மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திராவிடம் எனும் சொல்

இராமியா

Jun 4, 2022

siragu tamilinam
எந்த ஒரு மொழியிலும் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள் இருக்கும். அது ஒரு புறம் இருக்க குழூஉக் குறி எனவும் சில உண்டு. வணிகர்கள் பிறர் அறியாமல் தங்களுக்குள் உரையாடிக் கொள்ள சில சங்கேதச் சொற்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள். திரு என்றால் மூன்று என வணிகர்கள் குழூஉக் குறி வைத்து இருந்ததாக பாரதியார் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். விடுதலைப் போராட்டக் காலத்தில் போராட்ட வீரர்கள் செய்திகளை ஆங்கில அரசுக்குத் தெரியாமல் பரிமாறிக் கொள்ள சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளனர். ஓர் ஊரில் இருந்து “குழந்தை பிறந்து விட்டது” என்று தந்தி வந்தால் அந்த ஊரில் காந்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார்” என்பதாகப் பொருள் என்று விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்ட என் தந்தையார் கூறி இருக்கிறார்.

ஒவ்வொரு சட்டத்தை இயற்றும் போதும் அந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும் என்ற வரையறை முதல் அத்தியாயமாக இருக்கும். அந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசும் போது அந்த வரையறைப் படி தான் பொருள் கொள்ள முடியுமே ஒழிய அந்த அகராதியில் இப்படிப் பொருள் இருக்கிறதே இந்த அகராதியில் அப்படிப் பொருள் இருக்கிறதே என்றெல்லாம் விவாதம் செய்வது பொருள் அற்ற வாதாகத்தான் இருக்குமே ஒழிய அறிவார்ந்த வாதாமாக எடுத்துக் கொள்ள முடியாது.

நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் படி விவசாய நிலம் என்றால் மாட்டுத் தொழுவம், பால் பண்ணை போன்றவை வைத்து உள்ள இடங்களும் அடங்கும். ஆனால் நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தில் இவை விவசாய நிலமாகக் கொள்ள முடியாது.  நகர்ப் புறத்தில் பால் பண்ணைஅ ல்லது மாட்டுத் தொழுவம் வைத்துக் கொண்டு உள்ள ஒருவர் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி, தன்னுடைய நிலம் விவசாய நிலம் என்றும் ஆகவே நில உச்ச வரம்புச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் படி கோர முடியாது.

திராவிடம் எனும் சொல்லையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். மொழியியலைப் பற்றிப் பேசும் போது திராவிடம் எனும் சொல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு மொழிக் குடும்பத்தைக் குறிக்கும். ஆனால் சமூக அறிவியல் மற்றும் இந்திய அரசியலைப் பற்றிப் பேசும் போது இந்த வரையறை பொருந்தாது.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பு உருவான போது அவர்கள் தங்களைப் பார்ப்பனர் அல்லாதார் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.  இது ஒரு எதிர்மறை வரையறையாக இருப்பதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீண்ட நெடிய விவாதம் செய்து இறுதியில் திராவிடர், திராவிடம் என்ற சொற்களை உருவாக்கினர். ஆகவே சமூகச் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் மற்றும் திராவிடம் என்ற சொற்கள் பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் குறிக்கும். இதற்கு மொழி மற்றும்  பிற வேறுபாடுகள் ஒரு பொருட்டு அல்ல. இந்த வரையறையின் படி நாகாலாந்தில் உள்ள பழங்குடியினர் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தால் அவர்களும் திராவிடர்களே. வட இந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேராத வேறு மொழிகளைப் பேசினாலும் அரசியல் மற்றும் சமூக அறிவியலின் அடிப்படையில் அவர்களும் திராவிடர்களே.

முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் பார்ப்பன ஆதிக்கத்தினால் பாதிக்கப்படவே செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, தலைசிறந்த தேச பக்தரான வ.உ.சிதம்பரனார் பார்ப்பன ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் மட்டும் அல்ல, அவருடைய தேச பக்தியின் வீச்சைக் கண்ட தேசத் துரோகப் பார்ப்பனர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டு இருந்தனர். இதை அறிந்து அஞ்சிய அவரது தந்தை அவரை எப்படியேனும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர வைக்க அரும்பாடுபட்டார்.  வ.உ.சி.யும் தந்தையின் சொற்படி சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அது மட்டும் அல்ல, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் தான் நாட்டின் முழு விடுதலை சாத்தியம் என்றும் உணர்ந்து இருந்தார். அதற்காக முழு வீச்சில் போராடவும் செய்தார். நீதிக் கட்சி வலுப் பெற்ற பிறகு தான் பார்ப்பனர்கள் தன்னை ஏகவசனத்தில் அழைக்காமல் மரியாதையுடன் பேசியதாகப் பல இடங்களில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளும் போது பார்ப்பனர் அல்லாத முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் திராவிடர்களே என்று புரிந்து கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பன ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர்களே. இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மறுப்பவர்கள் மொழியியல் வரையறையுடன் சேர்த்துக் குழப்பவே செய்வோம் என்று அடம் பிடிப்பவர்கள் அனைவரையும் கண்டு கொள்ளாமல் நம் வழியில் நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இந்த வழி தான் தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக இருக்கக் காரணியாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திராவிடம் எனும் சொல்”

அதிகம் படித்தது