மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்

தேமொழி

Feb 25, 2017

“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்

     தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”

      “குமரி வேங்கடங் குணகுட கடலா

     மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”

என்பார் இளங்கோவடிகள். இதன் மூலம் வடக்கில் திருவேங்கடம் முதல், தெற்கில் குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு திகழ்ந்த நிலம் தமிழ் பேசும் தமிழ்நாடாக இருந்ததை அறிகிறோம். அவ்வாறே இந்த எல்லைகளுக்குட்பட்டத் தமிழ் மண்ணை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களின் எல்லைகள் குறித்தும் பாடல்கள் உள்ளன.

Tanippatarrirattuதமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த, அவர்களது நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் என கம்பர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டு நான்கு தனிப்பாடல்கள் ‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற நூலில் (பக்கம் 124-126) இடம் பெற்றுள்ளன. தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), என்ற இந்த நூல், பல புலவர்கள் எழுதிய தனிப்பாடல்களைத் தொகுத்து, 1908 ஆம் ஆண்டு கா. இராமசாமி நாயுடு அவர்கள் வெளியிட்ட நூல். இந்நூலில் காளமேகப்புலவர் முதற்கொண்டு, கம்பர் உட்பட 29 புலவர்கள் இயற்றிய சுமார் 750 தனிப்பாடல்கள் கா. இராமசாமி நாயுடு அவர்களால் தொகுத்து உரை எழுதப்பட்டு பார்த்தசாரதி நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Siragu kambar‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ‘ஒட்டக்கூத்தர்’, நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன. எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது. மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே, அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம். சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம். ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில் சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களின் நாடுகளின் எல்லைப்பகுதிகள் ‘தமிழகத்தின் இயற்கை அமைப்பு’ அடிப்படையில் இயற்கையாக அமைந்த நில எல்லைகளான ‘மலைத்தொடர்கள்,’ ‘ஆறுகள்,’ ‘கடல்கள்’ போன்றவற்றால் வரையறுக்கப்பட்டோ அல்லது ‘பெருவழிகள்,’ ‘ஊர்கள்’ ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டோ அமைந்திருப்பதை நிலவரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.

Picture1-tamil nadu natural boundary

சுருக்கமாக, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ சேரநாட்டை, பாண்டிய சோழ பல்லவ நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்திருந்திருக்கிறது. ‘கிழக்குத் தொடர்ச்சி மலை’யின் தெற்கே பல்லவர்களின் தொண்டைநாடு அமைந்திருந்துள்ளது. ‘தென்பெண்ணை ஆறு’ அல்லது அதற்குத் தெற்கே பாயும் ‘கெடிலம் ஆறு’ அல்லது ‘வட வெள்ளாறு’(கெடிலம் ஆற்றுக்குத் தெற்காக, சிதம்பரத்திற்கு வடக்கில் ஓடும் ஆறு), ஆகிய ஆறுகளில் ஒன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் பிரித்திருக்கிறது. அவ்வாறே சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் புதுக்கோட்டைக்குத் தெற்கில் பாயும் ‘தென் வெள்ளாறு’ பிரித்துள்ளது.

சோழ மன்னர்கள் வடகிழக்கில் வங்கநாடு வரையிலும் போரிட்டு சென்றாலும், கிழக்குத் தொடர்ச்சி மலையின் மேற்காக உள்ள பகுதிகளில் ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறே மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குள்ள பகுதிகளிலும் தமிழ் மன்னர்கள் அக்கறை காட்டவில்லை. புலிகேசியை வாதாபி வரை விரட்டிச் சென்று வெற்றி கொண்டு வந்தாலும் பல்லவர்களும் அங்கேயே தங்கிவிட எண்ணவில்லை. பொதுவாகவே தமிழ் மன்னர்கள் மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்காகவே தங்களது ஆட்சி எல்லைகளை இயற்கை அளித்த வரையறையுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்கள். கடல்கடந்து போரிட்டாலும் ஆட்சியை விரிவாக்கும் எண்ணம் ஏனோ தமிழருக்கு இல்லாதிருந்தது வியப்பிற்குரிய நிலை.

இதற்கு, ஓரளவிற்கு மேல் எல்லை விரிவடையும்பொழுது தளவாடங்கள், நிர்வாக அமைப்புகளின் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஆகியவை நிலைகுலையத் தொடங்குவதும் காரணமாக இருந்திருக்கலாம். தமிழகத்தின் கொங்குநாட்டின் பரந்த சமவெளிப் பகுதியைப் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஆட்சிக்குட்படுத்த சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் விரும்பியுள்ளார்கள். இருப்பினும், தமிழ் மண்ணில் ஆங்காங்கே இருந்த மலைகளையும் (பரம்பு, கொல்லி மலை போன்ற மலைகள்), சிறு குன்றுகளையும் அதன் பழங்குடிமக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணாமல் அவற்றைக் குறுநில மன்னர்களையே தங்கள் ஆட்சியின் கீழ் அரசாளவும் விட்டிருக்கிறார்கள். அச்சிற்றரசர்களுடன் நட்புறவோ, திருமண உறவோ கொண்டு தங்கள் பாதுகாப்பிற்கு அவர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இத்தகைய நிர்வாக முறை, இக்கால அரசியல் அதிகாரம் செலுத்துபவர்கள் வலுவுள்ள சிலரை (அடியாட்கள்) பாதுகாப்பிற்காகத் தங்களுடன் வைத்திருக்கும் முறை போன்றே அமைந்துள்ளது. தங்கள் நிர்வாகத்தில் அதிக ஆற்றலை விரையமாக்கக் கூடிய குறுநிலப்பகுதிகளை குறுநிலமன்னர்களையே ஆளவிட்டு அவர்களிடம் திரைபெற்று, நட்புறவு கொண்டு தங்கள் பாதுகாப்பையும் வலுப்படுத்திக் கொண்ட நிர்வாகமுறையை ஒருவகையில் பார்த்தால், அது பெருவேந்தர்களின் அறிவுடைய செயலாகவும் தோன்றுகிறது.

Picture2-ancient tamil nadu political boundary

இனி தமிழகத்தின் நாட்டுப் பிரிவுகளின் எல்லைகள் யாதெனக் கூறும் பாடல்களைக் காண்போம். சேர, சோழ, பாண்டிய, தொண்டை மண்டலத்தின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் கம்பரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டவை. கொங்குநாட்டின் எல்லைகளைக் கூறும் பாடல்களின் ஆசிரியர் பெயர்(கள்) குறிப்பிடப்படவில்லை. அவற்றின் காலத்தை குறித்து நேரடியான குறிப்புகளும் கொடுக்கப்படவில்லை, பாடல் கருத்துகளின் குறிப்புகளைக் கொண்டு அறிந்து கொள்ளவும் வழியில்லை.

1. சோழநாட்டெல்லை இதுவெனப் பாடியது:

     “கடல்கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு(i)

     குடதிசையில் கோட்டைக்கரையாம் – வடதிசையில்

     ஏணாட்டுப் பண்ணை(ii) இருபத்துநாற் காதம்

     சோணாட்டுக் கெல்லையெனச்சொல்.”

(i) ‘பொருவெள்ளாறு’ என்பதற்குப் பதில் ‘புரள் வெள்ளாறு’ என்ற பாடவேறுபாடு உள்ள பாடலும் கிடைக்கிறது.

(ii) அவ்வாறே ‘ஏணாட்டுப் பண்ணை’ என்ற தொடருக்கு ‘ஏணாட்டுப் பெண்ணை’ ‘ஏணாட்டு வெள்ளாறு’ என்ற பாடபேதங்களைக் கொண்ட பாடல்களும் பதிவாகியுள்ளன. ‘பெண்ணை’ என்பதை ‘பண்ணை’ என்று மு. இராகவையங்கார் பாடம் கொள்கிறார். அத்துடன் கம்பர் எழுதியதாகக் குறிப்பிடப்படும் இப்பாடலை ஒளவையார் எழுதினார் என்ற குறிப்புள்ளதாகவும் தெரிகிறது. ‘ஏணாடு’ என்பது தென்பெண்ணைக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட திருக்கோவிலூரை உள்ளடக்கிய ‘நடுநாடு’ என்ற குறிப்பும் கொடுக்கப்படுகிறது. இது தொண்டைநாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி (பொதுவாக இப்பகுதி, தென்பெண்ணைக்குத் தெற்கேயும் வட வெள்ளாற்றுக்கு வடக்கிலும் உள்ள நிலப்பகுதி).

புதுக்கோட்டைக்கு தெற்கில் ஓடும் ஆறு ‘தென் வெள்ளாறு’ என்று அழைக்கப்படுகிறது.

     “கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு

     குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில்

     ஏணாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம்

     சோணாட்டுக்கு எல்லையெனச் சொல்.”

பாடலின் பொருள்: கிழக்குத் திசையில் கடலும், தென்திசையில் கரையில் அலைமோதும் (தென்)வெள்ளாறும், மேற்கில் கோட்டைக்கரை எல்லையாகவும், வடதிசையில் ஏணாட்டின் பெண்ணையாற்றுக்கும் (அல்லது ஏணாட்டு வெள்ளாற்றுக்கும் ) இடையே இருபத்து நான்கு காதம் பரவியுள்ள நிலமே சோழ நாட்டின் எல்லை எனக் கூறுவாயாக.

இவ்வாறே சோழ எல்லைகளைக் குறிக்கும் மற்றுமொரு பாடல்:

     “செல்லும் குணபால் திரைவேலை

              தென்பால் செழித்த வெள்ளாறு

     வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்

              மேல்பால் வடபால் வெள்ளாறே

     எல்லை ஒருநான் கினும்காதம்

              இருபா னான்கும் இடம்பெரிதாம்

     மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்

              வளம்சேர் சோழ மண்டலமே”

           (சோழமண்டல சதகம்)

கிருஷ்ண தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டு (26-1-1518-ஆம் ஆண்டு) நடுவில்மண்டலம் உட்படச் சோழநாட்டின் எல்லை கூறப்படுகிறது. ‘கெடில ஆற்றுக்குத் தெக்கு ஸமுத்திரத்துக்கு மேக்கு தெர்க்கு வெள்ளாற்றுக்கு வடக்கு கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்று கூறப்படுகிறது. (SII VIII – 352, வரிகள் கல்வெட்டின்படியே). மேற்கே கோட்டைக்கரை என்பது இக்காலத்தில் ‘மதிள்கரை’ > ‘மதுக்கரை’ என மாறியிருக்கலாம் எனவும் ‘சோழமண்டல சதகம்’காட்டுகிறது.

Siragu kalvettuஇங்கு ‘கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்ற கல்வெட்டுக் குறிப்பில் இருந்து மதுக்கரை எல்லையாகக் கொள்ளப்படுகிறது. கோட்டைக்கரை என்ற பெயரில் வேறு சில ஊர்கள் இருப்பதுடன், அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள கோட்டைக்கரை பகுதி, அது அமைந்திருக்கும் இடப் பொருத்தத்தின் காரணமாக, அது பாடல் குறிப்பிடும் கோட்டைக்கரையாகவும் இருக்க வாய்ப்புண்டு. சேலம் மாவட்டம் பண்டைய கொங்குநாட்டுப் பகுதி என்பதால், இங்குள்ள கோட்டைக்கரை கொங்கு நாட்டின் கிழக்கெல்லையாகவும், சோழநாட்டின் மேற்கெல்லையாகவும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. ‘கோட்டக்கரை (பேட்டைவாய்த்தலை?) ஏணாடு ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரியவில்லை’ என மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பின்னர் வரும் கொங்குநாட்டு எல்லை பகுதியில் சற்று விரிவாகக் காணலாம்.

எனவே இதன் அடிப்படையில் பொதுவாக, வடக்கில் ஓடும் வெள்ளாற்றுக்கும், தெற்கில் பாயும் வெள்ளாற்றுக்கும் என இரு வெள்ளாற்று நதிகளுக்கு இடைப்பட்ட சமதளமாக, கிழக்கில் கடலை ஒரு எல்லையாகவும் மேற்கில் கோட்டைக்கரை வரை விரிந்த நிலமாக வயல்வெளிகளைக் கொண்டது சோழ மண்டலம் என அறியப்படுகிறது.

2. பாண்டிநாட்டெல்லை இதுவெனப் பாடியது:

     “வெள்ளாறது வடக்காம் மேற்குப்பெருவழியாம்(iii)

     தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார

     ஆண்டகடல் கிழக்காம் ஐம்பத்தறுகாதம்

     பாண்டிநாட்டெல்லைப்பதி.”

(iii) பெருவழி என்பதற்குப் பதில் பெருவெளி என்ற பாட பேதமும் உண்டு.

வெள்ளாறு வட எல்லையாகவும், மேற்கு எல்லையாகப் பெருவழியும், தெளிந்த நீர் கொண்ட கன்னி(குமரி) தென் எல்லையாகவும், (பல பாண்டிய மன்னர்களாலும் துறைமுகமாகக் கொண்டு) மனநிறைவுடன் ஆட்சி செய்யப்பட்ட கடல் கிழக்கு எல்லையாகவும், இந்த ஐம்பத்தாறு காதம் வரை விரிந்துள்ள நிலமே பாண்டிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும்.

3. சேரநாட்டெல்லை இதுவெனப் பாடியது:

     “வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி

     குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்

     ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்

     சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

பழனி வட திசை எல்லையாகவும், சிறப்பு கொண்ட கிழக்கு எல்லையாகத்   தென்காசியும் உள்ளது, மேற்குத் திசையில் கோழிக்கோடு எல்லையாகவும், தெற்கெல்லையாகக் கடலும் உள்ள எண்பது காதம் வரை பரவியுள்ள நிலமே சேரநாட்டின் எல்லை என்று சொல்வாயாக.

4. தொண்டைநாட்டெல்லை இதுவெனப் பாடியது:

     “மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்

     ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர்

     தெற்குப்பினாகி(iv) திகழ் இருபதின் காதம்

     நற்றொண்டை நாடெனவே நாட்டு.”

(iv)பினாகினி என்ற பாடபேதமும் உள்ளது.

மேற்குத் திசையில் பவளமலை எல்லையாகவும்,   நேர் வடக்கில் வேங்கடமலை எல்லையாகவும், கிழக்கு எல்லையாக ஆரவாரிக்கும் கடலும், உலகில் சிறந்த நதியாகிய தென்பெண்ணை ஆறு (வடமொழியில் பினாகி எனக் குறிக்கப்படும் தென்பெண்ணையாறு) தென்திசை எல்லையாகவும் திகழும் இருபது காதம் விரவியிருக்கும் நிலமே நல்ல தொண்டைநாடு என நிலை நாட்டுவாயாக. தொண்டைநாடு ‘அருவா நாடு’ எனவும் அழைக்கப்படுகிறது.

இப்பாடல்களால் பெறப்படுவது:

சோழநாடு: கிழக்கில் கடல், மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் பெண்ணை/வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு – இவற்றுக்கு இடையில் 24 காதம்.

பாண்டிய நாடு: கிழக்கில் கடல், மேற்கில் பெருவழி, வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி   – இடையில் 56 காதம்.

சேரநாடு: கிழக்கில் தென்காசி, மேற்கில் கோழிக்கோடு, வடக்கில் பழனி, தெற்கில் கடற்கரை ஓரம் – இடையில் 80 காதம்.

தொண்டைநாடு: கிழக்கில் கடல், மேற்கில் பவளமலை, வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை – இடையில் 20 காதம்.

கம்பர் எழுதிய பாடல்களாக கருதப்படும் இப்பாடல்கள் தவிர்த்து, இப்பாடல்கள் காட்டாத ‘கொங்கு நாட்டு’ எல்லைகள் குறித்த பாடல்களையும் அறியத் தருகிறார் ‘மயிலை சீனி. வேங்கடசாமி’ ‘ஆய்வுக் களஞ்சியம் – 2’ என்ற நூலில். தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளுநாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, அருவாநாடு(தொண்டைநாடு), கொங்குநாடு என்பவையாகும். சேரநாடும் துளுநாடும் பண்டைத் தமிழகத்தின் மேற்குப்பகுதி. தொண்டைநாடு, சோழநாடு, பாண்டியநாடு கிழக்குக் கடலை எல்லைகளாகக் கொண்டவை. இவற்றுக்கு இடையே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொங்கு நாடு அமைந்திருந்தது. இன்றைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தின் கொங்கு நாடு.

5. கொங்கு நாட்டெல்லை குறிக்கும் பாடல்கள்:

     “வடக்குத் தலைமலையாம் வையாவூர் தெற்குக்

     குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று – கிழக்குக்

     கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடாம்

     குழித்தண்டலை அளவே கொங்கு”(v)

என்றும்;

     “வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்

     குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்

     களித்தண் டலை மேவும் காவிரிநன் நாட்டுக்

     குளித்தண்டலை அளவே கொங்கு” (v)

என்றும் கூறுகின்றன பழம் பாடல்கள்.

(v)இப்பாடலில் காணப்படம் பாடபேதங்கள்:

‘வடக்குத் தலைமலை’ அல்லது ‘வடக்குப் பெரும்பாலை’ என்ற பாடபேதங்கள் உள்ளன.

‘வையாவூர்’ அல்லது ‘வைகாவூர்’ என்ற பாடபேதங்கள் கொண்ட ஊர் இக்காலப் ‘பழனி’.

‘குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று’ அல்லது ‘குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று’ வேறுபாடுகள் கிடைக்கிறது.

‘கிழக்கு’ என்பதற்குப் பதில் ‘கிடக்கு’ என்றும்,

‘கழித்தண்டலை சூழும்’ என்பது ‘களித்தண்டலை மேவும்’ எனவும்,

‘காவிரிசூழ் நாடாம்’ என்பது ‘காவிரிநன்நாட்டு’ எனவும்,

‘குழித்தண்டலை’ என்பது ‘குளித்தண்டலை’ எனவும்

வரிக்கு வரி பாட மாறுபாடுகள் கொண்ட பாடலிது.

குழித்தண்டலை > குளித்தண்டலை > குளித்தலை என மாறியிருக்க வாய்ப்புண்டு.

வடக்கில் ‘தலைமலைக்கும்’ (மைசூருக்கும் சத்தியமங்கலத்துக்கும் இடையிலுள்ளது), தெற்கில் ‘பழனிக்கும்,’ மேற்கில் பாலக்காட்டுக் கணவாயின் வடபகுதியில் உள்ள ‘வெள்ளியங்கிரி மலைக்கும்,’ கிழக்கில் காவிரி பாயும் ‘குளித்தலைக்கும்’ இடையில் உள்ளது ‘கொங்கு நாடு’ என்று கொங்குநாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது இந்தப்பாடல் (தமிழகம், பக்கம் 74).

குளித்தலை கொங்கு நாட்டின் கிழக்கெல்லையாகவும், சோழநாட்டின் மேற்கெல்லையாகவும் இருந்திருக்கக் கூடும் என்பதனை மயிலை சீனி. வேங்கடசாமி, “இப்போதுள்ள குளித்தலை வட்டம்வரை சங்ககாலச் சோழநாடு மேற்கில் பரவியிருந்தது என்று கொள்ள இடமுண்டு. வடக்கில் இதன் எல்லை சங்ககாலத்தில் காவிரி ஆற்றுச் சமவெளியைத் தாண்டிச் செல்லவில்லை என்றே எண்ணவேண்டியுள்ளது” எனக் குறிப்பிடுவதையும் கருத்தில் கொள்ளலாம். இதற்குச் சான்றாக, “இப்போதுள்ள தான்தோன்றி மலைப்பகுதி சங்ககாலத்தில் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்னும் அரசனால் ஆளப்பட்டது. அவன் காலத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனும் ஆண்டான் (புறம். 399). இந்த நிலை மேற்கண்ட உய்த்துணர்வுக்கு இடமளிக்கிறது” என்றும் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

‘குளித்தலை’ என்பதைச் சோழநாட்டின் மேற்கெல்லை என்று கொண்டால், கம்பரது பாடல் குறிப்பிடும் கோட்டைக்கரை மேற்கெல்லை என்பது ஆத்தூர் அருகிருக்கும் ‘கோட்டைக்கரை’ என்பதுடனும் பொருந்தி வரும் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.   குளித்தலையும், கோட்டைக்கரையும் (ஆத்தூர்) வடக்குத் தெற்காக நேர்கோட்டில் இருப்பதும் இதற்கு ஒரு வலுவான சான்றாகவும் அமையும். அத்துடன் கொங்கு நாட்டின் எல்லைகளைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடலும் ‘மதிற்கரை கீட்டிசை’ என்றே கூறுகிறது.

   “மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்

     கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு

     விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர்

     மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே”

கோவை அருகிலுள்ள ‘கோட்டைக்கரை – மதுக்கரை’ என்பது மேற்கெல்லையாக அடையாளம் காணப்பட்டது பிற்காலத்தில், சோழநாட்டின் எல்லை ‘மேற்குத்தொடர்ச்சிமலை – பாலக்காட்டுக் கணவாய்’ வரை விரிந்த பின்னால் அதன் தாக்கத்தில் பிழையாகக் கொள்ளப்பட்டதாக இருக்கவே வாய்ப்புள்ளது.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்றதைக் குறிக்கும் , “மைந்த ராடிய மயங்குபெருந் தானைக், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” (புறம். 373) என்ற புறநானூற்றுப் பாடலும்; பசும்பூண் பாண்டியன் கொங்கரை வென்றதைக் குறிக்கும் , “வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்”(அகம்.   253)   என்ற அகநானூற்றுப் பாடலும் கொங்குநாட்டைக் குறிக்கும் சங்கப்பாடல்களாகும். இருப்பினும் கொங்கு நாடு சேர சோழ பாண்டிய பல்லவப் பேரரசுகள் போல ஒரு தனிச்சிறப்பான நிலையை எய்தாமல் மாறி மாறி இந்தப் பேரரசுகள் ஆட்சியில் இருந்துள்ளது. குறிப்பாக, சேரர் ஆட்சிக்குட்பட்ட நாடாக பெரும்பாலும் விளங்கியது.

Siragu tamilnadu2

கிடைக்கும் பாடல்களில் இருந்து பொதுவாக எல்லைகளைக் குறிக்கும் பண்டைய தமிழ் நிலத்தின் ஒரு வரைபடத்தை யாரும் வரையலாம். ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; பிற்காலத்தில் கடல் கடந்து விரிந்த சோழப்பேரரசு களப்பிரர் காலத்தில் காணாமல் போயிருந்ததும் நாட்டின் எல்லையைக் குறிக்கும் வரைபடத்திற்கு ‘காலக் குறிப்பு’ எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டி நிற்கும். எனினும், ஒரு பொதுவான புரிதலுக்குத் தனிப்பாடல்களில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒரு வரைபடத்தையும் (பார்க்க படம்: 2) வரைந்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்புகளை அறியலாம்.

உதவிய நூல்கள்:

[1] திரவிடத்தாய்; மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரன் – http://www.tamilvu.org/library/lA46P/html/lA46Pind.htm

[2] பண்டைத் தமிழக வரலாறு – சேரர், சோழர், பாண்டியர்; மயிலை சீனி. வேங்கடசாமி, ஆய்வுக் களஞ்சியம்: 1, பதிப்பு வீ. அரசு – http://www.tamilvu.org/library/ln00201/html/ln00201ind.htm

 [3] பண்டைத் தமிழக வரலாறு – கொங்கு நாடு, பாண்டியர், பல்லவர் இலங்கை வரலாறு; மயிலை சீனி. வேங்கடசாமி, ஆய்வுக் களஞ்சியம்: 2, பதிப்பு வீ. அரசு – http://www.tamilvu.org/library/ln00202/html/ln00202ind.htm

[4] சோழமண்டல சதகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (பக்கம் 10) – http://www.tamilvu.org/library/l5750/html/l5750ind.htm

[5] தமிழகம் – http://www.tamilvu.org/library/lAA00/html/lAA00ind.htm

[6] தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), 1908; தொகுப்பாசிரியர் கா. இராமசாமி நாயுடு, பதிப்பாசிரியர் பார்த்தசாரதி நாயுடு – google-books id=id=3cMxAQAAMAAJ

[7] கம்பர் தனிப்பாடல்கள் – https://ta.wikisource.org/s/3mn

நிலவரைபடம்:

https://www.google.com/maps/d/viewer?mid=1cWWWLBDx_yp68gYYygRCDKISQeg&ll=11.437375845563226%2C77.15972899999997&z=7


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்”

அதிகம் படித்தது