மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறளில் நெருப்பு

முனைவர் மு.பழனியப்பன்

Mar 4, 2023

siragu thirukkural1

திருவள்ளுவர் மனித வாழ்க்கைக்கு வளமான சிந்தனைகளை வழங்கிய பொது மறையாளர். ஏற்றம் இறக்கம் இன்றி, தற்சார்பு இன்றி, அதிகாரம் இன்றி, ஆணவம் இன்றி அறங்களைச் சொன்னவர் வள்ளுவர். ஆனால் அவரின் குறள்கள் ஒவ்வொன்றும் அவரின் அனுபவக் கீற்றுகள். அவர் பெற்ற அனுபவங்களை ஆயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று கருத்து மின்னல்களாக வழங்கியுள்ளார். இம்மின்னல்கள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றி மின்னி நிறைவன. அவர் உகலம் பற்றிய பல சிந்தனைகளை வழங்கியுள்ளார். உலகம் ஐம்பூத இயற்கையால் ஆனது என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாத தத்துவ உண்மை.

     வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

     ஐந்தும் அகத்தே நகும் (திருக்குறள் 271)

என்ற நிலையில் ஐம்பூதங்களே உலகத் தோற்றத்திற்குக் காரணம். அவை மனித மனத்திலும் நிறைந்திருப்பவை என்று வள்ளுவர் உரைக்கின்றார். மனிதன் ஐம்பூதங்களுடன் தொடர்புடையவன். அவனின் தொடர்பு ஐம்பூதச் சேர்க்கையில் இருந்துப் பிரிக்க இயலாதது. பிரிந்த நிலையில் அவன் இல்லாதவன் ஆகிறான்.

இவ்வைம்பூதங்களில் நெருப்பு என்பதும் ஒன்று. அழிக்கும் ஆக்கும் ஐம்பூத இயற்கை இதற்கும் உண்டு. வள்ளுவர் நெருப்பினைத் தீ, அழல், எரி என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். நெருப்பின் தன்மை, இயல்பு ஆகியவற்றை வள்ளுவர் தம் குறள்களில் காட்டியுள்ளார்.

தீயின் தீயதன்மை

தீயின் பண்பு அதனை நெருங்கினால் சுடும். அதனை விட்டு நீங்கினால் வெம்மை குறையும். இதனை இன்பத்துப்பாலில் வள்ளுவர் எதிர் நிலையில் கையாள்கிறார்.

     நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்

      தீ யாண்டு பெற்றாள் இவள் – (திருக்குறள் 1104)

தலைவியை நீங்கினால் சுடுவதாகவும், அவளை நெருங்கிளால் குளிர்வதாகவும் புதுமை உடைய நெருப்பினைத் தலைவி எங்கு பெற்றாள் என்று தலைவன் தலைவியின் பிரிவால் ஏற்படும் துயரை, இணைவால் ஏற்படும் மகிழ்வைத் தெரிவிக்கிறான். தீ என்பது நெருங்கினால் சுடும் தன்மையது.

     தொடின் சுடின் அல்லது காம நோய் போல

 விடின் சுடல் ஆற்றுமோ தீ – (திருக்குறள் 1159)

தொட்டால் சுடு்ம் தன்மையது தீ. ஆனால் காம நோய் தலைவியைப் பிரிந்தால் சுடுவதாக உள்ளது.

இவ்வாறு இன்பத்துப்பாலில் நெருப்பின் சுடும் இயல்புகளைச் சுட்டுகிறார் வள்ளுவர். அறத்துப்பாலில் இடம்பெறும்

     தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

     நாவினால் சுட்ட வடு (திருக்குறள் 129)

என்ற குறளிலும் தீ சுடும் தன்மை உடையது என்பதை அறியமுடிகின்றது.

தீயவை தீய பயத்தலான் தீயவை

     தீயினும் அஞ்சப்படும் – (திருக்குறள் 212)

என்ற குறளில் தீ அஞ்சத்தக்கது என்று வள்ளுவர் காட்டுகிறார். தீயின் பண்புகள் அஞ்சும் வகைமையது என்ற எண்ணம் வள்ளுவர் மனதில் இருந்துள்ளமையை இக்குறள்கள் காட்டுகின்றன.

பொருட்பாலிலும் நெருப்பு உண்மைத் தன்மையில் அதன் இயல்பில் காட்டப்பெறுகிறது.

     அகலாது அணுகாது தீ காய்வார் போல்க

     இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – (திருக்குறள் 691)

என்ற குறளில் தீயிடத்தில் அகலாமலும் அணுகாமலும் வாழ வேண்டும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

தீ என்பது மறைந்து வளர்ந்து கெடுக்கும் இயல்பனது. இதனை இன்னொரு குறளில்

‘‘வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (திருக்குறள் 674)

என்று குறிக்கிறார் வள்ளுவர். ஒரு வினையை முடிக்காமல் பாதியிலேயே விடுதல் தவறு. பகையையும் முடிந்துபோனது என்று எண்ணுதல் தவறு. அவை மறை நிலையில் வளர்ந்து நமக்கு ஆபத்தைத் தரும். அது எத்தன்மைபோன்றது என்றால் தீ தெரியாமல் பற்றி எரிந்து அனைத்தையும் அழிக்கும் நிலையில் தெரியத்தக்க நிலை போன்றது என்று குறிக்கிறார் வள்ளுவர்.

மேற்காட்டிய குறள்களில் இருந்து தீ என்பது மனிதர்களுக்கு நெருங்கினால் துன்பத்தையும் விலகினால் தன்மையையும் தரத்தக்கது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. வள்ளுவரின் பார்வையில் தீ என்பது மனிதரை வருத்தும் சக்தியாகவே காணப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

தீயின் அழிவுசக்தியைக் கொண்டே கெட்டவற்றிற்கு தீமை என்ற அடிச்சொல்லில் இருந்து தீயைப்பெற்று தீயின் அழிப்புத் தன்மையை ஏற்றி உரைத்துள்ளார். தீநட்பு என்ற அதிகாரத்தலைப்பும் இவ்வகையில் அமைந்ததே.

     ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்

      நன்று ஆகாது ஆகிவிடும் – (திருக்குறள் 128)

நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்

     என்றும் இடும்பை தரும் – (திருக்குறள் 138)

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று

     தீ உழி உய்த்துவிடும் – (திருக்குறள் 168)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால

 தன்னை அடல் வேண்டாதான் – (திருக்குறள் 206)

பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்

 தீ பிணி தீண்டல் அரிது – (திருக்குறள் 227)

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

 செல்லா தீ வாழ்க்கையவர் – (திருக்குறள் 330)

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்

 அல்லற்படுப்பதூஉம் இல் – (திருக்குறள் 450)

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்

 குளித்தானை தீ துரீஇ அற்று – (திருக்குறள் 929)

தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்

     நோய் அளவு இன்றி படும் – (திருக்குறள் 947)

என்னும் குறள்களில் பயின்று வந்துள்ள தீ என்ற சொல் அழிவு கருதியதே ஆகும். தீயின் இயல்பும் தீமையின் இயல்பும் ஒன்றே ஆக, தீமையெல்லாம் தீயாக வள்ளுவருக்குத் தெரிகின்றது. தீமையை எல்லாம் வள்ளுவர் தீ என்று விளித்துள்ளார்.

இதன் காரணமாக வள்ளுவர் பார்வையில் தீ என்பது அழிவின் சின்னமாக அழிவின் அடையாளமாக, அழிவின் குறியீடாகக் கொள்ளப்பெற்றுள்ளது என்று உணரமுடிகின்றது. தீ என்பதற்கு மாற்றாக ஆக்க சக்தி உடைய நெருப்பினை வள்ளுவர் அழல் என்றும் நெருப்பு என்றும், எரி என்றும் உரைக்கின்றார்.

அழிக்கும் இயல்பினது அன்று அழல்

அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்

     குழல் போலும் கொல்லும் படை – (திருக்குறள் 1238)

என்று அழலின் தன்மையை வள்ளுவர் உரைக்கிறார். அழல் அழிக்கும் இயல்பினது அன்று. அது துன்பதைத் தரும் இயல்பினது. தூதாக நிற்கும் இயல்பினது. அதனின்று மீள இயலும். எனவே வள்ளுவர் காட்டும்

நெருப்பினுள்ளும் தூங்கலாம்

நெருப்பு எவரையும் நிம்மதியாக உறங்கவிடாத நிலையைப் பெற்றதாகும். நெருப்பு எரிகின்ற நிலையில் யாரால் நிம்மதியாகத் தூங்க இயலும். தூங்கவே முடியாது. ஆனால் அதனிலும் தூங்கலாம் என்கிறார் வள்ளுவர்.

     ‘நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.’ (திருக்குறள் எண் 1049)

என்று நெருப்பினுள் துஞ்ச இயலும். ஆனால் வறுமைக் காலத்தில் கண் மூடித் தூங்கல் என்பது இயலவே இயலாது என்கிறார் வள்ளுவர்.

இதன்வழி வள்ளுவர் கண்ட நெருப்பு தாங்கக் கூடியதாக, அதனுள்ளும் உறங்கக் கூடியதாக இருக்கிறது என்பதை உணரமுடிகின்றது.

ஆக்கும் சக்தியாகிய எரி

வள்ளுவர் நெருப்பின் தன்மையை எரி என்று காட்டி அதனைச் சற்று வேறுபடுத்தி உரைக்கின்றார். எரி என்பது வள்ளுவர் பார்வையில் முழுவதும் அழிக்கக் கூடிய வல்லமை பெற்ற தீயல்ல. அது ஓரளவிற்கு மீ்ட்டெடுக்கும் தன்மை, ஆக்கத்தன்மை உடையதாக உள்ளது.

     இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்

 புணரின் வெகுளாமை நன்று – (திருக்குறள் 308)

பலமுடைய பேரெறி (பெருநெருப்பு) வந்து இன்னாதனவற்றைச் செய்தாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு கோபம் கொள்ளாமல் இருப்பதே நன்மை தரும் என்ற நிலையில் எரி என்பது மனிதனால் தாங்கும் சக்தி உடையது என்பதை அரிய முடிகிறது.

வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்

      வைத்தூறு போல கெடும் – (திருக்குறள் 435)

எரி வரும் முன் காத்துவிட்டால் எரியாமல் செய்துவிட இயலும். தீமை என்ற தீ வருமுன்னர் காக்க வேண்டியது மக்கள் கடமை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்

 காமம் நுதுப்பேம் எனல் – (திருக்குறள் 1148)

எரியை நுதுக்க முடியும் என்பது வள்ளுவர் வழி. நெய்யால் எரி வளர்த்தல் என்பது வள்ளுவர் காலத்தில் இருந்தது என்பதற்கு இக்குறள் சான்று.

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்

 பெரியார் பிழைத்து ஒழுகுவார் – (திருக்குறள் 896)

எரியால் சுடப்படின் உய்வு உண்டு. இவ்வாறு எரி என்பது ஆக்க நிலை சார்ந்ததாக வள்ளுவரால் எண்ணப்பெற்றுள்ளது.

வீட்டில் சமைக்கப் பயன்படும் வாயு எரி வாயு. தீ வாயு அல்ல. ஆனால் அது கசிந்தால் தீ வாயுவாகிவிடும். இவ்வாறு எரிபொருள், எரிசக்தி, எரி எனவே எரி என்பது ஆக்கப் பொருள் சார்ந்த அமைவன என்பதை உணரும் நிலையில் எரி என்பதன் உண்மைத் தன்மை புரியவரும்.

வள்ளுவர் கண்ட தீ தீத்தன்மை பெற்றது. எரி, அழல், நெருப்பு ஆகியன ஓரளவிற்குத் தாங்கும் நிலைமைத்தன. ஆக்க சக்தியாக அமைவன. வள்ளுவர் காலத்தில் நெய்யால் எரி வளர்க்கும் முறைமையும் இருந்துள்ளது என்பதையும் உணரமுடிகின்றது. வள்ளுவர் கண்ட நெருப்பு ஆக்கத்தைத் தருகிறது.வள்ளுவர் கண்ட தீ தீமையைத் தருகிறது என்பதே முடிவாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறளில் நெருப்பு”

அதிகம் படித்தது