மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி: தரம் எங்கே உள்ளது?

பா. வேல்குமார்

Jul 30, 2016

Siragu-engineering9

தமிழகத்தில் தற்போது வரை ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த வருடம் நடந்து முடிந்துள்ள பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஒரு இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இவர்களில் வேலைக்கு தகுதி உள்ளவர்கள் என்று பார்த்தால், மிக சொற்பமாக உள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் முதலிடத்தில் உள்ளவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெரிய நிறுவனங்கள் இதற்கு முன்னர், கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து வளாகத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து, தத்தமது நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை அளித்து வந்தனர்.

Siragu engineering3

இம்மாதிரி வளாகத் தேர்வில் தேர்ச்சி அடைந்து, பணிக்குச் செல்பவர்களுக்கு, நிறுவனமே தங்களது வேலைக்குத் தேவையான பயிற்சியை அளித்து, பணி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

வளாகத் தேர்வில் தேர்ச்சி அடையாமல், பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மோசம். அதுவும் கிராமங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில், பொறியியல் கல்வியை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசம்.

இப்போது பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு நான்காண்டு கல்லூரிப் படிப்பு தவிர, பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான திறனும், அவர்களது பணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு தான் ஒரு மிகப் பெரிய இடைவெளி உள்ளது. நான்காண்டு பொறியியல் கல்லூரி பயிலும் மாணவன், அடுத்து பணிக்குத் தேவையான திறனை எப்படிக் கற்றுக் கொள்வது, எந்தத் திறனை வளர்த்துக் கொள்வது என்பதில் வழிகாட்டுதல் இல்லாமல் சொற்ப சம்பளத்திற்காக, BPO எனப்படும் கால் சென்டர்களில் பணிபுரிகின்றனர்.

Siragu engineering1

கிராமப்புறத்தில் பொறியியல் பயின்று, பணிக்காக நகரத்திற்கு இடம்பெயர்ந்து, வேலை தேடுவோரின் நிலைமை இன்னும் படுமோசமாக உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் தாம் படித்த பொறியியல் கல்வி துறை ரீதியாக எவ்வாறு வேலையினைத் தேடுவது என்று கூடத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அவலம் தமிழகத்தில் தான் உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது.

அதுவும் கிராமப்புறத்தில் ஒவ்வொரு வீட்டிலும், தங்களது சொந்த நிலத்தை விற்று, பொறியியல் கல்வி பயின்று வேலை இல்லாமல், இருப்பவர்கள் ஏராளம்.

ஒரு புறம் பணிக்குத் தேவையான ஆள் கிடைப்பதில்லை என்ற ஒரு சூழல் உள்ள நிலையில், திறன் வாய்ந்த பணியாளர்கள் தங்களது நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் பெரிய நிறுவனங்களின் மத்தியில் உள்ளது.

Siragu engineering4

இனியாவது பொறியியல் பயின்ற பட்டதாரிகள் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நான்காண்டுகள் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிப் படிப்பு தவிர, தாங்கள் கல்லூரியில் பயின்ற துறை ரீதியான, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும். அப்போது தான் பணி வாய்ப்பும் மிக எளிதாகக் கிடைக்கும். பெற்றோரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரி படிப்பானது வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் இல்லாமல், திறன் வாய்ந்த படிப்பினையும் மாணவர்களுக்கு எற்படுத்தி தருவதில் ஒவ்வொரு கல்லூரியும் அக்கறை கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகளும் இதில் அக்கறை கொண்டு, பொறியியல் பயின்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வியின் தரத்தை, மற்ற மாநில பொறியியல் கல்லூரிகளின் தரத்தோடு ஒப்பிட்டு, அதற்கேற்றவாறு பொறியியல் கல்வியில் மாற்றம் செய்து, பொறியியல் கல்வியின் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.

வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பான நிலையில், கல்விக் கடன் வாங்கி பொறியியல் பயின்றவர்களின் நிலைமை இன்னும் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.

Siragu engineering6

கல்விக் கடன் அளிப்பதில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது, பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி விட்டு, கல்விக் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளவர்கள் யாவரும் பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு தேர்ந்து எடுக்கப்படும் எழுத்துத் தேர்வினை எழுத முடியாது என்ற அறிவிப்பு. இது போதாது என்று IBPS எனப்படும் பொதுத்துறை வங்கிகளுக்கு தேர்வு நடத்தும் எழுத்துத் தேர்வினையும் கல்விக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் எழுத்துத் தேர்வினை எழுத முடியாது என்னும் அறிவிப்பு, இவ்விரண்டு அறிவிப்புகளும் கல்விக் கடன் வாங்கி பொறியியல் பயின்ற பட்டதாரிகளின் மத்தியில் ஒரு கலக்கத்தை உருவாக்கி உள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை, நமது நாட்டின் இளைஞர்கள் மீது தமக்கு இருந்த நம்பிக்கையில் குறிப்பிட்டு உள்ளார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கனவு நாயகன் மாமேதை டாக்டர் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.

திரு ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு நம் நாட்டின் இளைஞர்கள் மீது இருந்த நம்பிக்கை, நம்முடைய மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இல்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விசயமாகும்.

இனியாவது இக்குறைகளை நிவர்த்தி செய்வார்களா அரசு அதிகாரிகள்….


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி: தரம் எங்கே உள்ளது?”

அதிகம் படித்தது