மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்கள் யார் ?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 24, 2018

Siragu hinduism1

இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர்.

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழர்கள் யார்? என்ற கேள்வி வலுப்பெறுகிறது. இந்தக் கேள்வியை வரலாற்று ரீதியாக நாம் அணுக வேண்டிய தேவை உள்ளது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் வீர சைவர்கள், வீர வைணவர்கள் என்ற குரல், வரலாற்றில் பிழையான, ஆபத்தான குரல் மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு கொல்லைப்புறம் வழியாக வரவழைக்கும் குரலும் என்பதை நாம் மறந்து விட முடியாது.

தமிழர்களிடம் மதமற்ற கொள்கைகள் இருந்தது வந்தது, எந்த நிறுவனமயமாக்கப்பட்ட மதம் ஒன்றையும், தமிழர்கள் பின்பற்றவில்லை என்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. தமிழர்களிடம் திணை வழிபாடு இருந்தது, நடுகல் வழிபாடு இருந்தது.

பின் பார்ப்பனிய கொள்கைகளால் சிதைவுண்ட தமிழர்கள் மனதை, வடக்கில் தோன்றிய பௌத்த மதமும், சமண மதமும் ஆட்கொண்டது. ஆரிய மதம் யாகம் என்ற பெயரில் மிகக் கொடுமையான பசுவதை செய்து, அதை நெருப்பில் தூக்கி எறிந்து உண்டனர் என்பதை மனுதர்மத்தில் எவ்வாறு எழுதி வைக்கப்பட்டுள்ளது என்பதை தந்தை பெரியார் அவர்கள் குடியரசில் எழுதினார்.

Siragu hinduism3

“யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணர்கள் ஒன்று கூடிக் கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவைகளை கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும் அகோர மாமிச பிண்டங்களான இவர்களுக்கு அதுபற்றிக் கவலையா? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்களைத்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.”
(பெரியார், குடி அரசு-08.05.1948)

இந்தக் கொடுமைகளை எதிர்த்த மதங்களாக சமணம், பௌத்தம் உருவானது. இந்திய துணைக்கண்டம் முழுதும் பயணித்தது, தமிழ் நிலத்திற்கும் வந்தது. அடிப்படையில் மதமாக சொல்லப்பட்டாலும், அதன் கொள்கைகள், அமைதியை விரும்பும் தன்மை ஆரிய மதத்தின் செல்வாக்கை இழக்கச் செய்தது. தமிழ் மக்களும் அந்த மதங்களை ஏற்று வாழ்ந்தனர். பௌத்தத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்றது. அந்த காலக்கட்டத்தில் தமிழ் நூல்கள் பலவற்றை சமணர்களாக, பௌத்தர்களாக இருந்த தமிழர்கள் இயற்றினர். பின் பார்ப்பனிய மதம் செல்வாக்கு பெற்றபோது, பல நூல்கள் தீயில் எரிக்கப்பட்டும், நீரில் விடப்பட்டும் ஆரியம் அழித்தது. (போகி, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்களை ஆராயும்போது அவை எதற்காக பயன்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொள்ள முடியும்)

பௌத்த மதத்தை பொறுத்த வரை, நாகார்ஜுனன் என்ற பார்ப்பனன் அந்த மதத்தை ஒழிக்க முடியாத காரணத்தால் அதில் சேர்ந்து, பௌத்தத்தை இரண்டாக உடைத்தான். மகாயானம், ஹீனயானம் என இரண்டாகப் பிரிந்தது. மகாயானம் புத்தரை கடவுளாக சித்தரித்தது. அதை ஏற்காமல் புத்தரை பகுத்தறிவு கொண்ட மனிதனாக பார்த்தவர்களை ஈனப்பிறவிகளாகக் கூறி ஹீனயானம் எனும் பிரிவை ஏற்படுத்தினார்கள். இன்றைக்கும் ஈனப்பிறவி என பிறரை திட்டுவதற்கு பயன்படுத்தப்படுவது இதன் அடிப்படையில் தான்.

பௌத்தம் சிதைக்கப்பட்டு மீண்டும் பார்ப்பனிய வேத மதம் தழைக்கத் தொடங்கியது. அந்த காலக்கட்டத்தில் தான், பௌத்த துறவிகளின் தலையை கொய்து வர அரசர்களை வைத்து பார்ப்பனியம் சூழ்ச்சிச் செய்தது, திருஷ்ட்டி என்று வீடுகளுக்கு முன் நாம் கட்டி வைக்கும் தலைகள், பௌத்த பிக்குகளின் தலைகளை வெட்டிக் கொண்டு வந்தால் பரிசில் என அறிவித்த கொடுமையின் தொடர்ச்சியே என்பதை மறந்து விட முடியாது.

ஆக, தமிழர்கள் யார் என்ற வரலாற்றுக் கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றால், சமணர்கள், பௌத்தர்கள் என்பதையும் நேர்மையாக சொல்வதே பார்ப்பனியத்திற்கு விழும் அடி அதை விடுத்து சைவர்கள் என்றோ வைணவர்கள் என்றோ கூறுவது பார்ப்பனிய இந்து மதத்திற்கே வலு சேர்க்கும்.

சரி, பௌத்தர்களாக மாறி விடின் தமிழர்களின் இழி தன்மை மாறிவிடுமா என்றால், அங்கும் இந்திய அரசமைப்புப்படியே சிக்கல் உள்ளது இந்திய அரசமைப்பின் படி யார் இந்துக்கள் என்றால், யாரெல்லாம் கிறித்துவர்கள் இல்லையோ, யாரெல்லாம் இசுலாமியர்கள் இல்லையோ, யாரெல்லாம் பார்சிகள் இல்லையோ அவர்கள் அனைவருமே இந்துக்கள் என தான் எழுதி வைக்கப்பட்டுள்ளது, எனவே மாற்றத்தை அரசமைப்புச்சட்டத்தில் கொண்டுவராமல் இங்கு எந்த அடையாளமும் சட்ட ரீதியாக சாத்தியப்படாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

பார்ப்பனியம் மிக தந்திரமாக வேலை செய்துள்ளது என்பதை மறுக்க இயலாது. தமிழர்களின் அடிப்படைக் கொண்டாட்டங்களை எல்லாம், மரபுகளை எல்லாம் ஆரிய மயமாக்கி தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். பக்தி இலக்கியம் தமிழை வளர்த்ததாகக் கூறுவார்கள், ஆனால் தமிழை பயன்படுத்தி இந்து சனாதன மதத்தை வளர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை.

பாணர்கள் எப்படி ஊர் ஊராகச் சென்று தமிழ் வளர்த்தார்களோ அந்த அடிப்படையை வைத்தே பக்தி இலக்கியம் வளர்ந்தது. எப்படி அரசனை துயில் எழுப்ப பாணர்கள் படுவார்களோ அதைப்பயன்படுத்தியே கோயில்களில் இறைவனை எழுப்ப பாடல்கள் எனும் அடிப்படை எடுக்கப்பட்டது. கோயில் என்பதே சங்க இலக்கியத்தில் அரசன் வாழும் இல்லம் தானே. (கோ எனின் அரசன்) குறிஞ்சி நில மக்கள் வழிபட்டு வந்து முருகன் எனும் பெண்களுக்கு அணங்கு (துன்பம்) தருகின்றவன் என நம்பப்பட்டவனே பின் நாளில் ஆரியம் சிவனின் மகன் என வடநாட்டு கடவுளோடு முடிச்சுப் போட்டது. நம் இனத்திற்காக பார்ப்பனியத்தை எதிர்த்துச் சண்டையிட்ட மறத் தமிழர்களை (மறம் – வீரம்) வழிபட்டு வந்தனர் தமிழர்கள், அவர்களை சிறு தெய்வங்கள் என சனாதன மதத்தோடு இணைத்துக்கொண்டது. இணைத்துக் கொண்டாலும் இந்து மதத்தைப் பொறுத்தவரை அவை சிறு தெய்வங்கள் தாம். மேலும் சாதி அமைப்பை இந்த சிறு தெய்வ வழிபாடு மூலம் உறுதிப்படுத்தவும் பார்ப்பனர்கள் தவறவில்லை. 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்த்த இராமலிங்க அடிகளுக்கு இந்து மதம் பற்றி தெரியாது என்பதை பழ. கருப்பையா தன் பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியதையும் மறுக்க முடியாது. நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பெயரே இன்று இந்து – இந்தியா என ஒற்றை அடையாளத்தோடு பயணிக்க துடிக்கின்றது.

இராமலிங்க அடிகள், சித்தர்கள் என தமிழ் வரலாற்றில் அனைவரும் ஆரிய மதத்தை எதிர்த்தே பயணிக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் கடவுள் எனும் தத்துவத்தில் பார்ப்பனீயத்திடம் வீழ்ந்து விடுவதால், பார்ப்பனியம் சுலபமாக அவர்கள் கோட்பாடுகளை உள்வாங்கிச் செரித்தது. அந்த இடத்தில் தான் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் தேவையைப் புரிந்து கொள்ள முடியும். பெரியார் கடவுள் மறுப்பாளர் எனும் ஒற்றைக் கோணத்தில் அணுகுகின்றவர்களுக்கு பெரியாரின் அந்தக் கோட்பாட்டின் தேவை புரிய வாய்ப்பில்லை. பௌத்தம் வீழ்த்தப்பட்டதை, இங்கு இருக்கும் தமிழர்களின் பண்பாடு வீழ்த்தப்பட்டதை பெரியார் நன்கு ஆராய்ந்து படித்த பின்னரே ஆரியத்தை காலங்கள் கடந்தும் எதிர்க்க கடவுள் மறுப்பு கோட்பாட்டை கையில் எடுத்தார்.

Dec-23-2017-newsletter1

எனவே வரலாற்று பார்வையோடு நாங்கள் இந்துக்கள் அல்ல எனும் முழக்கத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மத சார்பற்று, சாதி அற்று வாழ்ந்த சங்க காலம் தான் உண்மையில் இன்றைக்கு தமிழர்கள் முன்னெடுக்க வேண்டியது. அதற்கு ஆதாரமாக நமக்குக் கிடைத்த சங்க இலக்கியப் பாடல்களே இருக்கின்றன. அதை விடவும் தமிழர்கள் வீழ்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று அந்தப் பாடல்களே உரைக்கின்றன. மூவேந்தர்களிடம் நிலவி வந்த பகை, சிற்றரசர்களிடம் கொண்ட பகை, அனைவரும் தமிழர்கள் என்றபோதும் எப்போதும் மோதிக் கொண்டே இருந்த போக்கு தான் ஆரிய மதம் இங்கு நிலைபெற வாய்ப்பாக அமைந்தது என்ற உண்மையையும் புரிந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டிய காலச் சூழல் தமிழ்நாட்டில் அமைந்து இருக்கின்றது. யார் தமிழர்கள் எனும் மரபணு பரிசோதனையை விடுத்து பயணிக்க வேண்டிய காலகட்டம். நம் இனத்தை முற்றிலும் அடிமையாக்கிய ஆரியம் இங்கே தமிழை வீட்டு மொழியாக பேசினாலும் வடமொழியை அவர்களுக்கு முதன்மை, என்பது தெரிந்தும் அவர்களை ஆதரித்து தமிழர்கள் எனச் சேர்த்துக் கொள்ள முடிந்தவர்களால், பல தலைமுறையாக இங்கே வாழும் மற்ற மொழி பேசும் மக்களை, வேற்று மதத்தவரை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது எனும் குரல் ஆரியத்தின் குரலாகவே இங்கு பார்க்கப்பட வேண்டும்.

தமிழர்கள் யார் என்றால் தமிழர்கள் மதமற்றவர்கள், தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகிற்கு உரைத்தவர்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவர்கள் என்ற உண்மை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லப்பட வேண்டிய உண்மை.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர்கள் யார் ?”

அதிகம் படித்தது