மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும்

தேமொழி

Jun 24, 2017

Siragu U._V._Swaminatha_Iyer 3

‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் ‘உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர்’ (1855-1942) அவர்களுக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பட்டம். இவர் பெற்ற அனைத்துப் பட்டங்களுடன் இவரது முழுப்பெயரும் “பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகாவித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள்” என்று குறிப்பிடப்படுவதையும் நூல்களில் காணலாம்.

அறுபதாண்டுக் காலத்துக்கும் மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். உ.வே.சா. என்ற பெயர் தமிழ் பதிப்புலக வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த பெயர். பழந்தமிழ் நூல் பதிப்பித்தலில் இவர் காட்டிய சிறப்பு அக்கறையாலேதான் சங்கத்தமிழ் நூல்கள் பலரையும் சென்றடைந்தன. இந்த நூல்களின் வாயில்களாகவே இன்று நாம் பழங்காலத்தில் தமிழரின் வாழ்வையும் வளங்களையும் அறிந்து கொள்கிறோம். சங்கத் தமிழர்களை தற்காலத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.சா. எனலாம். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சுப்பதிப்பில் தமிழர் கையில் தவழ விட்டவர் என்றால் அது மிகையன்று. இவர் தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழின் செம்மொழித் தரத்திற்கு உ.வே.சா.பதிப்பித்த சங்கத்தமிழ் நூல்களே தக்க சான்றுகள் வழங்கின. பழந்தமிழர் வரலாற்றில் வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பும் தகவல்கள் அளித்தன. தமிழர் பெருமையை தமிழருக்கே உணர்த்தின. அரும்பாடுபட்டு, ஊர் ஊராக ஏடு தேடி அலைந்து நூல் பதிப்பித்த இவரது உழைப்பின் பயனாகவே தமிழிலக்கியக் கல்வி பெரிதும் விரிவடைந்து தமிழில் ஆய்வுகளும் அதிகரித்துள்ளன.

குடந்தை கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழாசிரியராக தமிழ்ப் பயிற்றுவித்தார். உ.வே.சா. மதிப்புமிக்கப் பதவிகளையும் இவர் அலங்கரித்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சா. வை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணிவோய்வு பெற்றிருந்த   உ. வே. சா. அவர்கள், அண்ணாமலை செட்டியாரின் அழைப்பினை ஏற்று மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சா. அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மதுரையில் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியதுடன் ‘செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகை, பல நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் மூலம் தமிழ்ப்பணி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர். இவர் உ.வே.சா அவர்கள் மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றைப் பதிப்பிப்பதிலும் உதவி செய்தவர். பாண்டித்துரைத் தேவரின் தாயார் மறைவு (1898-ஆம் ஆண்டு ) குறித்து துக்கம் விசாரிக்கச் சென்றார் உ.வே.சா. அந்தப் பயணத்தில் அரசராகிய பாஸ்கர சேதுபதியையும் அவர் சந்திக்க நேர்ந்தது. தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே உ.வே.சா. வின் பதிப்புப் பணியைப் பாராட்டி வழங்க விரும்பினார் மன்னர். அப்பொழுது சமஸ்தானம் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்ததை நன்கு அறிந்திருந்தமையால் உ.வே.சா. தனக்கு வரும் கல்லூரி ஆசிரியர் பதவி தரும் ஊதியமே போதுமானது என்று கூறி அந்தப் பெருங் கொடையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

தஞ்சை மாநகரில் 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் முடிசூட்டு நிகழ்வு தொடர்பாக நடந்த விழாவில் உ. வே. சா, வின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி துணையாட்சியர் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

அந்நாளில் நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களைப் பாராட்டும் முகமாகப் பட்டங்கள் வழங்கும் பொழுது, உ.வே.சா விற்கு 1906-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று மகாமகோபாத்தியாயப் பட்டம் வழங்கி அவர் பணியைச் சிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர் அரசுக்கு உ.வே.சா. வின் தமிழ்ப்பணிகள் குறித்து கடிதம் எழுதி மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற உ.வே.சா. விற்கு இருக்கும் தகுதிகளை சுட்டிக்காட்டியிருந்தார். தமிழறிஞர் ஒருவர் மகாமகோபாத்தியாயப் பட்டம் (பெரும் பேராசான்) பெற்றது அதுவே முதல்முறை என்பதும், வடமொழி அறிஞர்களுக்கு மட்டுமே அப்பட்டம் அதுகாறும் வழங்கப்பட்டு வந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கல்வித்துறை ரூ. 1000 பணமுடிப்பும் வழங்கியது.

Siragu U._V._Swaminatha_Iyer_statue 2 sivaranjani

இதனையொட்டி, மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற உ.வே.சா விற்கு அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்தது. சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்துப் பாடலாக (கீழ்க்காணும்) மூன்று பாடல்களை ஒரு தாளில் பென்சில் கொண்டு அங்கேயே எழுதி வாசித்தளித்தார்.

மகாமகோபாத்யாயர் வாழ்த்து – சுப்பிரமணிய பாரதியார்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு

சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்

உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று

எவரேகொல் உவத்தல் செய்வார்?

கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா

தப்புலவன் குறைவில் சீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்

பேருவகை படைக்கின்றீரே? 1

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்

இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னியர்சீர் மகாமகோ பாத்தியா

யப்பதவி பரிவின் ஈந்து

பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா

தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,

முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்

இவன்பெருமை மொழிய லாமோ? 2

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி

இன்பவகை நித்தம் துய்க்கும்

கதியறியோம் என்றுமனம் வருந்தற்க;

குடந்தைநகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப், பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,

இறப்பின்றித் துலங்கு வாயே. 3

அந்த ஆண்டே, சென்னை வந்த வேல்ஸ் இளவரசரும் உ.வே.சா விற்கு தங்கத் தோடா அணிவித்து மதிப்பு செய்தார்.

உ. வே.சா. செய்து வந்த தமிழ்த் தொண்டை அறிந்த காசியிலுள்ள ‘பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபையினர் ‘திராவிட வித்யாபூஷணம்’ (திராவிடக் கலையழகன்) என்ற பட்டத்தை 1917 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கினார்கள். காங்கிரசின் தலைவராக விளங்கிய ‘பண்டிதர் மதன்மோகன் மாளவியா’ அவர்கள் தோற்றுவித்த அமைப்பே காசி பாரத தர்ம மகா மண்டலம் என்பது. இவர் 1916 இல் பனாரஸ் (காசி) இந்து பல்கலைக் கழகத்தை அன்னி பெசண்ட் அம்மையாருடன் இணைந்து தோற்றுவித்தவர் என்பதும், அப்பல்கலைக் கழக துணைவேந்தராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காசி பாரத தர்ம மகா மண்டலம் என்ற அமைப்பு சனாதன தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பரப்புவதற்காகத் தொடங்கப்பட்டதாக இந்த அமைப்பின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைச் செயல்படுத்தும் முறையில் இந்து சனாதன தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் உயர்த்தப் பணியாற்றுபவர்களை பாராட்டி மதிப்புச் செய்து வந்தது. உ.வே.சா. விற்கு திராவிட வித்யா பூஷணம் அளிக்க விரும்பி, அது குறித்து திருச்சியில் இருந்த உ.வே.சா. அவர்களின் மாணவர் வழக்கறிஞர் திரு. டி. வி. சுவாமிநாத சாஸ்திரியார் என்பவரைத் தொடர்பு கொண்டார்கள் (இவர் பெயரில் இன்றும் திருச்சி தில்லைநகரில் சாஸ்திரி சாலை என்ற ஒரு சாலை அமைந்துள்ளது).   சுவாமிநாத சாஸ்திரியே அந்தப் பட்டத்தினைப் பெற்று உ.வே.சா. விடம் கொண்டு வந்து அளித்தார். அதனைக் காசி விசுவநாதருடைய திருவருள் என்று கருதிய உ.வே.சா. மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற உ.வே.சா வுடன் உரையாடிய தாகூர், அவரது பதிப்புப்பணி குறித்து அறிந்து வியந்து உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்கே வந்து உ.வே.சா. பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்றே மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் உ.வே.சா.வைப் பாராட்டி அப்பொழுதே கவிதையும் வரைந்தார்.

தேசிகோத்தம தேமாகரிப்ரணாம் – ரவீந்திரநாத் தாகூர்

(வங்காளி மூலம்)

ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ

த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி,

ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம

தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்?

ஸே   காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே

ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே?

ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே

சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி

ஸம்சோதன கரே தாஹார் பத   ஜூகலே

ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?

ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே

ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத

சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்

தமிழாக்கம்:

“ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்

இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி -

அந்தப் பெருநிதி, பேராசானே

உன்னால் அன்றோ வெளிப்பட்டது?

அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?

அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்

சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து)

அந்த அன்னையின் இணையடியில்

சமர்ப்பித்தவன் நீ அன்றோ?

அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்

நிலவில் மலர்ந்த முல்லை என

ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்.”

(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி – மஞ்சரி முன்னாள் ஆசிரியர்)

சுப்பிரமணிய பாரதியார், ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் உ.வே.சா. அவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1925 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் உ. வே. சா.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டி ஐயாயிரம் வெண்பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்று வழங்கப்பட்டது. அப்பொழுது உ. வே. சாவிற்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பி மதிப்புச் செய்த காஞ்சி காமகோடிபீடத் தலைவரான சங்கராச்சாரிய சுவாமிகள் ‘தாஷிணாத்யகலாநிதி’ (தெற்கத்திய கலைச் செல்வன்) என்ற பட்டத்தையும் அருளினார்கள்.

தமிழுக்கும் இலக்கியத்துக்கும் உ. வே.சா. ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டிய சென்னைப் பல்கலைக் கழகத்தினரால், ஆகஸ்ட் 3, 1932 அன்று மதிப்புறு முனைவர் பட்டமாகிய ‘டாக்டர்’ (இலக்கியப் பேரறிஞர்-D.LITT.) பட்டமும் அளிக்கப் பெற்றார். தமிழில் முதன்முதலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் இவரே. இப்பட்டத்தை ஏற்றுக் கொள்ளும்பொழுது தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழுக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த தன்னடக்கத்துடன் கூறினார். அவர் ஆற்றிய சிறு ஏற்புரை பின்வருமாறு அமைந்தது:

“மகா மேன்மை தங்கிய சென்னைச் சர்வகலாசாலை அத்தியக்ஷரவர்கள் சமூகத்திற்கு விஞ்ஞாபனம். சகல கலைகளுக்கும் இருப்பிடமாகிய இந்த இடத்தில் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்கும் மகாமேதாவிகள் முன்னிலையில் இந்தக் கெளரவப் பட்டத்துக்குரிய சன்னத்தைத் தங்களுடைய திருக்கரத்திலிருந்து பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பாராட்டிப் பேசிய தங்களுக்கும், இதற்குக் காரணமாயிருந்த கனவான்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்குரிய தகுதி என்னிடமில்லாவிட்டாலும் இதுவரையில் ஏற் படாத இந்தக் கெளரவம் தமிழ்ப் பாஷைக்கே கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயம்”.

குடந்தை கல்லூரியில் இருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்கு 1903 ஆம் ஆண்டு மாற்றல் பெற்று வந்த உ.வே.சா., 1903 – 1919 ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் அங்கு பணியாற்றிய காலத்திலேயே மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற பொழுது, அந்தக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு (முன்னர் குறிப்பிட்டது போல) ஒரு பாராட்டுக் கூட்டமும் நடந்தது. அவர் இறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே வாயிலில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றும் விதமாக 1948, மார்ச் 7 ஆம் நாளன்று உ.வே.சா. வின் உருவச்சிலையும் நாட்டப்பட்டது. அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன் பாரதியாரின் வாழ்த்துப் பாடலின் இறுதி இரு வரிகளும் இணைக்கப்பட்டன.

“௳ மகாமகோபாத்தியாய, தாஷிணாத்யகலாநிதி, திராவிட வித்யாபூஷணம், மகாவித்வான், உத்தமதானபுரம் வே. சாமிநாதையர், D.LITT. (19-2-1855 – 28-4-1942), இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் (1903-1919), “பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” – பாரதி வாக்கு” என்று சிலையை தாங்கி நிற்கும் சிலை மேடையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்த சிலைநாட்டு விழாவிற்கு தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்கள் வெளியீடான ‘தமிழ்ப் பொழில்’ இதழ் (பார்க்க: தமிழ்ப் பொழில், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடு, துணர் : 23 மலர்: 9, திருவள்ளுவர் ஆண்டு 1979, சருவசித்து-மார்கழி, 1947- டிசம்பர்) மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து வெளியிட்டுள்ளது. பேராசிரியர், கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் உ.வே.சா. மீது எழுதிய புகழுரைக் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் விழாவில் பங்கேற்றவர்களைக் குறித்த குறிப்பும் கொடுக்கப்படுகிறது மகிழ்ச்சி.

தமிழ்ப் பேராசிரியர், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் உருவச் சிலை நாட்டு விழா.

Siragu U._V._Swaminatha_Iyer_statue 1 wiki

தமிழ்த் தாயின் திரு மைந்தர்களுள் ஒருவராகிய ஐயரவர்கட்குச் சென்னை இராசதானிக் கலாசாலையில் 1948, மார்ச்சு 7-ஆம் நாள், கலையியல் துறைத் தலைவர் திவான் பகதூர் வீரத்திரு. பேரறிஞர் ஆ. இலக்குமண சாமி முதலியார் அவர்கள் தலைமையில் உருவச்சிலை நாட்டு விழா நிகழ்ந்தது. அரசியற்றுறைத் தலைவர் திரு. ஓ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்கள் உருவச்சிலையைத் திறந்து வைத்தார்கள். தமிழ்நாட்டு விழாவாகித் தமிழ் மக்கட்கெல்லாம் மிக்க மகிழ்ச்சியளித்தது.

அவ்விழா நிகழ்ச்சிக்கு ஆம் முயற்சிகள் புரிந்த செயலாளர்கள், பொருள் முதலிய உதவிகளைச் செய்த திருவாளர்கள், விழா அவையினச் சிறப்பித்து நிகழ்த்திய அவைத் தலைவர்கள் பாராட்டுரையாளர்கள், அவையோர் முதலியோர்க் கெல்லாம் தமிழ்த் தாயின் வாழ்த்தும், தமிழுலகத்தார் நன்றியறிவும் உரியவாகும்.

பற்பல ஆண்டுகளின் முன்னரே, இச்சங்கத்தே ஐயரவர்கள் ஓர் ஆண்டு விழாத் தலைமை தாங்கிய காலத்தே இச்சங்கம்,

திருமேவு தமிழ்த்தாய்பாற் செய்தவங்கள் பலகோடி திரண்டு வந்தோர்

உருமேவி யுற்றவென உத்தமதா னச்சீரூர் உற்றோய் வாழி!

தருமேவி வளர்கரந்தைத் தமிழ்ச் சங்கப் பேரன்பா! தமிழர் தங்கள்

பெருவாழ்வே! வருக இவண்! பெரியோனே! வருக!தமிழ்ப்பேறே! வாழி!

என்று தொடங்கிச் செல்லும் வாழ்த்துப் பாவில்,

கலைகாட்டித் தாய்மொழியின் கவின்நாட்டும்நின் தொண்டைக் காட்டும் ஒன்றை,

மலைகாட்டு மேனாட்டில் வாய்ந்திட்டார் உளராயின் மன்முன் யாரும்

அலைகாட்டு நிதிகூட்டி அவர்நூலே மனைக்கேற்ற அணியாக் கொண்டு

சிலைநாட்டித் தெருத்தோறும், தெய்வமாக் கொண்டுவிழாச் செய்வ ரன்றே

என்று கூறியிருப்பது கொண்டே, ஐயரவர்கட்கு இத்தகைய உருவச் சிலைகள் நாடெங்கும் நாட்டி, விழாக் கொண்டாட வேண்டிய நம் தமிழ் மக்கள் கடமையை எடுத்துக் கூறி, வேண்டிக் கொள்ளும் குறிப்பினை வெளியிட்டுளது. இச் சங்கப் பெருமன்றத்தேயுள்ள அவர்கள் உருவப்படக் காட்சி, நாளும் கண்டு மகிழ்வார்க் கெல்லாம் அவர்களது உருவச் சிலையமைப்பிற்குரிய நற்கால வரவினைக் காட்டி மகிழ்விக்கின்றது. தமிழ் உலகம் ஐயரவர்கட்கு எங்கெங்கும் ஏற்ற பெற்றி, உருவப் படம், உருவச் சிலைகள் அமைத்துக் கொண்டாடி மகிழ்ந்து வரும் கடப் பாட்டினை மேற்கொண்டெழுவது, பாராட்டி மகிழ்தற்குரியதாகும்.

கரந்தைக் கவியரசு வே.

(பேராசிரியர், கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை)

Siragu U._V._Swaminatha_Iyer_statue 3 sivaranjani

தமிழக அரசால் சென்னை பெசன்ட் நகரில் 1942 ஆம் ஆண்டு இவரது நினைவாக உ.வே.சா நூல்நிலையம் தொடங்கப்பட்டது. உத்தமதானபுரத்தில் உள்ள இவரது இல்லம் உ.வே.சா நினைவு இல்லமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

உ. வே. சா. அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவர் ஆங்கிலேய அரசால் மகாமகோபாத்தியாயர்பட்டம் பெற்ற நூறாண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 அன்று இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. “தனி மனிதராக இருந்தும் கூட, ஓர் இயக்கம் செய்ய வேண்டிய பணியை நிறைவாக ஆற்றியவர் உ.வே.சா. உ.வே.சா. மட்டும் தொடர்ந்து முயற்சி செய்யாமல் இருந்திருப்பாரேயானால் சங்க இலக்கியங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ள கலைஞர் கருணாநிதி, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது அரசு எடுத்த முயற்சியால் உ.வே.சா. நினைவு அஞ்சல் தலை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அஞ்சல் தலை சென்னையில் அவரால் 18.2.2006ல் வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

_________________________________________________________

படங்கள் உதவி:

மாநிலக் கல்லூரி வளாக உ. வே.சா. உருவச் சிலை படத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ்மரபு பாதுகாவலர்கள் குழுவின் தோழர்கள், ஈரோட்டைச் சேர்ந்த ‘இந்தியாவுக்காக இந்தியர்கள்’ அமைப்பின் அகரம் பார்த்திபன் மற்றும் தோழர் சிவரஞ்சனி ஆகியோருக்கு எனது நன்றிகள் உரித்தாகிறது.

மேலும் தகவலுக்கு:

இந்திய இலக்கியச் சிற்பிகள் – தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்), கி. வா. ஜகந்நாதன், 1983, சாகித்திய அக்காதெமி, https://ta.wikisource.org/s/mdh

“என் ஆசிரியப்பிரான்”, கி. வா. ஜகந்நாதன், மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், 1983, பக்கம் 117, https://ta.wikisource.org/s/j17

“கி. வா .ஜ. பேசுகிறார்”, கி. வா. ஜகந்நாதன், 1993, https://ta.wikisource.org/s/h4p

“உ.வே.சா.: பன்முக ஆளுமையின் பேருருவம்”, பெருமாள் முருகன், 2008, காலச்சுவடு, பக்கம் 69, தமிழ்த்தாத்தா, பேராசிரியர். வே. இரா.மாதவன்

தாகூர் உ.வே.சா மீது எழுதிய வங்காளிக் கவிதை – தமிழ் மரபு விக்கி; http://www.heritagewiki.org/index.php?title=தாகூர்_உ.வே.சா_மீது_எழுதிய_வங்காளிக்_கவிதை

மகிழ்ச்சி: தமிழ்ப் பேராசிரியர், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் உருவச் சிலை நாட்டு விழா.   தமிழ்ப் பொழில் (23/9) துணர் 23 – மலர் 9, கரந்தைத் தமிழ்ச் சங்கம், டிசம்பர் 20, 1947, தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு, https://books.google.com/books?id=vJInDwAAQBAJ

தமிழ் தாதா, கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, வானதி பதிப்பகம், வானதி பதிப்பகம் :: ‘வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!’ – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி – 1935 ‘விகடனில்’ வெளியிட்ட கடிதம்!’, http://etamil.blogspot.sg/2005/08/blog-post_02.html

அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இன்று அமைதியாக இருப்பது ஏன்?, 18-02-2013-தினகரன், http://www.dinakaran.com/News_Detail.asp?nid=40831


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும்”

அதிகம் படித்தது