மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம்!!”

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 3, 2017

Siragu panneerselvam1

சூன் 1 – திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்.

திருவாரூர் என்றால் தமிழர்களுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் கருணாநிதியிடம் கேட்டால், அவர் தாய், தந்தை மட்டுமல்லாமல் நண்பர்கள், தலைவர்கள் பெயரை பட்டியலிடுவார். அப்படி பட்டியலிட்டால் அதில் முதல் பெயராக இருப்பது ஏ.டி.பன்னீர்செல்வமாக இருக்கும்.

திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில் செல்வபுரத்தில் தாமரைச்செல்வன் – ரத்தினம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் பன்னீர்செல்வம். தந்தையின் உடல்நலக்குறைவால் படிப்பைத் தொடர முடியாமல் ரயில்வேயில் அலுவலக கிளர்க்காக பணியில் சேர்ந்தார். பின்னாளில் அந்த வேலையை விட்டு விவசாயம் செய்தார்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் பொன்னுபாப்பம்மாள் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன்பின், மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1912 சனவரி மாதம் பட்டம் பெற்றுக்கொண்டு வழக்கறிஞராக சென்னை மாகாணத்துக்கு வந்தவர், சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துக்கொண்டார். தஞ்சையில் வழக்கறிஞராகத் தொடர்ந்து தொழில் நடத்தினார்.

1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் துவங்கினார் பன்னீர்செல்வம். தஞ்சை நகராட்சி தலைவர் தான் அவர் வகித்த முதல் பதவி. தஞ்சை ஜில்லா போர்டு தலைவர், அதன்பின் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர், நிதி மற்றும் உள்துறை அமைச்சர், கவர்னரின் ஆலோசனைக்குழு உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்தார்.

1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் அரங்கத்திற்குப் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார்.

1930 இல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1931 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1937 இல் காங்கிரசுக் கட்சி ஆட்சியின் போது சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தமிழ்வேள் உமா மகேசுவரனுடன் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். இவர்கள் இருவரும் “தஞ்சை இரட்டையர்” என்ற பெயரில் நீதிக்கட்சிக்காகப் பாடுபட்டனர்.

1938 இந்தி எதிர்ப்புப் போர் உச்சத்தை எட்டிய காலம். திருச்சியில் இருந்து மணவை ரெ. திருமலைசாமி தலைமையில் தமிழர் பெரும்படை என்ற பெயரில் சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயணத்தின் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற அரசியல் முழக்கத்தை தந்தை பெரியார் முன்வைத்தார். இந்த முழக்கமே திராவிட நாடாக உருவெடுத்தது.

திராவிட நாடு கோரிக்கை உச்சகட்டமான நேரத்தில் 2-வது உலகப் போர் தொடங்குகிறது. அப்போது அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்சரவையில் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரின் செயலராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியர் ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதும் அதுதான் முதல் முறை.

அவரது ஆற்றலைப் பார்த்துதான் அன்றைய இங்கிலாந்து அரசு பதவி கொடுத்தது. சர் ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் திராவிட நாட்டை வாங்கிவிடலாம் என உற்சாகத்தில் இருந்தனர் நீதிக்கட்சி தலைவர்கள். சர் ஏ.டி. பன்னீர்செல்வம் புறப்படும் நாளும் வந்தது. அப்போது அவரை உற்சாகத்துடன் நீதிக்கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

பதவியேற்பு நிகழ்வுக்காக இங்கிலாந்துக்கு இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். விமானக் கட்டணம், செலவுக்கு கூட பணம்மில்லாததால் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிச்சென்றார்.

1.3.1940 அன்று ஹனிபல் விமான பயணத்தில் ஏமன் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட விபத்தில், விமானம் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி அகால மரணம் அடைகிறார் பன்னீர்செல்வம்.அப்போது அவரது வயது 52 தான்.

அன்று ஏ.டி. பன்னீர்செல்வம் மட்டும் லண்டன் சென்று பணியில் சேர்ந்திருந்தால் திராவிட நாடு கிடைத்திருக்கும்… ஏ.டி. பன்னீர்செல்வம் இறந்துவிட்டதாக இங்கிலாந்து அரசு அறிவித்தபோது தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார்.

பெரியாரின் துயரம் எனும் தலைப்பில் குடிஅரசில் வெளிவந்த காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா? கனவா? – தமிழர் சாந்தி பெறுவாராக! என்ற தலைப்பிட்டு அப்போது பெரியார் எழுதிய இரங்கல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.

“அந்த இரங்கலில், என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு பொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.”

தஞ்சையை ஆண்ட அரசர் பரம்பரையினரால் அமைக்கப்பட்ட திருவையாறு கல்லூரியில் “சமற்கிருதம்’ மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி அங்குத் தமிழும் பயிற்றுவிக்கப்படும் நிலையைப் பன்னீர்செல்வம் உருவாக்கினார். மேலும் “சமற்கிருதக் கல்லூரி’ என்று இருந்த பெயரை “அரசர் கல்லூரி’ என்றும் பெயர் மாற்றினார்.

1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள நீடாமங்கலத்தில் காங்கிரசு மாநாடு நடந்தது. மதிய உணவு வேளையில் 17 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பிற சாதியினருடன் அமர்ந்து உணவு அருந்தியது கண்டு உயர் சாதியினர் அவர்களை வெளியே இழுத்து வந்து, அடித்து, மொட்டை அடித்து, கழுதை மேலே ஏற்றி ஊர்வ லமாக நடத்தினர். அவர்கள் செய்தது பிறருடன் சேர்ந்து சமமாக உணவருந்தியதுதான்.

விடுதலை ஏட்டில் தந்தை பெரியார் அந்த நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டித்து எழுதினார். எழுதிய விடுதலை மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. அந்த சமயம் விடுதலையின் நிலை சார்பாக வாதாடி வெற்றி கண்டவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆவார். சாதியின் கொடுமை அந்நாளில் நிலவிய விவரம் அது. அத்தகைய சாதிக் கொடுமையைப் போக்க தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்த தளபதிகளில் முதன்மையானவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

ஒரு முக்கிய கவிதையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தலைவா என்று அழைத்து விட்டால் சிலரின் தலை துள்ளிப்போகும் இந் நாளில் தாழை மட்டை, முருங்கை மிளார், பேயத் திக் கொம்பு இவையெல்லாம் தான் தலைவன், தன் தலைவன் என்று தலைதுள்ளிப் போகும் இந்நாளில் பன்னீர்செல்வம் அவன் தோளுக்கு இட்டமலர் மாலை தன்னை தன் தலைவன் (பெரியார்) தாளுக்கு இட்ட பெரியோன் என்று சிறப்புற எழுதிப் பாராட்டினார்!

தஞ்சை ஆதி திராவிடர் மாணவர்களின் நலன்காக்க அவர்களுக்கு “உணவு விடுதி’ ஒன்றை ஏற்படுத்தி அந்த வகுப்பு மாணவர்கள் கல்வி உயர்வுக்குப் பாடுபட்டார். தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராகவும் அவர் சில காலம் பணியாற்றினார்.

சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவு, தமிழர்களுக்கும் நீதிகட்சியினர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம்!!””

அதிகம் படித்தது