மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம்

க.தில்லைக்குமரன்

Oct 24, 2015

thalayangam2இந்தியாவில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் தீண்டாமைக் கொடுமை நடந்துவருகிறது. ஆதிக்க சாதியினர் ஆளும் வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு இக்கொடுமைகளை செய்துவருகின்றனர். அண்மையில் அரியானா மாநிலத்தில் இரு தலித் குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துகளின் மீதான தாக்குதல் தினந்தோறும் நடந்தேறிவருகிறது. பொது மக்களும், ஊடகங்களும் இந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் தட்டி கேட்கவேண்டிய இவர்களே இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அரசு மற்றும் ஆதிக்க சாதியினருக்கு இத்துணிவைக் கொடுத்துள்ளது.  இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருந்து வருவதும், தலித்திய மக்களின் மீது நடக்கும் அடக்குமுறைகளையும் பார்க்கும் போது, இந்திய நாடு எதிலிருந்து விடுதலை அடைந்துள்ளது என்கிற கேள்வி மனிதநேயவாதிகளின் மனதில் உருவாவது நியாயம்தான். பெரியார் கூறியபடி ஆகஸ்டு 15, 1947 -ம் நாளில் இந்தியாவிற்கு கிடைத்த விடுதலை வெறும் மண்ணிற்கு மட்டும்தான், மனிதர்களுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

பல நூற்றாண்டுகளாக தலித்துகளின் மீது நடைபெற்றுவரும் அடக்குமுறைகள் ஒருபுறமிருக்க, இசுலாமியர்கள் மீதான கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இசுலாமியர்களின் மீதான தொடர் வன்முறைகள் பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் மேலும் அதிகரித்து அபாயகர நிலையை அடைந்துள்ளது. இந்திய தலைமையமைச்சர் திரு.நரேந்திர மோடியின் அரசில் இக்கொடுமைகள் நடக்கும் என்று முற்போக்கு அறிஞர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தாலும், நினைக்க முடியாத அட்டூழியங்கள் சங் அமைப்புகள் நடத்தத் துவங்கியுள்ளனர். இதை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் இந்தியா, பாக்கித்தான், சிம்பாவ்வே, இலங்கை போன்ற நாடுகள் போலாகி பாழடைவது திண்ணம்.

thalayangam1உணவு ஒவ்வொருவரின் உரிமை. அதில் கைவைப்பது அடிப்படை உரிமைகளில் கைவைப்பது போல்தான். கடந்த கிழமைகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு இசுலாமிய பெரியவர் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி கொல்லப்பட்டுள்ளார். மகாராட்டிரம், அரியானா போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடைவிதித்துள்ளது அந்தந்த அரசுகள். காசுமீரத்தில் ஒரு இசுலாமிய சட்ட மன்ற உறுப்பினர் மாட்டிறைச்சி விருந்து ஒன்று வைத்ததற்காக சட்டமன்றத்திலே தாக்கப்பட்டுள்ளார். இக்கொடுமைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவாது என்று தெரிந்தும் திரு. நரேந்திர மோடி அரசு ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் போன்ற அமைப்புகள் இந்த அட்டூழியங்கள் நடைபெற ஒப்புதல் அளித்துள்ளார் என்று நம்ப வேண்டியுள்ளது.

இக்கொடுமைகளை எதிர்த்து ஒரு சில மனிதநேய இயக்கங்களும், நபர்களும் மட்டும் குரல்கொடுத்துவருகின்றனர். இதற்கு தீர்வு காணவேண்டிய இந்திய தலைமையமைச்சரும் மௌனமாக இருப்பது அனைவருக்கும் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சிக்கல்கள் இன்று பன்னாட்டு ஊடகங்களில் வெளிவரத் துவங்கியுள்ளன. அறிஞர் பெருமக்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர். தாங்கள் பெற்ற அரசு விருதான சாகித்திய விருதுகளை திரும்பியளித்து வருகின்றனர். சிலர் இனி அவ்விருதுகளை வாங்குவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.  சல்மான் உருசுடி போன்ற பன்னாட்டு எழுத்தாளர்கள் இந்த அறிஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளது. இத்தீய செயல்கள் இந்தியாவிற்கு பன்னாட்டரங்கில் அவமானத்தை பெற்றுத்தருவதற்கு முன் இந்திய அரசு இக்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவோம்.


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம்”

அதிகம் படித்தது