மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் அவலநிலையும், ஆட்சியாளர்களின் அலட்சியமும்!

சுசிலா

Sep 22, 2018

Siragu avasara kaala2

கடந்த சில ஆண்டுகளாகவே நாம் கவனித்து வருகிறோம். நம் மாநில அரசு, மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசாக சிறிது கூட இயங்கவில்லை என்பது தெளிவான ஒன்று. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மயம். அதோடு மட்டுமல்லாமல், முழு அதிகாரத்தையும் மத்திய மோடி அரசிடம் இழந்து நிற்கிறது. மத்திய அரசு செய்யும் அனைத்து காரியத்திற்கும் தலையாட்டிக்கொண்டு, கைகட்டி சேவகம் புரிந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மேலும் தமிழ்நாட்டை விரோத மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது மத்திய பா.ச.க அரசு.

சாமானிய மக்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் சிறிதும் தென்படவே இல்லை. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு வணிகர்கள், என அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, துன்பப்படுத்தப்படுகிறார்கள். இயற்கை வளங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. மீத்தேன், கெயில், நியூட்ரினோ, கூடங்குளம் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிப்பதில் குறியாய் இருக்கும் மத்திய அரசிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி, சொந்த மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது ஆளும் அதிமுக அரசு. மேலும் ஆற்றுமணல் முழுதும் சுரண்டி எடுக்கப்பட்டு, நீராதாரத்தையும் கெடுத்துள்ளனர்.

இனி மணல் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், தேவையான மணலை வெளியிலிருந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றால், அதற்கும் பணம் இல்லை என்று வாங்க தயங்குகிறது. அரசு கஜானாவில், பணம் இல்லை என்று தான் பேருந்து, பால் கட்டணங்களை உயர்த்தியது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மாத ஊதியம் இரு மடங்கு உயர்த்தியது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. மத்திய அரசோ, எல்லாவற்றிலும், உணவுப்பொருட்கள் முதற்கொண்டு, தற்போது பெட்ரோலியம் வரை, வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு, மிகவும் கீழே சரிந்துள்ளது. போட்டிபோட்டுக்கொண்டு, மத்திய, மாநில அரசுகள், பொருளாதாரத்தை மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளன.!

இவைகளை எதிர்த்துப் போராடுபவர்களை, கேட்பவர்களை, தேச துரோகி, சமூகவிரோதி என்ற பெயரில் கைது செய்கிறது. தாக்குகிறது என்றால், இங்கே என்ன ஆட்சி நடக்கிறது என்ற சந்தேகம் மக்களிடையே வர தானே செய்யும். தங்கள் உயிரைப் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்களை, பத்தாம் வகுப்பு படித்த மனைவியை கூட சுட்டுத் தள்ளிய அரசாங்கம் தானே இது. துண்டறிக்கை கொடுத்து, மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்திய தோழர் வளர்மதி, தோழர் திருமுருகன் காந்தி அவர்களை கைது செய்து, ஒருகட்சியை ஒழிக என்று முழக்கமிட்ட ஒரு காரணத்திற்காக, வெளிநாட்டில் படிக்கும் ஒரு மாணவியை கைது செய்கிறது. அவரின் பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது என்றால், இங்கே சனநாயக உரிமையைப் பறிக்கிறது இந்த அதிமுக அரசு என்பது தானே உண்மை.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்றால், இவர்களை கைது செய்யும் இந்த அரசு, மத்திய அரசிற்கு வேண்டப்பட்டவர்களை, அதிகாரத்தில் இருப்பவர்களை, தண்டிப்பதில்லை. எந்த நடவடிக்கையும் எடுப்பதுவுமில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஊடகத்தில், பணிபுரியும், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக பதிவு செய்த எஸ்.வி. சேகரையோ, சமீப காலமாக, மத கலவரத்தை தூண்டும் விதத்திலும், அநாகரீமாக பேசுவதும், நீதிமன்றத்தையே அவமதிக்கும் விதத்திலும், வன்முறையை தூண்டக்கூடிய அளவில் பேசிக்கொண்டிருக்கும் எச்.ராஜா அவர்களையோ கைது செய்ய மறுக்கிறது, தயங்குகிறது. இதில் என்ன ஒரு மிகப்பெரிய கொடுமையென்றால், இவர்களை, உயர்நீதிமன்றமே கைதுசெய்ய உத்தரவிடும், முழு பாதுகாப்போடு அவர்களை உலாவவிட்டிருக்கிறது இந்த அதிமுக அரசு. இவை அனைத்திற்கும் காரணம், மாநில உரிமைகளை முழுதுமாக பறிகொடுத்துவிட்டு மத்திய அரசின் காலடியில் விழுந்து கிடப்பது தான்.!

சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தீர்மானம் போட்டு, சட்டமியற்றிய நீட் தேர்விற்கான தமிழகத்திற்கு விலக்கு என்ற மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது என்னவாயிற்று என்றே தெரியாத, தெரிந்துகொள்ள ஆர்வமில்லாத அரசாக, இந்த அரசு விளங்குகிறது. இதனால், இன்று வரை, எத்தனை, எத்தனை உயிர்களை நாம் பலி கொடுத்திருக்கிறோம். அரச பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம் என்று கொஞ்சம் கூட குற்றயுணர்ச்சி இல்லாமல் அமைச்சர்கள் பேசுகிறார்கள். அப்பட்டமாக, மத்திய அரசின் விரோத செயல்களை கண்முடித்தனமாக, இந்த அதிமுக அரசு ஆதரிக்கிறது, அஞ்சுகிறது, என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த அவல நிலைக்கு முழு காரணம், அதிமுக அரசு மட்டுமே. ஆட்சியாளர்களின், பொறுப்பற்றத் தனமும், அலட்சியமும், நம் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. மாநில உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துவிட்டு, மக்களை பாதுகாக்க தவறிய இந்த அரசை நினைத்து, மக்கள் அனைவரும் கொதிநிலையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சரியான காலம் வரும்போது, இதற்கு ஒரு நல்ல படம் புகட்டுவார்கள். இவ்விரண்டு அரசுகளையும், புறக்கணிப்பார்கள் என்பது நிதர்சனம். கருத்துரிமை, பேச்சுரிமை, மறுக்கப்பட்ட நாடு, எப்படி ஒரு சனநாயக நாடாக இருக்க முடியும்? இங்கு எங்கே இருக்கிறது சனநாயகம் என்ற கேள்வி மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.!

ஒன்று மட்டும் நிச்சயம், இந்த அரசுகள் மக்களுக்கான அரசுகள் அல்ல என்பதை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் என்பதை இந்த ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் அவலநிலையும், ஆட்சியாளர்களின் அலட்சியமும்!”

அதிகம் படித்தது