மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு

தேமொழி

Aug 22, 2020

siragu Kadalodi

நூல் மதிப்புரை:

கடலோடி, நரசய்யா, [வாசகர் வட்டப் பிரசுரம் 34] வாசகர் வட்டம்.சென்னை, பக்கங்கள் -208, 1972.

நாடுகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எழுதும் மேலோட்டமான கட்டுரைகளில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. “நான் எழுதுவது பிரயாணக் கட்டுரை அல்ல. பிரயாணம் எனது பொழுது போக்கு அல்ல. அது எனது தொழில்!” என்று கூறும் எழுத்தாளர் நரசய்யாவின் ‘கடலோடி’ என்ற தன்வரலாறு கூறும் நூல் பல சுவையான செய்திகளையும் தகவல்களையும் உள்ளடக்கிய, ஒரு மாலுமியின் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட படிக்க வேண்டிய பயணநூல்.

“எண்ண அலை ஓடையாக ஓடி, நினைவுக் கூட்டில் கலந்து விடுவது போல உய்யக்கொண்டான் கால்வாய் நதியில் கலந்துவிடுகிறது. திருச்சி கோர்ட் வழியாக, ஆனைக்கட்டி மைதானத்திலிருந்த நாங்கள் உய்யக் கொண்டானில் குளிக்கச் செல்வோம்” என்ற திருச்சி நகர இளமைக்கால வாழ்வு குறித்த மலரும் நினைவுகளைக் கொண்ட முன்னுரையுடன் நூல் துவங்குகிறது. கடலோடி நரசய்யாவை நீர் தன்னிடம் ஈர்க்க நினைத்தது குறித்த அவரது முதல் நினைவு அது. ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடி மீட்கப்பட்டதை, நீருடன் அவருக்கு உண்டான தனது மறக்கமுடியாத முதல் உறவாக ‘கடலோடி’ (Memoirs of a Sailor) என்ற தலைப்பில் எழுதிய அவரது நூலில் நினைவுகூர்கிறார் திரு. நரசய்யா.

siragu narasaiya

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும், ஒரிசா மாநிலத்தில் 1932-ல் பிறந்தவருமான கே. ஆர். அப்பல நரசய்யா அவர்களின் பள்ளிப்படிப்பின் துவக்கம் முதல் அவர் வாழ்வு தமிழ்மண்ணுடன் இணைந்துவிட்டது. மதுரையிலும் திருச்சியிலும் வளர்ந்து வாழ்ந்து படித்து, பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் இந்தியக் கடற்படையில் பொறியியல் பயிற்சியாளராக (Artificer Apprentice) சேர்ந்து பொறியாளர் படிப்பையும் பயிற்சியையும் பெற்றார். கடற்படைப் பணி ஒப்பந்தம் முடிவுற்ற பிறகுத் தனது 30 ஆவது வயதில் கடற்படையிலிருந்து விலகி வணிகக்கப்பல்துறையில் பணிக்கமர்ந்தார். ஆகவே, நரசய்யா பலவகைக் கப்பல்களிலும் பயணித்து பல்வேறு நாடுகளுக்கும் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர். மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்ற பொழுது கடற்படைக்குத் திரும்பி அதில் பங்கேற்ற பிறகு விசாகப்பட்டணம் துறை முகத்தில் கப்பல், கடலியல் பொறியாளராக பணியாற்றியவர். அக்கால கட்டத்தில், 1972 ஆம் ஆண்டில் எழுதப் பெற்று, வாசகர் வட்டப் பிரசுரம் (எண்: 34) வெளியீடாக வெளிவந்த நூல்தான் “கடலோடி”. இன்று கடலோடி என்பது அவர் பெயருடன் இணைந்து ‘கடலோடி நரசய்யா’ என்றே அறியப்படுகிறார்.

கடலோடி (1972), எனத் தொடங்கிய நூல்கள் எழுதும் எழுத்துப் பயணம் நரசய்யா சிறுகதைகள் (1997), தீர்க்க ரேகைகள் (2003), சொல்லொணாப்பேறு (2004), கடல்வழி வணிகம் (2005), மதராசபட்டினம் (2006), துறைமுக வெற்றிச் சாதனை (2007), ஆலவாய் (2009), கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009), செம்புலப் பெயனீர் (2011) என்று மேலும் பல நூல்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரலாறு, தன்வரலாறு, ஆய்வுநூல்கள், சிறுகதைகள் என்று பல இலக்கிய வகைப் பிரிவிலும் தனது இலக்கியப் பங்களிப்பிற்காக தமிழக அரசின் விருதுகளும் பெற்றிருக்கிறார். நூல்கள் தவிர்த்து இன்றுவரை தனது 80வயதுகளிலும், பற்பல சிறுகதைகளும், நூல் மதிப்புரைக் கட்டுரைகள் எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், இந்து நாளிதழ் என்று பல இதழ்களில் எழுதி அவரது இலக்கிய வாழ்வை தொடர்வது நரசய்யா என்ற எழுத்தாளரின் சிறப்பு.

1963ஆம் ஆண்டில் அவரது கடற்படைப் பணியிலிருந்து விலகி, புகைவண்டியில் சென்னை நோக்கித் திரும்புகையில் நரசய்யா தனது நினைவலைகளைப் பின்னோக்கிப் பயணிக்க வைப்பதில் அவரது தன்வரலாறு முதல் அத்தியாயம் கடற்படையின் பிரிவின் நினைவாகத் துவங்குகிறது. கடற்படைப் பயிற்சியிலும் பணியிலும் 15 ஆண்டுகள் விருப்பும் வெறுப்புமாகக் கலவையான உணர்வுகளுடன் கலந்துவிட்ட தனது வாழ்வை, “கடற்படை! விருப்புக்கும் வெறுப்புக்கும் மாறி மாறி இலக்கான படை. பெருமையுடன் நான் கடற்படையில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள சில சமயங்களில் தயக்கம் அளித்த படை! அதை விட்ட பின்பு, அதைப் பற்றியே நினைக்கத் தோற்றுவிக்கும் அன்பான படை!” என்று தனது கடற்படை வாழ்வை தன் வரலாறாக விவரிக்கிறார் நரசய்யா.

லோனாவாலா என்ற ஊரில் கடுமையான பயிற்சி பெற்றது, தவற்றுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் தன்னை செப்பனிட்டது, கப்பல் என்பது ஒரு வீடு – ஒரு குடும்பம் போன்றது என்ற கட்டுக்கோப்பைக் கற்றுக் கொண்டது, பயிற்சிக்காக இருந்த ஐரோப்பிய அதிகாரிகள் வேலை நேரத்தில் வெகு கறாராகவும் ஓய்வு நேரத்தில் பதவி வேறுபாடுகள் இன்றி அனைவரையும் மதித்து நல்ல நட்பாகவும் பழகும் அவர்களது பண்பாடு, இதற்கு மாறாக அதிகாரி, அதிகாரி அல்லாதோர் எனப் பதவி நிலை அடிப்படையில் தனக்குக் கீழ் பதவியில் இருப்போரிடம் நெருக்கமில்லாமல் அவர்களுக்கு மதிப்பு தராமல் எப்பொழுதும் அதிகார தோரணையுடனே நடந்து கொள்ளும் இந்திய அதிகாரிகள் ஆகியவற்றைப் பயிற்சிக் கால அனுபவங்களாக விவரிக்கிறார்.

பயிற்சி முடிந்த பிறகு நாசகாரிக் கப்பலான ஐ. என். எஸ் ராணா கப்பலில் துவங்கிய அவரது பணியும் பயிற்சி முறைகளும் நாமும் கடற்படையில் சேர்ந்தால் என்ன என்று நமக்கும் ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளது. நரசய்யாவின் முதல் கடற்பயணத்தில் அவர் எதிர்கொண்ட பயணப்பிணியால் ஏற்பட்ட வாட்டம், குழுவாகப் பணிபுரியும் மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டது, கடலில் விழுந்து மயிரிழையில் விபத்திலிருந்து உயிர் தப்பிய நிகழ்வு, இங்கிலாந்து ராணியின் கப்பலுக்குக் காவலாக அனுப்பப் பட்ட அவரது கப்பலின் பயணம், துறைமுகம் அடைந்தவுடன் கேளிக்கையிலும் சிற்றின்பத்திலும் நேரத்தைக் கழிக்க விரும்பும் மாலுமிகளின் மனப்பாங்கு, கள்ளக் கடத்தல் படகுகளை விரட்டிச் சென்று பிடித்தது, புவி நடுக்கோட்டை கப்பலில் கடக்கையில் கப்பலில் நடக்கும் கொண்டாட்டம், ‘மாலுமிகளின் சொர்க்கம்’ எனக் கூறப்படும் செகல்ஸ் தீவு, இந்தியாவின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான ஐ. என். எஸ். விக்கிராந்த் கப்பலை இந்தியாவிற்குக் கொண்டுவரும் பொறுப்பில் பங்கேற்றது, பணியில் எதிர்பாரா வகையில் ஏற்பட்ட விபத்தினால் நடந்த உயிர் இழப்புகள் என்று ஒரு கடற்படை வாழ்க்கை அவர் எழுத்துமூலம் நாம் கண் முன்னே விரிகிறது.

siragu Kadalodiநூலின் முதல் ஏழு அத்தியாயங்களில் அவரது கடற்படைப் பயிற்சி மற்றும் பணி பற்றி விவரிக்கப்படுகிறது. அடுத்து வரும் 8ஆவது அத்தியாயம் வணிக கப்பல் வாழ்க்கையைக் கூறுகிறது. இவற்றுக்குப் பிறகு வரும் இரு அத்தியாயங்கள் இந்திய வரலாற்றில் தொன்று தொட்டு நடந்த வணிக கடற்பயணங்கள், அந்த கடல் வணிகத்தைக் காக்கும் நோக்கில் முடியாட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட கடற்படைப் போர்கள், அதன் மூலம் வணிகம் பரவல், சமயம் பரவல், இவற்றைக் காட்டும் இலக்கியம் மற்றும் தொல்லியல் தரவுகள், வணிகத்தில் தொன்றுதொட்டு தமிழர்கள் முன்னோடியாக இருந்த நிலை, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர் தங்கள் வணிக மேம்பாட்டிற்காக இந்தியக் கப்பற் தொழிலையும் கடல் வணிகத்தையும் திட்டமிடப்பட்டு அழித்த வரலாறு ஆகியவற்றை விவரிக்கிறது. இறுதியாக வரும் 11ஆவது அத்தியாயம் நரசய்யா மீண்டும் கடற்படையில் இணைந்து 1971 டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்களித்த பகுதியைக் கொண்டிருக்கிறது. இது அந்த போர்க்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான்-பங்களாதேஷ் நாடுகளின் அரசியல் நிகழ்வுகளையும் இந்திய இராணுவம் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்கள் குறித்த செய்திகளின் தொகுப்பாக அமைகிறது.

இந்த நூலில் நமக்கு, நாசகாரி கப்பல், விமானந்தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் என்று கப்பல்கள் குறித்தும்;

கப்பலின் இடது பக்கம் ‘போர்ட்’ (Port), வலது பக்கம் ‘ஸ்டார் போர்ட்’ (Star Board) என்பது போன்ற அடிப்படைத் தகவல்களும்;

பயணப்பிணி வரவழைக்கும் நேரத்தில் அலை மேலும் கீழும் கப்பலை ஆட்டுவிப்பதற்கு ரோலிங்(Rolling), பிட்ச்சிங் (Pitching), என்ற ஆட்டங்களும், இவையிரண்டும் ஒருசேர நிகழும் ‘கார்க் ஸ்க்ரூ மோஷன்’ என்பது போன்ற செய்திகளும்;

விமானந்தாங்கிக் கப்பலில் விமானம் புறப்படும் செயல்முறை விளக்கம் என்ற கப்பல்கள் குறித்த அரிய அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள் மட்டுமல்ல;

இவற்றுக்குச் சற்றும் சளைக்காமல், கடற்படையில் சுயநலமற்ற பணியாளர்கள், அங்கு வசதிகள் குறைவாக இருந்தாலும் குடும்பம் போலப் பழகும் முறை. இதற்கு மாறாக வணிக கப்பல்கள் வசதி நிறைந்திருந்தாலும் மனதிற்கு ஒவ்வாத சூழ்நிலை, பணம் ஈட்டுவதே குறியாக உடன் உள்ள மக்களிடம் ஆர்வம் காட்டாத ஊழியர்கள் என்று கடலில் பயணிக்கும் மனிதர்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் நூல் முழுவதும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

நரசய்யா தனது தந்தையின் கடிதம் கூறும் அறிவுரையாக “வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் வாழ்வதில் நிறைவு பெற்றுவிடுபவர்கள் வாழும் வாழ்க்கை பெயருக்கேற்றதல்ல. தரைப்பகுதிகளில் தங்களைப் பூட்டிக் கொண்டுவிட்ட எந்த ஒரு நாடோ, கூட்டமோ, சமூகமோ, தனி மனிதனோ வளர்ந்ததேயில்லை” என்று கூறும் வரிகள், ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்துகொண்டு தங்களைத் தாங்களே உயர்வாய் தற்பெருமை பேசிக் கொண்டிருப்போருக்குப் புரியாமல் போகலாம். ஆனால், பரந்து விரிந்த உலகில் பயணித்த எவரும், அல்லது அக்கறையுடன் உலக சமூகங்களை ஆராய்ந்து குறுகிய மனப்பான்மையைக் கைவிட்ட எவருக்கும் இந்த வரிகளின் உண்மை புரியும். இதை உண்மை என்று அவரது பயண அனுபவங்கள் நிறுவுகின்றன.

நரசய்யாவிற்குள் பன்முகத்தன்மை கொண்ட பல நரசய்யாக்கள் இருக்கிறார்கள் என்பதை நூலின் மூலம் அரிய முடிகிறது.

நரசய்யாவிற்குள் ஒரு ஓவியர் இருக்கிறார்;

ஓய்வு நேரங்களில் சுற்றுலாக்கள் சென்று இயற்கை எழிலைக் கண்டு களிக்கும் ஒரு இயற்கை ஆர்வலர் இருக்கிறார்;

“செல்லும் கணமெல்லாம் செல்லரித்துச் செல்லுமிந்த நில்லாத வாழ்வதனை நிலையில்லா உடலதனை”.. என்று எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதே தத்துவக் கவிதை எழுதிய கவிஞர் ஒளிந்திருக்கிறார்;

நூல்களைத் தேடித் தேடிப் படிக்கும் ஒரு நூலார்வலர் இருக்கிறார்;

அருங்காட்சியகங்களைக் கண்டு களிக்கும் ஆர்வலர் இருக்கிறார்;

தமிழர்களின் தொன்மையான வணிக வரலாறு, தமிழ் இலக்கியங்களின் வழி அறியக்கூடிய கடற்பயணச் செய்திகள் ஆகியவற்றை ஆராயும் ஆர்வத்தைக் கொண்ட வரலாற்று ஆய்வாளர் இருக்கிறார் (நரசய்யாவிற்கு அவ்வாறு வரலற்று ஆர்வத்தைத் தோற்றுவித்தவர் சந்திரா என்ற ஒரு நண்பர் என்பதையும் நூலின் மூலம் அறிய முடிகிறது);

அயல்நாடுகளில் வணிகர்களையும் அவர்களிடம் பொருள் வாங்க ஆர்வம் கொண்ட பயணிகளின் மனநிலை, அயல்நாட்டுத் திரைப்படங்களில் பாலுணர்வுக் காட்சிகள் இயல்பாகவும் விரசமின்றியும் அமைத்திருப்பது, அயர்லாந்தின் சமயச் சண்டைகள், ஜப்பான் மக்களின் பணி நேர்மை, மாறாக ஒரு சிகரெட் பாக்கெட்டிற்கே விலைபோகும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கும் ஒரு சமூக ஆர்வலரும் இருக்கிறார்;

இவற்றுக்கும் மேலாக, இந்த அனுபவங்களையெல்லாம் சுவையாக தன் வரலாற்றில் பதிந்துவிட்ட ஒரு எழுத்தாளராகவும் அவர் இருப்பதால் அவர் பணி-பயண அனுபவங்களை நம்மால் அறிய முடிகிறது. கடற்படையின் நிர்வாகத்தையும், கப்பலின் நிர்வாகத்தையும், கப்பல்களின் அமைப்பையும், பணி முறைகளையும், கடற்படை பயிற்சி முறைகளையும் ஒரு கதை போலச் சொல்லிச் செல்லும் பாங்கு அவரது நூலுடன் நம்மை இணைத்துவிடுகிறது.

உலகின் பற்பல நாடுகள் குறித்தும், அவற்றின் துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும், அந்நாடுகளின் மக்களையும், அவர்களது பண்பாட்டையும் இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிவது மனநிறைவு தருவதாக அமைகிறது. கடற்படை, கடற்பயணங்கள் போன்ற செய்திகள் அடங்கிய நூல்கள் தமிழில் குறைவாகவே உள்ள நிலையில் அவற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

__________________________________________________________

நூல் மதிப்புரை:

கடலோடி, நரசய்யா, [வாசகர் வட்டப் பிரசுரம் 34] வாசகர் வட்டம்.சென்னை, பக்கங்கள் -208, 1972.

தமிழிணையம் – மின்னூலகம்

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8l0xy#book1/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு”

அதிகம் படித்தது