மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழும் எபிரேய மொழியும்

முனைவர். ந. அரவிந்த்

Apr 10, 2021

ஆதிகாலம் முதலே, தமிழர்கள் உலகின் ஒவ்வொரு நாட்டினருடனும் ஏதாவது ஒரு வழியில் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தபோதும் தமிழர்களையும், யூதர்களையும் இந்த கட்டுரையில் ஒப்பிட்டுள்ளதற்கு முக்கியக் காரணம் உள்ளது. அது தமிழர்களுக்கும், யூதர்களுக்கும் இறைவனுடன் உள்ள உறவையும், நெருங்கிய தொடர்பையும் பற்றியது. ஒரு சமுதாயத்திற்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தை வேறெந்த மொழியிலும் கண்டதில்லையென்பதே, இந்த கட்டுரையை தொகுக்க உந்துதலாக அமைந்தது.

தமிழில் ‘அரிசி’ என்ற வார்த்தை மருவி ‘ரைஸ்’ எனவும், ‘ஒன்று’ என்ற வார்த்தை ‘ஒன்’ எனவும் ஆங்கிலத்தில் உருவாகின என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது போல் பல வார்த்தைகள் தமிழில் இருந்தே ஆங்கிலத்தில் உருவாகின. ‘இஞ்சி’ என்ற தமிழ் சொல், ‘சிஞ்சிர்’ என கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்து ‘ஜிஞ்சர்’ என ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது என தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதுபோலவே, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் நாம் ஒற்றுமை காண முடியும். உதாரணமாக, தமிழ் மொழிக்கும், கொரிய மொழி மற்றும் ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டின் மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், இணைய தளத்தில் உலகில் பழமையான மொழிகள் எவையென தேடினால் நமக்கு “தமிழ், எபிரேயம், கிரேக்கம், சீன மொழி, சமஸ்கிருதம், பெர்சிய, அராமிக் மற்றும் எகிப்திய” மொழிகள் என விடை கிடைக்கும்.

இந்த மொழிகளில், எந்த மொழி முதலில் தோன்றியது என இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பழமையான மொழிகளிடையே பல ஒற்றுமை இருந்தாலும், மொழியைத் தாண்டி நாகரிகம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தில் தமிழுக்கும், எபிரேய மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இன்று, தமிழ் மொழி தமிழர்களாலும், எபிரேய மொழி யூதர்களாலும் உலகின் பல இடங்களில் பேசப்படுகிறது. உலகில் முதலில் தோன்றியது தமிழா? அல்லது எபிரேயமா? என்று இறைவனை நடுவராக வைத்து பட்டிமன்றமே நடத்தலாம். ஏனென்றால், எது பழமை வாய்ந்ததென மனிதர்களால் தீர்ப்பு கூற முடியாது மற்றும் அது இறைவனுக்கே வெளிச்சம். மேலே கூறப்பட்ட பழமையான மொழிகளுக்கும் அதற்குப்பின் உருவாக்கப்பட்ட மொழிகளுக்கும் மிகப் பெரிய வேற்றுமை உள்ளது. பழமையான மொழி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட மொழியல்ல, இறைவன் கொடுத்த மொழி. ஆனால் புதிய மொழிகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்லது வேறு ஒரு மொழியிலிருந்து பிரிந்தவை.

யூதர்கள் வரலாற்றின்படி, கி-மு. 2500 யில் நோவா என்ற மனிதன் வாழ்ந்த காலம் வரை பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் பூமி எங்கும் பரவி அவர்களுக்கென்று தனித்தனி மொழிகளைப் பேசினார்கள்.

ஆதிதமிழன் பேசிய மொழி ‘தமிழ்’. ஆனால், ஆதிமனிதன் பேசிய மொழி எதுவென்று தெரியாது. யூதர்களின் சமய நூலின்படி, உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழியை பல மொழிகளாக இறைவன் மாற்றினார். ஆதிமனிதன் பேசிய அந்த ஒரே மொழி தமிழ் மொழியாகவும் இருக்கலாம், எபிரேய மொழியாகவும் இருக்கலாம் அல்லது இவை இரண்டும் இல்லாத வேறொரு மொழியாகக் கூட இருக்கலாம். ஆனால் ஆதிமனிதன் பேசிய மொழியிலிருந்து பிரிந்த பல மொழிகளில் தமிழும் எபிரேய மொழியும் உண்டு என்பதில் ஐயமில்லை.

siragu-tamil-ezhuththu1

தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றி வளர்த்த பெருமக்கள் பலரில், ‘தேவநேயப் பாவாணர்’ குறிப்பிடத்தக்கவர். அவரின் மிக முக்கியமான பங்களிப்பு, தமிழர் தோன்றிய இடமான லெமூரியா கண்டத்தைப் பற்றியது. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன லெமூரியாதான், தமிழன் தோன்றிய முதல் இடம் என்று கூறினார். இதன் காரணமாகத்தான், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு `குமரி’ என்ற பெயர்வந்தது என்றும் கூறினார். ‘The Primary Classical Language of the World’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். அந்தப் புத்தகத்தில், தமிழ் மொழியிலிருந்து சொற்கள் எப்படி பிறமொழிகளுக்குச் சென்று புதிய சொற்கள் உருவானது என்பதைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “உலகமே தன் வரலாற்றை அறிய தமிழுக்கு தேடி வரவேண்டும்” என்பதே தேவநேயப் பாவணரின் மையக் கருத்து.

பழங்காலத்தில், தமிழ்மொழி ‘பிராமி’ எழுத்துக்களைக் கொண்டதாக இருந்தது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இன்றும் ‘பிராமி’ எழுத்துக்கள் காணப்படுகின்றன. அதற்குப்பின் சங்ககாலத்தில் பனை ஓலைச் சுவடுகளிலும், மண்பானை ஓட்டிலும் தமிழ் எழுத்துக்களை பொறித்தனர். 2,000 ஆண்டுகள் பழமையான, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், யூதர்களின் வரலாறு பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோலில்தான் எழுதப்பட்டது.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழும் எபிரேய மொழியும்”

அதிகம் படித்தது