மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழறிஞர்களில் கால்டுவெல்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

May 13, 2017

தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்டக் காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவுகொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. யவனரைத் தொடர்ந்து இசுலாமியர் அரபு நாடுகளிலிருந்து வந்து வாணிபம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வாணிபத்தோடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். இப்பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்துத் தமிழுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்வளர்ச்சி

Siragu tamil1

கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்ட தமிழ்மொழி இம்மேலைநாட்டவர்களால் அச்சு இயந்திரத்தில் அச்சேறியது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அச்சு இயந்திரங்கள் பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனிகளிடத்தும் மட்டுமே இருந்தது. பொதுமக்களின் கைக்கு வரவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்திய மக்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமைப்பெற்றார்கள் என்கிறார் மு.வரதராசன். அதன்பிறகே புதிய உரைநடை நூல்களை எழுதி அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டனர். கிறித்தவர்களும் முஸ்லிம்களும் தத்தம் சமயங்களைப் பரப்புவதற்குத் தமிழில் நூல்கள் எழுதி அச்சிட்டபடியால் இந்துக்களும் தம் சமயத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நூல்கள் எழுதி அச்சிடுதல் தேவையாயிற்று. இவ்வாறு அச்சு இயந்திரங்கள் சமய நூல்களை எழுதி அச்சிடுவதற்கும் பயன்பட்டன. பழைய செய்யுள் இலக்கியம், புதிய செய்யுள் இலக்கியம், புதிய உரைநடை நூலகள், திங்கள் இதழ், வாரஇதழ் முதலியவற்றைப் பரப்புவதற்கு அச்சுக்கருவிகள் பயன்பட்டன. அச்சிடும் நூல்கள் அதிகரிக்க அதிகரிக்க ஏட்டுச்சுவடிகளை விட நூல்கள் எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கப்பெற்றன. இதனால் நூல்களை வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அதனால் உரைநடை நூல்கள் எழுதுவதற்கு ஏற்றச் சூழ்நிலை அமைந்து, பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதத்தொடங்கினர்.

Siragu tamil2

இத்தனை நூற்றாண்டுகளாக இயற்றப்பட்ட நூல்களை விடப் பலமடங்கு நூல்கள் இந்த இரு நூற்றாண்டுகளில் எழுதப்படலாயின. இவ்வகையில் சமயத்தொண்டாற்ற வந்து தமிழ்தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ‘கால்டுவெல்’ ஆவார்.

கால்டுவெல்:

அயர்லாந்து நாட்டினரான இராபர்ட் கார்டுவெல் 1889-ல் சமயத்தொண்டாற்றத் தமிழகம் வந்தார். தனது தமிழ்ப்பணியை திருநெல்வேலி இடையன்குடி என்ற இடத்தில் தங்கித் தொடங்கினார். மதுரையிலும் திருநெல்வேலியிலும் அரியத் தமிழ்ப்பணியோடு சமயப்பணியும் புரிந்தார். தான் ஒருவராகவே இலட்சம் பேரைக் கிறித்தவராகக்கியப் பெருமை இவரையேச் சேரும். இவர் ‘திருநெல்வேலி சரித்திரம்’ என்னும் ஆங்கில நூலையும், ‘நற்கருணைத்தியான மாலை’, ‘தாமரைத்தடாகம்’, ‘பரதகண்டபுராதனம’, ‘ஞானக்கோயில்’ முதலிய தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளார்.

Siragu tamil3

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய திருந்திய திராவிட மொழிகளையும் வேறு பல திருந்தாத திராவிட மொழிகளையும் ஒப்பிடுவதில் பல ஆண்டுகள் செலவிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A comparative grammar of the Dravidian family of language) என்று ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் திராவிட மொழிகளுக்கு சிறப்பை தேடித்தந்ததோடல்லாமல் இவரது புகழை உலகிற்கும் பறைசாற்றியது.

கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் ஒப்பியல் கல்வி

ஒப்பியல் கல்வி தனித்த இலக்கியங்களை பரந்துபட்ட ஓர் இலக்கியக் குடும்பத்தின் உறுப்பினர்களாகக் காணும் அகன்ற ஆய்வுநிலைக்கு நம்மை நகர்த்துகிறது.

நாட்டு எல்லைகளைக்கடந்து மொழி எல்லைகளைக் கடந்து நிகழத்தப்படும் ஆய்வு, ஒவ்வொரு நாட்டின் இலக்கியமும், அந்தந்த நாட்டுத் தேசிய மரபுகளைக் கொண்டிருப்பதுடன் அந்தந்த இலக்கியங்களின் பாடுபொருள், உணர்வுகள், அடிக்கருத்து, நடைப்பாங்கு, உத்திகள் வழக்கங்கள் ஆகியனவற்றில் முக்கியமான வேறுபாடுகளைப் பெறுகின்றன என்பதை உணர்த்த உதவுகின்றன. இவ்வாறு இலக்கியங்களை, இனம் பிரித்துக்காணவும் மதிப்பிடவும் ஒப்பிலக்கிய அறிவுப் பெரிதும் தேவைப்படுகிறது. இத்தகைய ஒப்பியல் கல்வியைக் குறிக்குமிடத்து கால்டுவெல் கூறும் கருத்து இங்கு எண்ணத்தக்கதாகும்.

“ஒப்பியல் கல்வி ஒவ்வொரு அறிவியல் துறையிலும் ஐரோப்பாவில் பெரும் பயனைத் தந்துள்ளது. திராவிடர்கள் குறிப்பாகத் தமிழர்கள் தங்கள் மொழி இலக்கியங்களை பிறவற்றுடன் ஒப்புநோக்க ஒருபோதும் முயன்றதில்லை. இதனால் அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதில் கடைப்பிடித்த அக்கறையானது மதிநுட்பத்தோடும் பகுத்துணர்வோடும் கூடிவராததால், நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக்குறைந்த பயனையே அளித்துள்ளது” என்கிறார் தனது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில்.

கால்டுவெல் திராவிடமொழிகளும்:

இந்தியாவில் ஆரியமொழி என்றும் திராவிட மொழிகள் என்றும் இரண்டு இனக்குழு மொழிகள் நிலவுகின்றன. வடநாட்டில் பேசப்படும் சமற்கிருதம் ஆரியமொழி எனப்படும். அதிலிருந்து இந்தி, இந்துஸ்தானி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஹரியானா, பீகாரி, வங்காளி, ஆசாமியர், மனிப்புரி, கோஜ்புரி, ஒரியா ஆகிய மொழிகள் கிளைத்தன. இவை அனைத்தும் ஆரிய மொழிகள் எனப்படும்.

தென்னாட்டுப் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, என்னும் மொழிகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த கால்டுவெல் இதை திராவிட மொழிக்குடும்பம் என்கிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக இவர் சில மொழிகளைப் பண்பட்ட மொழிகள் என்றும், பண்படாத மொழிகள் என்றும் வகைப்படுத்துகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகள் பண்படுத்தப்பட்ட மொழிகளாகும். தூதம், கோண்டு, கந்தம், ஒராஓன், ராஜ்மஹால், பிராகுயி போன்றவை பண்படுத்தப்படாத மொழிகளாகும். மேலும் திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் எனப்பகுத்தும் ஆய்வுக்குட்படுத்துவர் மொழிவல்லார்கள்.

தமிழ்மொழி

Siragu tamil4

திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப்பழமையான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர். பிஜித்தீவு, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ்காயானா, மடகாஸ்கர், திரினிபால் போன்ற நாடுகளில் பேசப்படுகின்றன.

இலக்கிய வழக்கு உலகவழக்கு எனத் தமிழை இருவகையாகப் பகுத்துப்பார்த்தனர் நம் முன்னோர். தற்காலத் தமிழிலும் பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இன்றைய மொழியியல் அறிஞர்கள் மொழியை பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டாகப் பகுத்து ஆராய்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதைக்கண்டறிந்தவர் கால்டுவெல். அவர் பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு எனக்கூறி மொழியை ஆராய்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் என்னும் சொல்லுக்கு நேரான வடசொல் ‘டிராவிடா (Dravida) என்பது வழங்கப்படுகிறது. மொழிவல்லாருள் சிலர் ‘திராவிடா’ என்ற வடசொல்லே ‘தமிழ்’ எனத் திரிபுற்றது என்பர். கால்டுவெல் ‘த்ராவிடம்’ என்பதை பொதுக்குறியீட்டுச் சொல்லாகக் கொண்டு ‘தமிழ்’ என்பதை சிறப்பாக உயர்தனிச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

மலையாளம்

திராவிட மொழிகளின் பண்பட்ட வகையில் தமிழுக்கு அடுத்தபடியாக பெருமைபெற்று விளங்குவது மலையாளமாகும். பிற திராவிட மொழிகளைக்காட்டிலும் தமிழோடு நெருங்கியத் தொடர்பு இம்மொழிக்கு உண்டு. டாக்டர் கால்டுவெல் ‘தமிழின் இன்றியமையாத கிளைமொழி மலையாளமே’ என்கிறார்.

குட மலைகளுக்கு அப்பால் மலபார் என்னும் பகுதியைச் சார்ந்துள்ள ஊர்களில் இம்மொழி பேசப்படுகிறது. கேரளத்தில் மட்டுமின்றி இலட்சத்தீவிலும் இம்மொழி பேசப்படுகின்றது. முள்ளுக்குறும்பர் என்ற பழங்குடி மக்கள் பேசும் பேச்சை மலையாள மொழியின் கிளை மொழியாகவும், தனிமொழியாகவும் கருதுகின்றனர்.

தமிழ் – மலையாளத் தொடர்பு:

மிகப்பழங்காலத்தில் தமிழ்-மலையாளம் இவை இரண்டும் தமக்குள் வேறுபாடு இல்லாமல் இருந்திருக்கலாம். இத்தன்மையைப் போர்த்துகீசியர்கள் கருத்தில் கொண்டு ‘மலபார்’ என்ற சொல்லால் ‘தமிழைக்’ குறிப்பிட்டனர். மேலைநாட்டு வணிகப் பெருமக்கள் வாணிகம் பொருட்டாகத் தமிழகம் வந்த காலத்தில் மலையாளம் வழங்கும் தேசத்தில் முதற்கண் தங்கியிருக்கவேண்டும். ‘மலை’ என்ற தமிழ்ச்சொல் ‘மலே’ என அமைதலும் அதுவேப் பின்னர் ‘மல’ என அமைதலும் ஒலிநூலுக்கு உடன்பட்டதாகத் தோன்றும்.

பண்டைக்காலம் தொட்டே தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய மேலை கடற்கரை சேரநாட்டுடன் மேலைநாட்டார் வாணிபத்தொடர்பு வைத்திருந்தனர். டாக்டர் குண்டர்ட் என்பவர் வடமொழியைக் காட்டிலும் தமிழையே பெரும்பாலும் மலையாளச் செய்யுள் ஒத்திருந்ததாகக் குறிப்பிடுவார்.

தமிழ்மலையாளம்  இவை இணைந்த உறவை காட்டுங்கால் ‘நெல்குன்றம்’ பாண்டிய தலைநகராக விளங்கியது என்பதை டாக்டர் கால்டுவெல் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய ஆலப்புழையில் ‘நீர்குந்தம்’ என்றபெயரில்   ஓர் ஊர்  உள்ளது. இதன் மூலம் மிகப்பழங்காலந்தொட்டே நம்  தமிழ்நாட்டில்    மேற்குப்பகுதியில் தமிழ் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற உண்மை வலுப்பெறுகிறது. மலையாள மொழியின் முதல்  செய்யுள் இலக்கியமான ‘இராமசரிதத்தில்’ வடமொழிக்கலப்பு இல்லாமையும், தமிழை ஒத்திருப்பதும் இவ்விரு மொழிஉறவை வலுவடையச்செய்கின்றன.

திராவிடமொழிக்குடும்பங்களில் குறிக்கப்பெறும் மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பினும் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளின் தொடர்புமுறை சிலச் சான்றுகளால் விளக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த அச்சு இயந்திரங்களின் பணியும், மேனாட்டறிஞர்களின் வருகையும் தமிழை புதியதொரு வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றன. சிறுகதை, புதினம், பத்திரிகைகள், உரைநடை, போன்ற பல்வேறுத்துறைகளில் தமிழ் வளர்ந்து நவீன மொழியாக்கப்பட்டது. மேனாட்டறிஞர்களான பெஸ்கி, ரேனியஸ், கிரால், போப், கால்டுவெல் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழைக் குறிப்பாகப் பேச்சுத் தமிழைப்பற்றி நன்கு ஆராய்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வளர்ந்து செழித்துள்ள மொழியியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டவர் கால்டுவெல் ஆவார். இவர் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் திராவிட மொழிக்குடும்பத்திற்கும் செய்த பணிகளைக் கருத்தில் கொண்டே இவரை ‘திராவிட மொழியியலின் தந்தை’ என அழைக்கின்றனர்.

 


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழறிஞர்களில் கால்டுவெல்”

அதிகம் படித்தது