மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன்.

இல. பிரகாசம்

Dec 22, 2018

siragu tamiliyai2

தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்றனர்.

நாம் மேற்கண்டவை பற்றி தெரிந்து கொள்ள அல்லது இன்னும் சற்று அது தொடர்பாக தெளிந்து கொள்ள சமீபத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முன்னேறிய நகர நாகரீகமான கீழடி தொடர்பான சம்பவங்களை நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது நம்மை மேற் கூறிவற்றோடு ஒன்றச் செய்யும்.

கீழடியில் தொல்லியல் அறிஞர் திரு.இராமகிருட்டிணன் மேற்கொண்ட ஆய்வுகள் பலதரப்பட்ட அளவில், அறிஞர்களால் பாராட்டப்பட்டது. காரணம் இதுவரை நாம் சங்ககாலம் பற்றிப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். அவற்றைப் பற்றிய குறிப்புகளாக இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களாக காட்டியும், இதற்கு முன் கண்டறியப்பட்ட கல்வெட்டுச் செய்திகள், அகழாய்வு முடிவுகளின் அடிப்படையில் பொதுவெளியிலும், பேசி வருகிறோம். இதுவரை சங்ககாலம் என்று வரையறை செய்யப்பட காலத்தை முந்தி இன்னும் பல நூறு வருடங்கள் தமிழின் தொன்மையானது வெளியே தெரிய வரும். அவ்வாறு வருமெனின் வட இந்தியா என்ற மூட்டையில் கட்டப்பட்ட பொய்கள் அம்பலமாகிவிடும் என்றோ அச்சப்படுகின்றனர்?.

நாம் முதல் பத்தியில் குறிப்பிட்ட தடைகள் ஏற்படுத்தும் குழுவினர் வழக்கம் போல தொல்லியல் அறிஞரை இடம் மாற்றம் செய்தும். பின் அவர் கீழடி தொடர்பாக ஆய்வு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் மத்திய தொல்லியல் துறையினர் உத்தரவிட்டதையும் நாம் கவனத்தில் ஏற்றுக் கொள்ளாது மறந்துவிட முடியாது. பின் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக முறையிட்டு கீழடி தொடர்பாக ஆய்வாளர் இராமகிருட்டிணன் நடத்திய வரையிலான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று சொன்னதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திரிபுவாதங்களும், புரட்டுக்களும்:

இந்தியர்களுக்கு முன்பிருந்தே இத்தகைய திரிபுவாதங்கள் திட்டமிட்டு பரப்பி அவற்றை ஓதச் செய்துள்ளனர் என்பதை நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் பற்றி பலமுறை பேசியும் அது தொடர்பான கேள்வியை அறிஞர் பெருமக்களிடையேயும் விவாதித்தும் வந்துள்ளோம். உதாரணத்திற்கு ஒரு குழு இப்படி ஒன்றை திரிபு கட்டுரை செய்தது “திராவிடர்கள் வடமேற்குக் கணவாய்கள் வழியே இந்தியாவிற்குள் வந்து சிந்து சமவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்த பின்னர் வட இந்தியாவில் குடியேறினர். அதன் பின் வந்த ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர்” என்று பொய்யுரையை கற்பனை வாதத்திற்கு கூட ஒவ்வாத கருத்தைத் திணிக்க முயற்சித்தனர் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

வடமேற்கு கணவாய் வழியே வந்தவர்கள் யாரென்று நாம் வரலாற்றை ஓரளவு அறிந்த காரணத்தால் பின்னால் அவர்களின் கருத்துக்கள் செல்லாததாக மாறின. புதிய ஆய்வுள், அதன் சான்றுகள் திராவிடர்கள் தமிழகத்தின் தொல்பழங்கால குடிகள் என்ற முடிவை வெளிநாட்டு அறிஞர் உட்பட வேதியல் தொழில்நுட்ட, அறிவியல் தொழில் நுட்ப முறையில் நிறுவியுள்ளனர். தற்போதும் தென்னிந்திய வரலாறு தொடர்பான ஆய்வு முடிவுகள் வலுவான ஆதாரத்துடன் தயாரிக்கப்பட்டு அவைகள் வெளியாகாதவாறு முடக்கி வைத்திருப்பதையும் நாம் எளிதில் எவ்வாறு மறந்துவிட முடியும்?.

ஐராவதம் மகாதேவனின் தொல்லியல் ஆய்வு:

siragu tamiliyai1

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இதுவரையிலான ஆய்வுகளின் முடிவுகள் முற்றிலும் ஐயப்பாடுகளுக்கு இடமில்லாமல் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பது என்பது பெரும்பாலான தொல்லியல் ஆய்வுகளில் காணமுடிகிறது.
ரொமிலா தாபர் போன்ற நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுகளை பலரால் இங்கே ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பு செய்வதையும் பார்க்க முடிகிறது.

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் நாட்டின் பிறபகுதியிலும் கிடைக்கிறதா என்று ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளை தமிழின் ஒரு இலட்சினை (குறியீடு) தொடர்பான ஆய்வுகளை நடத்தியவர் ஐராவதம் மகாதேவன். அவரது தேடல் பிராமி எழுத்துக்களும், சிந்து சமவெளி தொடர்பான ஆதாரங்களையுத் திரட்டியும் தேடிவந்துள்ளார். அவருடைய தேடலுக்குக் காரணம் ‘சிந்து மொழி திராவிடர்களுக்கு உரியது என்ற கருத்துக்கு அடிப்படையாகச் சிந்து எழுத்து வரிவடிவததைப் படிக்க முயலும் எத்தகைய முயற்சிகளும், பண்டைய தமிழ்ப் பாரம்பரியம் ஒரு முதன்மையான சான்றாகும்” என்று தொல்லியல் அறிஞரான பர் போலா கூறிய கூற்று.

தென்னிந்தியாவில் ஆந்திராவில் பட்டிபுரோலு கல்வெட்டு கண்டுபிடிக்கபட்ட பின்னர் கல்வெட்டுத்துறையில் அசோகர் காலத்திய பிராமிய எழுத்து அல்லாத மற்றொரு வரிவடிவம் இருப்பது தெரியவருகிறது.

தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப் பட்டவைகள் ‘பிராமி’ வரிவடிவம் இருந்த பொழுதே தமிழி, திரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிம் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுக்கள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராமி வரிவடிவத்திலிருந்து முரண்பாடுகள் தெரியவருகின்றன. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் தன்னுடைய ஆய்வு நூலான ‘எரலி தமிழ் எபிகிராபி’-யில் தெளிவு படுத்துகிறார்.

தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடித்தை தமிழ்ப் பிராமி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

தமிழ்ப் பிராமி -தமிழி:

siragu tamiliyai3

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட வரிவடிவங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், தாழிகள் உட்பட பிற வற்றில் கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகளில் ஐராவதம் மகாதேவனின் ஆய்வு முறை கூர்ந்து கவனிக்கத்தக்கது.

Siragu tamil1

தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்ட வரிவடிங்களில் ‘அகரம்’ ஏறி மெய்யைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒலிக் குறியீடுகள், மற்றும் பிற்காலத்தில் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவைகள் எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பவை குறித்துப் பகுப்பாய்வு செய்துள்ளது, மொழியின் மீதான ஆய்விற்கு அது நம்பகத்தன்மையை, வாதங்கள் தர்க்கத்தில் அடிப்படையில் ஒத்துப் போகிற வகையிலும் அமைத்தார்.

அதில் அவர் பயன்படுத்திய முறை தமிழ்ப் பிராமியை முதல், இரண்டாம், மூன்றாம் என ரோமன் எண்ணில் அவர் குறிப்பிட்டுள்ளது ஒரு வகை. இதன் மூலம் பல்வேறு காலத்திய கல்வெட்டு என்று கண்டறிய அதன் வரிவடித்தை அமைப்பைப் பொறுத்து, பொருத்தி ஒத்து வருகிற காலமுறைக்கு பிரித்து ஆய்வு செய்தது வரவேற்க வேண்டியதாக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்ககால மக்கள் பரவலான முறையான எழுத்தறிவுடன் விளங்கினர் என்பதை தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவியவர்.

தமிழியோடு அவர்:

ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளியில் கண்டறியப்பட்டவைகள், அதன் குறியீடுகள், மொழி, சமயம், பண்பாடு போன்றவைகள் திராவிட இனத்தோடு கருத்தியலமைப்பியல் ஒத்துப் போகின்றன என்று பலர் கூறினாலும், தன்னுடைய கூற்றைக் கள ஆய்வின் மூலம் கண்டடைந்து அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தி கார்பன் டேட்டிங் முறை உட்பட உயர் தொழில் நுட்டபங்களை பயன்படுத்தியும், தரவுகளைத் திரட்டியும் தமிழ் வரலாறு தொடர்பான ஆய்விற்கான களத்தை துரிதப்படுத்தும் வழியை தந்து விட்டுச் சென்றுள்ளார்.

தொல்லியல் துறையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றை சிலர் ஏற்க மறுத்தனர் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது. அவர் மேற்கொண்ட தென்னிந்தியா முழுமைக்கும் புதிய வரலாற்றுக்கு பார்வை விரிவு செய்ய வேண்டியதன் அவசியமும், அவர் ஆய்வு முறையை துரிதப்படுத்தியும், தரவுகளை நடுநிலையான முறையில் எவ்விதத் தடைகள் ஏற்படும் என்று எண்ணாது வெளிக்கொணர்வது அவருக்குச் செய்யும் கடனாக அமையும்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால தொல்லியல் துறையில் தன்னுடைய ஆய்வு முறைகளை புறக்கணித்த செயலுக்காக அவர் பெரிதும் வருந்தவில்லை. மாறாக அதன் களத்தை விரிவுபடுத்தி ஆதாரங்களைத் தரவுகளின் அடிப்படையில் நிருபணம் செய்தவர். அதனை மிகவும் தாமதமான காலத்தில் தான் அவரைப் பொருட்படுத்த எண்ணலாயினர். தமிழ் மொழியின் பண்பாடு, அதன் தேவைகள் குறித்து இருந்த சந்தேகங்கள் விளக்கங்கள் ஆகியவற்றின் மீது தொல்பொருள் தரவுகளை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாக வெளிக்கொண்ர்ந்த ஐராவதம் மகாதேவன் தன்னுடைய தமிழ்ப் பணியால் என்றும் பேசப்படுவார் என்பதில் நமக்கு எவ்வித ஐயமும் இல்லை.

உ.சா.துணை:
1.எரலி தமிழ் எபிகிராபி: தொல்லியலாளர் ஐராவதம் மகாதேவன்
2.தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு. முனைவர் அ. இராமசாமி
3.தொல்லியல் ஆய்வுள்: பேராசியரியர் கே.வி.இராமன்
4.தொல்லியல் நோக்கில் சங்ககாலம் முனைவர் கா.ராஐன்
5.தொல்லியல் ஆய்வுகள் குறித்த கட்டுரை -நடன. காசிநாதன்


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன்.”

அதிகம் படித்தது