மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்களின் ஆடையும் ஆபரணங்களும் (பகுதி – 17)

முனைவர். ந. அரவிந்த்

Jul 31, 2021

சங்க காலம் முதல் தமிழக ஆண்களின் உடைகள் வேட்டி, சட்டை மற்றும் துண்டு ஆகும். அவை அனைத்தும் சுத்தமான பருத்தியினால் நெய்யப்பட்டவைகளே.

ஆண்கள், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்த ஆபரணங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு சில ஆண்கள் விரல்களிலும், கைகளிலும், கழுத்திலும் பொன் நகை அணிகின்றனர். சில ஆண்கள், காதணிகளை பயன்படுத்துவதும் இன்றுவரை வழக்கமாக உள்ளது.

தமிழ் பெண்களை பொறுத்தவரை, விரல்களில் மோதிரமும், கைகளில் வளையல்களும், கால்களில் கொலுசும், கழுத்தில் தங்க மாலையையும், காதணிகளையும் அணிகின்றனர். பொதுவாக, காதணிகள் தங்கத்திலும், கொலுசு வெள்ளியிலும் செய்யப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் தாவணியும், திருமணமான பெண்கள் சேலையும், மூக்குத்தியும் அணிகின்றனர்.  பருவ வயதை அடைந்த பெண்களும் மூக்குத்தியை அணிவது வழக்கம்.

siragu-aabaranangal1

சிறு குழந்தைகளுக்கு இடுப்பில் வெள்ளியினால் கயிறு கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதுபோல், அரைஞான் கயிறு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் அணியப்படுகிறது.

திருமணமான தமிழ் பெண்கள் மட்டும் கழுத்தில் தாலியும், காலில் மெட்டியும் அணிவது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. தமிழக பெண்கள், தாலிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அதற்கு பின்னணியில் காரணமும் வரலாறும் உண்டு. தமிழகத்தில், திருமணத்தின் போது மணமகன் மணமகளின் கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சு போடுவதன் மூலம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு புனிதமான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திடுகின்றனர். தமிழகத்தின் மாநில மரம் பனை மரம். பனை மரத்தில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை, தாலம் பனை. இந்த வகை பனைகள் விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.  இந்த மரத்தில் ஓலையை வைத்துதான் ஆதி தமிழன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவளின் கழுத்தில் கட்டியுள்ளான். தாலம் பனையிலுள்ள ‘தாலம்’ என்ற வார்த்தையிலிருந்தே ‘தாலி’ என்ற வார்த்தை வந்தது. அதற்கு பின்னர், விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி பெண்ணின் கழுத்தில் கட்டும் வழக்கம் வந்தது. மஞ்சளை கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் தடவுவார்கள். தமிழர்களைப் பொறுத்தவரை மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள். மஞ்சளும் வேம்பும் உலகின் ஒப்பில்லா கிருமி நாசினிகள். மஞ்சள் தாலி கட்டிய பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு. மணமான பெண் ஒரு கருவை சுமக்கும்பொழுது, அப்பெண்ணும், சிசுவும் நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயத்தை தடுக்கும் ஆற்றல் கிருமி நாசினியான மஞ்சளுக்கு உள்ளது.

பனை ஓலையும் மஞ்சளும் தாலியாக பயன்பட்டதற்கு காரணம் அவை இரண்டும் நம் மண்ணில் செழிப்பாக வளரக்கூடியவை. ஒவ்வொரு இடத்தின் பழக்க வழக்கங்களும், கலாச்சாரமும் அந்த பகுதியின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே அமைகின்றன. சமீப காலத்தில்தான் தங்கத்தில் தாலி செய்யும் பழக்கம் தமிழகத்தில் வந்தது. உடலிலுள்ள வெப்பத்தைக் ஈர்த்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய சக்தி தங்கத்துக்கு உண்டு. தங்க நகைகள் அணிவதால் பெண்களின் உடல் வெப்பம் சமநிலையடைகிறது. ஆனால், இன்று தங்கம் அணிவது ஆடம்பரமாகக் கருதப்படுகிறது. தேவைக்கு அதிகமாக தங்க அணிகலன்கள் அணிவதும் தவறாகும்.

திருமணமான பெண்களுக்கு கழுத்தில் தாலி முதன்மையானதாகவும், அதற்கு அடுத்ததாக காலில் மெட்டியும் மிக முக்கியமான அணிகலன்களாக உள்ளன. திருமணம் ஆனதும் காலின் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டியை அணிவதற்கு காரணம் உண்டு. காலின் கீழ்ப்பகுதியில், உடலின் அனைத்து பாகங்களுக்குமான புள்ளிகள் உள்ளன. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. பெண்கள் தரையில் நடக்கும் போது இம்மெட்டி விரலுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்த அழுத்தம் பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் மெட்டியை எக்காரணம்கொண்டும் காலிலிருந்து நீக்ககூடாது.

மூக்கு மற்றும் காது பகுதியில் சிறு துளையிடுவதால் உடலில் உள்ள வாயு வெளியேற்கிறது. அது மட்டுமின்றி, மூக்குத்தி குத்துவது, மூளை நன்றாக செயல்பட உதவும். பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இந்த விழுதுகள் மூக்குப் பகுதியில், ஜவ்வு போல மெல்லியதாக இருக்கும். மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப் பகுதியில் உள்ள சில வாயுக்களை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த மூக்குத்தி பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, பார்வைக் கோளாறு மற்றும் மூக்கு சம்பந்தமான தொந்தரகளையும் சரி செய்ய மூக்குத்தி பெரிதும் உதவுகிறது.

சுமார், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் (உத்தேசமாககி. மு. 3000 ஆண்டுகளில்) எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசம் வந்த மக்களும் இதே ஆபரணங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். மோசே வாழ்ந்த கால கட்டத்தில், அவர் தலைமையில் திரளான மக்கள் இறைவனால் கடல், பாலைவனம் வழியாக நடத்தி வரப்பட்டனர்.  அந்த சமயத்தில், இறைவனுக்கு காணிக்கை செலுத்த மனப்பூர்வமுள்ள பெண்களும், ஆண்களும் காப்பு, காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் (கழுத்தில் அணியும் மாலைகள்) போன்ற சகல விதமான ஆபரணங்களை கொண்டு வந்துள்ளனர்.

மற்றொரு இடத்தில் திருவிவிலியம், ஆடை மற்றும் ஆபரணங்களைப்பற்றி இவ்வாறு விவரிக்கின்றது. இறைவன், ‘சீயோன் நகர பெண்கள் செருக்குக்கொண்டு தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள். தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள் மற்றும் தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்’ என்று இறைவன் உரைப்பதாக கூறப்பட்டுள்ளது.. ஆதலால், ‘இறைவன் அவர்களின் அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள், ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள், கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள், காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள், வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை களைந்துவிடுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பகுதியில், இறைவன் மக்களை பார்த்து, நான் உங்களுக்கு பூபின்னல் உடையால் உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் போர்த்தினேன். அணிகலன்களால் உங்களை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன், மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன் என்று கூறியுள்ளார். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய். நார்ப்பட்டும் மெல்லிய துகிலும், பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின என்றும் இறைவன் கூறியுள்ளார்.

உலகு முழுவதும், ஆடையும் அணிகலன்களும் மானம் காக்கவும், நலம் தரவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அதே ஆடையும் அணிகலன்களும் அளவுக்கு மீறி அணியும்போதும், அதனுடன் ஆணவமாகிய செருக்கு சேரும்போதும் அவை இறைவனுக்கு அருவருப்பாக மாறுகின்றன.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர்களின் ஆடையும் ஆபரணங்களும் (பகுதி – 17)”

அதிகம் படித்தது