மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தரணியே, தலை நிமிர்! (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Jul 29, 2017

Siragu cellpesi2

செல்பேசி செய்நன்மை
செயலளவில் உயர்வெனினும்- அவன்
செய்யும் கூத்துகளும்
செயற்கரிய என்றறிவோம்!

‘எதிரில் ஆள்’ இருந்தும்
எதிராளி போல் விலக்கி
அருகில் ஆள் இருந்தும்
அன்னியர் போல் மாற்றுகின்றான்..

கையூஞ்சல் சுகத்தினில்
தவழ்ந்தாடும் குழந்தைபோல
விரலிடுக்கில் இருந்து கொண்டே
வீணாய்த் தொலைக்க வைப்பான்..

தழுவும் உன் விரல் சுகத்தில்
‘தலை குனிய’ வைத்திடுவான்-
கையில்.. கைப்பிடியில்
சாவிகொண்டு ஆட்டிடுவான்!
கைப்பிடி பொம்மைகளாய்
கணங்கள் எல்லாம் திருடிடுவான்..

நேரக் திருடன் அவன்;
கவனம் சிதற வைப்பான்..
உறவுகளைத் தவிக்க வைப்பான்..

வேலையாள் அவன் உனக்கு- அவனை
வேலை வாங்கும் முதலாளி நீ!
அணைத்து வீசி விட்டு-

அருகில் இருப்போரின்
நேர் விழிகள் நோக்கு..
நேர்ப்படப் பேசி
நெருங்கிப் பழகு..
புன்னகை வழங்கு-
நட்பில் ஆழ்ந்து போ..
புதிதாய்ப் பூத்து மகிழ்..
கனவுகள் பகிர் – நிறைய
மகிழ்வுகள் வளர்..
நினைவுகள் சேமி..
நேசங்கள் பெருக்கு..
கண்ணீர் வரச் சிரி..
தேவையெனில் அழு..
பாரங்கள் குறை..
சேர்ந்து நட..
சோர்வுகள் போக்கு..
வியர்வை உதிர்..
வீரியம் பெருக்கி
விளையாடிக் களி!
மனிதரோடு மனிதராய்
ஒன்றாய்க் கல..
பகிர்ந்து உண்..
மனிதம் வளர்..
அனுபவம் கல்..
ஆற்றல் பெருக்கு..
இளைத்தோர்க்கு உதவு..

உடன்
யாரும் இல்லையா?
புத்தகம் படி..
பூவுடன் பேசு..
வீட்டு முற்றத்தில்
பூங்கா அமை..
எழுத்தாணி எடுத்து
ஏடுகளில் எழுது..
குறிக்கோள்கள் வெல்!
வாழ்வைச் செதுக்கி
வரலாறு படை!

செல்பேசியில் தொலையாது
செழிக்கட்டும் உன் வாழ்வு..

தேவை நமக்கெல்லாம்
தேர்ந்ததொரு நிமிர்வு!
தீர்மானம் செய்திடுக-
செல்லுமிடமெல்லாம்
வெல்லுமிடம் ஆக்குக!
செல்பேசியிடம்
தலைக்குனிவோ?
தரணியே தலை நிமிர்!

தலை நிமிரச் செய்க;
தரணி உயரச் செய்க!

 


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தரணியே, தலை நிமிர்! (கவிதை)”

அதிகம் படித்தது