மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தற்காலக் கல்வி முறை -9

முனைவர் ஜ. பிரேமலதா

Nov 28, 2015

kalvimurai12மாணவர்கள் திறன் வளர்த்தலில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.

மெக்காலே கல்விமுறைதான் தற்போதைய குறைபாட்டிற்குக் காரணம் என்று கூறிக்கொண்டிருக்காமல், இந்தியக் குழந்தைகளுக்கேற்ற கல்விமுறையை இந்தியாவின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்களைக் கொண்ட கல்விமுறையை உருவாக்க வேண்டும்.

புரிந்துகொண்டு படிக்கும் கல்வி முறையும், புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்கும் கல்விமுறையும் தற்காலத் தேவையாக உள்ளது.

அறநூல்களைப் பயிலுவதும், பாடமாக வைப்பதும், பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற நூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், மாணவர்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

kalvimurai8மாணவர் கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாக அமையவேண்டும். அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும் உருவாகவேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுய-மதிப்பு, சுய முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.

கற்றலின் பயன் மாற்றங்களை உருவாக்குதல், சமூக நீதி காத்தல், சூழலுக்கு நட்புடைமையோடு நடத்தல், உலகச் சகோதரத்துவம் பேணல், சமுதாய மேன்மை, கண்ணியம், சகிப்புத் தன்மை, இணங்கிப்போதல், பண்பாடு சார்ந்த அறநெறிகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைத் தருவதாக இருக்கவேண்டும்.

அறநெறிக் கல்வி முறையின் தேவை காலத்தின் கட்டாயமாகும். மனித பண்பு ஈடேற்றத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்விமுறையே சிறப்பான கல்வி முறையாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃது இன்றேல்
மண்புக்கு மாய்வது மண்

என்னும் வாக்கிற்கேற்ப சான்றோர்களால் தான் இவ்வுலகம் நிம்மதியாக இனிதுற இயங்குகிறது. சுயநலம், வெறுப்பு, செருக்கு, பொறாமை போன்ற குணங்கள் மனிதர்களைப் பிரித்தாளுகின்றன. இவற்றிற்கு மாறாக அன்பு, இரக்கம், பண்பு, வீரம், மானம் முதலான நற்பண்புகள் மனிதர்களைப் பிணைத்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது.

இளம் மனதில் விதைக்கப்படும் நல்வித்துதான் கனி கொடுக்கும் மரமாய் விளைந்து நல்ல தலைமுறையை இம்மண்ணுக்குப் பரிசளிக்கும். மாணவர்களிடம் நுண்ணறிவு, மிகச்சிறு வயதிலேயே மிக விரைவாக வளரத் தொடங்குகிறது. இலக்கியங்களில் அடிச்சுவடியாய் விளங்கும் அறநெறிக் கருத்துக்கள் மாணவர்களின் எண்ணங்களில் ஆளுமையினைச் செலுத்தி அவர்களைச் செதுக்குகிறது.

தற்போதைய பாடத்திட்டங்களில் உள்ள அறநெறிப் பாடங்கள் மனனம் செய்வதற்குரியனவாக மதிப்பெண் நோக்கிலான பாடமுறைகளாக உள்ளன. புரியாத ஆங்கிலப் பாடல்களைப் போல இவையும் பொருள் புரியாமல் மனனம் செய்ய வைக்கப்படுகின்றன. இம்முறையை விடுத்து அறநெறிக்கருத்துள்ள பாடங்களை ஆணித்தரமாய் மனதில் பதியும் படியாகச் சொல்லித்தர வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.

kalvimurai13குழந்தைப் பருவத்திலிருந்து கல்லூரிக் கல்வி வரை அறநெறிப் பாடங்களின் இன்றியமையாமையைப் பாடத்திட்ட வல்லுநர்கள் உணர்ந்து அதற்கேற்ப பாடங்களை வகுக்க வேண்டும். ஆத்திச்சூடியிலிருந்து, அறநெறி நூல்களிலிருந்து, காப்பியங்களிலிருந்து, தற்காலக் கவிதைகள் வரையிலும் ஒரு மாணவனின் பொது வாழ்விலும், பின்னர் இல்லற வாழ்விலும், அவனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படும்படியான அறநெறிக் கருத்துக்கள் பின்பற்றக்கூடிய வகையிலான பாடத்திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றை அவனின் மனதில் நன்கு பதியுமாறு போதிக்கப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவதற்காகவும், தேர்வுக்காகவும், பட்டங்களுக்காகவுமான தற்காலக்கல்வி முறை மாற்றம் காண வேண்டியது அவசியமாகும். வாழ்வியல் நெறிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து, அதைக் கடைப்பிடிப்பதற்கேற்ற கல்விச் சூழல்தான் தற்காலத்தின் தேவையாகும்.

அறவாழ்க்கைக்கான பண்டைக்காலக் கல்விமுறை மீண்டும் பின்பற்றப்பட வேண்டும். பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கல்வியைக் கருதாமல், பல சவால்களையும், பலவிதமான தடைகளையும் தாண்டி, இந்தச் சமுதாய நலனுக்காகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெறக் கூடியவனாக ஒரு மாணவன் உருவாக்கப்பட வேண்டும். போட்டி போடும் திறன், வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவிக்கும் திறன், சகிப்புத்தன்மை, மேலும் கற்க வேண்டுமென்ற புதுமை முயற்சி, துணிச்சல் போன்ற குணங்களை ஒவ்வொரு மாணவனும் பெறத் தக்க வகையில் அறநெறிகல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டும். ‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ என்கிறது ஒரு புறப்பாடல். நன்னடை என்பது நல்ல நடத்தை என்றும் பொருள் கொள்ளப்படும்.

கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று, ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும் என்கிறார் ரஸ்கின்.

ஒருவனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிலையினை மலரச் செய்வது கல்வி என்றும் அன்பு, அறநெறி, பண்பு, பணிவு, ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களை வாழ வைக்குமானால் அதுவே சிறந்த கல்வி என்றும் கூறுகிறார் விவேகானந்தர்.

kalvimurai2இன்றைய மாணவர் சமுதாயத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. இன்றைய கல்விமுறை வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளப் பயன்பட்டுள்ளதேயொழிய வாழ்வின் உயர்ந்த குறிக்கோள்களை உயர்த்திக் கொள்ள உதவவில்லை. கல்வித் தேர்வு முறையையும், வேலைவாய்ப்பையும் மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளதால் அதில் வெற்றி பெறும் மாணவர்கள் திறமைசாலிகள் என மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. அவர்கள் மட்டுமே மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் விளைவு எளிய மனிதர்களிடம் தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறிய சிக்கல்களையும் சமாளிக்கும் பக்குவத்தை இதனால் இவர்கள் இழந்து விடுகிறார்கள். திறமைசாலிகளும் எதிலாவது சறுக்கி விட்டால் உடனே மனமுடைந்து போகின்றார்கள். சவால்களைச் சமாளிக்கும் மனப்பக்குவம் இவர்களிடமும் இருப்பதில்லை.

இந்நிலைமை நீடிக்கும்பொழுது வாழ்க்கையில் பெற்ற வெற்றியையும், வசதியையும் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தவறான பாதையைத் தேடிச் செல்பவர்கள் மிகுதியாகின்றனர். இந்நிலை சமுதாயத்தில் தொடர்ந்து நிலவி ஊழலும் இலஞ்சமும் வெளிப்படையாகவே நடைபெறுகின்ற நிலைமை இன்று ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் என்ன? இந்நிலைமை ஏற்படுவதற்கு அறநெறி உணர்வு குன்றிப் போனதே காரணமாகும். நல்ல பாதையில் மனிதன் சென்றடைய நல்ல வழிகாட்டுதல் இன்றியமையாத தேவையாக உள்ளது. மானுட முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை நல்ல நெறியைக் காட்டுதலே ஆகும். இந்த நெறிகாட்டுதல் பணியினைச் செய்யவேண்டியது கல்விக்கூடங்களேயாகும். அறநெறி நூல்களிலுள்ள கருத்துக்களைப் பாடங்களின் வழி பயிற்றுவிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை விரிவான நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். கல்வி என்பது மூளைக்குள் திணிக்கப்படும் ஒரு கருவி அல்ல. சிறந்த பண்புகளை உருவாக்குகின்ற மனவலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற பண்பை மேம்படுத்துகின்ற கல்வியே உண்மையான கல்வி.

இந்தக் கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியரும் அறநெறிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அவரே மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் அறநெறிகள் வீட்டிலும் கடைப்பிடிக்கப் பெற்றோர்கள் வழிகாட்டுதலாய் இருக்க வேண்டும். வீட்டில் கடைப்பிடிக்கும் மாணவர்களின் பண்பு நலன்களைப் பெற்றோர் ஆசிரியருடன் கலந்துரையாடல் மூலம் தெரிவிக்கலாம். இதுபோன்ற ஆசிரியர் பெற்றோர் மாணவர் ஒருங்கிணைப்பு என்பது கல்லூரி வரை தொடர முடிந்தால் கற்றலில் சிறந்த மாற்றம் ஏற்படும். கலந்துரையாடல், சொற்பொழிவு, சிறு சிறு நாடகம் வழி அறநெறிகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றிய கற்பித்தலை ஏற்படுத்தலாம்.

kalvimurai3அறநெறிமுறைகளைப் பள்ளி, கல்லூரி முழுவதும் உள்ள அனைத்து ஊழியர்களும் பின்பற்றுமாறு அமல்படுத்த நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசு முக்கிய வாழ்வியல் நெறிமுறைகளைப் பாடத்திட்டம் வழி செயல்படுத்த திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் அதைப் புரிந்து கொண்டு செயலாக்க உதவ வேண்டும். மாணவர்களிடம் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் அதைப் பின்பற்ற ஊக்குவித்தல், நல்ல பண்புகளைப் பள்ளிகளில் தாமாகவே நடைமுறைப்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல், இதன்மூலம் மாணவர்களின் தன்னாற்றலை, தன்னார்வத்தை வளர்த்தல், மாணவர்கள் அறநெறிகளைக் கடைப்பிடிப்பதால் தலைமைப் பண்பைப் பெற முடியும் என்றுரைத்துப் பின்பற்றச் செய்தல், அறநெறியைப் பின்பற்றுவோருக்கும், பின்பற்றாதோருக்கும் இடையிலான சமூக மதிப்பை ஆராயச் செய்தல் போன்றவை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒவ்வொரு மாணவரும் இயல்பாகவே கற்றலில் மேம்பாடடைவர். மாணவர் பாராட்டிற்காகவோ, ஆசிரியர் மீதுள்ள பயத்தின் காரணமாகவோ அறநெறிகளைக் கடைப்பிடிக்காமல், இயல்பாகவே அவற்றின் நன்மைகளை உணர்ந்து கடைப்பிடிக்கும் வகையில் இவை போதிக்கப்பட வேண்டும். கல்விச் சீரமைப்பு என்பது மனிதனிடம் இயல்பாகவே உறைந்துள்ள நற்பண்புகளை வெளிக்கொணரச் செய்வதும், அதைப் பட்டைத் தீட்டிப் பிரகாசிக்கச் செய்வதும் ஆகும்.

அறநெறி போதனைகளின் வழி ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னை அறிந்து கொள்வதற்கும், தம்மிடம் உள்ள குறைகளை நீக்கிக் கொள்வதற்கும் தற்சோதனை செய்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். இம்முறையால் மாணவர்களின் மனப்போக்கையும் அறிந்து அவர்களின் திறனுக்கேற்ப கற்றல், கற்பித்தல் முறையை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

ஆசிரியர்களிடத்துக் காணப்படும் குறைகள் சிலவற்றுள் தற்பெருமை கொள்ளுதலும் ஒன்றாகும். எத்துணைப் பெருங்கல்வி உடையோரும் செருக்குடையவராயின் வல்லவரால் தப்பாது வெல்லப்படுவர் என்ற செய்தி ஆசிரியர்க்குத் தற்பெருமை கூடாது என்பதை வெளிப்படுத்துகிறது.
இதை,

‘கடலேயனையம் யாங் கல்வி யாலென்னும்
அடலேறனைய செருக்காழ்த்தி விடலே’ என்கிறது நன்னெறி.

அறநெறிச் சாரமோ ‘பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா’ என்கிறது.  ஆசிரியர்கள் புதியன தேடி படிக்காமல் போவதற்குத் தற்பெருமை என்ற குறையே காரணமாகும்.

kalvimurai10ஆசிரியர்கள் சமுதாயத்தின் சிற்பிகள் ஆவர். இதனால்தான் ஆசிரியர்களைப் பல நாடுகள் போற்றிப் பாதுகாக்கின்றன. அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதர்களாகக் கருதப்படுபவர்கள் இருவர். ஒருவர் விஞ்ஞானி. மற்றவர் ஆசிரியர். பிரான்சு நாட்டின் நீதிமன்றங்களில் ஆசிரியர் மட்டுமே அமருவதற்குத் தகுதியுடையவராகக் கருதப்படுகிறார். ஜப்பானில் ஓர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும். கொரியாவில் ஓரமைச்சர் அனுபவிக்கும் அத்தனை சலுகைகளும் ஆசிரியருக்கும் உண்டு. இவையெல்லாம் ஆசிரியர்கள் கல்வியைக் கசடறக் கற்று கற்றபடி அறநெறிவழி நின்று வாழ்பவர்கள் என்ற நம்பிக்கையாலே கிடைத்த வெகுமதிகள் ஆகும்.

மனித வாழ்விற்கான இலக்குகளைக் கல்வி வழியாகவே மாணவச் சமுதாயம் அறிய முடியும். ஆசிரியர்களே அந்த இலக்குக்களை அடையக் காரணமாக உள்ளனர். ‘நோக்கமில்லாத பயணம் வழி தெரியாத காட்டிற்குள் அலைவதற்கு ஒப்பு’ அதுபோல இலக்கு இல்லாத கல்வி இருட்டறையில் வெளிச்சம் தேடுவது போன்றதே.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு டைத்து

எனக் குறள் ஒரு தலைமுறை கல்வி கற்றால் அஃது ஏழு தலைமுறைக்கும் பலனைத் தரும் என்கிறது. இவ்வாறு ஏழு தலை முறைக்கும் பலனைத் தரக்கூடிய கல்வி அறநெறி வழிப்பட்ட கல்வியாக இருப்பின் சமுதாயமும் பயன்பெறும். இப்படிப்பட்டவர்கள் உள்ள இடமெல்லாம் அன்பும் பண்பும் அறிவும் செறிந்து விளங்கி எங்கும் அமைதியும் நிலவும்.

மனிதன் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் வாழ சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறான். அதைத் தொடர்ந்து பழக்கிட கல்விச்சூழல் சிறப்பாக அமைய வேண்டும். ஒழுக்கம் குறைவதற்கானச் செயல்களைச் செய்தால் அதற்குரிய  தீயவிளைவினைத் தானும் தன் குடும்பமும், தன் சமுதாயமும் சந்திக்க நேரிடும் என்ற உணர்வினை ஒருவன் பெற்றிடும் வகையில் வாழ்க்கைப் பற்றிய புரிதல்களை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீ யினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

என்னும் குறள் தீயோர் நட்பு மிகப்பெரிய துன்பங்களைத் தரும் என்கிறது. தீயோர் நட்பு எதிர்காலத்தையே சிதைக்கக்கூடியது என்றும் தீயோருடன் சேராமல் இருந்தாலே நற்குணங்கள் வாய்க்கப் பெறும் என்றும் மாணவருக்கு உணர்த்த வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் அறக்கருத்துக்களை மாணவர் உணர்ந்து பின்பற்றிட அவற்றைப் போதிக்க வேண்டும். நம் இலக்கியங்கள் அன்புக்கும் அமைதிக்கும், எவ்வளவோ அறங்களை, அறவுரைகளை வாய்ப்புகளைக் கொட்டிக் கொடுத்திருக்கின்றது.

ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்ற அறநூல்களைப் பாடங்களில் சேர்க்க வேண்டும். மனிதன் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தன்னந் தனியாக ஈட்ட முடியாது என்ற சூழ்நிலையில் உருவானவையே சமூகம். அச்சமூகம் அமைதியாக இயங்க வேண்டுமென்றால் மனிதர் ஒருவரையொருவர் சார்ந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நதிகள் பலவாயினும் சேருமிடம் கடல்தான் என்பதுபோல இறைவனை அடையும் மார்க்கம் பலவாயினும் இறுதியில் சேர்வதென்னவோ இறைவனடிதான். அதுபோல் மனிதர்களில் வேறுபாடு இருப்பினும் அவர்களது கொள்கை அன்பு ஒன்றாக இருந்தால் சமூகத்தில் வேற்றுமை நிலவாது. அன்பே கடவுளின் வடிவம் என்பதை உணரத் தக்க வகையிலான கருத்துக்கள் மாணவர்கள் மனதில் பதியத்தக்க வகையில் பாடங்கள் அமைந்தால் நலம்.

ஓருலகக் கோட்பாட்டை வலியுறுத்தும் பாடல்கள் தமிழில் ஏராளம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிறது திருமந்திரம். ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்’ என்கிறார் பாரதியார். ‘அனைவருக்குள்ளும் ஓடும் மூச்சிலே நானிக்கிறேன்’ என்கிறார் கிருஷ்ணன் பகவத்கீதையில். ‘மனிதனின் தனிப்பெருங் கருணை தான் இறைவன்’ என்கிறார் வள்ளலார். பரலோகம் உன்னுள்ளிருக்கிறது என்கிறார் ஏசுநாதர். ‘பயபக்தியுடையவர்களிடம் அல்லா இருக்கிறார்’ என்கிறது குரான்.

ஆணவம், பொறாமை, கோபம், பேராசை முதலான தீய சிந்தனையில்லா இதயமே இறைவன் வாழும் ஆலயம் என்கின்றன சமய நூல்கள். ஒவ்வொரு மனிதனும் நல்வழியில் சென்றால் கேடில்லாத இக் கல்விச்செல்வம் மாணவரிடம் நற்பண்புகளை வளர்த்தெடுக்க உதவும். சிறந்த ஆற்றல் உடையவர்களானாலும் அறவுணர்வு இல்லையாயின் அவர்களுடைய செயல்கள் தீய விளைவுகளையே தரும். ஒருவரது பண்பாலும் செயலாலும் அவருக்கு மேன்மையும் கீழ்மையும் அமையப் பெறும்.

எந்தத் துறையிலிருந்தாலும் அத்துறையின் அறநெறி வழி நடத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் மாணவர்களிடம் தனிமனித ஆளுமை, குடும்ப ஆளுமை, சமூக ஆளுமைக்கூறுகளை வளர்த்தெடுக்கும் வகையிலான கல்வியே சமூக மேன்மைக்கு வழிவகுக்கும். அறிவியல் பாடங்களிலும்கூட விஞ்ஞானிகளின் வாழ்க்கைச்சம்பவங்களை இணைத்துப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கலாம். இதனால் விஞ்ஞானிகள் வாழ்வில் சந்தித்த தோல்விகள், துயரங்கள், தோல்விகள், புறக்கணிப்பு, தொடர் முயற்சி, கடினஉழைப்பு போன்றவற்றை மாணவரும் அறிவர். இதனால் இடைவிடாத முயற்சி, சகிப்புத்தன்மை, கடின உழைப்பின் பலன், வாழ்வின் மேன்மை, குறிக்கோள் வாழ்க்கை போன்ற வாழ்வின் படிநிலைகளைப் பெறுவர். மேலும், நாட்டின் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாட்டுப்புறக்கலைகளில் மாணவர்களில் பயிற்சிபெறும் வண்ணம் நாட்டுப்புறக்கதை கூறுதல், நாடகங்களை நடத்தச் செய்தல், நாட்டுப்புறப் பொருட்களை உருவாக்கச்செய்தல், தனி நடிப்பு போன்றவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். இக்கலைகளின் வழி முன்னோர்களின் வாழ்வியல் நீதிகள், வாழ்வியல் கூறுகள் போன்றவற்றை எதிர்வரும் சந்ததியினர் அறிவர். திறன் வெளிப்பாடு, அச்சம் விலகுதல், பேச்சுத்திறன் மேம்படல், குழு மனப்பான்மை, சமூக இணக்கம், பிறருக்கு உதவுதல், சக மனிதர்களைப் புரிந்து கொள்ளல், பொறுப்புணர்வு அதிகரித்தல், தன் திறனறிதல் போன்ற பயிற்சிகள் கிடைக்கும். கல்வியும் கசக்காது.

kalvimurai15நாட்டுப்புறக்கலைகள் இருதிறத்தவை. அவை நிகழ்த்துக்கலைகள், நிகழ்த்தாக் கலைகள் எனப்படும். இவை சிறுவர் முதல் இளைஞர்கள் வரை எவரும் வயதுவரம்பின்றிக் கற்றுக் கொள்வதற்கேற்ற வகையில் உள்ளவை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் நல்லொழுக்கம் மற்றும் நீதி புகட்டுவதற்கு நாட்டுப்புறக்கதைகளையே பயன்படுத்துகின்றனர். அவற்றை மாணவர்களையும் பங்கேற்க ஏற்றபடி மாற்றியமைக்கலாம். இசை, நடனம், நாடகம், ஓவியம் முதலான பல கலைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இன்றைய மாணவர்களுக்கு அரிதினும் அரிதாக உள்ளது. வசதி வாய்ப்புள்ளவர்கள் தனிப்பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறின்றி அனைத்து மாணவர்களுக்கும் இதைக் கட்டாயப் பாடமாக்கினால் மாணவர்களிடம் மறைந்திருக்கும் கலையாற்றல் வெளியாகும். மதிப்பெண் நோக்கமும் மாற்றப்படும். மாணவர்களின் ஆர்வத்திற்கேற்ற கலைகளில் அவர்கள் மேம்பாட்டைவர். இணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதனால் சுயநலம் நீங்கும்.

இவற்றோடு தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரையுள்ள மாணவர்களுக்கு ஏதாவது தொழிற்கல்வியைக் கற்றுத் தந்தால் அம்மாணவன் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தால் அத்துறையிலேயே ஈடுபட்டு தன் வாழ்க்கைத் தேவைக்கான பொருளை சுய தொழிலிலின் மூலம் ஈட்டிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கலாம்.

இத்தகைய அம்சங்கள் இன்றைய கல்வி மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டால் கோடிக்கணக்கில் கற்றவர்களைக் காண முடிவதைப்போல, நல்ல மனித வளங்களையும் காண முடியும். எனவேதான் இன்று தனி மனிதனுக்கு அவசியமான விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்ற கருத்து பலம் பெற்றுள்ளது.


முனைவர் ஜ. பிரேமலதா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்காலக் கல்வி முறை -9”

அதிகம் படித்தது