மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழறிஞர் மு. தங்கராசனின் கவிதைகளில் தயாகமாம் சிங்கப்பூர்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 8, 2022

siragu mu.thangarasan

ஒரு படைப்பாளன் தான் சார்ந்த இனம், மொழி, நாடு ஆகியவற்றின் பின்புலத்திலேயே தன் படைப்புகளை வெளிப்படுத்துகிறான். படைப்பாளனின் படைப்புகளில் அவனை அறியாமலேயே தான் சார்ந்த இனத்தின் பற்றறையும், தான் சார்ந்த மொழியின் பற்றையும், தான் சார்ந்த நாட்டின் பற்றையும் பாடுபொருள்களாக கொண்டுவிடுகின்றன.  இதன் காரணமாக ஒரு படைப்பாளனின் படைப்புகள் வழியாக அவன் சார்ந்த நாட்டின் மொழியின் இனத்தின் பண்புகளைத் தெளிவுபட உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சிங்கப்பூர் என்ற நாட்டிற்குத் தமிழர்கள் உழைக்கும் மக்களாகச் சென்று அந்நாட்டின் பெருவளர்ச்சிக்குப் பாடுபட்டனர்.  இந்நாட்டில் தமிழர்கள் குடியுரிமை பெற்று வளத்தோடு காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்குள் இந்தியத் தாய்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் தொடர்பு நெகழிந்து போனதற்கான அடையாளங்கள், ஏக்கங்கள் அவர்களின் உள்ளங்களுக்குள் நின்று நிலவி வருகின்றன. சிங்கப்பூர் தமிழர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் தமிழகத்தின் எழுச்சிகள், இயக்கங்கள் போன்றவற்றின் சாயலை உடனே பெற்றுவிடுகிற நிலையில் தமிழகத்தின் சார்பில் வாழ்ந்து வந்துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.

குறிப்பாக சிங்கப்பூர் சார்ந்த தமிழ்ப் படைப்பாளிகளிடத்தில் தமிழகத்தின் மீதான மதிப்பும், தமிழகத்தின் சார்பும் தாக்கமும், தமிழ்கப் படைப்பாளர்கள் மீதான மதிப்பும் என்றும் உயர் அளவில் நிலவி வந்துள்ளன. தமிழகத்துப் படைப்பாளர்களைச் சிங்கப்பூருக்கு அழைப்பதும் அவர்களை அங்கு கௌரவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதுபோன்று சிங்கப்பூர் படைப்பாளர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்கள் படைப்பனுபவத்தை தமிழகத்தில் பகிர்ந்து கொள்ளவும் முடிகின்றது. இதற்குக் காரணம் சிங்கப்பூர் தமிழகத்தின் இட அளவிலும் பண்பாட்டு அளவிலும் மிக நெருக்கமாக இருப்பதே ஆகும். இரவில் தமிழகத்தில் இருந்து கிளம்பி காலையில் சிங்கப்பூர் சென்று விட முடிகிற தூரம் தமிழகத்தையும் சிங்கப்பூரையும் இணைத்து நிற்கின்றது. இவ்வகையில் தமிழகமே சிங்கப்பூராவும், சிங்கப்பூரே தமிழகமாகவும் பண்பாட்டால், இலக்கியத்தால் ,மொழியால் ஒன்று பட்டு நெருங்கி இணைந்து வளர்ந்துவருகின்றன.

சிங்கப்பூரின்  கவிஞர்களில் குறிக்கத்தக்கவர் மு. தங்கராசன் ஆவார். இவர் எழுச்சி கொண்டு திறம் மிக்கத் தமிழாசிரியராக விளங்கியவர். இவர் சமுதாயத்தொண்டர், கவிஞர் என்ற பல  நிலைகளிலும் வாழ்ந்தவர். இவர் முப்பதிற்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். இவரின் படைப்புகளுள் ஒன்று நித்திலப் பூக்கள் என்பதாகும். இது இவரின் ஏழாவது படைப்பாக விளங்குகிறது.

சிலப்பதிகாரத்தினைப் படித்துச் சுவைத்த மு. தங்கராசன் தனது மரபு சார்ந்த கவிதைத்தொகுப்பிற்கு நித்திலப் பூப்பந்தரின் கீழ் என்ற சிலப்பதிகார அடியை எண்ணி இம்மரபுக் கவிதைத் தொகுப்பிற்கு நித்திலப் பூக்கள் என்று பெயர் வைத்துள்ளார். இதனுள் சமுதாயம், விழாக்கள், சான்றோர்கள் பற்றிய பல மரபுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.  இவரின் கவிதைகளில் அடிநாதமாக விளங்குவது சிங்கப்பூர் என்ற நாட்டின் சிறப்பும், அதன் அமைதித்தன்மையுமே ஆகும். இதனை இவரறியாமல் பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தொகுப்பில் மு. தங்கராசன் தனது சிங்கப்பூர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளையும், சிங்கப்பூர் மண்ணின் பெருமைகளைப் பெரிதும் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்வது சிங்கப்பூர் என்றாலும் சிங்கப்பூரைத் தமிழகமாக தமிழ் வளர்ச்சி உடைய நாடாக அமைக்கவேண்டும் என்பது மு. தங்கராசனின் பேராவலாக விளங்கியுள்ளதை இவரின் படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

தாயகமாம் சிங்கப்பூர்

கடந்த மூன்று நூற்றாண்டு காலங்களில் பல்வேறு நாடுகளில் பிரித்தானிய அரசால் தமிழர்கள் குடியேற்றம் செய்யப்பெற்றனர். இவ்வகையில் இலங்கை, சிங்கப்பூர்,ரெங்கூன், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் தோட்டத்தொழில், மற்றும் நாட்டு வளர்ச்சி பணிகள் செய்ய குடியமர்த்தப்பெற்றனர்.  அவ்வாறு குடியேறிய காலத்தில் இட்ட வேலைகளைச் செய்யும் பணியாளர்களாக ஏறக்குறைய அடிமைகளாக அவர்கள் அயல் நாடுகளின் வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தனர்.  தற்போது அவ்வாறு குடியேறிய தமிழர்கள் பொருளாதார நிலையிலும், உணர்வு நிலையிலும் சற்று மேம்பாடு அடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியாக செய்தியாகும்.

சிங்கப்பூர்  ஆங்கில ஆட்சியிலும், ஜப்பானிய ஆதிக்கத்திலும், மலேசியாவின் ஒரு பிரிவாகவும் விளங்கித் தனி நாடாக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான நாடாகும். எனினும் கடினமான உழைப்பு, திட்டமிடல் இதன் காரணமாக அடிப்படை வசதிகள் பல பெற்று இன்று உலகப் பணக்காரர்கள் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இதன் வளர்ச்சிக்கு முக்கியப் பணியாற்றியவர்கள் பணியாற்றி வருபவர்கள் தமிழர்கள். இத்தமிழர்களுக்கு நன்றிக் கடனைச் சிங்கப்பூர் அரசு பெரிதும் செய்துவருகிறது. தமிழர்களும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இன்னமும் உழைத்து வருகின்றனர்.

அவ்வகையில் சிங்கப்பூர் அயராது உழைக்கும் உன்னத நாடாக விளங்குகிறது. அங்கு வாழும் மக்கள் நிம்மதியாக தம் இன அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

            ”அமைதிக்கோர் அணிகலனாய் விளங்கும் நல்ல நாடு

                        அனைத்துலகும் போற்றுகின்ற அருமை நாடு

            இமைப்போதும் சோராமல் இயங்கும் எங்கள்

                        எழில் மிகுந்த தாயகமாம் இன்பச் சிங்கை

            சுமைதாங்கி போலொளிர்ந்து சுழன்று வந்த

                        சூழும்தீ வினைகளெல்லாம் சுளுவில் தீர்த்து

            எமைக் காத்து வருகின்ற இயல்பு நல்லார்

                        ஏற்றிருக்கும் நல்லரசு இனிது ஓங்கும்” (ப. 23)

என்னும் பாடலில் சிங்கப்பூர் தனது தாயகம் என்று சிங்கப்பூரின் தமிழர்  மு. தங்கராசன் உரத்துச் சொல்கிறார். அந்த அளவிற்குச் சிங்கப்பூரை நேசிக்கிறவராக மு. தங்கராசன் என்ற தமிழர் வாழ்ந்துள்ளார். சுறுசுறுப்பான நாடாக, அமைதிக்கு இருப்பிடமாக விளங்கும் நாடாகச் சிங்கப்பூர் உலக அரங்கில் திகழ்வதை எண்ணி மு. தங்கராசன் மகிழ்கிறார்.  இதற்கு அடிப்படை காரணம் தமிழர்தம் உழைப்பு என்பது மறைக்கமுடியாத உண்மையாகும்.

            ‘‘நல்லரசு நனிசிறந்து ஆட்சிக் கொள்கை

                        நயந்துவரும் எம் சிங்கை நானிலத்தின்

            வல்லரசு நாடுகளே  வாழ்த்துரைத்து

                        வழங்கு மரியாதைகளை வணங்கி ஏற்று

            நல்லாட்சி முன்னேற்றம் நாளும் தோன்ற

                        நலமெல்லாம் நம் வாழ்வில் என்றும் தேங்க

            வெல்லுந்தர வாக்குறுதி விளைந்து சூழும்

                        விவேகங்கள் அரசியலில் விதிர்த்து மேவும் (ப. 240

என்று சிங்கப்பூர் அரசின் அரசியல் செம்மையைப் பாடுகிறார் மு. தங்கராசன். மலேசியாவின் ஒரு மாநிலமாக இருந்த சிங்கப்பூர் மலேசியாவால் கைவிடப்பெற்ற நிலையில் தனித்து நின்று முன்னேற்றத்தில் தயக்கம் கொண்டாலும் அரசியல், பொருளியல், அமைப்பியல் சார்ந்து முன்னேற்றங்களைப் பெற்றுத் தற்போது வல்லரசு நாடுகள் பலவும் போற்றும் நிலையைப் பெற்றுள்ளது. இதற்குச் சிங்கப்பூர் மக்களின் உழைப்பும், உண்மையும், உணர்வும் முக்கிய காரணங்கள் ஆகும். இதனையே மேற்கவிதை சிங்கப்பூரின் அரசியல் நிலைப்பாடாக உணர்த்தி நிற்கிறது.

சிங்கப்பூரில் பல தரப்பட்ட மக்களும் தங்கள் நாகரீகம் கலாச்சாரம் பண்பாடு சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். சீனர்கள், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள்,  மலாயர்கள் போன்ற பல இனத்தவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் இவர்களுக்குள் பண்பாடு, நாகரீக அடிப்படையில் எவ்வித மாறுபாடுகளும் இல்லாமல் அவரவர் பாதையில் அவரவர் செல்லும் தன்மை காணப்படுகிறது.

            ஒற்றுமைக்கோர் உதாரணமாக விளங்கும் நாடு

                        ஒருமைப்பாடு ஓங்குதற்கும் எடுத்துக்காட்டு

            மற்றுமுள்ள கட்டொழுங்கு மாற்றார் தம்மை

                        மதிக்கின்ற நற்பண்பு மாண்பு மிக்க

            சுற்றுப் புறச் சூழல்களில் கட்டுப்பாடு

                        சோர்ந்து விடாச் சுறுசுறுப்பின் சுந்தரங்கள்

            இற்றுவிழாச் சமுதாய நல்லிணக்கம்

                        எல்லோருக்கும் நல்லோராய் இயங்கும் சிங்கை (ப. 22)

என்று ஒருமைப்பாட்டிற்கும், சமுதாய நல்லிணக்கத்திற்கும் இலக்கணமாயத் திகழும் நாடு சிங்கப்பூர் என்று கவிஞர் தங்கராசன் போற்றுகின்றார்.

            இனப்பூசல் மதபேதம் எதுவும் இங்கே

                        எப்போது தலைகாட்ட இடங்கொடுக்கா

            மனங்கொண்ட மன்னிய சீர் மாந்தராலே

                        மதிநுட்பம் மனநிறைவு என்றும் போற்றி

            மணக்கவரும் பூங்காடாய் மனித நேயம்

                        மானுடத்தின் மணிக்கவசம் மதித்துக் காத்து

            குணக்குன்றாம் கோபுரம்மேல் கொழிக்கும் சிங்கை

                        கொள்கையுளார் குடியேற்றக் கோட்டையாகும்” (ப. 22)

என்று குடியேற்றம் மிக்க நாடாகவும், மனிதநேயம் மிக்க நாடாகவும், பேதமற்ற நாடாகவும் சிங்கப்பூர் விளங்கவதைத் தங்கராசன் தன் கவிதைக்குள் எடுத்துரைக்கின்றார்.

இவ்வகையில் சிங்கப்பூர் என்ற தான் குடியேறிய நாட்டினைத் தன் தாயகமாக ஏற்றுப் போற்றி அதன் பெருமைகளைத் தன் இனமொழியான தமிழில் காட்டி சிங்கப்பூர் பற்றிய உண்மை கொள்கை, அரசியல் தகவல்களைத் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவும், உலக மக்கள் அறிந்து கொள்ளவும் கவிதைகளைப் படைத்தளித்துள்ளார் மு. தங்கராசன். இவரின் தமிழ்ப் பற்று சிங்கப்பூர் தாயகப் பற்றாக விளங்கியுள்ளது.

சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் நிலை பற்றியும் கவிதை வடித்துள்ளார் மு. தங்கராசன்.

            சிங்கையில் வசிப்போர் நாங்கள்

                        சீர்மையில் குறைவே இன்றி

            தங்குநல் வளங்கள் யாவும்

                        தகைத்திட அருள்வதோடு

            பொங்குநல் இனிய வாழ்வும்

                        பொன்றிடா வண்ணம் காத்து

            எங்குமே இன்பம் சூழ

                         எமக்கருள் புரிவாயம்மா (ப. 17)

என்று சித்திரைத் தாயிடம் சிங்கப்பூர் தமிழர்கள் வளமாக வாழும் நிலையை இன்பமாக வாழும் நிலையை நிலையாகத் தர வேண்டுகிறார் மு. தங்கராசன்.

இவ்வகையில் சிங்கப்பூர் என்ற அயலகத்து மண்ணைத் தன் தாயகமாக ஏற்றுக்கொண்ட தமிழர் மு. தங்கராசன் தன் படைப்புகளைத் தமிழ் மொழியில் உணர்ச்சி பட வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக சிங்கப்பூர் என்ற அயலக மண் தமிழ் மொழி வழியாக அறியப்பெறும் நிலையில் அம்மண்ணின்  காணப்பெறும் தமிழ் ஏற்புத் தன்மையும், அந்நாடு தமிழர்கள்தம்  வாழ்வில் கொண்டுள்ள அக்கறையும்  நன்றியும் தெரியவருகின்றன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழறிஞர் மு. தங்கராசனின் கவிதைகளில் தயாகமாம் சிங்கப்பூர்”

அதிகம் படித்தது