மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களும், பாதிப்புக்குள்ளாகும் சமூகநீதியும்!

சுசிலா

Feb 27, 2021

மத்தியில் ஆளும் பாஜக அரசு 2014 -ல் வெற்றி பெற்றதிலிருந்து, சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலும், கடந்த 2019 -ஆம் ஆண்டு அரிதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததிலிருந்து, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை சிறிதும் தயக்கமின்றி ஒவ்வொன்றாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நம் அரசிலமைப்புச் சட்டத்திலிருக்கும் சோசியலிசம் என்பதற்கு எதிராக அனைத்து பொதுத் துறைகளையும் தனியார்வசம் ஒப்படைக்க எத்தனித்து, அதனை முழுமையாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம், சமூகநீதிக்கு எதிராகவும், உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் சில குறிப்பிட்ட வகுப்பினருக்கு ஆதரவாகவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி சற்று சிந்தித்தோமானால், இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு முறை என்பது தெள்ளத்தெளிவாக நமக்கு விளங்கும்.

ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படுத்தப்பட்டு, அடிமைகளாக, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாம், ஒரு நூற்றாண்டாக தான் இடஒதுக்கீடு என்ற துடுப்பு மூலம் கரையேறி , சிறிது அறிவு பெற்று, கல்வி, வேலைவாய்ப்புகள் என நமக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, முன்னேறிக் கொண்டிருக்கிறோம். காலங்காலமாக ஒடுக்கப்படுத்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் தங்களுக்கான உரிமைகளை போராடி, பெற்று முன்னேறிவரும் இந்த காலகட்டத்தில், இவைகளை தட்டிப் பறிக்கும் விதமாக, இவ்வளவு காலம் மறைமுகமாக செய்துவந்த கொடுமையை, இப்போது நேரடியாக நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசான பாஜக -ஆர்.எஸ்.எஸ் ஆட்சி தொடங்கி இருக்கிறது. உயர் வர்ணத்தினர் என்று கூறிக்கொள்பவர்களும், உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கும் மாபெரும் பாதக செயலை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில், பெரும்பான்மையினர், தாழ்த்தப்படுத்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் மற்றும் சிறுபான்மை மதத்தினரும் தான். அதாவது, 85 முதல் 90 விழுக்காடு ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்கள் தான் வாக்குவங்கியை நிர்ணயித்து, இந்நாட்டின் மக்களாட்சியை உறுதி செய்பவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், 10 விழுக்காடு உள்ள உயர் சாதியினர் மற்றும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பெரு முதலாளிகள், இந்த அரசாங்கத்தையும், ஊடகங்களையும், தன் கைவசம் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஆட்டிப்படைக்கிறார்கள் என்றால், இந்நிலை எவ்வளவு பேராபத்தானது என்பதை நாம் உணரவேண்டும்.

இந்த சுதந்திர இந்தியாவில், சுமார் 50 ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று சற்று வளர்ச்சியடைந்து வருகின்றனர். அதிலும், ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கும் 27% (மண்டல் கமிசன் மூலம் கிடைத்த) என்பது இன்றும் கூட பெயரளவில் தான் உள்ளது. முழுமையாக அதனுடைய பயனை நாம் பெறவில்லை என்பது தான் உண்மை. இதில், மேலும் ஒரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், பொருளாதாரத்தின் அடிப்படையில், நலிவடைந்த உயர்சாதியினர் என்ற பிரிவில் (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து, அவர்களை உள்ளே விட்டு, ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இந்த பாஜக ஒன்றிய அரசு ஒன்றிய அரசு வழிவகை செய்திருக்கிறது.

இந்த ஒன்றிய பாஜக அரசு, துவக்கத்தில், பொதுத்துறை பங்குகளை விற்றது. தற்போது என்னவென்றால், பொதுத்துறை நிறுவனங்களையே முழுமையாக விற்பனைசெய்து, பெரு முதலாளிகளின் கைகளில் தாரை வார்த்திருக்கிறது என்றால், இதை விட ஒரு கொடுமை இருக்க முடியுமா?
இது, இன்றுவரை பயன்பாட்டில் இருக்கும், தாழ்த்தப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு என்ற முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கு ஏதுவாக இருக்கப்போகிறது என்பதற்கு மாற்றுக்கருத்து என்ற ஒன்றிற்கு இடமே இல்லையே!
ஏனென்றால், தனியார் துறை என்பது இடஒதுக்கீடு இல்லாத துறை என்பது நடைமுறையில் இருப்பது தானே!

siragu thaniyarmayam3

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்.

1. பொதுத் துறை வங்கிகள்.
2. விமான நிலையங்கள்.
3. இன்று வரை லாபம் ஈட்டித்தரும் ஆயுள் காப்பீடு துறை பங்குகள்.
4. ரயில்வே துறை.
5. ஏர் இந்தியா விமான நிறுவனம்.
6. ரயில் ஓடக்கூடிய சில தண்டவாள தடங்கள்.
7. சில ரயில் நிலையங்கள்.
8. ரயில்வேவிற்கு சொந்தமான சில நிலங்கள்.
9. பாதுகாப்பு துறையில் கூட அந்நிய நாட்டின் முதலீடு பங்குகள் .
10. இஸ்ரோவில் கூட சில பங்குகள் தனியார் வசம்.

இப்படி, பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே, ‘அரசு வணிகம் செய்ய முடியாது. நிர்வாகம் தான் செய்ய முடியும். ஆதலால் தனியார் மயமாவதை தவிர்க்க முடியாது.’ என்று கூறியிருக்கிறார் என்றால், இதை நாம் எப்படி எதிர்கொள்வது என்பது விளங்கவில்லை. ஒருபுறம் வளர்ச்சி, தற்சார்ப்பு என்று கூறிக்கொண்டு, மறுபுறம் தனியார் வசம் ஒப்படைப்பது என்றால், இது என்ன வகையான கையாடல், நிர்வாகம், அரசாட்சி என்றே தெரியவில்லை… ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் மக்களே, நாம் அனைவரும் ஒன்றுகூடி எதிர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சமூகநீதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் நாம் துணைபோகக் கூடாது. இப்போது இதனை எதிர்க்காமல், வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தோமானால், நாளை வரும் நம் தலைமுறையினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். மீண்டும் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக, அடிமை மக்களாக வாழவேண்டிய நிலையினை நாமே உருவாக்கிவிடுவதற்குக் காரணமாக அமைத்து விடுவோம்.

siragu thaniyarmayam2

அதனால், தனியார்மயம் என்பது பொருளாதார அடிப்படையிலானது என்று அலட்சியப்படுத்தாமல், சமூகநீதிக்கானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

அதற்கான விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டுசெல்வோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களும், பாதிப்புக்குள்ளாகும் சமூகநீதியும்!”

அதிகம் படித்தது