மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தற்காலக் கல்வி முறை – பகுதி 6

முனைவர் ஜ. பிரேமலதா

Oct 3, 2015

அரசின் கல்விக் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இதை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மூன்று தரப்பினருக்கு உள்ளது. முதலில் ஆசிரியர். அடுத்து பெற்றோர். மூன்றாவது மாணவர்.

tharkaala kalvi5கல்வி கற்றதன் பயன் அதனை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதே. எனவேதான் அன்ன சத்திரம் வைத்தலை விட, ஆலயம் கட்டுவதை விட மிகப் புண்ணியச் செயல் கல்லாத ஒருவனை கற்றவனாக்குவதே என்கிறார் பாரதியார். எழுத்தறிவித்தவனை இறைவன் என்கிறார்கள். எழுத்து ஒருவனை முன்னேற்ற உதவும் கருவி. இறைவனுக்கு முன் அனைவரும் சமம். சாதி, மதம் என்ற பாகுபாடு இறைவனுக்குக் கிடையாது. ஆசிரியரும் இதைக் கடந்தவராகத் திகழவேண்டும். மாணவர்களுக்கும் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் சிக்காமல் வாழ கற்றுத்தரல் வேண்டும். கல்வி கற்கும் இடத்தில் மனித உறவுகள் மலர்ந்து வளர்ந்து வலுவடைய வேண்டும். ஆசிரியர்கள் சக ஆசிரியர்களோடு இணக்கமான உறவுகளை வளர்க்கும் சூழலிலிருந்தால் மாணவர்களும் சமூகத்தில் அதைப் பேண கற்றுக் கொள்வர்.

ஆசிரியர்கள் நல்ல இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பள்ளி சூழலோ, கல்லூரிச் சூழலோ சரியாக அமைய வேண்டும். ஆசிரியர் பாடம் சொல்லித் தருவது மட்டுமின்றி பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கே பாடாய்பட வேண்டிய சூழ்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக புள்ளிவிவரங்களை கேட்கும் பொழுது அதில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மீண்டும் மீண்டும் பல வகையான புள்ளி விவரங்களைக் கேட்கும் பொழுது, மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தைப் புள்ளி விவரங்கள் சேகரித்து உரிய வடிவத்தில் தருவதில் செலவிடுகின்றனர்.மேலும் இது போன்ற வேலைகளில்  நேரத்தைச் செலவிடுவதால் பாடம் நடத்துவதற்குரிய ஈடுபாட்டை இழக்கிறார்கள். சோர்வடைந்து விடுகிறார்கள்.

tharkaala kalvi4பள்ளிச் சூழலோ, கல்லூரிச் சூழலோ இருதரப்பிலும் இம்மாதிரியான இடர்ப்பாடுகளுக்கு ஆசிரியர்கள் ஆளாகின்றனர். இதனால் மாணவர்களுக்கு உரிய பாடங்களைச் சொல்லித்தர இயலாத சூழல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களோ மிகுதி. சொல்லித்தரும் நேரமோ குறைவு என்ற நிலை வரும் போது மாணவர்கள் இடர்படுகின்றனர். மேலும் ஆசிரியர் பிற பணியில் ஈடுபடும் பொழுது வகுப்பு நேரங்களில் மாணவர்கள் சுதந்திரமாய் இருந்து பழகிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் தவறிழைக்கும் பொழுதோ, குறைவான மதிப்பெண்களைப் பெறும்போதோ சில சூழ்நிலையில் கண்டிக்க இயலா சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். அப்படி கண்டித்தாலும் தகவல் அறியும் சட்டத்தை நினைத்து மனம் திறந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு தகவல் அறியும் சட்டம் என்பது பல சூழலில் உண்மையாக கை கொடுத்தாலும், தவறான பாதையில் செல்லும் மாணவர்கள் கையில் கத்தியைப் போன்றே மாறி விடுகிறது. வகுப்பில் கீழ்ப்படியாத ஒழுக்கமற்ற மாணவர்களிருப்பின் பல ஆசிரியர்கள் ஒதுங்கிச் செல்லும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

சூழல் எப்படியிருப்பினும் அனைத்தையும் சகித்துக் கொண்டு நேர்மையான வழியில் செயல்படும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆசிரியர் பாடத்தில் தேர்ச்சியுடையவராக இருப்பின் இன்னல்களைப் பொருட்படுத்தாமல், மாணவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திறம்படக் கற்பிப்பார். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களோடு தோழமைப் பாராட்டவும் செய்வர். தன் நேர்மை, மரியாதை, பாரபட்சமின்மை போன்ற பண்புகளை மாணவ சமுதாயத்திற்கும் ஊட்டி சமுதாய உணர்வினை போதித்து சிறந்த குடிமகன்களாக மாணவர்களை உருவாக்குவர்.

tharkaala kalvi15என்னுடைய இரு தோழிகளில் ஒருவர் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளியிலும், மற்றொருவர் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியிலும் பணியாற்றுகின்றனர். வசதி குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அவை. தற்போது அரசு செயல்படுத்திவரும் செயல்வழி கற்றல்  குறித்து கலந்துரையாடினேன். இருவரும் இத்திட்டம் மிகவும் அருமையான திட்டம் என்று புகழாராம் சூட்டினார்கள். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் பெரிதும் உதவுகிறது என்றார்கள். அதேசமயம் குறைபாடுகளும் உள்ளன என்றார்கள். மீத்திறன் குறைந்த குழந்தைகள் மற்ற மாணவர்களுக்கு இணையாக கற்க இயலாத நிலையில் அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதா, பாடத்திட்டத்தை முடிப்பதா என்ற சிக்கல் எழுகின்றது. அவ்வாறான சூழலில் அத்தகைய மாணவர்களைத் தனிப்பட்ட முறையில் கவனிக்க இயலா சூழல் ஏற்படுகிறது என்றும் பிறபணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்படும் பொழுது அம்மாணவர்களை முற்றிலும் கவனிக்காத நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்கள்.

குறிப்பிட்ட காலம்வரை(எட்டாம் வகுப்பு) அனைவரும் தேர்ச்சி என்ற முறை இருப்பதால் மீத்திறன் குறைந்த மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் தேர்ச்சி முறைக்கு வரும் பொழுது அம்மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பெரும் சிக்கலாகி விடுகிறார்கள். ஏனெனில் அரசோ, அதிகாரிகளோ தேர்ச்சி விழுக்காட்டினைக் கேட்கும் பொழுது கல்வியில் பின்தங்கி விடும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு குறையக் காரணமாகி விடுகிறார்கள். இது ஆசிரியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற சங்கடங்களைத் தீர்க்க, சில புத்திசாலி ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து, அம்மாணவர்களுக்குப் படிப்பு ஏறவில்லை என்று சொல்லி மாணவரைப் பள்ளியை விட்டே நிறுத்தச் செய்துவிடுகிறார்கள்.

பெற்றோர் ஒப்புக்கொள்ள இயலா சூழலில் மீண்டும் எட்டாம் வகுப்பிலேயே படிக்கச் செய்துவிடுகிறார்கள்.  கல்வி கற்றல், கல்வி கற்பித்தல் புனிதமான தொழிலாகக் கருதப்பட்டு, இறைவனுக்கு முதல் நிலையில் கற்பிக்கும் குரு அமர்த்தப்படுகிறார் அவர் இவ்வாறு செய்யலாமா என்றெல்லாம் கேட்பதால் பலனில்லை.

tharkaala kalvi3இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என்றால் அதற்கு பதில் சொல்வது கொஞ்சம் சிக்கல்தான். ஏனெனில், ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர் தொழில் மிகப் புனிதமான தொழில். மாணவர்களை நேசிக்கும் ஆசிரியர்களாக, – தங்கள் பிள்ளைகளைப்போல் – ஒவ்வொரு மாணவனையும் அவனது திறமைக்கேற்ப பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக்க யாரும் அலுத்துக்கொண்டதுமில்லை!. இன்றைய சூழல், அதற்கு நேர்மாறாக, ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி பெற்றவர்கள் அடுத்து, சிந்திப்பது தமக்கேற்ற வசதியான பணி இடமாக வேண்டுவதுதான், அதுவும் அரசியல்வியாதிகளின் தலையீடுகளுடன் என்பது மிக அதிகம்! கிராமப்புற பள்ளிகளில் பணி பெறும் ஆசிரியர், எப்பாடுப்பட்டாவது நகர எல்லைக்குள் பணியாற்ற விரும்புவது, தன் குடும்ப சூழலுக்கேற்ப பணி இடத்தை அமைத்துக்கொள்வது போன்ற விடயங்களில்தான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். பணிஇட சிக்கலைச் சந்திக்கும் ஆசிரியர் கல்விப்பணியில் முழுதும் ஈடுபடா நிலை ஏற்படுகிறது. தொலை தூரத்திலிருந்து வருகின்ற நிலையில், உடலும் ஒத்துழைக்காத சூழல் பலருக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயலாததாகிறது. இது ஒருபக்கம்.

tharkaala kalvi8இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. பள்ளியில் இடைநின்ற குழந்தைத் தொழிலாளர்களைக்  கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களின் அறிவுத் திறனுக்கேற்ப வகுப்பில் சேர்த்துவிடும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த விரும்பினாலும் வாக்காளர் பட்டியல் விவரம் சேகரித்தல், சரிபார்த்தல் முதலான பிற துறை சார்ந்த பணிகளிலும் அரசு கேட்கும் பிற விவரங்களைச் சேகரிப்பதற்கும் பள்ளி நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனாலும் மீத்திறன் குறைந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட நேரிடுகிறது.

ஆனால், கல்விக்கூடத்தில் என்னதான் மாணவர்களை ஆசிரியர் நெறிப்படுத்தினாலும வீட்டுச்சூழல் அவர்களை மாற்றிவிடுகிறது.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர்களும் காரணமாகின்றனர். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே. பெற்றோர் குழந்தைகளின் ஆர்வத்தினைப் புரிந்து கொண்டு அவர்களுக்குக் கவனம் சிதறாத சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் என்னதான் நல்ல சூழலை உருவாக்கித் தந்தாலும் மாணவரின் எதிர்காலம் வீட்டுச் சூழலில் தான் பெரிதும் அடங்கியுள்ளது. குடிகார தந்தை தரும் சிக்கல், உறவுகளில் ஏற்படும் சிக்கல், தொலைக்காட்சி தரும் சிக்கல் இவை ஒரு சில உதாரணங்கள். பெற்றோர்கள் மாணவர்களிடம் கல்விச் சூழல் குறித்தும், ஆசிரியர் குறித்தும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

kulandhai2மாறாக, குடும்ப வறுமைச் சூழலைக் காரணம் காட்டி மாணவர்களை இடையிடையே பள்ளியை விட்டு நிறுத்தி வேலைக்கு அனுப்புவது, படிப்பின் பயன் குறித்து அறியாமலிருப்பது, தற்காலிக வருமானத்தைப் பெரியதாகக் கருதுவது, பள்ளியில் பிள்ளைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளாதது, ஆசிரியரிடம் தம் பிள்ளைகள் குறித்தும் அவர்களின் கல்வி குறித்தும் விசாரிக்காமை போன்றவை பெற்றோர் தரப்பு சிக்கல்களாகும். குடும்பச் சூழலில் இன்று உறவுமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முந்தைய சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப சூழல் இருந்தது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, உறவுகளைப் பேணல், அனுசரித்துப் போகும் தன்மை இருந்தது. தனிக் குடும்பத்தில் சோகம், சச்சரவு, தனிமை, கணவன்-மனைவி சண்டை போன்றவற்றால் மாணவர்கள் நிம்மதியிழந்து வருகின்றனர். கூட்டுக்குடும்பச் சூழல் கல்வியை ஒரு மதிப்பாகக் கருதியது. தனிக்குடும்ப சூழல் கல்வியை ஒரு பணி வாய்ப்பாகக் கருதுகிறது. குடும்பச் சூழலும் கல்விச் சூழலைப் பாதிக்கிறது.

மூன்றாவது தரப்பு மாணவர்கள், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தப்படாத சூழலில் வகுப்புச் சூழலுக்கு அந்நியமாகின்றனர். அதிக எண்ணிக்கையிலமைந்த மாணவர்களிருப்பின் இம்மாதிரியான மாணவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். அல்லது இவர்களாகவே ஒதுங்கி விடுகின்றனர். குடும்பச் சூழல் வறுமையுற்றிருப்பின், பெற்றோர் கல்லாமை நிறைந்திருப்பின் இம்மாணவர்கள் நிலை மேலும் மோசமாகிறது.

மாணவர்கள் கடின உழைப்பால் கற்க விரும்பாமை, தன்னம்பிக்கையில்லாமை, புரியாமல் கற்பது, ஆசிரியரோடு முரண்படுவது, கீழ்ப்படியாமை போன்றவை மாணவர் தரப்பிலான சிக்கல்கள். தற்கால மாணவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். வகுப்பறையில் பின்னால் அமர்ந்து கொண்டு மின்னஞ்சல் அனுப்புவது, இடையிடையே வகுப்பிலுள்ள யாருக்காவது தொலைபேசி அழைப்புகள் விடுப்பது, படம் பார்ப்பது முதலான சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எட்டாம் வகுப்பிலிருந்தே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. கல்லூரிக்கு வந்தவுடன் முழுச் சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதுகிறார்கள்.

tharkaala kalvi13பாடப்புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ புதிதாக அலைபேசிகளை வாங்கியபடியே இருக்கிறார்கள். ஒரு சில ஆசிரியர்கள் கண்டிக்கும் பொழுது அதை அக்கணமே துடைத்தெறிந்து விட்டு அடுத்த ஆசிரியரின் வகுப்பில் மீண்டும் சேட்டையை ஆரம்பிக்கிறார்கள். இந்த வகை மாணவர்கள் திரைப்படங்களில் வரக்கூடிய எதிர் நிலை கதாநாயகர்களால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுடைய ஆடை அலங்காரங்களிலிருந்து இவர்களை வெளிப்படையாக அறியலாம். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஆலோசனையும் அறிவுரையும் தரக் கூடிய நிலை உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றொரு வகையில் பெற்றோர்களாகவும் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர். வீட்டிலேயே தங்கள் பிள்ளைகள் இது போன்ற ஆடைகளைப் பயன்படுத்தத் தொடங்கும் போது பெற்றோர்கள் கண்டித்து திருத்த முயல வேண்டும். கல்வியறிவற்ற ஏழைகளின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகள் படிக்கச் செல்வதையே பெருமையாக நினைப்பதால் இத்தகைய மாற்றங்களை பெரிதுபடுத்துவதில்லை. இப்பிள்ளைகள் பெற்றோரின் கனவையும் தங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து சிதைத்து விடுகிறார்கள். கண் முன்னே வீணாகிப் போய் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தைக் கண்டு தம்மளவில் ஆசிரியர்கள் திருத்த முயன்றாலும் ஒரு சில மாணவர்களே உணர்ந்து நல்வழியடைகின்றனர். சில கல்லூரி மாணவர்கள் படித்தால் வேலை கிடைக்கப் போகிறதா என்று எதிர் கேள்விகள் கேட்டு, படித்தாலும் வேலையில்லை, படிக்காவிட்டாலும் வேலையில்லை அதற்குப் ஓரளவு  படித்தால் போதாதா என்று எதிர் கேள்விகள் கேட்கின்றனர். சமூகம், கல்வி என்பது மதிப்பு சார்ந்தது என்ற மனநிலையிலிருந்து வேலை சார்ந்தது என்றே அவர்கள் மனதில் பதிவை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


முனைவர் ஜ. பிரேமலதா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்காலக் கல்வி முறை – பகுதி 6”

அதிகம் படித்தது