மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும்

தேமொழி

Oct 12, 2019

siragu uyiriyal5

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக ஓலைச்சுவடிகள் யாவும் தமிழர் கலை, இலக்கியம், வாழ்வு, பண்பாடு, மரபு, மருத்துவம் குறித்த தகவல் நிரம்பிய அரிய கருவூலங்கள். அவை சொல்லும் செய்திகள் பலவற்றை இன்றும் வெளியுலகம் அறிந்திருக்கவில்லை என்பது நமது முயற்சியில் உள்ள குறைபாட்டினைத் தெளிவாகவே காட்டுகிறது.  1980 ஆம் ஆண்டில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போதே ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் இன்றுவரை இப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. நாற்பது ஆண்டு இடைவெளி விழுந்துவிட்டது என்றால், அது ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது என்ற ஓர் அவல நிலை. பண்டைய தகவல்களைப் பொருள் அறிந்து புரிந்து கொள்ளக்கூடிய முதிய அறிஞர் பலர் மறைந்திருப்பர். இளைய தலைமுறைகளுக்கு ஓலைகளைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் நம்மால் அறியக்கூடவில்லை.

தஞ்சை சரஸ்வதி மகால் தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன மின்னாக்க முறையில் பாதுகாக்கும் பணி குறித்து இப்பொழுது தமிழ் ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன மின்னாக்க முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் பணி நிலவரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரத்துறை, மற்றும் தமிழக கல்வெட்டியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகால் போன்ற நூலகத்தில் இருக்கும் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளில் பலவும் மருத்துவம் சார்ந்தவை என்பது பெரும்பாலோர் அறிந்தது. கால்நடை மருத்துவ நூல்களும் இவற்றுள் அடக்கம். தமிழரைப் பொறுத்தவரை சித்த வைத்தியம் என்ற பண்டைய வைத்திய முறை பயின்ற அக்கால சித்தர்கள் கூறிய மருத்துவம் முதற்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி சொல்லும் வைத்தியம் வரை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் வைத்திய முறைகள் பலவுண்டு. அவற்றில் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் முதல் எண்ணற்ற வேர்கள், இலைகள், தழைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளுக்கும் இடம் உண்டு.

இறப்பது உறுதி என்றாலும் வாழும் காலத்தில் பிணியின்றி வாழ விரும்பி மனிதர்கள் தாம் தோன்றிய காலத்திலிருந்து பல வழிகளையும் மருந்துகளையும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதனால் மனித பண்பாட்டின் முதல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று மருத்துவம் என்றும் கூறப்படுவதுண்டு. நமது சாதாரண ஒரு இருமலுக்கும் நம் அருகில் உள்ள ஒவ்வொருவரும் தாம் அறிந்த ஏதோ ஒரு மருத்துவ முறையை முயன்று பார்க்கச் சொல்லும் பட்டறிவு இல்லாதோர் இருக்க வழியில்லை.

   செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற

   சித்தர் பிறந்த தமிழ்நாடு

எனச் சித்தர்களின் மருத்துவ அறிவை உயர்வு நவிற்சியாகப் பாராட்டிப் பாடுவார் பாரதியார். இறந்தவரைப் பிழைக்க வைத்தல் இன்றுவரை அறிவியலில் கைகூடாத ஒன்று. பிறந்து, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து, பின்னர் இறந்துவிடுவதே இயற்கையின் நியதி. மூப்பு, பிணி, இறப்பு என்ற வாழ்வின் நிலைகளால் வாழ்வின் நிலையாமையை எதிர்கொண்ட மன்னர் சித்தார்த்தரும் போதி மரத்தடிக்குச் சென்று ஞானம் பெற்ற புத்தர் என்ற துறவியானார்.

siragu iyarkai maruththuvam

சித்தர்களை மருத்துவத்துடன் தொடர்புபடுத்துவது அன்றி அவர்கள் கூறிய ஆன்மீக தத்துவங்களுடனும் தொடர்பு படுத்துவதையும் அறிந்துள்ளோம். ஆன்மிக தத்துவ அறிவுரைகள் மனநோய் தீர்க்கும் இன்றைய உளவியல் மருத்துவத்தின் கீழ் வரக்கூடும். சித்தர்கள் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள் என்ற கதைகளும் உண்டு வானில் பறப்பது, நெருப்பில் நிற்பது, நீரில் நெடுநேரம் மூச்சடக்குவது, கூடு விட்டுக் கூடு பாய்வது போன்றவை அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பவை. இவற்றைச் சித்து வேலைகள் என்று அறிவோம். பொதுவாகத் தியானத்தின் மூலம் ஆன்மிகத்திலும் அறிவியலிலும் அறிவுபெற்ற நிலையால், அதாவது சித்தி பெற்றதால் சித்தர் ஆனார்கள் என்பது ஏற்கக்கூடிய ஒரு விளக்கம்.

தமிழின் மருத்துவ இலக்கியங்களைச் சித்தர் இலக்கியங்கள் என்று கூறுவதே மரபு. பட்டினத்தார், கொங்கணர், இடைக்காடர், கருவூரார் போன்ற சித்தர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர். சிறந்த மருத்துவர்களாக இருந்த சித்தர்கள் தங்கள் மருத்துவ அறிவை பின் வருவோருக்கு உதவும் வகையில் பாடல்களாக, மருத்துவ நூல்களாக எழுதிச் சென்றுள்ளார்கள்.

தஞ்சை சரஸ்வதி மகால் 1962 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட “கொங்கணர் சரக்கு வைப்பு (நூறு)” அத்தகைய மருத்துவ நூல்களுள் ஒன்று. இதுவே பண்டைய தமிழ் மருத்துவம் குறித்து சரஸ்வதி மகால் வெளியிட்ட முதல் நூல் என்பதை நூலின் முன்னுரை தெரிவிக்கிறது. மேலும் சரஸ்வதி மகாலில் இந்த நூலின் படி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்றும் வேறு எங்கும் இந்த நூலின் படி இருப்பதாகவும் தெரியவில்லை என்றும் நூல் கூறுகிறது. முன்னர் யாரும் அச்சிலும் வெளியிட்டிராத நூல் இது. ஆகையால் நூலின் படிகள் பலவற்றை ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் செம்மைப்படுத்திப் பதிப்பிடும் வாய்ப்பு இல்லாமையால் சுவடியில் உள்ளது உள்ளவாறே அச்சு நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.

siddha medicine book

சித்தர்களில் கொங்கணர் என்றும் கொங்கணவர் என்றும் அறியப்படும் சித்தர் மேலைக் கடற்கரை கொங்கணம் பகுதியில் பிறந்தவர் என்றும் போகரின் மாணாக்கர் என்றும் கூறப்படுகிறார். “கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே?” என்ற கதை இவர் பெயருடன் இணைத்து அறியப்படுகிறது. கொங்கணர் மரத்தடியில் தவம் செய்து கொண்டிருக்கையில் கொக்கு அவர் மீது எச்சமிட்டதால் அவர் தவம் கலைகிறது. சினம் கொண்ட பார்வையால் அவர் கொக்கை நோக்குகையில் அது எரிந்து சாம்பலாகிறது. பிச்சை வேண்டி ஒரு இல்லத்திற்குச் செல்லும் அவர் உணவு வேண்டி குரல் எழுப்புகிறார். கணவருக்குப் பரிமாறிக் கொண்டிருந்த இல்லத்தலைவி அந்த வேலையை முடித்துவிட்டு வந்து கொங்கணருக்கு உணவளிக்கிறாள். அவளது மெத்தனத்தால் அவளையும் சினத்துடன் உறுத்து நோக்குகிறார். ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. பெண்மணி தனது கடமைக்கு முதன்மை கொடுத்த காரணத்தால் அவளிடம் அவர் சினம் பலிக்கவில்லை. அப்பொழுது “என்னை கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே?” என அப்பெண்மணி நகைத்ததாகவும், அவளது மதிக்கூர்மையையும் மேன்மையையும் உணர்ந்த கொங்கணர் அவளை மெச்சியதாகவும் இக்கதை கூறுகிறது.

பொதுவாக, சித்த மருத்துவ இலக்கியங்கள் ஒருவர் பெயரில் பலரால் தலைமுறை தலைமுறையாக எழுதித் தொகுக்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் துணிபு. கொங்கணர் இயற்றிய மருத்துவ நூல்கள் பற்பல வென்றும் அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. அவற்றுள் ஒன்று “கொங்கணர் சரக்கு வைப்பு”. இந்த நூல் தஞ்சை சரசுவதி மகால் நூலக பதிப்பகம் வெளியீடாக 1990-ல் வெளியிடப்பட்டுள்ளது. எளிய பாடல்களின் மூலம் நூலின் கருத்துகள் சொல்லப்படுகிறது.

இந்த நூலில், சீன வைப்பு முறை என்ற அயலக மருத்துவ முறையிலிருந்து, பாஷாணம், குளிகை, வசியத்திற்கு மை செய்வது வரை பல மருந்து தயாரிக்கும் முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சுத்திவகை மூன்று (பாடல்: 76), கமன குளிகை செய்முறை (பாடல்கள்: 84-89), வசியத்திற்கு மை செய்முறை (பாடல்கள்: 90-94) ஆகியவற்றைக் கூறலாம். நூலில் கொங்கணர் சரக்கு வைப்பு நூறு மருத்துவப் பாடல்கள் தவிர்த்து மச்சமுனி நாயனார் கடைக்காண்டம் எண்ணூறு, கொங்கணர் பலதிரட்டு ஐந்நூறு, உரோமரிஷி ஐந்நூறு, அகத்தியர் அமுத கலைஞானம் ஆயிரத்துநூறு பாடல்களின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன.

நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களுக்கு மாதிரியாக மூன்று பாடல்கள் கீழே கொடுக்கப்படுகிறது:

சித்தியென்றா லெளிதாகச் சித்தியாமோ

   சித்தருக்குச் செய்வகையை செய்யக்கேளு

முத்தியதோர் மூலிகையி லஞ்சுசுத்தி

   யுருவான சரக்கிலே அஞ்சுசுத்தி

நித்தியதோ ருன்னிடத்தி லஞ்சுசுத்தி

   நேரான யிதின் நேர்ந்து விபரம் கேளே.

   — சுத்திவகை மூன்று (பாடல் – 76)

வகுத்திட்ட துருசியாலே சத்தேகேளு

   மைந்தனே நிமளையது பலந்தானன்று

செகத்திட்ட பழச்சாற்றால் ஆட்டிக்கொண்டு

   செயலான பீங்கானில் பழச்சாறுவிட்டு

நிகழ்ந்திடவே யேழு நாள் ஆவிமுன் காட்டு

   நேராகச் சாறுவத்தி யூத்திக்கொள்ளும்

பருத்திட்ட யேழுாநாள் பாலாடை போல் கட்டும்

   பாலகனே யுலர்த்தியல்லோ பண்பாய்வாங்கே.

   — கமன குளிகை செய்முறை (முதல் பாடல் – 84)

 (கமன குளிகை செய்முறைபாடல்கள்: 84-89)

வாறான நிமளையத்தான் வயிரவற்குப்பூசி

   மைந்தனே உலத்தியல்லோ ஊதிப்போட்டால்

தேறான சுண்ணமப்பா கடுஞ்சுருக்குத்

   தேவியுட சுண்ணமோடு துருசிச்சுன்னம்

கூறான வங்கத்தின் சுன்னத்தோடு

   கூறரிய வழலையோடு சுன்னந்தானும்

நீறான சீனத்தின் கன்னத்தோடு

   நிலைத்து நின்ற கல்லுப்புச் சுன்னந்தாக்கே.

   — வசியத்திற்கு மை செய்முறை (முதல் பாடல் – 90)

(வசியத்திற்கு மை செய்முறை பாடல்கள்: 90-94)

பாடல்கள் பல மருத்துவர்களின் குழுவுக்குறிகளாக (குழுவுக்குறி ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய பண்பாட்டுக் கூறுகளின் மொழி) கருதப்படுவதால், பாடல்களுக்கு ஆராய்ந்தறிந்தே உரைநூல் எழுத வேண்டிய நிலை இருந்ததால், இப்பாடல்களுக்கான உரை மூலப்பாடல்களுடன் கொடுக்கப்பெறவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு பாடலில் வாழை என்பது அரம்பை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நூலின் ஆசிரியர்களுள் ஒருவர் ஆயுர்வேத பண்டிதர் Dr.S. வெங்கட்டராஜன் என்ற அத்துறையின் அறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழிணையம் – மின்னூலகத்தில் பொதுமக்கள் படிக்கும் வகையில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஏனைய நூல்களும் இந்த வகையில் மின்னாக்கம் செய்யப்பட்டு வெளியாகும் நாளை எதிர்நோக்கி இருப்போம்.

நூல் குறிப்பு:

கொங்கணர் சரக்கு வைப்பு (நூறு)

பதிப்பாசிரியர்கள்: K. வாசுதேவ சாஸ்திரி; ஆயுர்வேத பண்டிதர் Dr.S. வெங்கட்டராஜன்

பதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூல் நிலையம், மூன்றாம் பதிப்பு -1990.

சரசுவதி மகால் நூலக வெளியீடு – 25

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0luxy#book1/

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழிணையம் – மின்னூலகம்

சான்று:

தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டலில் பாதுகாக்கும் பணி குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532404


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும்”

அதிகம் படித்தது