மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகமும் மழை வெள்ளமும்

கி.ஆறுமுகம்

Dec 19, 2015

thamilagamum mazhai vellamum14‘எல் நினோ’ என்பது பருவநிலை மாற்றத்தினைக் குறிக்கும் பெயர். உலகில் பெருகிவரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் வெப்பநிலை உயருகிறது. இதனால் கடல் நீர் ஆவியாகும் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. இந்த 2015-ம் ஆண்டினை ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது எப்பொழுதும் இருப்பதைவிட அதிகமாக 80 டிகிரி பாரன்கீட் வந்துள்ளது. இதுபோன்று இந்தியப் பெருங்கடலிலும் வெப்பநிலை உயருகின்றது. வளிமண்லடத்தில் வெப்பநிலையின் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றது, கடல் நீர் மட்டம் உயருகிறது, கடல் நீர் ஆவியாவதும் அதிகமாகிறது. இந்த ‘எல் நினோ’ பருவமாற்றத்தினை, கடந்த அக்டோபர் மாதமே ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அளவுக்கு அதிகமான கடல்நீர் ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து, அங்கு மழை தரும் மேகங்களாக மாறியதின் விளைவைத்தான் தமிழகம் தற்போது சந்தித்தது.

thamilagamum mazhai vellamum3இந்த உலகில் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கென்று (climate change conference) வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என்று அனைத்துத் தலைவர்களும் ஒன்று கூடி Global warming –யை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை உயர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் தொழிற்சாலைகளின் புகை, வாகனப்புகை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் வாயு, காடுகளை அழித்தல், சாலைகளை விரிவுபடுத்துவதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுதல் போன்றவற்றால் Global warming ஏற்படுகிறது. உலகத் தலைவர்கள் வெப்பமயமாதலை (Climate change conference) தடுப்பதாக AC அறையில் அமர்ந்துதான் பேசுகிறார்கள். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை குறை கூறுகிறது, வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை குறை கூறுகிறது. இப்படி மாறி மாறி வெறும் பேச்சு மட்டுமே நடைபெறுகிறதே தவிர, வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கப்போவதில்லை.

thamilagamum mazhai vellamum9நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புதியதாக சாலை அமைக்கும் போது, சாலை ஓரத்தில் இருந்த பல மரங்களை வெட்டி அழித்த நமது அரசு மற்றும் அதிகாரிகள் எத்தனை மரங்களை மீண்டும் நட்டு வளர்த்துள்ளனர். மரத்தை வெட்டினால் மரம் மீண்டும் நட வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் அந்த மரம் நடப்படுகிறதா?, பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா?. 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் எத்தனை மரங்கள் இருந்தன என்று நாம் கவனித்தது உண்டா?.
அப்போது அந்த சாலையில் நான் பயணித்த போது இரவில் வாகனம் செல்லுவது குகையில் செல்லுவது போன்று இருக்கும். அந்த அளவில் தொடர்ச்சியாக மரங்கள் இருந்தன. அந்த அனைத்து மரங்களையும் நாம் அழித்துவிட்டோம். விளைவு பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு. வெட்டிய மரங்களுக்கு மாற்றாக சாலை ஓரங்களில் மரங்களை நடவில்லை. இன்று சாலை ஓரங்களில் மரங்களை நட்டாலும் அதனையும் சாலை விரிவாக்கம் என்று சில ஆண்டுகளில் வெட்டி விடுகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தவர்கள் சாலையில் இருந்து சுமார் 15 அல்லது 20 அடி தூரத்தில் இருபுறமும் ஒரு மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட கல்தூண் சுமார் 3 அடி உயரத்தில் இருக்கும். இந்த கல்தூணை, தற்போது இருக்கும் சாலையை வருங்காலத்தில் மீண்டும் அகலப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர். அதன் அருகில் நாம் தொடர்ச்சியாக மரங்களை நட்டோம் என்றால், வருங்காலத்தில் சாலை ஓரங்களில் பல மரங்களை நம் சந்ததியினர்கள் பார்ப்பார்கள்.

அன்று நம் முன்னோகள் சாலை ஓரங்களில் வளர்த்த மரங்களினால் பல நன்மைகள் நமக்கு இருந்தது. இயற்கை பாதுகாப்பாக இருந்தது, மண் அரிப்பு இல்லாமல் இருந்தது, அந்த மரங்களில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு இடம் இருந்தது, ஆடு மாடுகள் இளைப்பாற நிழல் இருந்தது. இந்த மரங்களில் அதிகமாக புளிய மரம் இருந்தது, இதிலிருந்து மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் புளி கிடைத்தது. அம்மரத்தின் புளியை எடுப்பதற்கு அந்த மரங்களை அரசு குத்தகைக்கு விட்டதின் மூலம் அரசுக்கு வருமானம் இருந்தது. இந்த அனைத்து நன்மைகளையும் நாம் வளர்ச்சி என்ற பெயரில் அழித்துள்ளோம்.

thamilagamum mazhai vellamum10இன்று நாம் அறிவியல் ஆராய்ச்சிக்காக பல ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துகிறோம். இயற்கையை அறிந்து கொள்வதற்கும் அதன் பாதிப்புகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக வாழ்வதற்குமான காரணங்களால், நாம் அனுப்பும் ராக்கெட்டுகளின் மூலம் கூட global warming –யைத் தான் உருவாக்குகிறோம்.

இயற்கையை வாழவைத்து அதனை சார்ந்துதான், நம் வளர்ச்சியும் வாழ்வும் அமையவேண்டும் என்று நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையை பஞ்ச பூதங்களாகப் பிரித்து வழிபட்டனர். நீர், நெருப்பு, வானம், பூமி, காற்று போன்றவற்றை கடவுளின் பெயர் கொண்டு வழிபட்டனர். இதனை ஏன் பூதங்கள் என்று கூறுகின்றனர் என்று இன்று தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் புரியும், ஒரு பழமொழி உண்டு ‘அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்று. ஆனால் இயற்கை என்று கொல்லும் என்று எவரும் கூற முடியாது. இயற்கையை வாழவிட்டால், நம் வாழ்க்கை சிறக்கும்; அதனை அழித்தால் நமக்கும் அழிவு நிச்சயம். உலகம் உருண்டை என்று கூறுவார்கள், உருண்டையாக இருப்பது இயற்கை நமக்கு மறைமுகமாக பாடம் சொல்லுகிறது. நாம் தொடங்கும் இடத்தில் நாம் வந்து சேருவோம். இன்றைய அறிவியல் நன்மையைவிட அழிவுகள் தான் அதிகம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியத்தில் புல் பூண்டு ஓர் அறிவு என தொடங்கி ஆறு அறிவு மனிதன் என்றும், சிறு புல்லின் மீதுள்ள பனித்துளியில் மிக தொலைவில் உள்ள பனைமரத்தின் உருவத்தினை காட்டும் என்று, தொலைநோக்கியைப் பற்றி கூறிய நம் தொல்காப்பியர் இயற்கையை அழித்தா இதனை கற்றார்?. கட்டிடத் துறையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் சோழ அரசர் கரிகாலன் காவேரியில் கட்டிய அணை இன்றும் கம்பீரமாக உள்ளது. அன்று காவேரியில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சூழலிலும் மிகப் பெரிய அணையைக் கட்டிமுடித்தனர். ஆனால் நாம் இன்று தண்ணீர் இல்லாத ஆற்றில் பாலம் கட்டுகிறோம் அது தண்ணீர் வந்த உடன் காணாமல் போய்விடுகிறது. இதுதான் நமது இன்றைய அறிவியல் வளர்ச்சி. தற்போது தமிழகத்தில் பருவமழை தாக்குதலில் நாம் பெரிதும் நிலைகுலைந்து உள்ளோம், இதற்கு நாம் தான் காரணம்.

chennai_rains10நான் கிராமத்தில் உள்ள வீடுகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் 2- அடி இடைவெளி இருக்கும். தெருக்களில் நடந்து செல்லும் போது இந்த இடைவெளியில் நுழைந்தால் எந்த தெருவிற்கும் செல்ல முடியும், எந்த வீட்டுக்கும் செல்ல முடியும் அதுபோன்று இடைவெளி இருக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இதுபோன்று மழைக் காலங்களில் தண்ணீர் அந்த இடைவெளிகளின் வழியாக ஓடிவிடும். போவதற்கு வழியின்றி தேங்கி நிற்காது. வீடுகளில் சன்னல் வழியாக காற்றும், சூரிய ஒளியும் வீட்டினுள் வரும். ஆனால் இதுபோன்று சென்னையில் நாம் வீடுகட்டும் முன்பு சிந்தித்தது உண்டா? அனைத்தும் நமக்கு வந்த பின்தான் இப்படி என்று சிந்திக்கிறோம். வரும் முன் சிறிதளவு கூட சிந்திப்பதில்லை.

thamilagamum mazhai vellamum12இந்த பாதிப்பில் பல தொண்டு நிறுவனங்கள் மக்களின் நிலைமையை சரி செய்ய பல முயற்சிகளும், பல நன்மைகளையும் செய்து வருகின்றனர். இவை அனைத்தும் சரியாக உள்ளதா?, பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் நன்மை அடைந்தனர்?, எத்தனை பேர் எதுவும் கிடைக்காமல் துன்பப்படுகின்றனர்?. கொடுப்பவர்கள் சரியாக பாதிக்கப்பட்ட இடத்தினை அறிந்து, அங்கு சென்று முறையாக அவர்களே வீடு வீடாகச் சென்று கொடுத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட அனைவரும் நலம் பெற முடியும். இல்லையெனில் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு, போய் சேர்வதில்லை. பெரும்பாலானவர்கள் பொருட்களை வாகனங்களில் எடுத்து வந்து கொடுக்கும் பொழுது மக்கள் கூட்டம் வாகனத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் சிலர் பொருட்களைப் பெறுகின்றனர், சிலருக்கு கிடைப்பதில்லை. பொருட்கள் கிடைக்கப் பெற்றவர்கள் மீண்டும் வாங்குகிறார்கள், முடியாதவர்கள் ஓரம் நின்று வேடிக்கையும் துன்பமும் மட்டும்தான் அவர்களுக்கு. இந்தத் தன்னார்வத் தொண்டர்கள் பலர் பெரும் பணக்காரர்கள் இல்லை, ஆனாலும் அவர்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்கின்றனர். இங்கு ஒரு சிறுகதையை நான் தெரிவிக்கிறேன். இக்கதை நான் படித்ததுதான்.

Floods in Chennaiஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவன் கால் சற்று ஊனம் உடையவன், இவன் இளநீர் விற்று வாழ்ந்து வந்தான். ஒரு முறை இவன் நடந்து செல்லும் போது, ஒரு மரத்தின் அடியில் ஒரு துறவி மக்களின் முன்பு நீங்கள் வாழும் போது மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள், தானம் தருமங்களையும், நன்மைகளையும் செய்யுங்கள். அது உங்களை சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லும் அல்லது அடுத்தப் பிறவியில் நீங்கள் மிக உயர்ந்த பிறவிகளாகப் பிறப்பீர்கள் என்று கூறினார்.

உடனே இளநீர் விற்பவன் அந்தத் துறவியிடம் சென்று,

இளநீர் விற்பவன்: சாமி நீங்கள் கூறியதை நான் கேட்டேன், நான் இதுவரை என் வாழ்நாளில் எவருக்கும் உதவியும், தானம் தருமங்களையும் செய்தது இல்லை, நான் இனி சொர்க்கம் செல்ல முடியுமா?.

துறவி: நீ என்ன வேலை செய்கிறாய்?

இளநீர் விற்பவன்: நான் இளநீர் விற்பவன்.

துறவி: இன்றிலிருந்து நீ தினம் ஒரு இளநீரை இலவசமாக தானம் செய்ய, அடுத்தப் பிறவியில் ஒரு அரசனாகப் பிறப்பாய்.

இவனும் அவர் கூறிய படியே இளநீரை, தினம் ஒருவருக்கு தானம் செய்தான். அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறந்ததும், இவனுக்கு முன் பிறவி நினைவுகள் இருந்தது. துறவி கூறியதைப் போன்று, இப்பிறவியிலும் இளநீரை தினம் ஒன்று என்று தானம் கொடுத்தான். அடுத்தப் பிறவியில் அவன் மீண்டும் இளநீர் விற்பவனாகவே பிறந்தான். ஆனால் உடலில் எந்த ஊனமும் இல்லாமல் நன்றாக இருந்தான். இப்போதும் அவனுக்கு முற்பிறவி நினைவுகள் இருந்தன. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, நாம் தானம் செய்தும் ஏன் சொர்க்கம் செல்லவில்லை என்று குழப்பத்தில் இருந்தவன் மீண்டும் ஒரு துறவியை சந்தித்து நடந்ததைக் கூறுகிறான்.

இளநீர் விற்றவன்: சாமி, நான் ஏன் சொர்க்கம் செல்லவில்லை.

துறவி: நீ முற்பிறவியில் செய்த பலனுக்கு அரசன் ஆனாய். அரசன் ஆன பிறகு கூட உன் தகுதி தெரியாமல் நீ இளநீரை மட்டும் தானமாகக் கொடுத்ததினால்தான் நீ மீண்டும் பிறவி எடுத்துள்ளாய். கொடுத்தது சிறியதாக இருந்தாலும் நீ செய்தது தானம், எனவே நீ ஊனம் இல்லாமல் பிறந்தாய்.

thamilagamum mazhai vellamum13தானம் வேறு, தருமம் வேறு. தானம் என்றால் எவர் ஒருவருக்கு எது தேவையோ அதை மற்றவரிடம் கேட்டு பெறுவது தானம். எனவே தான் இரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் என்கிறோம். தருமம் என்றால் வாழ்க்கையில் துன்பப்படும் ஒருவருக்கு அவரின் தேவையறிந்து தானாகச் சென்று உதவி செய்வதுதான் தருமம். ஆனால் இன்று தமிழகத்தில் பலர் தாங்கள் செய்யும் உதவியைக் கொண்டு மக்கள் மத்தியில் விளம்பரங்களைத் தேடவே செய்கிறார்கள். இது போன்றுதான் நம்மில் சிலர் இன்று உள்ளனர்.

நாம் ஏரி, குளம், ஆறு என்று தெரிந்துதான் வீட்டு மனை வாங்கினோம், வீடு கட்டினோம். தெரியாமல் செய்தால் தான் தவறு, தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்து செய்தால் அது குற்றம், குற்றத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. அதுதான் இன்று இயற்கை நமக்குக் கொடுத்துள்ளது.

பிறந்த உயிரினம் அனைத்தும் ஒரு நாள் இறக்க வேண்டும். மனிதன் இறந்ததும் உடலை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கை இயற்கையுடன் இணைந்துதான் அமைய வேண்டும். இந்தப் பாடத்தினை நாம் உணர்ந்து இனியாவது விழித்துக் கொள்ளவில்லையெனில் நம் சந்ததியினர் வாழ்வதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நாம் எந்த செயலையும் அரசிடம் தான் எதிர் பார்க்கிறோம், நாமாகவே சிந்திப்பதில்லை. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அரசு நினைத்தால், உடனே அது மக்களுக்கு எதிரானது என்று போராட்டம்தான் செய்கிறோம். மக்களுக்கு எதிரான திட்டம் செயல்படுத்தும் அரசை, மீண்டும் மீண்டும் நாம் ஏன் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது நம் தமிழக அரசு ஒரு குளிர்பானத் தொழிற்சாலைக்கு 1000 லிட்டர் தண்ணீரை ரூ 33 க்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை எதிர்க்கும் நாம் அரசை குறை கூறுகிறோம், திட்டம் வேண்டாம் உடனே கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தத் திட்டம் இங்கு செயல் இழந்தால் இந்தியாவில் வேறொரு இடத்தில் தொடங்கப்படும்.

ஏன், நாம் அனைவரும் அந்த குளிர்பானத்தை குடிப்பதை நிறுத்திவிட்டால் தொழிற்சாலை மூடப்படும். இந்தியாவை விட்டு வெளியேறும், இதனை ஏன் நாம் சிந்திப்பதில்லை. நம் இளைஞர்கள் எத்தனை பேர் இதனை பேசிவிட்டு செயல்படுத்தாமல், அடுத்த நிமிடத்தில் கடையில் அந்த குளிர்பானத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். எந்தச் செயலும் நம்மை நேரடியாக பாதித்தால் நமக்கு துன்பம். அதுவே சமுதாயத்தில் ஏற்பட்டால் சில காலம் அதற்காகப் போவது, பின் அதை மறந்து விடுவது. ‘சமுதாயம்தான் நாம்’ என்று ஏன் சிந்திப்பதில்லை. அது நமக்குப் பிறகு நம் சந்ததியினர்களை பாதிக்கும் என்று கூட நினைப்பதில்லை. இதற்கும் ஒரு சிறுகதை சொல்லுகிறேன், இதுவும் நான் படித்தது.

ஓர் ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டில் ஆடு, கோழி வளர்த்து வந்தான். அவன் வீட்டில் எலி ஒன்றும் வாழ்ந்து வந்தது. விவசாயி எலியைப் பிடிப்பதற்கு எலிப் பொறியை வைத்தான். அதை அறிந்த எலி ஓட்டமாக ஓடிச் சென்று, கோழி அண்ணா! என்னைப் பிடிப்பதற்காக பொறி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து நான் தப்பிக்க எனக்கு ஆலோசனை கூறுங்கள் என்றது. அதற்கு கோழி, நீ எல்லாம் என்னிடம் பேச தகுதியில்லை, உன்னை நீ பார்த்துக்கொள் என்று கூறிச் சென்றது. உடனே எலி ஆட்டிடம் சென்று ஆலோசனை கேட்டது. ஆடும் எலியை அலட்சியப்படுத்தியது. வருத்தத்துடன் எலி சென்றது.

இரவில் பொறி வைக்கப்பட்டது, காலையில் விவசாயின் மனைவி பொறியில் எலி உள்ளதா என்று பார்த்தாள். அதில் இருந்த பாம்பு அவளை கடித்துவிட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அவளைக் காண உறவுகள் வந்தனர். அவர்களில் சிலர், இவளது உடல் தேற சூப்பு குடித்தால் சரியாக இருக்கும் என்றார்கள். உடனே கோழி, சூப்பாக அடுப்பில் கொதித்தது.

அவள் வீட்டுக்கு வந்ததும் உறவுகள் அனைத்தும் வந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. விருந்துக்கு ஆடு உணவானது. எலிக்கு உதவ மறுத்தவர்கள் தனக்கு நாளை என்ன வரும் என்று எண்ணவில்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயம் என்று எண்ணாமல் சுயநலத்துடன் இருந்ததினால் வந்தது இந்த நிலை.

நாமும் இது போன்றுதான் உள்ளோம். இன்று மற்றவருக்கு நாளை நமக்கு என்று எதையும் உணர்வதில்லை.

இந்த நிலை மாற வேண்டும். சமுதாயம் நல்வழிப்படவேண்டும் என்று விரும்பினால், மாற்றத்தினை குழந்தைகளிடம் இருந்து தொடங்குங்கள். குழந்தைகள் தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்துவார் என்று சொல்லாமல், நீ நல்லது செய் கடவுள் உன்னை காப்பார் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நடந்து செல்லும்போது முள் குத்தினால் நாம் அனைவரும் முள் குத்தியது என்றுதான் கூறுகிறோம், எவரும் நான் முள்ளை மிதித்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்வது கிடையாது. நாம் மிதித்த முள் நம்மை குனிந்து எடுக்க வைக்கிறது. இது போன்று உன் வாழ்வில் எவரும் உன்னை மிதித்தால் அவர்கள் உன்னைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவில் நீ உயர்ந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகளுக்கு நற்சிந்தனை விடயங்களை சொல்லி வளர்த்து வந்தால் நாளைய சமுதாயம் நிச்சயம் நல்வழிப்படும்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகமும் மழை வெள்ளமும்”

அதிகம் படித்தது