மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு முதன்மை மாநிலம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 24, 2019

Siragu tamilnadu1

தமிழ்நாட்டை தனியாகப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி என்ன என்று நம்மால் அறிய முடியாது. ஒட்டு மொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும். தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் எஸ். நாராயணன். அவர் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனர். மத்திய அமைச்சரவையின் செயலாளராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற பின்னால், உலக நாடுகளுக்குச் சென்று பொருளாதார ஆய்வாளராகவும் ஆலோசகராவும் இருக்கிறார். அவர் 6 மாதத்திற்கு முன்னால் dravidian year என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் திராவிட இயக்க ஆட்சியில் துணை ஆட்சியராக, மாவட்ட ஆட்சியராக, அரசு செயலாளராக பணியாற்றியபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த முன்பும் அவர் பதவியில் இருந்தார், ஆட்சிக்கு வந்த பின்பும் இருந்தார்.

“முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு குறை இருக்கும், அதை அரசால் தீர்க்க முடியுமென்றால், அரசு அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள், எங்களுக்கு அறிக்கை வரும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பின்னால்தான் கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சனைகளை எங்களிடம் எடுத்துவந்து பேசத் தொடங்கினார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்ற குறைகளை விட, கட்சியின் பிரதிநிதிகள் எடுத்து வைத்ததுதான் மிக அதிகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பில் இருப்பவர்களும் வந்து எளிய மக்களின் கோரிக்கையை அன்றாடம் எங்களிடம் பேசியதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர்தான் என்று பதிவு செய்திருக்கின்றார். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனபின்புதான் தமிழ்நாட்டை அவர் புரிந்து கொள்கின்றார்.

ஒரு பெரிய நூலில் அதை எல்லாம் எழுதி வெளியிடுகிறார். தமிழர்கள் இந்தி படிக்காததால் நமக்கு வேலை கிடைக்கவில்லை என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் இப்போது இந்தி பேசுபவர்கள் எல்லாம் வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம். 2017 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை இந்தியா முழுவதும் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியா முழுவதும் உள்ள வேறுபாடுகளை இந்த ஆய்வில் சொல்லியிருந்தார்கள். பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி சேருபவர்கள் இந்தியாவில் சராசரியாக 20.4 விழுக்காட்டினர் உள்ளார்கள் என்று இந்த ஆய்வில் சொல்லப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் சராசரியாக 38.2 விழுக்காட்டினர் பள்ளி முடித்து கல்லூரி செல்கின்றனர். இந்தியா சராசரியைக் காட்டிலும் இருமடங்கு தமிழகத்தில் பள்ளி முடித்த மாணவர்கள் கல்லூரி சேருகின்றனர். ஆனால் மோடி 15 வருடம் முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தில் 17 விழுக்காட்டினரும், உத்தரப்பிரதேசத்தில் 16 விழுக்காட்டினரும் தான் கல்லூரியில் சேருகின்றனர்.

இந்த ஆய்வில் கல்வியின் தரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 100 சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. குஜராத்தில் 3 கல்லூரிகள் மட்டும் தேர்வானது. 100 சிறந்த பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் 22 பொறியியல் கல்லூரிகள் தேர்வானது . குஜராத்தில் 5, மத்தியப் பிரதேசத்தில் 3, பிஹாரில் 1, ராஜஸ்தானில் 3 கல்லூரிகள் தேர்வானது. 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் 24 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் 2, மத்திய பிரதேசத்தில் 0,பிஹாரில் 0, ராஜஸ்தானில் 4 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மகப்பேறு இறப்பு விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டுதான் அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் தங்கள் ஆய்வை எழுதினர். தமிழ் நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 க்கு 21 ஆகவும் ,குஜராத்தில் 36 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 54 ஆகவும், உத்திரப் பிரதேசத்தில் 50 ஆகவும் உள்ளது. இந்திய சராசரி 40 ஆக உள்ளது. பிரசவ காலத்தில் இறக்கும் தாய்மார்களின் சராசரி இறப்பு விகிதம் இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 167 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 73 பேராக மட்டுமே உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 285 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 221 ஆகவும் , குஜராத்தில் 112 பேராகவும் உள்ளது. இவையெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழவதும் சராசரியாக 50% மட்டும்தான் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 86.7 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். குஜராத்தில் 55%, மத்தியப்பிரதேசத்தில் 48%, உத்திர பிரதேசத்தில் 25%, ராஜஸ்தானில் 31% மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கல்வி விகிதாச்சாரத்தில் தமிழ்நாடு 80 க்கும் அதிகமான விழுக்காட்டைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் 2 மடங்கு உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. நமக்குத் போட்டியாக கேரளாதான் இருக்கிறது. ஒன்றில் நாம் முதலில் இருந்தால் மற்றொன்றில் கேரளா முதலில் இருக்கும். வட இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசம் மட்டும்தான் போட்டியாக இருக்கிறது.

தமிழ்நாடு கண்ட இந்த வளர்ச்சியை 50 ஆண்டு கால வளர்ச்சியாக எடுத்துக்கொண்டாலும் 1967 க்குப் பிறகு தான் நடந்திருக்கின்றது. இந்த 50 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தாண்டி (Beyond Amma )இந்த மாற்றங்கள் நடந்திருக்கின்றது என்று அமர்த்திய சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் தமிழ்நாடு திராவிடத்தால் வீழ்ந்தது என பொய்த்தகவல்கள் பரப்புவோரை என்ன செய்வது.?

ஆதாரம்: கருஞ்சட்டைக் கலைஞர் (கொளத்தூர் மணி அவர்கள் பேசியது) என்ற நூலில் இருந்து.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு முதன்மை மாநிலம்”

அதிகம் படித்தது