மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழில் புதிர்கள்

தேமொழி

Oct 2, 2021

siragu tamil puthir1

தமிழில் புதிர்கள் புதுமை அல்ல. அவை பல வகைகளில் நம்மிடம் உலாவி வருகின்றன. பொதுவாக புதிர்களை விடுகதை என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. தமிழின் முதல் நூலாகக் கூறப்படும் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிடும் ‘பிசி’ என்ற சொல்லும், கம்பராமாயணத்தில் இடம்பெறும் ‘பிதிர்’ என்ற சொல்லும் புதிர் என்பதைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிசி >> பிதிர் >> புதிர் என்று மருவியதாக கி. வா. ஜகந்நாதன் கருத்துரைக்கிறார். பிசி, பிதிர் வழக்கிலிருந்து மறைந்து, இன்று புதிர் என்ற சொல்லே மறைபொருள் ஒன்றை உள்ளடக்கிய கூற்றைக் குறிக்கும் சொல்லாக வழக்கில் இருக்கிறது. இது ஆங்கிலச் சொல் ‘Riddle’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கருதப்படுகிறது. மறைபொருளை விடுவிப்பதால் ஒரு புதிர் ‘விடுகதை’ என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்தும் உள்ளது. விடுவி என்பதன் அடிப்படையில் புதிர் என்பது ‘வெடி’ என்று தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் அழைக்கப்படுவதும், அவற்றையே ‘அழிப்பாங் கதை’ என்று தென் மாவட்டங்களில் கூறுவதும் வழக்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விடுகதையில் மறைபொருளாக வரும் சிக்கலை அவிழ்ப்பதால், அவிழ்ப்பான் கதை என்பது நாளடைவில் அழிப்பாங் கதை என மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆக, மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை என்னும் பொருளுடையது விடுகதை என்பது இதனால் தெளிவாகிறது.

ஆரம்பப் பள்ளி நாட்களிலேயே பாடநூலில் நாம் “ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு வைத்து அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டைகள், அது என்ன? ” என்பது போன்ற விடுகதைகளைப் படித்திருக்கிறோம். இருப்பினும் விடுகதைகள் பல வழக்கில் இருந்தாலும், அவை பெரும்பாலும் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெறுவது இல்லை என்பதே கருத்தாக வைக்கப்படுகிறது. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட, ‘சிறுவர்க்கான விடுகதைப் பாட்டுக்கள்’ என்று தலைப்பில் முதற் பதிப்பாக 1940இல் வெளியான நூல்தான் இவ்வகையில் முதல் நூலாக கூறப்படுகிறது. ரோஜா முத்தையாவின் (1961) ‘விடுகதைக்களஞ்சியம்’; வ.மு. இராமலிங்கம் (1962) வெளியிட்டுள்ள ‘களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள்’; குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1962) தமிழாக்கம் செய்து தொகுத்தளித்த வெளிநாட்டு விடுகதைகள்’; ச.வே. சுப்பிரமணியனின் (1977) தொகுப்பான ‘தமிழில் விடுகதைகள்’; ஆறு. இராமநாதன் (1982) வெளியிட்டுள்ள ‘காதலர் விடுகதைகள்’’ ஆகியன குறிப்பிடத்தக்க விடுகதைகள் தொகுப்பு நூல்களாகும். தொகுப்பு நூல்கள் மட்டுமின்றி, விடுகதைகள் குறித்த ஆய்வு நூல்களும் குறைவு என்றும் அறிய முடிகிறது. ஆறு. இராமநாதன் அவர்களின் ‘தமிழில் புதிர்கள்’ என்னும் தலைப்பில் (1978-2001) வெளியான நூலே நூல்வடிவில் வெளியிடப்பட்ட விடுகதைகள் குறித்த ஒரே ஆய்வு நூலாகும்.

எழுத்திலக்கிய விடுகதை வகைகளில் ‘சிலேடைகள்’ என்ற வகையும் ‘இரு சொல் அலங்காரம்’ (இதன் மாறுபட்ட வடிவமான ‘முச்சொல் அலங்காரம்’) என்ற வகைகளும் கூட உண்டு. இவை சற்று காலத்தால் முற்பட்டவை எனலாம். ஒரே பாடல் இருவேறு விதமான பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது சிலேடை அணியாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவி காளமேகத்தின் தனிப்பாடல்களில் பல சிலேடைப் பாடல்கள் பல உள்ளன.

   ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்

   மூடித்திறக்கின் முகங்காட்டும் – ஓடி மண்டை

   பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்

   உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது

என்கின்ற காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ள பாடல், இப்பாடல் பள்ளிப் பாடங்களில் இடம்பெற்று அனைவரும் அறிந்த பாடலே.

இருசொல் அலங்காரம்:

தமிழில் முதல் புதிர் நூல் அல்லது முதல் விடுகதைத் தொகுப்பு அருணாச்சல முதலியாரின் ” இரு சொல் அலங்காரம் ” என்ற நூல். ‘இரு சொல் அலங்காரம்’ (1877), ‘இரு சொல் அலங்காரமும் முச்சொல் அலங்காரமும் (1892), ‘விவேக விளக்க விடுகவிப் பொக்கிஷம்’ முதலிய நூல்களில் இருசொல் அலங்கார வகை எழுத்திலக்கிய விடுகதைகள் 19 ஆம் நூற்றாண்டிலேயே தொகுக்கப்பட்டு அச்சு நூல் வடிவம் பெற்றன. இரு சொல் அலங்காரம் என்றால் வினா இரண்டு விடை ஒன்று. அதாவது, ஒரே சொல் இரு பொருள் பட வருவதை “சிலேடை” என்பது வழக்கம். அதுபோல, இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கும் ஒரே விடையாக இருப்பது இலக்கியத்தில் ‘இருசொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

இரு சொல் அலங்காரம் முச்சொல் அலங்காரம் வகை எழுத்திலக்கிய விடுகதைகளுக்குக் கீழே சில எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது:

காலில் எவ்வாறு காயம் ஏற்பட்டது?

உன் சொந்த ஊர் எது?

(விடை: செங்கல் பட்டு)

செங்கல்பட்டு ஊர்க்காரனின் காலில் செங்கல் விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது ‘முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

பாம்பு ஓடுவதேன்

பாறை விழுவதேன்

பறை தொங்குவதேன்

(விடை: அடிப்பாரற்று)

அடிப்பவர் யாரும் இல்லாததால் பாம்பு ஓடுகிறது

பாறையைத் தாங்கி இருக்கும் அடி மண் (அடிப்பார்) விழுந்து விடுவதால் (அற்று) பாறை விழுகிறது.

பறையை அடிப்பவர் இல்லாதபொழுது அது சுவரில் ஆணியில் தொங்கவிடப்படும்

மேலும் சில: இரு அடிகளுக்குமான ஒரு பொதுச் சொல்லை விடையாகக் கொண்ட இரு சொல் அலங்காரங்கள்.

போர்வீரன் சாவதேன்?

சாம்பார் மணப்பதேன்?

(விடை: பெருங்காயத்தால்)

ரசம் மணப்பதேன் ?

ரத்தம் பெருகுவதேன் ?

(விடை: பெருங்காயத்தால்)

என்றும் கூறப்படுவதுண்டு.

எருக்கிலை பழுப்பதேன்?

எருமைக்கன்று சாவதேன்?

(விடை: பால் வற்றியதால் ..)

உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?

குடும்பச் செலவு கூடுவதேன்?

(விடை: ‘உழைப்பின்றி!’)

நெல் அளப்பதும் எதனாலே ?

முடவர் நடப்பதும் எதனாலே ?

(விடை: மரக்காலால்)

அச்சாணி வண்டி ஓடுவதேன்?

மச்சான் உறவாடுவதேன்?

(விடை : அக்காளையிட்டு (அக் காளை/அக்காளை(அக்கா)

அரக்கு பொன்னிறம் ஆவதேன்

அனுமார் இலங்கைக்குப் போனதேன்?

(விடை : அரிதாரம் (சாயம்; அ(ஹ)ரியின் தாரம்… (அரியின் அவதாரம் ராமர்)

கீரை வளர்ப்பது எதனாலே?

கீழோர் செல்வந்தரைச் சுற்றுவது எதனாலே?

(விடை : பிடுங்கித் தின்ன – கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களைப் பிடுங்கித்தின்ன)

சந்தனம் சிறந்தது ஏன்?

சொந்த உறவு துறந்தது ஏன்?

(விடை : பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)

மரம் துண்டுகளாக ஆனதேன் ?

மாணவர்கள் வகுப்பில் உறங்குவதேன் ?

(விடை : அறுவையின் விளைவால்)

தேளைக் கண்டு அஞ்சுவானேன் !

மழையைக் கண்டு மகிழ்வானேன் !

(விடை : கொட்டுவதால்)

பத்திரிகை பிறந்தது எதனால்?

வண்டி ஓடுவது எதனால்?

(விடை: அச்சினால்)

தவமியற்றும் முனிவர் நாடுவது எது?

வழி தவறிய குழந்தை தேடுவது எது?

(விடை: வீடு)

பலர்கூடி சண்டையிட்டால் கேட்பதென்ன?

மேகம் குறைவாகப் பொழிந்தால் வருவதென்ன?

(விடை: தூற்றல்)

பற்கள் விழுவது என் ?

பரமசிவன் களைப்பது ஏன் ?

(விடை: ஆடுவதால்)

ஆலிலையைப் பறிப்பதேன் ?

அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?

(விடை: தையலுக்காக; ஆலிலையை தைத்து தட்டு செய்வார்கள், அனுமார் போனது சீதை என்ற தையலைத் தேடிச் சென்றார்)

வேங்கைக்கு அழகு எதனாலே ?

அரசு நடப்பது எதனாலே ?

(விடை: வரியாலே)

வண்டி ஓடுவது எதனால்?

வீட்டை மெழுகுவது எதனால்?

(விடை: அச்சாணியால்; அச் சாணியால்)

ஆலிழை பழுப்பதேன்?

இராவழி நடப்பதேன்??

(விடை: பறிப்பாரற்று)

பஞ்சாமிர்தம் மணப்பதேன்?

பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்?

(விடை: பழனியால்)

பற்களெல்லாம் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

(விடை: நகை செய்ய)

நா இனிப்பது எதனாலே?

நாய் ஓடுவது எதனாலே?

(விடை: கல்-கண்டு)

அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படும் பண்புகளைக் கொண்டவை விடுகதைகள் என்றும்; அவை தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கியம் என்றும்; மக்கள் அறிவுத் திறனின் வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம் என்றும் நாட்டுப்புறவியல் இலக்கிய ஆய்வாளர் முனைவர் ஆறு. இராமநாதன் சுருக்கமாக விடுகதைகளின் பெருமையை எடுத்துரைக்கிறார்.

கட்டுரைக்கு உதவிய ஆவணங்கள்:

நாட்டுப்புறவியல் – இலக்கியங்கள்: விடுகதைகள்(A08132), முனைவர் ஆறு. இராமநாதன்

http://www.tamilvu.org/courses/diploma/a081/a0813/html/a08132c1.htm

மேலும்,  இணையத் தேடலில் கிடைக்கப்பெற்ற, புதிர்களை விவாதித்த பல இணையதளங்கள்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழில் புதிர்கள்”

அதிகம் படித்தது