மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாய்மொழிக்கல்வி- மீள்பதிவு

சிறகு நிருபர்

May 9, 2015


இன்றைய கால சூழ்நிலையில் தாய்மொழியில் கல்வி  என்பது பழமைவாதமாக, குறுகிய கண்ணோட்டத்துடன், நோக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நம் அரசியல் கட்சிகளும் தாய்மொழியில் கல்வி என்பது மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற எண்ணத்தையே கொண்டுள்ளது.  உலகமயமாக்கல் நிலவும் இந்தக் காலத்தில், தாய் மொழியில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் எழுகிறது. இதனால் தாய் மொழியில்கல்வி என்பதை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது.

அந்த அடிப்படையில் தாய் மொழியில் கல்வி பற்றி ஐ நா சபையின் உநெஸ்கோ (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்துவருகிறது. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் சில தகவல்கள் மற்றும் வழி முறைகளை வழங்கியுள்ளது.

முதலாவதாக தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாக கல்வி கற்கின்றனர். இது அனைத்து வயதினர்க்கு அளிக்கப்படும் கல்விக்கும் பொருந்தும்.

தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதை தாங்கள் பேசுவதுடன் அல்லது சமூகத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதனால் அவர்கள் எளிதில் கற்கின்றனர, அதனால் அவர்கள் ஒருவிஷயத்தை நோக்கும் விதம் வேறுமொழியில் கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில் அதிகரிக்கச்   செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அதனைச் சொல்லிக்  கொடுக்கும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்குச் சரியாக போதிக்க      முடிகிறது. தாய் மொழியில் குழந்தைகளால் எளிமையாக  உரையாட முடிவதால் ஆசிரியர்கள் போதிக்கும் பொழுது  அவர்களால் எளிதில் கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது. இதனால் மாணவர்களின் பங்களிப்பு உள்ள ஒரு கல்வி முறையை கொடுக்கமுடிகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறது, பேச்சாற்றல் வளர்கிறது மற்றும்  ஆக்கத்திறன் கூடுகிறது.

இதை உணர்ந்து தான் தாய்மொழியில் அறிவியல் கல்வியை கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையை குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியுமென்று முன்னால்  ஜனாதிபதி அப்துல் கலாம் கூறுகிறார்.

தாய் மொழியில் கல்வி என்பது எல்லா மொழிகளுக்கும் சாத்தியமாகுமா?

எழுத்து இல்லாத மொழிகள், சிறுபான்மையினர் பேசும் மொழிகள், இலக்கணங்கள் சரிவர இல்லாத மொழிகள், மொழி வளர்ச்சி அடையாத மொழிகள், பிறமொழிகளுக்கு  சமமான சொல்வளம் இல்லாத (சொற்றொகை) மொழிகளில் தாய் மொழியில் கல்வி என்பது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டு பல ஆராய்ச்சிகளின்  அடிப்படையில் பன்மொழி கல்வி என்ற கோட்பாட்டை வகுத்துள்ளது.

உநேஸ்கோவின் நிலைப்பாடு தாய் மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை   வலியுறுத்த உநேஸ்கோ பல கூட்டங்களை நடத்தி அதன் மூலம்   பல தீர்மானங்களை அறிவித்துள்ளது.
அந்த தீர்மானங்களின் தொகுப்பு:

  1. கல்வியின் தரத்தை உயர்த்த தாய் மொழியில் கல்வியை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது
  2. பள்ளிகளில் அனைத்து நிலைகளிலும் இரு மொழிகளில் அல்லது பன்மொழிகளில் கல்வியை கற்றுத்தர ஊக்கப்படுத்துவது. அதன் மூலம் பல மொழிகள் உள்ள சமூகத்தில் சமத்துவம் மேலோங்கவும் ஏற்றத்தாழ்வுகளை களையவும் ஊக்கப்படுத்துவது.
  3. கலாச்சாரப் பரிமாற்ற கல்வியில் மொழியை முன்னிறுத்துவது.

அதாவது உநேஸ்கோ  தாய் மொழியில் கல்வி வலியுறுத்துவதோடு பன்மொழிக் கல்வியை அழுத்தமாக  ஆதரிக்கிறது. பன்மொழிக் கல்வி என்பது தொடக்க கல்வியை தாய் மொழியில் தொடங்கி மெதுவாக தேசிய மற்றும் சர்வதேச மொழிகளில் கல்விக்கு மாறுவதாகும்.

சில வருடங்களுக்கு முன் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சில நாடுகளில் கல்வி, ஆங்கில மொழியில் கொடுக்கப் பட்டது. இதற்கு ஆங்கிலேயர் ஆளும் காலத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கொடுக்கபட்டதே காரணம். 1990ல் நடந்த உநெஸ்கோவின் அனைவருக்கும்   கல்வி என்ற உலக மாநாட்டிற்கு பின்னர் இந்த மொழி கொள்கையில் ஆப்பிரிக்காவில் மாற்றம் வந்தது. தொடக்க கல்வியில் தாய்மொழியின் அவசியத்தை அந்த மாநாடு உணர்த்தியது. அதன் பின்னர் ஆப்ரிக்கா நாடுகளில் தாய் மொழியில் தொடக்க கல்வியை மெல்ல புகுத்தினர். முதலில் மூன்று வருடங்கள் அதாவது நான்காம் வகுப்பு முதல் மட்டும் தாய் மொழி கல்வி கொடுக்கப்பட்டது. இதில் சில இடர்ப்பாடுகளை   சந்தித்தனர். குழந்தைகள் தாய்  மொழியில் புலமை  அடையாத முன்பே அவர்களுக்கு வேற்று மொழி கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்களால் தங்களை வேற்று மொழி கல்விக்கு தயார் படுத்திக்கொள்ள இயலவில்லை. இதனால் மூன்று  வருட தாய் மொழி கல்வியை குறைந்தது 8 வருடம் ஆக்க வேண்டு மென்று ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர். மூன்றாம் வகுப்பு வரை இருந்த தாய் மொழி கல்வி ஒன்பதாம் வகுப்பு வரை  அமல்படுத்தப்பட்டது. அது மாணவர்களுக்கு எளிமையாக இருந்தது மற்றும் இதன் மூலம்   நல்ல பலனை கண்டனர். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் தாய் மொழியில் கல்வி 14 வயது வரை இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு உநெஸ்கோ வந்தது.

உநேஸ்கோவின் இந்த பரிந்துரை பல மொழிகளை கொண்டுள்ள இந்தியாவுக்கு மிகச் சரியாக பொருந்தும். இந்த பரிந்துரையை இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அறிஞர்களை கொண்டு ஆராய்ந்து சிறு மாறுதல்களுடன் அமல்படுத்தலாம். தாய் மொழியில் கல்வி கற்பவர்களால் ஆங்கில மொழியில் கற்பவர்களைப் போல் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடி யாது என்ற கருத்து நம் மக்களிடத்தில் உள்ளது. இது மிக தவறான கருத்தாகும். இன்று இருக்கும் கல்வித்தரம், கல்விக்கூடங்களின் தரம் மற்றும் அதை கற்று கொடுக்கும் ஆசிரியரின் தரம் கொண்டு இந்த முடிவினை ஏற்க முடி யாது. தாய்மொழியில் கல்வி இருப்பினும், நன்கு தொடர்பு திறன் கொண்ட ஆங்கிலத்தை கற்று கொடுப்பதன் மூலம் ஆங்கிலத்தில் கல்வி கற்பவர்களை விட நல்ல ஆங்கில புலமை  மிக்க மாணவர்களை உருவாக்க முடியும். இதற்கு காரணம் நாம் எந்த மொழியில் கற்றாலும், நம் சிந்தனை என்பது தாய் மொழியில் இருப்பதே ஆகும். தாய் மொழியில் எண்ணங்களை எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாமல், வேறு எந்த மொழியை கற்பினும் அந்த மொழியில் வல்லமை பெற  முடியாது.

ஜப்பானை சேர்ந்த ஓர் பொறியாளர் சென்னையில் உள்ள  பிரபல தொழிற்சாலைக்கு தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய வருகிறார். தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துஅன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரால் சரியாக ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை அதற்காக அவரின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தை மொழி அளவிலே கற்கிறார்கள். ஆங்கிலம் என்பதுமொழி மட்டுமே அதைக் கொண்டு ஒருவனின் திறமையை மதிப்பிடக் கூடாது என்ற எண்ணம் நம் மக்களிடத்து வர வேண்டும். அப்படி வரும் நாளில் தான் அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேலை பார்ப்பதை விட்டு தங்களுடைய ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டு  நம் நாட்டை இளைஞர்கள் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வர்.
இந்தியாவில் ஆங்கிலத்தில் கல்வி பெறுபவர்களால் பொதுவாக ஆங்கிலத்தில் மற்றும் தாய் மொழியில் இரண்டிலும் சரியாக தங்கள் கருத்துகளை  வெளிப்படுத்த முடியாதவர்களாகவே  உள்ளனர்.


இந்த நிலையைமாற்ற வேண்டிய நிலையில் நம் அரசாங்கம் செயல் படவேண்டும் அதற்காக சில வழிமுறைகளை கையாளலாம்.

  1. தாய் மொழியில் தொடக்க கல்வியை அரசு எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும். மேலே சொல்லப்பட்டது போல் தாய் மொழியில் கல்வி கற்பதே   குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.
  2. ஒவ்வொரு குழந்தையின்  பிறப்பு சான்றிதழிலும்  தாய் மொழி என்னவென்பது பதிவு செய்யப்படவேண்டும். இத னால் பிறப்பு சான்றிதழில் என்ன தாய் மொழி இருக்கிறதோஅந்த மொழியிலேயே கல்விகொடுக்கப்படும்படி செய்ய   முடியும். வேலை நிமித்தமாக வேறு மொழி கொண்ட மாநிலங்களுக்குச் செல்பவர்களுக்கு மட்டும் இந்த விஷயத்தில் சிறப்பு சலுகை அளிக்கலாம். அவர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தை பிரதானமாக கொண்டு தாய் மொழியிலோ அல்லது வேற்று மொழியிலோ கல்வி கொடுக்கலாம்.
  3. முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி அமைய வேண்டும் மற்றும் இன்றைய சூழலில் உலகளாவிய தொடர்புகளுக்கு ஆங்கிலக் கல்வி தேவை என்பதால் ஆரம்பக் கல்வியில் தொடர்பு திறனை மேம்படுத்தும் ஆங்கில மொழி கல்வியை பள்ளிகளில் ஆழமாக கற்பிக்கவேண்டும். 6 ஆம் வகுப்பில் உள்ள பாடங்கள் அனைத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரு மொழிகளில் இருக்கவேண்டும்   இதனால் ஆங்கில மொழிக்கல்வியின் மெதுவான தொடக்கத்தை மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தர முடியும். கல்வி போதிக்கும் மொழி,  பாடபுத்தகங்கள் இருக்கும் மொழிமற்றும் தேர்வு எழுதும் மொழிஇவை கல்வியின் நிலைக்கு ஏற்ப ஒரே மொழியிலோ அல்லது வெவ்வேறு மொழியிலோ, மாணவர்களுக்கு எளிமையான வழிகளில் அமையுமாறு ஒரு கல்வி திட்டத்தை  அறிஞர் கொண்டு ஆராய்ந்து உருவாக்கவேண்டும்.
  4. உயர் கல்வியில் பயிலும் எல்லாப் புத்தகங்களையும்   தாய்மொழியில் மொழி பெயர்ப்பது சாத்தியமில்லை என்பதால் உயர் கல்வியில்  ஆங்கிலத்தை பிரதானமாக வைக்கலாம். அதற்காக தாய் மொழியில் உயர் கல்வியை முழுவதுமாக  புறக்கணிக்கத்  தேவை இல்லை. முறைசாரா (informal) கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல் மற்றும் விவாதங்களுக்கு பயன்படுத்தலாம். உயர் கல்வியை ஆங்கிலத்தில் வைக்க வேண்டும்   என்பதற்கு மற்றுமோர் முக்கிய காரணம்  உள்ளது. நம் மாணவர்கள் உயர் கல்வியை சர்வதேச மாணவர்களுடன் இனைந்து கற்பது அவசியம். நம் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் தேச மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் கலாச்சார பரிமாற்றங்களுக்கு வழிவகுக்க முடியும் மற்றும் மாணவர்களின் திறமை , சர்வதேச தொடர்புகள் மேன்படும்.
  5. இந்திய அரசாங்கம் இப்பொழுது சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனால் சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருவதற்கும், தரமான கல்வி, ஏழை,பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக எல்லோருக்கும் கிடைக்க வழிவகுக்கும். வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் மாணவர்களின் உண்மையான திறனை மதிப்பிடமுடியும். மேலும் தாய்மொழியில் கல்வி என்ற  நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கு இந்த சமச்சீர் கல்வி நன்கு உதவும். சமச்சீர் கல்வியில் இந்தியா முழுக்க ஒரே பாடங்களை  கொண்டு வருவதன் மூலம் எல்லாப் பாடங்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் எளிமையாக மொழிபெயர்க்க முடியும். எல்லா பள்ளிகளிலும் ஒரே கல்வித் திட்டம் கொண்டு வருவதன் மூலம் தனியார் பள்ளியின் மோகத்தை மக்களிடம் குறைத்து பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்ற நிலைப்பாட்டை தவிர்க்க முடியும். இந்திய அரசாங்கம் சமச்சீர் கல்வியை கட்டாயமாக எல்லா மாநிலங்களிலும், பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும். இதற்கு CBSE, ICSE, Matric போன்ற பாடத்திட்டங்களை இரத்து செய்து சமச்சீர் கல்வி ஒன்றே  இந்தியாவின் கல்வித்  திட்டமாக்கவேண்டும்.

மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத்தாண்டி அது ஒரு மக்களின்  கலாச்சாரங்களை தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து உள்ளது. தாய்மொழி கல்வியால் கலாச்சாரங்களை ஒட்டி கல்வி கற்க முடிகிறது.மக்கள் தங்கள்   கலாச்சாரங்களை தழுவி வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை பாதுகாக்க முடிகிறது.

உலக நாடுகள் அனைத்தும் தாய் மொழி கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்துள்ளன.  நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி கல்வியை ஆதரித்தால் தான் ஒருவலிமையான தலைநிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தாய்மொழிக்கல்வி- மீள்பதிவு”
  1. கரு பன்னீர் செல்வம் says:

    தாய்மொழி கல்வி வருவனுக்கு வாய்மொழி ஆகும். அது கண்களைப்போல உலகத்தின் மீது தன் பரந்த பாரவையை கொண்டு பகுத்தறிந்து வாழ செய்வது. பண்பாக பேச, பாசமாக பழக, பரிவுடன் அன்பு பரிமாற பாலமாக அமைவது தாய்மொழியே ஆகும். அவன் கற்கின்ற மற்ற மொழி என்பது, அவனது அவன் வயிற்று மொழி என்பது மட்டும்தான். உலக எல்லையை கடக்க பயன்படும் மொழி. அது அவனை பண்படுத்தாது. அது இல்லாதல் அவனால் வாழ முடியும். ஆனால், தாய்மொழி ஒன்றே அவன் மனிதனாக்கி, மனித நேயத்தை கற்று தருகிறது. நன்றி. (கரு பன்னீர்செல்வம், மலேசியா)

  2. வளன் says:

    திரு.தியாக் தங்கள் கூற்றுபடி ௧௫ வயதில் ஆங்கிலம் கற்பது கடினம் என்கிறீர்கள். ௩ வயதில் ஆங்கிலம் கற்பது எளிமையா?http://siragu.com/?p=575 இதைப்பார்த்து தெளிவு பெறுங்கள் அல்லது இதற்கு பதில் எழுதுங்கள்.பதில் மேற்கண்டவாறு அரைகுறை ஆங்கிலத்தில் அல்ல.தெளிவானத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.நன்றி.

  3. Thiags says:

    There are positives and negative in learning whole thing mother tongue.

    When u study with only mother tongue till age 14 it is extremely hard to go and learn english at age 15. It will not happen.
    It doesnt also help to go international

    The only advantage is the thinking power of the student will go to peak if he does every thing in the mother tongue. In practical its not possible.

    Studying in own language only becomes success only, when the student does whole thing (including all the study and job) in that language.

    Unfortunately , even though Tamil is our mother-tongue we are forced to learn english. I would prefer to learn and work in Tamil, But in practical that become a only dream now.

    • வளன் says:

      திரு.தியாக் தங்கள் கூற்றுபடி ௧௫ வயதில் ஆங்கிலம் கற்பது கடினம் என்கிறீர்கள். ௩ வயதில் ஆங்கிலம் கற்பது எளிமையா? இதைப்பார்த்து தெளிவு பெறுங்கள் அல்லது இதற்கு பதில் எழுதுங்கள்.பதில் மேற்கண்டவாறு அரைகுறை ஆங்கிலத்தில் அல்ல.தெளிவானத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.

அதிகம் படித்தது