மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் (Tamil Language Rights Federation)

க.தில்லைக்குமரன்

Sep 19, 2015

tamil language

ஊடகச் செய்தி

மொழியுரிமை மாநாடு

தமிழ் உள்பட 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகள் சென்னையில் மாநாடு:
சென்னை பறைசாற்றம் கூட்டறிக்கை வெளியீடு

பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன், தி. வேல்முருகன், சீமான், சுப.உதயகுமாரன், எம்.எச். ஜவாஹிருல்லா, சி.மகேந்திரன் உள்பட
தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்

மோடி அரசு தொடர்ச்சியாக இந்தித் திணிப்பில் ஈடுபடுவதற்கு கடும் கண்டனம்

சென்னை, செப்டம்பர் 18, 2015.

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில் செப்டம்பர் 19-20, 2015 (சனி-ஞாயிறு) இல் சென்னையில் நடைபெறவுள்ள மொழியுரிமை மாநாட்டில் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் மொழியுரிமைச் செயல்வீரர்களும் இந்தித் திணிப்பை எதிர்த்தும் தமிழ் உள்பட 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்கக்கோரியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்கள்.

தமிழகத்தின் முக்கியத் தலைவர்களான திரு. பழ.நெடுமாறன் (தலைவர், தமிழர் தேசிய முன்னணி), திரு. தொல்.திருமாவளவன்( தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), திரு. தி.வேல்முருகன் (நிறுவனர்-தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா ச..(மூத்த தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), திரு. சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி), திரு. சுப.உதயகுமாரன் (ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்), திரு சி.மகேந்திரன் (தேசியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து பல பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். கர்நாடகத்திலிருந்து பனவாசி பலகா என்கிற அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் ஜி, பஞ்சாபிலிருந்து பிரபல மொழியுரிமை போராளி பேராசிரியர் ஜோகா சிங் விர்க், மேற்கு வங்கத்திலிருந்து அரசியல் விமர்சகர் முனைவர் கர்கா சாட்டர்ஜி, மகாராஷ்டிரத்திலிருந்து மொழியுரிமை செயல்வீர்ர் முனைவர் தீபக் பவார், கேரளத்திலிருந்து மலையாள ஐக்கியவேதி அமைப்பின் முனைவர் பி.பவித்திரன், ஒரிசாவிலிருந்து கோசாலி மொழிக்காக போராடும் கோசாலி கிரியனுஸ்தன் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சாகேத் ஸ்ரீபூஷண் சாகு, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து திரு.சேகர் கொட்டு, தமிழ்நாட்டின் சார்பாக எழுத்தாளர் வளர்மதி, மொழியுரிமை முன்னெடுப்பு அமைப்பின் சார்பில் திரு.மணி மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

தமிழகத் தலைவர்களும் பிற இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகளும் இணைந்து மொழியுரிமைக்கான சென்னை பறைசாற்றம் என்கிற கூட்டறிக்கையை வெளியிடவுள்ளார்கள். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் கூறினார்.

இந்தி பேசாத மக்களின் உணர்வை கொஞ்சமும் மதிக்காக நரேந்திர மோடி அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து சமீப காலமாக தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கர்நாடகம், மேற்கு வங்கம், மகாராட்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான இந்தி பேசாத மக்கள் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிவருகிறார்கள்என்றார் அவர்.

இந்திய அரசியல்சாசனத்தின் 17 ஆம் பிரிவை மாற்றி, மொழிச் சமத்துவத்தின் அடிப்படையில் புதிய மொழிக்கொள்கையை உருவாக்குவதும் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்குவதுமே எங்கள் பிரதான கோரிக்கை. அத்துடன் மற்ற மொழிகளுக்கும் உரிய அதிகார நிலையையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டும். சிறிய மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்று கூட்டியக்கத்தின் பிரதிநிதிகள் கூறினார்கள்.

இரண்டு நாள்களாக நடக்கவுள்ள இந்த மாநாட்டின் முதல் நாளில்(செப்.19) தமிழ் அமைப்புகள் மொழி உரிமை தொடர்பான தீர்மானங்களை வரைவுசெய்வதற்காக சென்னை சிஐடி குடியிருப்பில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் தமிழ் அமைப்பினர்களும் மொழி நிபுணர்களும் கருத்தாடல் நடத்தவுள்ளார்கள். இரண்டாம் நாள் நிகழ்வு செப்டம்பர் 20 ஞாயிறன்று மாலை 2 மணிக்கு மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் பொது நிகழ்வாக நடைபெறவுள்ளது. 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் மாநாட்டின் பொது நிகழ்வு தொடங்குகிறது. 20க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்யவுள்ளார்கள்.

மாநாட்டுக்கு கோவை பேரூர் மடத்தின் இளைய பட்டம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையேற்கிறார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போர் குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டியக்கமான தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் இந்த ஆண்டு ஜனவரியில், 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான 50 ஆம் ஆண்டின் நினைவாக உருவாக்கப்பட்டது.

ஊடகத் தொடர்புக்கு

ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்
9884155289, mozhiurimai2015@gmail.com


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் (Tamil Language Rights Federation)”

அதிகம் படித்தது