மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே – பேரவையின் தமிழ் விழா 2017

பழமைபேசி

Jul 15, 2017

Siragu fetna1

 கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா முதன் முறையாக மினசோட்டா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழான “இயல், இசை, நாடகத்தையும்” போற்றும் வகையில் இவ்வாண்டு விழா அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண்ணும் இசைக்க மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் விழா எழுச்சியுடன் தொடங்கியது. அதனையடுத்து, மங்கள பறை, தவில் இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான தவில் கலைஞர்  சிலம்பரசன் கசேந்திரன், நாதசுரக்கலைஞர் இராமச்சந்திரன், வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் குழுவின் பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகள் விழா மேடையை அலங்கரித்தன.

Siragu fetna4

நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மேடையேறி பெருமுரசை அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

Siragu fetna9

பேரவைத் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்கள் தனது வரவேற்புரையில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள நகரக் கட்டமைப்பு நம் தொல் தமிழர்களின் கட்டிடக் கலை மரபின் சிறப்பை எடுத்துக்  காட்டுவதாக அமைந்துள்ளது, ஏறுதழுவுதல் போட்டிகளை பாதுகாக்க தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்காவில் பல தமிழ்ச் சங்கங்கள் அறப் போராட்டங்களை முன்னெடுத்து நம் மரபு விளையாட்டை  பாதுகாத்து வெற்றி கண்டனர். இச்சிறப்புகளை எல்லாம் போற்றும் வகையில் இவ்வாண்டு பேரவை விழா “தமிழர் கலையை போற்றுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்! என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது எனக் குறிப்பிட்டார். மேலும் பேரவையின் அழைப்பை ஏற்று உலகமெங்கும் இருந்து பேரவையின் 30ஆவது ”தமிழ் விழா – 2017” வில் கலந்து கொள்ள மின்னசோட்டாவிற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர் அனைவருக்கும் நன்றி நவிழ்ந்தார்.

Siragu fetna5

பேரவையின் சிறப்பு விருந்தினரான கயானா நாட்டின் தலைமை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா. திரு மோசசு வீரசாமி நாகமுத்து தனது உரையில், தன் குடும்பத்தைப் போன்று 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியர்களால் தமிழ்நாட்டில் இருந்து கயானாவிற்கு கொண்டுவரப்பட்டு கூலிகளாக வாழ்ந்து பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு  வாழ்வில் முன்னேறிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கயானா நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறித்து சிறப்பாக குறிப்பிட்டு, “பெண்களின் விடுதலை, சமூகத்தில் அனைவருக்குமான விடுதலையாக அமையும்” என்பதை வலியுறுத்தினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, பயன்பாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் கயானா நாட்டில் தமிழ் தொழில்முனைவோர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், இலங்கையின் நிலவரத்தை தான் எப்பொழுதும் கவனித்து வருவதாக குறிப்பிட்டார். இலங்கை படிப்பினையில் இருந்தே பல இனங்கள் வாழும் தன் கயானா நாட்டில் இனங்களின் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் “பல்லின நட்புறவுக் கூட்டமைப்பை” உருவாக்கியதாகக் குறிப்பிட்டார். ஓர் இனம் போரின் மூலம் இன்னொரு இனத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். உரையின் கடைசியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் (அமரர்) அவர்களின் ”கனவும் அதை நோக்கிய கடும் உழைப்புமே நம்மை சாதனையாளராக்கும்” என்ற சொற்களை நினைவுகூர்ந்தார். தமிழர்களின் கலையையும், பண்பாட்டையும் பாதுகாக்க பேரவை மேற்கொள்ளும் பணிகளை பாராட்டி தன் உரையை நிறைவு செய்தார்.

Siragu fetna12

தொடர்ந்து புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. பிறகு பேரவையின் விழா மலரினை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். மலர் குழுவினர் மலரினை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இந்த ஆண்டு விழா மலர், விழா கையேடுக்கு தமிழர் கலையை போற்றும் எழில்மிகு ஓவியங்களை ஓவியர் திரு. டிராட்சுகி மருது அவர்கள் வரைந்து கொடுத்தார். விழா பங்கேற்பாளர்களுக்கு  பேரவையின் சார்பாக வெளிவரும் சிறுவர் மலரான “தளிர்” மலரும் வழங்கப்பட்டது. சிறுமி ஆனந்தி வரைந்த “ஏறுதழுவுதல்” ஒவியம் தாங்கிய அட்டைப்படத்துடன் இம்மலர் வெளிவந்திருந்தது.

திரைக்கலைஞரும் பலகுரல் பேச்சுக்கலைஞருமான சின்னிசெயந்த் அவர்களின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘தமிழ்மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா??” எனும் தலைப்பில் திரைப்படக் கலைஞர் ரோகிணி அவர்களின் நெறியாள்கையில் இடம் பெற்ற கருத்துக்களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கிடையே நல்லதொரு விவாதத்தை எழுப்பியது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உரை இடம் பெற்றது. கவிஞர் சுகிர்தராணி அவர்கள் தலைமை வகிக்க, “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க்கவிஞர்களும் சிங்கப்பூரில் இருந்து கலந்து கொண்ட திரு. இளங்கோவன் அவர்களும் தம் பொருள் பொதிந்த கவிதையால் அரங்கத்தைச் சிந்தனைக்காட்படுத்தினர். கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன.

விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு கிழக்கே நான்கு மைல்தூரம் சென்றால், வெள்ளாற்றங்கரையின் இருக்கிறது கார்மாங்குடி. இப்பகுதியை மன்னன் நரேந்திரன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் சாரங்கதாரன். இளவயதுச் சாரங்கதாரனை, மன்னனின் இளவயது மனைவியான சித்திராங்கி என்பவள் விரும்புகிறாள். சிற்றன்னையின் விபரீதமான ஆசையைத் தெரிந்து கொண்ட சாரங்கதாரன் இசைவளிக்காது மறுக்கிறான். ஏமாற்றமுற்ற சித்திராங்கி, சாரங்கதாரனைப் பற்றிப் புறங்கூறி தண்டனைக்குள்ளாக்குகிறாள். அதன் விளைவாக, சாரங்கதாரனுக்கு கால் வெட்டப்படுகிறது. இத்தகு பின்னணியைக் கொண்ட ‘சாரங்கதாரன்’ நாடகமானது சிகாகோ தமிழ்ச்சங்கத்தினரால் அரங்கேற்றப்பட்டது.

Siragu fetna8

தொடர்ந்து மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரின் மரபுக்கலைகளை வெளிப்படுத்துமுகமாக பல கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக இடம் பெற்று, அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. ஐந்திணை பரதம், சதிராட்டம் எனச் சுட்டப்பட்ட நிகழ்ச்சி அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குனருமான மிஷ்கின் உரைநிகழ்த்தினார்.

இவ்வாண்டுக்கான அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது இலினாய் மாநிலத்தின் அமெரிக்கக் கீழவை உறுப்பினரான திரு. இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் திரு. கிளாரன்சு ஜெய், தகவற்தொழில்நுட்ப வல்லுநர் திரு. பழநி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரால் நேர்த்தியாகத் தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்கநாட்டுப்பண் பாடப்பட, அஃது எல்லோரது வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப. நல்லசிவம் அவர்களது ”பண்ணிசை” நிகழ்வில் பல தமிழிசை பாடல்களை பார்வையாளர்களின் செவிக்கினிமையாக பாடினார். மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் அதன் தமிழ் பண் குறித்தும் அப்பண்கள் எவ்வாறு வடமொழி செய்யப்பட்டு சிதைக்கப்பட்டு வருகின்றது என்ற விபரங்களையும் பகிர்ந்து கொண்டார். இத்தமிழ் பண்களை பாடுபவதால் ஏற்படும் பலன்களையும் பாடல் அறிமுகத்தில் விளக்கிப் பாடினார்.

மக்களிசை கலைஞர் திரு. செயமூர்த்தி அவர்களின் “மக்களிசை” நிகழ்ச்சியில் பாடகரின் அழகிய குரலோசையுடன்  மினசோட்டா, கேன்சசு நகர, சார்லட், வாசிங்டன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் மயிலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டமும் இணைந்து மக்களிசை நிகழ்ச்சி முதல்நாள் நிகழ்வில் வரவேற்புக்குரிய நிகழ்வாக அமைந்தது.

தமிழ் விழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்ச்சியாக, நாடக அறிஞர் பேராசிரியர் முனைவர் இராஜு அவர்களின் நெறியாள்கையில் ‘மருதநாயகம்’ மரபுநாடகம் இடம் பெற்றது. தன் ஆளுகையின் கீழ் இருந்த மதுரை மக்களை ஆங்கிலேயேர்களின் ஆதிக்கத்தில் இருந்து பாதுகாக்க முயன்ற மாவீரன் முகமது யூசப் கான் (அ) மருதநாயகம் எவ்வாறு வஞ்சகத்தால் தூக்கிலிடப்பட்டான் என்பதை சிறந்த ஒளிக்கோர்வை, இசை, நடிப்பு, நடனுத்துடன் இந்நாடகம் வெகுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது. புதுச்சேரியில் இருந்து வந்திருந்த நாடகக் கலைஞர்கள் உள்ளூர் கலைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இந்நாடக அரங்கேற்றத்திற்கு தயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Siragu fetna3

இணையமர்வாக தமிழ்த்தேனீ, குறள்தேனீ, குறும்படப் போட்டி, இசைப் பயிற்சிப் பட்டறை உள்ளிட்ட பல நிகழ்வுகள், இணையரங்குகளில் இடம் பெற்றன. இதில் முழுநாள் இணையமர்வாக நடைபெற்ற “தமிழ் தொழில்முனைவோர் மன்றத்தின் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் தமிழ்நாடு, இந்தியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என உலகின்  பல பகுதிகளில் இருந்து தொழில்துறையில் சாதனைபுரிந்து வரும் பல தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திரு. லேனா கண்ணப்பன் இம்மன்றத்தின் சார்பாக “அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் கழகம்” தொடங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு அதன் பொறுப்பாளர்களாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோர்களையும் அறிமுகப்படுத்தினார். அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்கள் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் “மருத்துவத் தொடர் கல்விக் கருத்தரங்கு – 2017” நிகழ்வு அரை நாள் இணையரங்க நிகழ்வாக நடைபெற்றது. இந்த ஆண்டு நிகழ்வு “மின்னசோட்டா மருத்துவ கழகத்துடன்” இணைந்து நடைபெற்றது சிறப்புக்குரியதாக அமைந்தது. மின்னசோட்டாவில் இயங்கி வரும் பல முன்னணி தமிழ் மருத்துவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

தமிழர் கலையை போற்றும் வண்ணமிகு ஓவியங்கள் விழா அரங்கு  முழுமைக்கும் மரபுக்கலைகளைப் பறைசாற்றுமுகமாக, வடிவான பதாகைகளும் இலச்சினைகளும் இடம் பெற்றிருந்தமை வந்திருந்தோரைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மின்னசோட்டா தமிழ் நுண்கலை மாணவர்களின் தவில், நாகசுரம், பறை உள்ளிட்ட மங்கலயிசை, திருக்குறள் மறையோதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் அருளமுதன் அவர்கள் தமிழ் மரபின் வழியில் சித்தமருத்துவம் குறித்து எளிமையாகப் பேசியமை தமிழ் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றது.

பேரவையின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி, பல்லூடக நிகழ்ச்சியாக, ஒலி, ஒளி, இசை, காட்சி எனப் பல பரிமாணத்துடன் நடந்தேறியது. பார்ப்போருக்கு இலக்கியத்தின் மீதான ஆவலையும் ஈர்ப்பையும் ஊட்டியது. அறிஞர், குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உதவியாளராகவும் மக்கள்நலப் பணியாளருமான வெ.பொன்ராச் அவர்கள், தம் கடந்த கால அனுபவங்கள், தமிழரின் வளர்ச்சி குறித்துப் பேசினார். 2017ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டி முடிவுகளை தேர்வுக் குழுவினர் அறிவித்தனர். முதற்பரிசு ’திரள்’ பட இயக்குநர் குரு சுப்ரமணியத்துக்கும், இரண்டாம் பரிசு ’பகல் நட்சத்திரம்’ படத்திற்காக பிரவீன் ராசனுக்கும், மூன்றாம் பரிசு ‘சத்தமாக ஒரு நிசப்தம்’, ‘பொழுது புலர்ந்தது’ ஆகிய படங்களுக்காக முறையே ஜெய் சீனிவாசன், அரிகரன் சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. சிறப்புப் பரிசாக, ‘கறை கேட்டது’, ‘திமில்’, ‘சாத்திரம் ஏதுக்கடி’ ஆகியவற்றின் இயக்குநர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டனர். குறும்படப் போட்டி நடுவர்களாக திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈசுவரன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர்.

Siragu fetna10

கவிஞர் சுகுமாரன், வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடளாவிய தமிழ்த்தேனீப் போட்டியின் இறுதிக்கட்ட போட்டிகள் முதன்மை அரங்கின் மேடையிலேயே நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்களான கவிஞர் சுகுமாரன், முனைவர் மு.இளங்கோவன் முதலானோர் பரிசளித்துப் பாராட்டினர். “உணவும் உழவரும்” என்ற தலைப்பில் கான்சாசு நகரத் தமிழ்ச்சங்கத்தினர் ஒரு அழகிய நாடகத்தை அரங்கேற்றினர்.  பேரவையும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் இணைந்து உருவாக்கிய மாதங்காட்டி விழா மேடையில் வெளியிடப்பட்டது. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் இடம்பெற்றுள்ள தமிழ்மரபுசார் கலைநயமிகு படங்கள் பங்கேற்பாளர்கள் அனைவர் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. மாதங்காட்டி, விழா அரங்கிற்கான ஒவியங்களை ஓவியர் திரு. இரவி பல்லேட் அவர்கள் வரைந்திருந்தார்.

அமெரிக்க உயர்கல்விக்கூடத்தில் தமிழ்மொழிக்கான மதிப்பீடுகளைப் பெறுவது குறித்தான வழிமுறை உரையினை அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமர்வது குறித்த அறிவிப்பும் வேண்டுதலும் இடம் பெற்றது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஒரிசா பாலு, ரோகிணி, கார்த்திகேய சிவசேனாபதி, தொழில் முனைவரும் நடிப்புக்கலைஞருமான கிட்டி, பேராசிரியர் ஓபர்ஸ்ட் முதலானோர் தோன்றிப் பேசினர்.

மரபுக் கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மினசோட்டா மாகாண கலைக் கழகம் வழங்கிய நிதி உதவியின் அடிப்படையில் தமிழ் மரபு இசைக்கருவிகளுக்கான பயிற்சி பட்டறையை மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து நாகசுர இசைக்கலைஞர் திரு. மாம்பலம் இராமச்சந்திரன், தவில் இசைக் கலைஞர் திரு. அடையாறு சிலம்பரசன்,  பறையிசைக் கலைஞர் திரு. “நிமிர்வு” சக்தி ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களாக மினசோட்டாவில் தங்கி இசைப் பயிற்சி பட்டறையினை நடத்தி வந்தனர். இப்பயிற்சியில் 30 மாணவர்கள் பயனடைந்தனர், இம்மாணவர்களும் ஆசான்களும் இணைந்து பேரவை விழாவில் மங்கள இசை, மக்களிசை, அதிகாரப் பறை முழக்கம், மெல்லிசை நிகழ்ச்சிகளில் தங்கள் கலைத்திறனை மக்கள் முன் அரங்கேற்றியது சிறப்புக்குரியதாக அமைந்தது.  இதில் நிமிர்வு நிறுவனர் பறையிசைக் கலைஞர் திரு. சக்தியின் வழிகாட்டுதலில்  “பறை, கலை, இயற்கை, மக்கள்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நூற்று முப்பத்து மூன்று அதிகாரப் பறைமுழக்கம் அரங்கத்தை அதிரச் செய்தது.  அமெரிக்கா வாழ் பறையிசைக் கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இப்பறையிசை நிகழ்வு இரண்டாம் நாள் நிகழ்வில் முத்தாய்ப்பாக அமைந்தது.

அதே ஊக்கமும் குதூகலத்துடன் பேரவையின் உறுப்புச் சங்கங்களின் ‘சங்கங்களின் சங்கமம்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு சங்கமும் தங்கள் உறுப்பினர்கள் படைசூழ பதாகைகள் ஆட்டம்பாட்டங்களுடன் அணிவகுத்து மேடைக்கு வர விழா மேடை தமிழ்ச் சங்கங்களின் சங்கமாக காட்சியளித்தது. கனடாவில் இருந்து விழாவில் கலந்து கொண்ட “அக்னி” இசைக்குழுவினருடன் மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, நிகழ்த்துகலை வல்லுநர் முனைவர் சரவணராசா, பாடகர்கள் சுரதா, நிரஞ்சனா, ராஜகணபதி, நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராச் முதலானோர் பங்குபெற்ற மெல்லிசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம் பெற்றது.

Siragu fetna2

மெல்லிசை நிகழ்வுக்கு நடுவே, தமிழ் விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவானந்தம் மாரியப்பன் அவர்கள் மேடையில் தோன்றி, விழாவுக்கு உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும், அனைத்து செயல்பாட்டு குழுக்களையும், பொருளாதார ஆதரவளித்த அனைத்து நிறுவனங்கள், கொடையாளர்களுக்கும், மின்னசோட்டா தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் ஆதரவையும், பேரவையின் ஆதரவையும்  குறிப்பிட்டு மனமார்ந்து நன்றி கூறினார். பேரவைத் தலைவர் அவர்கள் டெக்சாசு மாகாணத்தின் டெல்லாசு நகரத்தில் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டு தமிழ் விழாவினை ஒருங்கிணைக்கவுள்ள “மெட்ரோபிளக்சு தமிழ்ச் சங்க” நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். “மெட்ரோபிளக்சு தமிழ்ச் சங்க” நிர்வாகிகள் திரு. கால்டுவேல் வேல்நம்பி, திருமதி. கோமதி பெரியதிருவடி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு விழா அழைப்புக் காணொலியை மேடையில் ஒளிபரப்பி பங்கேற்பாளர்கள் அனைவரையும் 2018 ஆம் ஆண்டு விழாவிற்கு வரவேற்றனர். நன்றியுரையாற்றிய பேரவை தலைவர் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், விழாவில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் நன்றியுரைத்தார். விழாவின் வெற்றிக்காக வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி க. பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு பேரவையின் நன்றியை பகிர்ந்து கொண்டார்.

”கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா!” என முழங்கிய புரட்சிக்கவியின் வரிகளுக்கு கடல்கடந்து அமெரிக்கக் கண்டத்தில் வாழும் தமிழர்கள் உயிர்கொடுத்த விழாவாக பேரவையின் “தமிழ் விழா – 2017” அமைந்தது. இக்கலை நயமிகு விழா முடிந்துவிட்டதேயெனப் பிரிய மனமின்றி நகரத்து வீதிகளில் சென்ற தமிழரின் மனத்தில் தோய்ந்திருந்த மெல்லிய சோகம், விழாவின் வெற்றியையும் விழுமியத்தையும் போற்றுவதற்கு அடையாளமாய் இருந்தது.

நான்காம் நாள் நிகழ்வாக நடைபெற்ற  “இலக்கியக் கூட்டத்தில்” சிறப்பு  அழைப்பாளர்கள் திரு. மு இளங்கோவன், திரு. கோ.ப.நல்லசிவம்,  திரு. ஒரிசா பாலு, முனைவர் திரு. இராசூ, கவிஞர் திரு. சுகுமாரன், சமூக ஆர்வலர்  திரு. கார்த்திகேய சிவசேனாபதி, திரைப்படக் கலைஞர் திருமிகு. ரோகிணி, கவிஞர் திருமிகு, சுகிர்தராணி, மக்களிசைப் பாடகர் திரு. செயமூர்த்தி, சமூக செயற்பாட்டாளர் திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


பழமைபேசி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே – பேரவையின் தமிழ் விழா 2017”

அதிகம் படித்தது