் இருக்கும் பாலை வழியை எளிதில் கடந்து விடலாம். ஆனால் காதலைக் கடந்து செல்லவும் அவளின் தோளில் துயிலப் பெறுவதை விடமுடியாது என்பதை, “பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே” (அகம்., பா.193: 14) எனக் கூறித்தன் பயணத்தைத் தவிர்க்கின்றான்.

தலைவனின் ஆசை நிறைவேறாததற்குத் தடையாக இருப்பது மனமே, ஏனெனில் தலைவியுடன் உறைய நினைப்பினும் மனமோ பொருள்கருதிப் பிரிய நினைக்கின்றது. இதனால் பிரிவை ஏற்க முடியாத தலைவன், ‘உறுதியில்லாத நெஞ்சே, தலைவியைப் பிரியின் தக்கதா? நீ செல்லும் வழி கானல் நீர் நிறைந்து, பாறைகள் பொருந்தியிருக்கும் இடங்களுக்கு நீ சென்றால் தலைவியை நினைக்காது நீ எம்மையும் மறந்து போவாயா?’ (அகம்., பா.327) என உள்ளமுறிவு அடைகின்றான். மனமானது, நாளது செலவினையும், மூப்பினது வரவையும், அரிது பெரிது சிறப்பினர் காமத்து இயற்கையையும் அறியாது. இதனால் தலைவன் தன்மனதிடம் மனமே, நீ பொருளை விரும்பினாலும் கூட, “நம்மொடு நன்மொழி நவிலும்,பொம்மல் ஓதிப் புனையிழை குணனே” (அகம்., பா.353:22-23) என்னும் அகநாþற்று வரிகளில் தலைவியின் இனிய மொழியையும், நற்குணத்தையும் நினைத்து இருக்கின்றாய். எனவே பொருளை விட்டுவிடு என உரைத்து உள்ளமுறிவடைகின்றான்.

நிறைவுறாத உணர்வு

“தலைவன் பாங்கனுக்குக் கூறும் பாடல்களுள் இடித்துரைக்கும் பாங்கனுக்குப் புகல்பவையாகவே உள்ளன. இதனால் தலைவன் தன் எண்ணங்களுக்கு வடிகாலாக, தன்உணர்வுகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உறுதுணையாகத் தன் நெஞ்சினையேகொள்கிறான்” என்பர் ஆ. இராதாகிருஷ்ணன் (அகத் திணை மாந்தர் ஓர் ஆய்வு. ப.169).

எனினும் இங்கு, தலைவி அருங்கடிக் காப்பினள், சொல் எதிர் கொள்ளாள், இளையள், அணையோள். எனவே, அவளை உள்ளல் கூடாது எனப் பாங்கன் இடித்துரைப்பினும் தலைவன் தன் பாங்கனிடமே, ‘காற்று மோதி அடிப்பினும், மழை விரைந்து பெய்யினும், முழக்கத்துடன் இடியிடிப்பினும்’ இவை போன்ற இயற்கைப் பேரழிவு ஏற்பட்டு உலகமே சினப்பினும், “போதல் ஒல்லாள் என்நெஞ்சத் தானே” (நற்., பா.201:12) என்ற வரியில் நினைவிலிருந்து நீங்காதவள் என்று அவளைப் பெறமுடியாத சூழலில் விளம்புகின்றான்.

தலைவன் தன் பாங்கனிடம் அவள் கிளியை குளிர் எனும் இசைக் கருவியால் விரட்ட, அவ்வொலி கேட்டு வேறிடம் செல்லாததைக் கண்ட தலைவி வருந்தி, “அதுபுலந்து அழுதகண்” (குறுந்., பா.291:5) உடையவளாக இருக்கக் காணும் போது அவள் கண்கள் குவளை போன்று இருந்தது என்று கூறுகின்றான். சங்கப்பாடல்களின் அமைப்புக் குறித்து .ஆர்.மார்க்கபந்து கூறும்போது “அகப் பாடல்கள் பெரும்பாலும் நிகழ்ந்த ஒன்றை ஒருவர் மற்றொருவருக்குக் கூறுவது போல் அமைந்துள்ளன; நிகழ்வை நம்மையே நேரில் காணச் செய்கின்றன. இதனால் இவை நாடகங்களின் அமைப்பு முறையைத் தழுவி இயன்ற சின்னஞ்சிறு நாடகங்களாகவே ஆகிவிடுகின்றன” எனும் கூற்று உண்மையே என்பர். (குறிஞ்சிக்கலி . வழித்துணை விளக்கம், முன்னுரை, ப.20) தலைவியும் தன்னை விரும்ப வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளான் தலைவன். இதனால் வருந்தியிருக்கும் தலைவனைக் கண்டு அவள் நகைக்க, இதைக் கண்ட தலைவன் நீ வேறு வகையாகச் சிரித்த செய்தியைக் கூறின் என் நெஞ்சம் தாங்காது என்று கூறி, “என் பைதல் நெஞ்சம் உய்யு மாறே” (நற்., பா.75:10) எனும் வரியில் எனக்கு நன்மொழி கூறுவாயாக! என்று உளமுறிவால் வினவுகின்றான் தலைவன்.

தலைவியை விரும்பிய தலைவன் அவள்மீது கொண்ட அன்பினை அவள் உணர்ந்து ஏற்கும் பொருட்டு ஊரார்க்குத் தெரியும்படி ‘மடலூர்வேன்’ என்கின்றான். இவ்வாறு செயலைச் செய்யும் போது, அனைவரும் அறியும்படியான ஆற்றின் நீர்ச்சுழியில் அகப்பட்டவனைக் கண்டு கரையில் உள்ளோர் பயங்கொள்ளாதே என்றதும் ஒருவாறு ஆறுதல் பெறுவான். ஆனால் இவ்வூரோ,“செறிந்தஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது, இவ்வூர்” (கலி., பா.140:27-28) என்று கூறித் தலைவியை அடைய இவ்வூர் உதவி செய்யாத நிலையாலும் உள்ள முறிவு பெறுகின்றான். “களவு ஒழுக்கத்தில் தலைவன் தன் சுற்றத்தாருக்கோ, ஊரார்க்கோ அஞ்சாதவனாக உள்ளான்” என்கிறார் ஆ.அமிர்தகௌரி (சங்க இலக்கியத்தில் உரையாடல்,ப.87). தலைவியுடன் இனிது உரையவேண்டும் என நினைப்பினும் பொருளின் தேவை கருதிப்பாலை வழிச்செல்லும் பொழுதும் தலைவி தன்னை விரும்பாவிடின் என்செய்வது என்று துன்புறும் நிலையிலும் தலைவியை அடைய மடலூர்வேன் எனக்கூறியும் தனக்கு உதவி செய்யாத ஊரினைக் கண்டும் தலைவன் உள்ளமுறிவடைகின்றான்.

உள்ளப்போராட்டம் – விளக்கம்

“ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட விருப்பங்கள் உடனிகழ்வாய்த் தோன்றுமாயின் எதனை ஏற்பது எதனை விடுப்பது என்னும் ஐயம் தோன்றும், இதன் அடிப்படையில் முடிவெடுக்க இயலா நிலையும் செயற்படஇயலா நிலையும் தோன்றும். இத்தகைய நிலையே ‘உள்ளப்போராட்டம்’ எனப்படும்” என்பர் து.சிவரா÷ (சங்க இலக்கியத்தில் உளவியல், ப. 16). வினையும் மனையும் தலைவன் பொருளீட்டப் பிரிய நினைக்கின்றான். ஆனால் மனமோ தலைவியா? பொருளா? என மனப்போராட்டம் நிகழ்த்துகின்றது. அப்பொழுது மனதிடம், “நெஞ்சே நீ தலைவியை விரும்புகிறாயா? பொருளை விரும்புகிறாயா?” இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறுக. ஏனெனில், “புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே” (நற்., பா.16:1-2) என்னும் வரிகளில் தலைவியோடு உறைய விரும்பினால் பொருள்பெற இயலாது. பொருளைப் பெற விரும்பினால் தலைவியோடு உறையமுடியாது எனக்கூறி “நெஞ்சே, நீ பொருளுக்காகச் செல்வாயாயினும் செல்க, அல்லது இல்லத்தே தங்குவதாய் ஆயினும் தங்குக” என முடிவெடுக்காது போராடுகின்றான். இதுபோன்று “மாந்தரின் உள்ளப் போராட்டத்தை விளக்க, சேக்சுபியர் தனிமொழியைப் பயன்படுத்தினார்” என்பர். ஒரு முடிவெடுக்காது அலைபாயும் மனதுடன் தலைவன் வருந்தி அதனிடம் பொருளை விரும்பிப் பாலையில் செல்வதா? அல்லது தலைவியைக் காண ஊர்திரும்புவதா? எனத் தெரியவில்லை. ஆகவே மனமே, “ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்,மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே” (நற்., பா.103:10-11) என விளித்து இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறுகின்றான் தலைவன்.

அகநாநூற்றுத் தலைவனோ, தன் மனதிடம் நீ குன்றைக் கடந்து பொருளீட்டியும் வரவில்லை. நம் தலைவியைத் தழுவி இல்லத்தில் வாழ்ந்தாலும் வறுமை வரும் என அஞ்சுகின்றாய். எனவே நீ ஒரு முடிவுக்கு வராது, “பெருங்கடல் ஓதம் போல,ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே” (அகம்., பா.123:13-14) என்றவாறு போராடும் மனமே முடிவெடுக்கட்டும் என விட்டுவிடுகின்றான். ஆண்மை என்பது யாரிடமும் பொருளை யாசிக்காது தான் ஈட்டி வந்த பொருட்களைப் பிறர்க்கு ஈயும் குணத்திலே நிற்கும். இது ஆண்மை கொண்ட அனைவர்க்கும் பொருந்தும். அகத்தலைவனும் தன் ஆள்வினைத் தன்மையானது பொருளீட்டத் தலைவியைவிட்டுப் பிரிய நினைக்கின்றது. மனமோ அவள்மீது கொண்ட காதலால் தலைவனைப் போகவிடாது தடுக்கின்றது. இதனால் தலைவனின் உள்ளமானது, “இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்” (அகம்., பா.339:9-10) என அகநாþறு உரைப்பது போல் புலம்பி ஒருநிலை காணா உள்எறும்பு போலத் துயரடைகின்றான் தலைவன்.

கனவில் தோன்றி மறையும் காட்சி போலப் பொருள் நிலையில்லாதது. எனவே மனமே! நீ பொருளை நாடாதே. நாடின் தலைவி அழகு கெடும். இது தெரிந்தும் பொருள்பெற நீ வற்புறுத்துகின்றாய். அப்படிச் செல்வாயாயின், “இரங்குவை அல்லையோ, உரம்கெட மெலிந்தே”

(அகம்., பா.379:27) எனத் தன்சொல் கேளாத மனதால் போராட்டம் அடைகின்றான் தலைவன். இதற்குக் காரணம் மனை வாழ்க்கையைப் பிறர் பழிப்பின்றி நடத்த வேண்டும் என்பதே அவனின் குறிக்கோளாகும். அக்குறிக்கோள் ஈடேறுவதற்கு வினைவயிற் பிரிகின்றான். “வினைவயிற் பிரியுங்காலத்துத் தலைவனுக்குக் காதல் உணர்வுகள் தோன்றி மனதைத் துன்புறுத்தினாலும் உணர்ச்சித் தோல்விகளை அவன் மனம்உறுவதில்லை” என்பர் மு.இராசமாணிக்கம் (உள்ளத்தின் விந்தைகள். ப.18) எனவே பொருளுக்கும் அன்பிற்கும் இடையில் ஊசலாடுகின்றான் தலைவன்.

தலைவியைப் பிரிந்த துயர் தலைவன் சென்ற இடத்திலும் வருத்த, பொருள் முடியானாகி மனம் சோர்கின்றான். மனச்சோர்வு நீங்கத் தலைவியைச் சென்று காண்போம் என மனம் நினைக்க, அறிவோ வினைமுடியாது செல்லின் இகழ்ச்சியைத் தரும் என்று கருத, இவ்வுள்ளத்திற்கும் அறிவிற்கும் இடையில், “தேய்புரிப் பழங்கயிறு போல,வீவதுகொல் என் வருந்திய உடம்பே” (நற்., பா.284:10-11) என இரண்டிற்கும் இடையில் போராட்டம் அடைகின்றான்.

தலைவன், தலைவி, தோழி எனும் முக்கோணச் செய்தியாகக் களவு விளங்கும்போது தலைவன் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் களவு வெளிப்பட்டு அலராக மாறி ஊராரின் பழிச்சொல்லுக்குத் தலைவி ஆட்படும் போது அஞ்சுகின்றான். சமுதாய உணர்விற்கு மதிப்பளிக்க வேண்டியதால் தலைவன் களவுச் செய்தியையும், மடல்ஊர்தலையும் தவிர்க்கின்றான். குறுந்தொகைத் தலைவன் காதலைப் பெற ஊருக்கு அஞ்சி மடலேறாமலும், மடலூர்தலை மறுத்தால் உயிருடன் வாழமுடியாத் துன்பத்திலும் போராட்டம் அடைந்து, “வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந்., பா.32:6) என்கின்றான். தலைவன் போர்க்களத்தில் வினையில் ஈடுபட்டிருக்கும்போது தலைவி பற்றிப் பேச மாட்டான். வெற்றி பெற்றபோது தலைவி பற்றி நினைப்பான் என்பதை,

“கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” (கற்., நூ.1132)

எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். தொல்காப்பியர் கூற்றுப்படித் தலைவன் போர்மேற்சென்று வெற்றி பெற்றுப் பாசறையில் தங்கியிருக்கிறான். ஆனால் மன்னன் தன் நாட்டிற்குச் செல்லாது பாசறையில் தங்கியிருக்கத் தலைவனோ, வெற்றி பெற்ற மன்னன் போர்த் தொழிலைக் கைவிடின், “காண்குவெம் தில்ல அவள் கவின்பெறு சுடர்நுதல்” (ஐங்., பா.443:3) என்று தலைவியின் அழகுநலம் குறித்துச் சென்ற தன் மனதிடமும், அவள் மீதுள்ள ஆர்வத்திற்கும் இடையில் போராட்டம் அடைகின்றான் தலைவன்.

இல்லாமையின் இரக்கம்

“மனிதன் இன்பமயமான வாழ்க்கையை எய்தும் பொருட்டுச் சில குறிக் கோள்களை அமைத்துக் கொள்கின்றான். அக்குறிக்கோள்கள், அவனுக்கு மறைமெய்ம்மைகளாக, உள்ளிருந்து அவனைச் செய்யும்படி தூண்டுகின்றன” என்று கூறுவர் மு.இராசமாணிக்கம் (உள்ளத்தின் விந்தைகள், ப.32). எனினும் அக்குறிக் கோள்கள் தலைவியுடன் உறையும் போதே பிறக்கும். பிரியின் குறிக்கோளை மறந்து ஏங்குவான். தலைவன் பொருள்தேடத் தலைவியைப் பிரிந்தபோது எவ்வித நினைப்பும் இன்றி மனமே! நீ என்னுடன் வந்தாய், வந்த நீ இடைவெளியில் அவளை நினைத்து வருந்துகின்றாய். எனவே,

“செல்இனி, சிறக்கநின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி” (அகம்., பா.19 : 8-9)

என்னும் அகநானூற்று வரிகளில் பாலைவழிப் பயணம் மேற்கொள்வதா? வேண்டாமா? என உள்ளப்போராட்டம் மேற்கொள்கின்றான். முன்பு நிகழ்ந்ததைப் பின்பு நினைத்தற்குக்காரணங்களும் அமையும் என்பதை, “நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்” தொல்.அகத்.நூ.989) என்பார் தொல்காப்பியர். தலைவனும் பாலைவழிச் செல்லும் போது அவ்வழியின் கொடுமைக்கும், தலைவியின் குணநலன்களுக்கும் இடையில் அவன் உள்ளம் தடுமாற, போராட்டம் மீதுர, “இன்னா மன்ற சுரமே; இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே!” (ஐங்., பா.326:4-5) எனக் கூறுகின்றான். மனம் குரங்காட்டம் போட்டு, ஒரு நிலையாய் நிற்காதது.

பொருளீட்டவும் மனதிற்கு ஆசை தோன்றித், தலைவியுடனும் தங்கியிருக்க விரும்புகின்றது. ஆனால் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றையே பெறமுடியும். இஃதறிந்தும் மனம் ஆசைப்படுவதைக் கண்டு, “ஒருதிறம்,பற்றாய் வாழி, எம் நெஞ்சே!” (நற்., பா.298:7-8) எனத் தன்நெஞ்சினை இகழ்ச்சியாகக் கூறியும், வாழ்த்திக் கூறியும், அடைய வேண்டுவது பொருளா? தலைவியா? என மனப் போராட்டம் அடைகின்றான். தலைவன் தலைவியை விரும்பும் தூய அன்பை எவ்வகையில் தெரிவிப்பது எனக் குழப்பம் அடைந்து உளப்போராட்டம் அடைகின்றான். அப்போராட்டத்தை, “கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்? எனக்,கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது” (அகம்., பா.198:1-2) என்ற அகநானூற்றுத் தலைவனின் கூற்றிலிருந்து மனம் தடுமாறிப் போனதைத் தன்னுடைய திகழ்வை பின்னோக்கு உத்திமூலம் பாகனிடம் தெரிவிக்கின்றான். மற்றொரு தலைவனோ, தன் துணிவில்லாத நெஞ்சிடம், பொருளீட்டத் தலைவியை விடுத்துப் பாலை வழியில் செல்லும்போது அவளைச் சிறிதேனும் நினைப்பாயா? பாலை வழியில் நான்செல்வது தகுமா? என்பதைச் சிந்தனை செய்து கூறு (அகம்., பா.327) கூறாது விட்டுவிடாதே என்ற பாடல் கருத்தால் பாலை வழிக்கும், தலைவியின் அன்புக்கும் இடையில் போராட்டம் நிகழ்த்துகின்றான்.

பொருள், போர் போன்ற காரணங்களால் தலைவியைத் தலைவன் பிரிய நேர்ந்தாலும் அவளின் அன்பினையே மையமாகக் கொண்டு அவனது எண்ணமும் செயலும் கொண்டு இப்போராட்ட உணர்வுகள் அமைகின்றனான். பாலைவழிச் சென்று தலைவன் பொருளீட்ட நினைக்கையில் தலைவியா? பொருளா? எனச்சிந்திக்கும் வேளையிலும் பொருள்வயிற் பிரிவை தலைவியிடம் கூறுவதா? வேண்டாமா? என்ற நிலையிலும் தலைவியைப் பெற மடலூர்ந்தாலும் பழியாகும் அதை மறுத்து பிரிந்து உயிருடன் வாழ்ந்தாலும் பழியாகும் என்ன செய்வது என்ற குழப்பமான நிலையிலும் தலைவியிடம் தன் அன்பைக் கூறுவதா வேண்டாமா என்ற தயக்க நிலையிலும் தலைவன் உள்ளப்போராட்டம் அடைகின்றான்.

உள்ள இறுக்கம் – விளக்கம்

“எவ்வகைத் தீர்வும் இன்றி உளமுறிவு தொடருமானால் மன விறைப்பு நிலை தோன்றும்.இவ்வுள்ள இறுக்கத்தால் அச்சம், பெருந்துயரம், நாணம், குற்ற உணர்வு, ஆர்வக் கிளர்ச்சி ஆகிய பல்வேறு அடிப்படை உணர்வுகளின் இணைப்பு அல்லது தொகுப்பமைப்பு எனும் வகையில் கலவையால் உளஇறுக்கம் ஏற்படுகின்றது”.

துயரால் உள இறுக்கம்

தலைவியுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்; அதோடு பொருளையும் கைவரப் பெற்றிருக்க வேண்டும் என இரண்டையும் வேண்டுதல் தலைவனின் அடிப்படை உணர்வு. ஆனால் இவ்வடிப்படை உணர்வுகள் ஒன்றையொன்று பெறாது சிக்கல் கொண்டதாக விளங்கி உள்ள இறுக்கம் பெறுகின்றான் தலைவன். அவன் தன்னுடைய நெஞ்சிடம், “அஞ்சில் ஓதி அரும்படர் உறவே” (நற்., பா.105:10) என்னும் வரியில் “மனமே நீ நீண்ட தொலைவு வந்து விட்டாய். இத் தொலைவு வந்தபின்பும் மீண்டும் தலைவியை எண்ணிச் செல்லக் கருதுவாய் எனில் உன் முயற்சி நன்றாகும்” என வெறுப்புற்றுக் கூறுகின்றான். அவ்வாறு விருப்புற்றுச் செல்லினும் நெஞ்சம் பிழைக்குமாறு தலைவியின் பார்வை அமைய வேண்டும். இல்லையெனில், “உடையும் என் உள்ளம்” (நற்., பா.75:5) எனத் துயரால் இறுக்கம் அடைகின்றான். தலைவியை அடைய வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது பல நாட்களாகத் தொடர்ந்தால் தலைவனுக்கு உள்ளமுறிவு ஏற்படும். மலைநாட்டுத் தலைவியின் சூழ்ச்சியில் சிக்கி இன்னும் உயிர் நீங்காது அடங்காத நோயுடன் அன்பும், துன்பமும் அளவு கடந்து பெருகச் செயலாற்ற முடியாமல் தலைவன் வருந்துகின்றான். அதோடு அவளுடன் கூட்டம் செய்யாது இருப்பின் அது என் ஊழ்வினையால் வந்தது எனக் (நற்., பா.185) கூறி பிறரைப் பழிதூற்றாது புள்ளையும், பொழுதையும் பழிக்கும் சான்றோர் போல நடந்து கொள்கின்றான். சான்றோன் போல் நடப்பினும் தடுமாறும் மனதை அடக்க இயலாது தலைவி மீது எண்ணம் கொண்டு, “குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணைநன்கு உடையள், மடந்தை” (நற்., பா.341:5-6) என்ற வரிகளில் தலைவியின் நற்பண்புடன் வீற்றிருக்க தலைவனோ பாசறையில் மழைக்கால வாடையால் துன்புறுத்தப்பட்டுத் தனிமையில் துன்புறும் செயலால் உள இறுக்கம் அடைகின்றான். தொல்காப்பியர் கூற்றுக்கு மாறுபட்டுத் தலைவன் புலம்புவதை நற்றிணைப் பாடலில் காணமுடிகின்றது.

“கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” (தொல்., கற்., நூ.1132)

என்ற நூற்பாவின்படி தலைவன் போர்க்களத்தில் வினையில் ஈடுபட்டிருக்கும்போது தலைவி பற்றிப் பேசமாட்டான். வெற்றி பெற்ற போது தலைவி பற்றி நினைப்பான் என உரைப்பினும் உளஇறுக்கத்தால் பாசறையில் புலம்புகின்றான் தலைவன். எண்ணத்திற்கு ஏற்றவாறு எல்லாம் நடந்து விடுவதில்லை. அப்படி நடந்தால் உள்ளம் என்பதும் அவற்றுள் உணர்வு என்பதும் இல்லாது போய்விடும். தலைவனும் தலைவியை நினைத்துத் தன்நெஞ்சிடம், விருப்பத்திற்கு எட்டாத தொலைவில் உள்ளவளும், அடைதற்கு அரியவளுமான தலைவியை அடைய நீ, “அயிரைஆர் இரைக்கு அவைத் தாஅங்கு” (குறுந்., பா.128:3) போலப் பார்த்துத் துன்பம் அடைகின்றாய். அதோடு நான் கூறும் நல்அறிவுரைகளைக் கேளாது பச்சைமட்பாண்டம் போல,

“உள்ளம் தங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறுந்., பா.29:3-4)

எனத் தன்சொல் கேளாது அவாவுறும் நெஞ்சினால் துன்பம் அடைகின்றான். வினை முடியாதுகார்காலம் வந்துற்றதை அறிந்த தலைவன், “யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே” (ஐங்.,
பா.441:4) என்று பிரிவுத் துயரடைகின்றான். இதனால் கார்கால வருகை தலைவிக்கு மட்டுமல்ல குறித்த காலத்தில் வராதிருக்கும் தலைவனுக்கும் உண்டென்பது தெளிவாகின்றது. போராட்டங்களை மறைத்து அடக்குவதால் கவலை தோன்றும் என்பார் சிக்மண்ட் ஃப்ராய்ட். தோழியருடன் தலைவி மனையரசியாக விளையாடுவது கண்டு தலைவன் எம்மில்லத்தில் மனையரசியாகத் தலைவி நடப்பின் நல்லது எனக்கூற அவள் நாணத்தால் தலைகவிழ்ந்தாள். இக்காட்சியைக் கண்ணுற்று நீங்கி “பெரிய எவ்வம் யாம்இவண் உறவே” (அகம்.,பா.230:16) என்ற வரிகளில் மனையரசியாக வரும் தலைவியை நாம் அடைய இயலாது என்கின்றான். தெய்வ இயல்புடையள், எட்டாக் கனி என எண்ணாது பல வழிகளைக் கடக்கச் செய்யும் நெஞ்சே, உன் செருக்கு அழிவதோடு, “எஃகம் நிறுத்துச் சென்று அழுந்தக்,கூர்மதன் அழியரோ-நெஞ்சமே” (அகம்., பா.212:20-21) எனத் தலைவியை இடையறாது நினையும் தன்மார்பில் வேல்பாயட்டும் எனத் துன்பத்தால் இறுக்கம் அடைகின்றான். ஊராருக்கு வள்ளலாகவும் தலைவிக்கு அன்புக் கணவனாகவும் திகழவேண்டும் எனில் அது சிரமம் தான். வள்ளலாக வேண்டுமெனில் பொருளீட்டப் பிரிய வேண்டும். தலைவியுடன் இருப்பின் அஃது நடைபெறாது போய்விடும். எனினும் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனும் வழித் தலைவியைப் பிரிந்து சுரத்தில் துன்பத்தை அனுபவிக்கும் தலைவன், தம் தலைவியும் இளவேனிற் காலத்தில் வருந்துவதோடு, “படர் உழத்து, யாங்குஆ குவள்கொல் தானே” (அகம்., பா.279:10) என்றவாறு அவளின் துயரத்தையும் நினைந்து உளஇறுக்கம் பெறுகின்றான். கலித்தொகைத் தலைவனும், “நாண்எழில் முற்றி உடைத்து உள்அழித்தரும் மாணிழை மாதராள்” (கலி., பா.139:21-22) எனக்கூறி “அழகுநலம் வாய்ந்த அப்படிப்பட்ட தலைவியை அடைய மடலையே தெப்பமாகக் கொண்டு கரையேற முயல்வதற்குச் சான்றோர்களே! நீங்கள் எனக்கு உதவுவதே கடனாகும்” எனக்கூறி தலைவியை அடைய முடியாத சூழலில் மனப்போராட்டம் முற்றி உளஇறுக்கம் அடைகின்றான்.

பார்வையும் குற்ற உணர்வும்

பெண்ணுக்கு இயல்பு நாணம். அதுவும் தான்விரும்பும் தலைவன் எதிர்ப்பட்டு மொழியும் பொழுது அவள் முகம் காணாதும், பேசாதும் நாணத்தால் தலை கவிழ்ந்து நிற்பாள்.அந்நிலையில் அவளைக் காணும்போது அன்பு மிகுதியாகிக் கைகடந்து செல்லும்போது அதைத்தாங்குவதற்கு, இயலாத நிலையில் அவள்மீது கொண்ட ஆர்வக் கிளர்ச்சியால், “காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?” (நற்., பா.39:3) எனக்கூறி, அவளின் பார்வையும் தோளும் தன்னை விரும்பச் செய்வதாகக் கூறுகின்றான். அவ்வாறு விரும்பினும் அவ்விருப்பம் நிறைவேறாது போய்விடுமோ எனும் ஏக்கத்தாலும் அவளுடன் இணையவேண்டும் எனும் விருப்பாலும் தன்னுடைய தோழனிடம்,

“ஒருநாள் புணரப் புணரின்,
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” (குறுந்., பா.280:4-5)

எனும் வரிகளில் தலைவியின் மீதுள்ள ஆர்வத்தால் அவன் எமக்கு இல்லையெனில் அரைநாள்வாழ்க்கை கூட வேண்டாம் என உளஇறுக்கம் அடைகின்றான்.“துன்பத்தில் தோன்றும் இன்பம், இன்பத்தில் தோன்றும் இன்பத்திலும் இனிமை மிக்கது என்ற ஆங்கிலப் புலவர் செல்லி ‘கவிதைக் காப்பு’ எனும் நூலில் இலக்கியச் சுவையின் நுண்ணிய மனப் பாங்கினை விளக்க முயல்வர்.” இங்கு தலைவனும் தலைவியைக் காணாது, காணவேண்டும் என்ற ஆர்வத்தால் வருந்தியிருக்க அவனின் எண்ணத்தை, வலிமையை இழக்கச் செய்யும் அச்சாயல், “தீஓ ரன்னஎன் உரன்அவித் தன்றே” (குறுந்., பா.95:5) என்று தன்வலிமை கெட்டழிவதைக் கூறுகின்றான். மற்றொரு தலைவனோ, அவள் கண்களோ, “ஏ ஒத்து, எல்லோரும் அறிய நோய்செய் தனவே” (குறுந்., பா.72:2) எனக் கவல்கின்றான். தலைவனின் வலிமையும், நெஞ்சுரமும் தலைவியைக் காணாத பொழுது அழிகின்றது என உளஇறுக்கம் கொள்கின்றான். “பல காரணங்களால் தலைவியைத் தலைவன் பிரிய நேரினும் அவளது அன்பினையே மையப் புள்ளியாகக் கொண்டு அவனது எண்ணமும் செயலும் அமைகின்றன” என்ற கருத்திற்கு இணங்க பொருளீட்டுவதற்காகப் பலநாட்கள் பிரிந்து பின்னர் தலைவியைக் காண விரைகின்றான். அவள் இருக்கும் இடமோ வெகு தொலைவு. அவளை உடனடியாகக் காணமுடியாத சூழலில் அவனின் ஆர்வமும் வழித்தொலைவும் ஒன்றொன்று போரிட்டு நிறைவேறா நிலையில், “ஈஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போல” (குறுந்., பா.131:4-5) என்ற வரிகள் சுட்டுவதைப் போல அவளைக் காணச் சிலநாட்களாகும் எனத் தலைவன் மனம் உழன்று இறுக்கமடைகின்றான். தலைவியைக் காணத் தலைவன் அல்ல குறிப்பட்டு நிற்கின்றான். அவளை உடனே காணவேண்டும், ஆனால் உடனே தலைவியைக்காண முடியாமல் போனதே எனும் அவத்தைக் கொண்ட நெஞ்சிடம், “ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை,புணர்ந்தோர் போலப் போற்றுமதி” (அகம். 342, 1-2) என்று கட்டறுத்துப் பாயும் தன் நெஞ்சிடம் சமாதானம் கூறி உளஇறுக்கம் அடைகின்றான்.

“தலைமேல் வெம்மை, காற்கீழ் வெம்மை, நெஞ்சத்துள் வெம்மை, இந்நிலையில் பாலைச்
செல்னர் பெரும் பாழான தோற்றத்தைக் காண்கின்றனர் என்று விளக்குவார் தனிநாயகர்.”

தலைவன் பொருளீட்டச் சென்ற பாலையில் தன்துயரையே பெரிதெனக் கருதும் உயிர்களிடையே தன்னோடு தன் தலைவியின் நினைவையும் மறக்க முடியாது, அவள்மீது கொண்ட ஆர்வத்தால், அன்பால்,

“சுடர்தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு,
உள்ளினை – வாழிய நெஞ்சே” (அகம்., பா.291:21-22)

என்ற வரிகளில் தன் நெஞ்சினை விளித்து அவள்மீது கொண்ட ஆர்வத்தாலும் அதை நிறைவேறாத பொழுதானும் தலைவன் மனஇறுக்கம் கொள்கின்றான். தலைவி மெல்லிய இயல்பு கொண்டவள். சிறு சிறு செயல்களுக்குக் கூட மனந்தாங்காது அழும் இயல்பு கொண்டவள். இத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவியிடம், தான் வினை காரணமாகப் பிரிந்து செல்வதைக் கூறியவுடன், “ஆடுவரி அலவன் ஒடுவயின் ஆற்றாது” (நற்., பா.106:3) அழும் தலைவி, பதில் ஏதும் கூறாது “ஞாழல் இதழைப் பிய்த்துப் பிசைந்தவள் ஆனாள். அந்நிலையைப் பாணனே! அறிந்தாயா? எனும் கேள்வியால் அவளைத் தனியே விடுத்துப் பிரிந்த குற்ற உணர்வால் இறுக்கமுற்று வினவுகின்றான் தலைவன்.

தலைவன் சிலநேரம் பயணத்தைத் தவிர்த்துச் செலவழுங்குதல் அவள் மீது கொண்ட அன்பாலும் தான் குற்றமுடையவனாக இருக்காது திகழவேண்டும் என்ற காரணத்தாலும் அம்முடிவினை எடுக்கின்றான். சிலபோது பொருளீட்டும் அவசியம் ஏற்பட்டவுடன் தலைவியிடம் இப்பிரிவை நீ பொறுத்திருக்க முடியுமா? எனக் குற்றவுணர்வுடன் அவளைக் கேட்பதற்கு முன்பாகவே, அவள் கண்கள், “நில்லாஆகி, நீர்விலங்கு அழுதல்” (குறுந்., பா.256:7) எனும் இந்நிலையால் தலைவன் தன் பயணத்தைத் தவிர்த்தொழுகினான். தலைவனின் அணைப்பு நெகிழ்ந்தாலும் வருந்தும் இயல்புடையவள் தலைவி. எனவே அவள் தலைவனையும், அவன் பிரிவையும் நினைந்து வருந்தாத நேரம் இருக்காது. தலைவனின் வருகையை நினைத்து, “நாள்முறை இழைத்த திண்சுவர் நோக்கியும்” (அகம்.,பா.289:9-10) என்ற பாடல் வரிகளில் சுவரில் பல்லி ஒலிப்பின் தெய்வத்தை வணங்கி நற்குறி சொல்வாயாக என வேண்டும் தன்மை கொண்டவள். அவள் மாலைக் காலத்தில் எவ்வாறு ஆற்றியிருப்பாளோ? எனத் தலைவியைப் பிரிந்த குற்ற உணர்வால் தலைவன் உளஇறுக்கம் அடைகின்றான்.

தலைவியை அடையவேண்டும் என்ற ஓர் அழுத்தமான தேவையிருப்பினும் அதனை அடைய முடியாதபடி உள்ளம் பொருளீட்ட விழையும்போது தலைவனுக்கு உளமுறிவு ஏற்படுகின்றது. உலகில் உள்ள இன்பங்களுள் தலைவியால் பெறும் நுகர்வு இன்பமே சிறந்தது எனக் கொள்ளினும் பொருளை விரும்பும் மனதோடு தலைவியைப் பிரிய, “அழல்எழு தித்தியம் அடுத்த யாமை நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு” (அகம்., பா.361:11-12) என்ற வரிகளில் விரும்புதல் போலக் குற்றமுடைய நெஞ்சமே, நீ மீண்டும் அவளிடம் சேர முயற்சிக்காதே என்று தலைவன் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சை விளித்து அடக்க முயல்கின்றான். விரும்பியவர்கள் எவ்விதத் துன்பமும் அடையக் கூடாதென விரும்பித் தொழுதல் அன்புடையாரின் இயல்பு.

தலைவியும் பிறையைத் தொழுது பிரிந்திருப்பாள். அந்நிலையில் தலைவன் பொருளை விரும்பி அவளை விடுத்து, மனமின்றி, “மன்றும் தோன்றாது, மரனும் மாயும்” (அகம்., பா.239:2) என்றவாறு திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு செல்கின்றான். அங்ஙனம் செல்கையில், ‘நீர் பொருளீட்டப் பிரிந்து காலம் தாழ்த்தி வருவீர்’ எனக் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் கூறிய கூற்றை நினைந்து குற்ற உணர்வோடும் உள இறுக்கத்தோடும் செல்கின்றான். நம்மை விரும்பும் அருள் கொண்டோரை விடுத்து நிலையில்லாப் பொருளை நச்சிச் செல்லும்போது, அச்செயல் குறித்தும் சிறுமை குறித்தும் நாணம் பிறக்கும், பொருளை விரும்பும் நெஞ்சிற்கு அதன் செயலை, தகாததை உணர்த்தி நாணம் பிறப்பிக்க எண்ணி, எம் தலைவியை விடுத்து யாம், “மணத்தலும் தணத்தலும் இலமே,பிரியின் வாழ்தல் அதனினும் இலமே” (குறுந்.,பா.168:6-7) எனக் கூறி எமக்குத் தலைவியின் உயிர்தான் தேவை, பொருளல்ல எனத் தன் மனதை இடித்துரைக்கின்றான். நம் நலனை விரும்பும் இயல்புடையோர் நலம்பெற நாமும் விரும்புவோம். இதுவே உள்ளத்தின் இயல்பும் கூட. ஆனால் தலைவனோ தலைவியின் மீது நாட்டம் கொள்ளாது, பொருள்நலனையே குறிக்கோளாகக் கொண்டு அவளை மறந்து பிரிந்தனன். ஆனால் நாணும்படி தலைவன் பாலை வழியில் எவ்விதத் துன்பமும் இல்லாதிருக்கும் பொருட்டுத்,

“தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியளி தானே” (அகம்., பா.287:1-3)

என்ற வரிகளில் தலைவி மீது தன் அருளில்லா நெஞ்சம் குறித்துத் தலைவன் நாணி உளஇறுக்கம் பெறுகின்றான். தலைவியைச் சந்தித்து மகிழ நினைத்த தலைவன், அவ்வெண்ணத்தைச் செயல்படுத்த இரவுக்குறியில் வருகின்றான். அப்படி வரும்பொழுது வழியின் அருமைப்பாடும், காவல் மிகுதியால் உளதாகும் அச்சமும், விலங்குகளால் ஏற்படும் அழிவும், துன்பமும், பிறவும் நினைத்துக் கவலை கொள்வதில்லை. இதைத் தொல்காப்பியர், “ஆற்றினது அருமையும், அழிவும், அச்சமும், ஊறும் உளப்பட அதனோரன்ன” (தொல்., களவு., நூ.1082) என்பர். ஆனால் தலைவியைச் சந்திக்க இயலாது அல்லகுறிப்பட்டுச் செல்லும் தலைவன், தன்னுடைய நெஞ்சிடம், ‘தலைவியைக் காணாத நீ அவள் மீதுள்ள அன்பின் மிகுதியால் வருந்துவாயோ? அல்லது அடிபட்ட பாம்பைப் போல் வாழ்வாயோ? எனக்கேட்டு, அவளைக் காணமுடியாத பெருவெறுப்பால், “புகல்அரும் பொதியில் போலப் பெறல்அருங் குரையள் எம் அணங்கி யோளே” (அகம்., பா.322:14-15) என்றவாறு தன்னிலை குறித்து வெட்கம் அடைகின்றான். அல்லகுறிப்பட்டுத் தலைவன் பல நாட்கள் தன் இல்லம் போய்ச் சேரும்போதுத் தலைவியைக் காண முடியாமையால் அவளை வெறுப்பதில்லை. இதுவே தலைவனின் சான்றாண்மைக்கு உதாரணம். எனினும் அவளைக் காணாத வெறுப்பால் தன் நெஞ்சிடம், வேளிரின் பொன்னைப் பெரினும் அவளைப்பெற இயலாது. எனினும் பாம்புகள் திரியும் சிறுவழியில் இரவில் பார்க்கச் செல்கின்றாய். இதனால் உனை நினைக்க, நினைக்க எனக்கு ஏளனச் சிரிப்பு உண்டாகின்றது. என் சொல் கேளாத நெஞ்சே என விளித்து,

“மாய இருள்அளை மாய்கல் போல,
மாய்கதில்” (அகம்., பா.258:7-8)

என்ற அடிகளில் மனமே! நீ இறந்துபோ! எனச் சாபம் விடுகின்றான். எனினும் தலைவியை வெறுத்து ஒதுக்குவதில்லை என்பதை அறியமுடிகின்றது. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவியின் அவள் வருத்தத்திற்குத் தானே காரணம் எனக் குற்ற உணர்வு ஏற்பட்டு வருந்துவான் தலைவன். இக்குற்ற உணர்வு தலைவன் தலைவியின் அன்புறு வாழ்க்கையை மேம்படுத்தவேயாகும். இதனைப் பெத்தரண் சலார், “கொண்டானுக்கும் கொண்டாளுக்கும் உடல், மன நிலையில் ஒத்த மதிப்பீடு இருப்பின் இல்லறம் சிறக்கும்” என்பர். ( ஆயசசயைபந யனே ஆடிசயடளஇ ஞ.115) மேலும், தலைவனை நினைத்து நீண்டநேரம் ஒரே இடத்திலேயே இருந்து மாலையிலும் வருந்துவாள். அவளுக்கு ஆறுதல் கூற யாரும் இருக்கமாட்டார்கள். அந்நிலையில், “பெருந்தோள் நெகிழ்த்த செல்லலொடு வருந்துமால், அளியள், திருந்திழை தானே” (அகம்., பா.169:13-14) எனத் தலைவி அடையும் துயர்குறித்துத் தலைவன் துன்பம் அடைகின்றான். தலைவன் குறித்துச் சென்ற கார்காலம் வந்துற்றது. அதோடு தலைவியின் துயரும் தொடங்கியது.
இந்நிலையில் தலைவன்,

“அருள்கண் மாறலோ மாறுக – அந்தில் அறன் அஞ்சலரே, ஆயிழை, நமர்” (அகம்., பா.144:6-7)
என்றவாறு பாகனிடம் உரையாடுகின்றான். “அப்பொழுது நம் போரின் வெற்றிப் பெருமிதத்தை அவள் சுற்றத்தவர் கூறக்கேட்ட பின்பு நம்மைத் தழுவினாற் போல் மகிழ்வாள்” எனக்கூறி மகிழ்கின்றான். அவளைக் குறிப்பிட்ட காலத்துள் சந்திக்க முடியவில்லையே எனக் குற்ற உணர்வு ஏற்பட்டாலும் அவள் செயல் குறித்துப் பாகனுக்குக் கூறுகின்றான். “வினை முடிந்து தலைவன் பாகனிடம் பேசும்போது தலைவன் மீதுள்ள மதிப்பால் இடையிட்டுப் பேசுவதில்லை.

காரணம் தேரை விரைவாகச் செலுத்துதலே தலைவனுக்குத் தரும் தக்க மறுமொழி என்பதுபோலப் பாகன் செயல்படுகின்றான்” என்பர் ஆ.அமிர்தகௌரி (சங்க இலக்கியத்தில் உரையாடல், ப.19). இவ்வாறு பேசாத பாகனிடம் தன்மன உணர்ச்சிகளைக் கூறி அவன்மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகின்றான் தலைவன்.

தொகுப்புரை

உணர்வுகள் மிகையாகும் போது பிரிதலும் புணர்தலுமாகிய இவ்விரண்டு உணர்வுகளுமே தலைவனைப் பெரிதும் ஆட்கொள்வன. எனவேதான் இவ்விரண்டு உணர்வுக்காலங்களிலும் தலைவன் தனிமொழி பேசித் தன்னுள்ளத்தைப் பாதுகாத்துக்கொள்வதுடன், தவறு செய்தல், அதனை மறைத்தல், அ¨சாது பொய் கூறுதல், இரந்து பின்நிற்றல் ஆகியவற்றால் உளமாறுபாடடைந்து கூற்றினை நிகழ்த்துகின்றான்.

பலகாரணங்களால் தலைவியைத் தலைவன் பிரிய நேர்ந்தாலும் அவளது அன்பினையே மையப்புள்ளியாகக் கொண்டு தலைவன் உளக்கூற்றுகள் நிகழ்த்துகின்றான். தலைவன் தன் காதலியை நினைத்துருகும் மனஉணர்வுகள் அகத்தில் இடம்பெற்று அவனின் நிலையை தெற்றென விளக்குகின்றன. வினைமேற் செல்லும் தலைவனின் மனப்போராட்டம் இடைச்சுரவழியில் நீண்டு இரக்க உணர்வைத் தோற்றுவிக்கின்றது.

உணர்வுகள் மிகையாகும்போது தலைவன் அதனை நெ¨சொடு பகிர்ந்து கொண்டு வேண்டாத உணர்வை உள்ளத்திலிருந்து மீட்டுப் புலம்பித் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றான். தலைவனின் மனக்குறையைத் தோழி மறுக்கும்போதும், தலைவி ஊடல் தணியாமையின்போதும், இடைச்சுரத் துன்பத்திலும், இரவுக்குறி மறுக்கப்பட்ட நிலையிலும், அல்லகுறிப்பட்டுச் செல்லும்போதும், வரைவு மறுக்கப்பட்டமையிடத்தும் உள்ளத்துயரடைகின்றான் தலைவன். • தலைவியின் உறவை விரும்புவதையும், அவள் துய ரடைவதையும் குறித்தே தலைவனின் மனநிலை விளங்குகின்றது. தலைவனின் உள்ளத்தில் எழும் கனவுகளுக்குக் காதல், அதனைச் செயற்படுத்துதல், தற்காப்பு ஆகிய உணர்ச்சிகள் காரணிகளாகின்றன.

தலைவி மீது கொண்ட காதல் உணர்வில் பேசும் தலைவனின் தனிமொழிகள் அவர்களின் மனப்போராட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.


முனைவர் க.முருகேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனிமனித உளவியல்”

அதிகம் படித்தது