மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழும் கணித்தலும்

முனைவர் து.சுந்தர்

Apr 27, 2019

Siragu tamil in computer2
முன்னுரை :

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ்.(MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி.

இருப்பினும் தமிழில் கணித்தல் திறன் தொன்று தொட்டு வந்துள்ளது. கணியன் பூங்குன்றனார், கணி மேதாவியார் போன்ற புலவர்கள் இருந்துள்ளனர். இவர்களின் அடைமொழி கணித்தல் தொடர்புடையதாக உள்ளது. புலவர் நக்கீரரை மதுரைக் கணக்காயர் மகனார் என்றே குறிப்பர். இதன் காரணமாகக் கணக்கீடு செய்யும் கணக்காளர் நடைமுறை சங்க காலத்தில் இருந்துள்ளது என்பது அறியத்தக்கது. கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன் – புறம் 195/4 என்ற பாடலடிகளில் காலம் கணித்து வரும் நிலை யமனுக்கு இருந்ததாகக் குறிக்கப்படுகிறது. இவ்வாறு கணித்தல் என்பது ஒரு தீர்வைப் பெறுவதற்கான முயற்சியாகக் கொள்ளப்பெற்றுள்ளது. கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/7, கரும்பு கரு_முக கணக்கு அளிப்போரும் – பரி 19/39 என்ற நிலையில் கணக்கு பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர் – நாலடி:40 7/1 என்ற நிலையில் கணக்கர் என்ற சொல்லும் , கற்றதூஉம் இன்றி கணக்காயர் பாடத்தால் – நாலடி:32 4/1 கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும் – திரி 10/1 என்ற வகையில் கணக்காயர் என்ற சொல்லும், கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை முற்ற பகலும் முனியாது இனிது ஓதி – பழ 61/2,3 என்ற நிலையில் கணக்கு என்ற சொல்லும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றன.
நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – புகார் 5/49
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – மது 22/9
என்று சிலப்பதிகாரத்திலும் கணக்கீட்டு முறை பற்றிய குறிப்புகள் அமைந்திருக்கின்றன.
இவ்வகையில் தமிழில் கணக்கீட்டு அறிவு என்பது தொன்மைக்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

கணினி தமிழ் வளர்ச்சி :
கணினியில் தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் யார்? தமிழை சரளமாக பேசும் தமிழ் மக்கள் அனைவராலும் எளிதாக தமிழை கணினியில் பயன்படுத்த முடிகிறதா? தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுத்துவோர், தமிழ் மொழி மீது ஈடுபாடும் ஆர்வமும், கணினியில் தமிழ் பயன்பாட்டினை பெரிதும் விரும்புவோர் மட்டுமே. இது தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்தும் ஓவ்வொருவரும் அவரவரது தனிப்பட்ட முயற்சியால் அறிந்து கொண்டு, செயல்படுத்தப்பட்டது ஆகும்.

siragu computer1தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் முயற்சித்து பார்ப்பது, கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு (Google transliteration) முறை தான். அதில் முயற்சி செய்து பார்த்து விட்டு, மனதிற்கு திருப்தியும் நிறைவும் ஏற்பட்ட பின், மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சு மென்பொருட்களான, ஏ – கலப்பை (E- kalappai), என் எஹெச் எம் ரைட்டர் (NHM Writer), அழகி (Azhagi) போன்றவற்றை பயன்படுத்த முயற்சி எடுக்கின்றனர்.

தமிழை தங்களது முதல் பாடமாக கொண்டோர், தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட விரும்புவோர், தமிழில் முனைவர் பட்டப்படிப்பு பயில்வோர் என்று தமிழைச் சார்ந்து இருப்பவர்கள் கூட கணினித் தமிழ் குறித்து விரிவாக அறிந்திருப்பதில்லை. கணினித் தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்வோர், தமிழ் ஆவணங்களை எண்ணிமப் (Digitize/ Digital) படுத்தி உலகிலுள்ளோர் அனைவரும் பயன்படுத்தி மகிழ்வுற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர், தங்களது தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே தங்களது எண்ணங்களை, கருத்துக்களை, தங்களது மொழி பால் கொண்ட பற்றின் காரணமாக இலக்கியங்கள் படைத்து வெளியிடுவோர் என்று சொற்பமானவர்களே கணினியில் தமிழை பயன்படுத்துகின்றார்கள்.

மொழியியல் பயன்பாட்டில் கணினித் தமிழ் :
கணினியில் தமிழ் வளர்க்க பல அறிவியல் துறை சார்ந்த கலைச்சொற்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மொழி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இது கணினி அறிவியலுக்கு மட்டுமன்றி, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். கணினி அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளை சேர்ந்த சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். மொழி பெயர்த்து பத்திரமாக வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை நிச்சயம் அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

முக்கியமான விடயம் என்னவெனில் எழுத்துப் பிழை. பிழையின்றி எழுதுவதிலும் பேசுவதிலும் தானே மொழியின் அழகு அடங்கியிருக்கிறது. ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக சொற் செயலிகளை (Word Processors) பயன்படுத்துகையில், அல்லது வலைப்பதிவுகள் (blog post) தட்டச்சு செய்கையில், நாம் ஏதேனும் சொல்லை பிழையாக தட்டச்சு செய்து விட்டால், அதற்கான சரியான சொல், அதைப் போன்றே ஒலிக்கும் வேறு சரியான சொற்கள் என்று நமக்கு பரிந்துரை (suggestions) வழங்குகின்றது, பிழையான சொற்களை சிகப்பு அடிக்கோட்டினால் குறிப்பிட்டு காட்டுகிறது. சில செயலிகளில் தானியங்கி திருத்தம் (Auto-correct) வசதியும் உண்டு. தமிழ் தட்டச்சு செய்கையில், இது போன்று தானியங்கி திருத்தம் மற்றும் சொல் பரிந்துரை வசதிகள் உருவாக்கப் பட்டால், தமிழ் ஆவணங்கள் பிழையின்றி உருவாக்க பேருதவியாக இருக்கும். Google வழங்கும் blogger உதவி கொண்டு நாம் தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்கினால், வார்த்தைகளை தானியங்கு பரிந்துரைக்கும் (auto-suggest) வசதியும் உண்டு.

நமது மின்நூல்களை அமேசான்.காம் போன்ற வர்த்தக இணையதளங்களிலும் விற்பனை செய்யலாம். நூல்களை அச்சில் ஏற்ற ஆகும் செலவு, பதிப்பகத்தாரால் வெளியிட ஆகும் செலவு இவற்றை கருத்தில் கொண்டு பலரும் தற்போது தங்களது படைப்புகளை மின்னூலாக வெளியிடுகின்றனர். இப்படி வெளியிடும் நூல்கள் கண்டிப்பாக பல வாசகர்களை சென்றடையும். இதனால், புத்தகம் வெளியிடுவோருக்கும் செலவில்லை, வாசிப்போரும் இலவசமாகவே வாசித்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து, நூலினை அச்சில் ஏற்றலாம்.

நீங்கள் உபயோவிக்கும் கணினியில் படம் பார்ப்பதில் இருந்து, ஆவணங்களை (இந்த கட்டுரையை போல) படிப்பதும் எழுதுவதும் ஆகட்டும், முகநூல் (facebook), கூகிள் (Google) தேடல் பொறி, வாட்சப் (whatsapp) தகவல் செயலி போன்றவற்றை கணினி வழியாக பயன் செய்திருப்பீர்கள். தமிழ் எழுத்துகளை முதன் முதலில் கணிப்பொறியில் உள்ளிட்டவர்கள் கனடாவில் வாழும் இதயம் சகோதரர்கள் ஆவர். முதலில் மின்னஞ்சல் வழி தமிழ் மொழியானது இணையத்தில் உலா வந்தது. பின் சிறிது சிறிதாக தமிழ் இணைய தளங்கள் தமிழில் உருவாகின. இதன் வழி இணையத்தில் பல அரிய தகவல்கள், செய்திகள், இலக்கியங்கள், படைப்புகள் போன்றவை தம்ழில் காணப்படுகின்றன. தமிழ் தகவல்கள் விக்கிபீடியா, வலைப்பக்கங்கள், தமிழ் திரட்டிகள், மின் நூலகங்கள், இணைய வானொலிகள், சமூக வலைதளங்கள் போன்ற தளங்களின் வழி காணக்கிடைக்கின்றன.

எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில் முதன்மை இடமாக வகிக்கின்றது. அவ்வகையில் ஆங்கில மொழி உலகத்தில் முதன்மையாக காணப்படுகின்றது. ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்துக்கள் 26, பெரிய எழுத்துக்கள் 26, எண்கள் 0 முதல் 9 வரை உள்ள 10 எழுத்துக்கள், குறியீடுகள் 30 எழுத்துக்கள் ஆக மொத்தம் 102 எழுத்துக்களை கொண்டுள்ளதால் கணினிக்கு நிரல் நிரை படுத்துவதற்கு உகந்ததாக அமைகிறது.

அடுத்தபடியாக தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது. ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது. ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர். அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம். கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது.

முடிவுரை :
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்”,
என்பதனை இணைய வாயிலாக தமிழர்களின் இணைப்பைக் காண முடிகிறது. மேலும் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!, பட்டி தொட்டிகளிலெல்லாம் தமிழின் மனம் கணினி வழி உலகமெங்கும் வீசப்படவேண்டும்.

கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடரவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியை அறிமுகம் செய்தால். கணினி தமிழ் வளரும் தமிழின் தொன்மைச் சிறப்பு, தமிழ்ப் பொறியாளர்களின் ஆர்வம் தமிழி கணினிக்கான மென்பொருள்களின் பரவல் மற்றும் சந்தைப் படுத்துதல் அத்துடன் உலகளாவிய தமிழர்களின் தமிழ்ப்பற்று ஆகியவை கணினிப் பயன்பாட்டின் வழி தமிழின் வளர்ச்சியைத் தடுக்க இயலாத முக்கியக் காரணிகளாக அமைந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

குறிப்புகள்:
1. muhilneel.blogspot.com
2. teacherloga.blogspot.com


முனைவர் து.சுந்தர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழும் கணித்தலும்”

அதிகம் படித்தது