மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறள் இரவு அதிகாரம்

சு. தொண்டியம்மாள்

Nov 5, 2022

siragu-thirukkural முன்னுரை

திருக்குறள் தமிழின் அடையாளம். தமிழரின் அடையாளம். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். தமிழ் மாந்தனின் நாகரீகத்தின் அடையாளம். தெளிவான தமிழ் நடையில் தமிழ் அமுதை அள்ளி வழங்கும் வள்ளுவ அமுதம்.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம் அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கமாகும்

இதனுள் பொருட்பாலில் அரசியல், அங்கவியல், குடியியல் என்று மூன்று பிரிவுகள் அமைந்துள்ளன. அரசியலில் 25 அதிகாரங்களும், அங்கவியலில் 32 அதிகாரங்களும் குடியியலில் 13 அதிகாரங்களும் அமைக்கப்பெற்றுள்ளன. குடியியலில் 106 வது அதிகாரமாக அமைந்துள்ள இரவு அதிகாரத்தின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.

யாருக்கு பழி ?

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று (திருக்குறள் எண்:1051)
வறுமைப்பட்ட ஒருவர் எல்லா வழிகளிலும் பொருள்தேட முயன்று தோற்கின்றார். அந்நிலையில் யாரிடமாவது சென்று பொருளுதவி கேட்கலாம் என முடிவுக்கு வருகிறார். திருவள்ளுவர் ‘இரக்க இரத்தக்கார்க் காணின்’ என அவர்க்கு வழி காட்டுகிறார். இரத்தல் இழிவானதே என்ற கருத்துடையவர் திருவள்ளுவர். ஆனால் பசி காரணமாக இரக்க நாணி வறுமையுற்றவர் உயிர் துறப்பதையும் விரும்பமாட்டார். வயிற்றுப் பசி தீர்ப்பதற்கான ஓர் வழியாகவே இரக்க என்றார், செல்வம் சேர்ப்பதற்காக அல்ல.

இரப்பவர் இரக்கத் தக்கவர் எனக் கண்டறிந்து ஒருவரிடம் செல்கிறார். ஆனால் அவர் ஏதோ ஒரு காரணத்தால்-காலச்சூழலாலோ பொருள்நிலையாலோ- தம்மிடம் உள்ளதையும் இல்லையென்று மறைத்து பொருள் கொடுக்க மறுத்தால் அது அவருடைய பழியாகும். அதற்காக இரந்தவர் எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளத் தேவையில்லை என ஆறுதல் மொழியும் பகர்கிறார் திருவள்ளுவர்.

இரத்தல் எப்படி இன்பமாகும்?

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் (திருக்குறள் எண்:1052)

ஒருவர் கேட்ட பொருள் அவருக்கு எந்த வகையான துன்பமும் இல்லாமல் கிடைப்பதாக இருந்தால் பிறரிடம் சென்று இரத்தலும் இன்பமாகும்..

இரந்து ஒருவரிடம் பொருள் கேட்பது இழிவானது இரப்பவருக்குக் கொடுக்க மனமில்லாதது அதைவிட இழிவானது. ஆனால் கொடுப்பதும் பெறுவதும் வருத்தமின்றி நடந்தால் அது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். கொடுப்பவர்க்கு துன்பமில்லாத நிலை அதாவது அவரது பொருள்நிலை சிறந்து எதிர்வந்து ஈயும் வகையில் இருந்து, இரப்பவரது மானத்திற்குக் கேடு நேரா வண்ணம் அவர் எதிர்பார்த்த பொருள் கிடைக்கப் பெற்றால் அது இனிதாகவே இருக்கும்.

துன்பத்தோடுதான் பொருள் பெறமுடியுமெனில் அவ்விடத்தில் கேட்க வேண்டாம் என்பது உட்பொருளாக அமைந்துள்ளது. இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும்.

இரவு எவ்வகையில் அழகு

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து (திருக்குறள் எண்:1053)

கள்ளமற்ற உள்ளமும், கடமை அறிந்து உதவும் குணமும் உடையோர் முன்னே நின்று அவரிடம் பொருளை இரப்பதுகூட வறுமையுடையவர்க்கு ஓர் அழகை தரும்.

‘இன்பம் ஒருவற்கு இரத்தல்’ என்று சென்ற குறளில் (1052) சொல்லப்பட்டது. இங்கே இரப்பதிலும் ஒரு அழகு உண்டு எனக் கூறப்படுகிறது. கரவாத உள்ளம் கொண்டோர் முன் நின்ற அளவிலேயே, வாய் திறந்து இரந்து கேட்கும் முன்னரே, அவர் குறிப்புணர்ந்து கொடுப்பார். அது இரப்பார்க்கு ஓர் எழுச்சி தருவதாக அமையும் என்று விளக்குகிறார் நம் திருவள்ளுவர்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு (திருக்குறள் எண்:1054)

மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் இரத்தலும் ஈதல் போன்றதாகும்.

இரத்தல் எவ்விதம் ஈதலாகும்?

கொடுப்பவர் ஏற்பவரானால் இரப்பவர் ஈவார் தானே!
முந்தைய இரண்டு பாடல்களில் (1052, 1053) இன்பம் ஒருவர்க்கு இரத்தல், இரப்பும் ஓர் அழகு என்று சொன்னபின், இங்கு இரத்தல் ஈதல் போல்வது எனக் கூறப்படுகிறது. இம்மூன்று குறள்களும் துன்பம் தராமல், மறைக்காமல் கொடுப்பவரிடம் இரத்தல் இழிவன்று என இரவுக்கு அமைதி கூறுவதாக உள்ளன. ஈகைக் குணம் படைத்தவரைக் கண்டறிந்து இரக்கலாம். வைத்துக்கொண்டே மறைத்து ஈயாதாரிடம் இரப்பதுதான் பழியும் துன்பமும் இரப்பவனுக்கு வந்து சேரும்.

உள்ளதை ஒளிக்காது தருவாரிடமிருந்து ஒன்றைப் பெறுதலும் ஈவதே போன்ற பெருமை உடையதென்ற வள்ளுவரின் இவ்வரிய எண்ணம் அவர் இரவை ஊக்குவிப்பதாகப் பொருள்படாது. அவர் ‘இரவின் இளிவந்தது இல்’ என்பதில் உறுதியானவர். ஆனாலும் இரப்பார்க்குச் சார்பாக, கரவாது கொடுப்பாரைக் கண்டறிந்து கேள் என அருள் நெஞ்சுடன் வழிகாட்டவும் கூடியவர் என்பது விளங்குகிறது.

யார் முன் நின்று இரப்பது சிறந்தது.

கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது (திருக்குறள் எண்:1055)

தம்மிடம் உள்ளதை மறைக்காது அளிப்பவர்கள் முன் நின்று இறப்பது சிறந்தது.

ஒருவர் முன்பு நின்று இரப்பதை எவருமே இழிவாகக் கருதுவர். கேட்க நாணும் தன்மை கொண்டவர்களுக்கு அது இன்னுமே மானக் குறைவான செயலாகும். அத்தகையவர்கள் கூட இரக்க முன்வருகிறார்கள் என்றால், தங்களிடம் உள்ளவற்றை ஒளிக்காமல் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான். இரப்பவர் அப்பண்புடையவர் முன் நிற்கும்போதே, இன்னதுதான் வேண்டும் என்று கேட்கவே தேவையில்லை. அவர்கள் கண் முன் சென்றவுடனே பொருள்கள் கிடைக்கும். இந்த நம்பிக்கையில்தான் மானத்துக்கஞ்சுபவரும் அவர்முன்பு செல்கிறார்கள் என்று விளக்குகிறார் முப்பால் உணர்ந்த முனிவர்.

-தொடரும்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறள் இரவு அதிகாரம்”

அதிகம் படித்தது